உழவன் விடுதலை என்பது கிராம சுயராச்சியத்திற்கும், சூழல் மற்றும் சமூக நலத்திற்கும் இன்றியமையாத ஒன்று. இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. உழவு ஒரு வெற்றிகரமான தொழிலாக மாறினால், பல படித்த இளைஞர்கள் தாங்கள் பிறந்த கிராமத்திலேயே நிறைவோடு இருப்பார்கள் என்பது திண்ணம். நான் சந்திக்கும் பல இளைஞர்கள், “வருமானத்திற்கு நல்ல வாய்ப்பிருந்தால் நாங்கள் எங்கள் பிறந்த மண்ணை விட்டு புகைச்சலும், இரைச்சலும் நிறைந்த நகரங்களுக்கு ஏன் போகிறோம்? ஆனால் விவசாயத்தை நம்பி இருக்க முடிவதில்லையே” என்று நவீன வாழ்முறையின் சிக்கலை வெளிப்படுத்துகிறார்கள்.
இயற்கை வேளாண்மை என்பது மண்ணையும், நுகர்வோரையும் காப்பாற்றலாம் - ஆனால் உழவனைக் காக்குமா - உழவனின் பொருளாதாரத்தை மேம்படுத்துமா என்பதுதான் நாம் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி. செயற்கை வேளாண்மை காக்கப் போவதில்லை என்பது பச்சைப் புரட்சிக்குப் பின் நலிந்துள்ள உழவின் நிலையிலிருந்தே தெளிவாகிறது. ஆனால் உழவனுக்கு இயற்கை வேளாண்மை மட்டும் பொருளாதார நிறைவு அளிக்குமா என்றால் இல்லை என்பதே உண்மை. பாரம்பரிய விதைகளும், இயற்கை சார் தொழில் நுட்பங்களும் உழவனின் இடுபொருள் செலவைக் குறைத்துக் கடன் சுமையிலிருந்து காப்பாற்றும். “மினிமம் காரன்டி” என்று சினிமாக்காரர்கள் சொல்வது போல் ஒரு குறைந்த பட்ச விளைச்சலுக்கும் உத்தரவாதம் அளிக்கும். இதில் ஐயமில்லை. ஆனால் தன்னிடம் உள்ள நிலத்தில் ஒரு உழவன் நல்ல வருமானம் பெறுவது எப்படி? இதுவே உழவன் விடுதலைக்கு ஒரு அடிப்படைக் கேள்வி.
நல்ல வருமானம் என்றால் என்ன? முதலில் அதைச் சற்று ஆராய்வோம். இக்கட்டுரை எழுதும் நேரத்தில் சராசரியான விவசாயத் தொழிலாளியின் சம்பளம் ஒரு நாள் ரூ.300. வருடம் 200 நாள் வேலை செய்தால் அவன் வருட வருமானம் ரூ.60,000. ஒரு உழவன் ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு விவசாயித் தொழிலாளியின் அளவாவது பொருள் ஈட்ட வேண்டும். இதுவே ஒரு நியாயமான வருமானமாகக் கொள்ளலாம். ஆனால் இன்றைய விவசாயத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் வருடம் 60,000 ஈட்டும் உழவர்கள் 10 விழுக்காட்டிற்கும் குறைவே. இன்றைய கலைந்து போகும் பருவநிலையில் மூன்று போகம் என்பது வெறும் கனவாகவே இருக்கிறது. இரண்டு போகம் ஒழுங்காக நட்டமின்றி விளைவிக்க முடிந்தால் உழவன் வெற்றியடைந்து விட்டதாகவே நினைக்கிறான்.
ஒரு எடுத்துக்காட்டிற்கு, 2 காணி (2.67 ஏக்கர்) நிலமுள்ள ஒரு உழவனை எடுத்துக் கொள்வோம். நம் கணக்கின்படி, உழவன் விடுதலைக்கு இதில் இருந்து வருடம் ஒரு ஒன்றரை லட்சமாவது வருமானம் பெற வேண்டும். சுருங்கச் சொன்னால் ஒரு ஏக்கருக்கு ஒரு போகம் 30,000 நிகர லாபம் பெற வேண்டும். இது எப்படிச் சாத்தியம்?
சென்னகுணம் காந்தி உழவர் சங்கத்தில் விவசாயிகள் இயற்கை நெல் சாகுபடி செய்த போது கீழ்க்கண்ட உண்மைகள் புரிந்தது.
செயற்கை நெல் சாகுபடி
ஏக்கருக்கு
செலவு - 12,500
வரவு - 33 மூட்டை நெல் - மூட்டைக்கு 750 ரூ - 24750
நிகர லாபம் - 12,250
இயற்கை நெல் சாகுபடி
ஏக்கருக்கு
செலவு - 6,500
வரவு - 21 மூட்டை நெல் - மூட்டைக்கு 1500 ரூ - 31500
நிகர லாபம் - 25,000
இன்னும் அடுத்தடுத்த போகங்களில் இயற்கை வேளாண்மையில் விளைச்சல் கூடுமேயன்றிக் குறையாது. எனவே ஒரு போகத்தில் 30,000 நிகர லாபம் என்பது ஒரு எட்டக் கூடிய எதிர்பார்ப்பே. ஆனால் இது எதனால் சாத்தியமாகிறது? நெல் கிலோ 20 ரூபாய்க்கு சங்கம் கொள்முதல் செய்வதால் அல்லவோ இது இயல்கிறது? காந்தி உழவர் சங்கத்திற்கு எப்படிச் சாத்தியமாகிறது? கொள்முதல் செய்த நெல்லை ஒரு வருடம் தூற்றிக் காய வைத்துப் பாதுகாத்து அதன் பின் அதனை அரிசியாக அரைத்து நுகர்வோரிடம் அரிசி கிலோ 60 ரூ என்று விற்பனை செய்வதால் சாத்தியமாகிறது.
உழவன் தன் உணவை முடிந்தவரை தானே உற்பத்தி செய்தால் இது ஒரு விதமான வருமானமாகக் கொள்ளலாம். செலவைக் குறைப்பதும் வருமானம்தானே! ஆனால் குழந்தைகள் கல்வி, மருத்துவச் செலவுகள், போக்கு வரத்து என்றெல்லாம் உள்ள செலவுகளுக்குப் பணமும் தேவைப் படுகிறது. எனவே கொஞ்சம் பணப்பயிரும் சாகுபடி செய்ய வேண்டும். ஆனால் அரசும் விரிவாக்கப் பணியாளர்களும் கூறும் கரும்பு, மஞ்சள் போன்ற பணப்பயிர்கள், வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் மட்டுமே பணப்பயிர்கள். பெரும்பாலும் உழவனுக்கு அவை ரணப் பயிர்களே - அதிக லாபத்தைக் கருதி அதிக முதலீடு செய்யும் சூதாட்டப் பயிர்களோ பல பருவங்களில் பிணப் பயிர்களாகவும் ஆகி விடுகின்றன. எனவே விடுதலையில் ஆர்வமுள்ள உழவர்கள் உணவுப் பயிர்களையே விளைக்க வேண்டும். உணவுப் பயிர்களைப் பணப்பயிர்கள் ஆக்க விற்பனை அமைப்புக்கள் வேண்டும்.
ஆக உழவன் விடுதலைக்கு, மூன்று விடயங்கள் அடிப்படையில் தேவை.
- இயற்கை வேளாண்மை
- தன் உணவைத் தயாரித்தல்
- வருமானத்திற்கான பயிரும், அவ்விளை பொருளுக்கு ஒரு நல்ல விலை கொடுத்து வாங்கும் ஒரு அமைப்பும்
வெறும் இயற்கை வேளாண்மை மட்டும் செய்தால் உழவன் ஒரு சக்கர மிதிவண்டி ஓட்டும் வித்தைக்காரனைப் போல் எப்போதும் திணற வேண்டி இருக்கிறது.
சென்னகுணத்தில் நெல் கொள்முதலுக்குத் தேவைப்படும் மூலதனத்தை நண்பர்கள் வங்கி வட்டி வந்தால் போதும் என்ற சிந்தனையுடன் முதலீடு செய்துள்ளோம். மூலதனம் என்று பார்த்தால் ஒரு ஏக்கர் நெல்லைக் கொள்முதல் செய்ய 30,000 ரூபாய் வேண்டியிருக்கும். அந்தப் பணம் வட்டியுடன் திரும்ப 18 மாதம் முதல் 24 மாதம் ஆகும். 400- 500 ஏக்கர் கொண்ட ஒரு சிறிய கிராமம் என்று எடுத்துக் கொண்டால், அதை மட்டும் நிர்வகிக்க ஒன்றரைக் கோடி ரூபாய் வேண்டும்! இவ்வளவு பணத்திற்குத் தனி மனிதர்கள், அதுவும் தன்னார்வலர்கள் எங்கே போவார்கள்?
அடுத்த பட்டத்தில் எங்கள் சங்க உழவர்கள் சிலர், மல்லாட்ட என்று அவர்கள் செல்லமாக அழைக்கும் நிலக்கடலையைப் பயிர் செய்து இயற்கையாக அறுவடையும் செய்துள்ளார்கள் - இதனைக் கொள்முதல் செய்வதானால் ஏக்கருக்கு 35,000 ரூபாய் வேண்டும். இதை மதிப்புக் கூட்டிய பொருளாக ஆக்க ஒரு சிறு செக்கு வேண்டும். 2250 வாட் மின்சாரத்தில் மாட்டுச் செக்கைப் போல மெதுவாக உழன்று அரைக்கும் ஒரு மரச்செக்கை நண்பர் ராஜா சங்கர் பொள்ளாச்சி ஆனைமலையில் வடிவமைத்துள்ளார். அதற்கு மூலதனம் என்று பார்த்தால் சுமார் ஆறு லட்சம் ரூபாய் வேண்டும். இதைச் செய்தால் சுமார் 70 முதல் 80 ஏக்கரில் விளையும் கடலையை எண்ணையாக அரைத்து அருகிலுள்ள நுகர்வோரிடம் விற்கலாம்.
இதே போல் சிறு தானியங்களை எடுத்துக் கொண்டால் தினை, வரகு, சாமை போன்றவற்றை மரத் திருகிலோ, இழைந்திரக் கல்லிலோ இப்போது யாரும் அரைக்கத் தயாரில்லை. நெல் அரைக்கும் மில் போல இவற்றையும் அரைத்துத் தோல்/உமி நீக்க சிறு இயந்திரங்கள் மிக அவசர, இன்றியமையாத தேவையாய் இருக்கிறது. இவற்றிற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சியும், பரிசோதனை முயற்சிகளும் செய்யத் தேவையான நிதி ஒதுக்கீடு அரசிடமோ, நபார்ட் போன்ற அமைப்புக்களிடமோ இல்லை என்பதே உண்மை.
இதே போல் இயற்கைப் பருத்தியில் சட்டை தயாரிக்கும் ஒரு முயற்சியிலும் தற்சார்பு இயக்கம் முனைந்துள்ளது. 15 ஏக்கரில் மானாவாரியாக இயற்கையாக விளையும் பருத்தியைக் கொள்முதல் செய்து அதை இயற்கைச் சாயம் , கைத்தறி போன்ற தொழில்நுட்பங்களுடன் சட்டையாக்கி விற்பனை செய்யும் ஒரு தொழிலுக்கு சுமார் 12 முதல் 15 லட்சம் முதலீடு தேவைப்படுகிறது. கிராமங்கள் மலர்ச்சி அடையவேண்டும் என்றால் நல்ல முதலீடு தேவை. அறிஞர் குமரப்பாவும் 60 வருடங்களுக்கு முன்னரே ” வல்லுநர்களும், தொழில்முனைவோரும் ஒட்டு மொத்தமாய் வெளியேறுவதால் நம் கிராமங்கள் மிகவும் நலிவடைகின்றன” (The village suffers from the exodus of experts and entrepreneurs) என்று எழுதியுள்ளார். கிராமங்களில் வேலை வாய்ப்பு உருவாக்கும் சிறு தொழில்கள், விவசாயப் பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்ட அண்மைத் தொழில்கள் தேவை. உடனே நாம் மன்மோகன் சிங், சிதம்பரம், அலுவாலியா போல அந்நிய முதலீடு என்று சிவப்புக் கம்பளம் விரிக்க வேண்டாம். ஒரு வளரும் நாட்டை முற்றிலும் ரத்தம் உறிஞ்சி நோஞ்சானும், நோயாளியும் ஆக்க அந்நிய முதலீட்டைப் போன்ற ஒரு சிறந்த கருவியோ உத்தியோ இல்லை! கென்யா நாட்டில் பால்பண்ணைகளில் அந்நிய முதலீடு செய்த கதையை நாம் தாளாண்மையில் எழுதி இருந்தோம்.
எது சிறு தொழில் என்று கண்டறிய, Small is Beautiful என்ற நூலில் ஈ.எஃப். சூமாக்கர் ஒரு அழகான வழி கூறுகிறார். ஒரு தொழிலை உருவாக்கத் தேவைப்படும் மூலதனம் அந்தத் தொழில் எத்தனை வேலைகளை உருவாக்குகிறதென்று பார்க்க வேண்டும். அது உருவாக்கும் வேலையின் ஓர் ஆண்டுச் சம்பளம் அந்தத் தொழிலின் மூலதனமாக இருந்தால் அது ஒரு நல்ல சிறு தொழில். “The capital cost of creating a job” என்று இதைப் பொருளியலில் ஆங்கிலத்திலே கூறுகிறார்கள். 4300 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்படும் ஃபோர்டு நிறுவனத் தொழிற்சாலை 4300 வேலைகளையே உருவாக்குகிறது. ஒரு வேலை உருவாக்கத் தேவைப்படும் மூலதனம் ஒரு தொழிலாளியின் 50 வருட சம்பளத்தை மூலதனமாகக் கேட்கிறது! இத்தகைய தொழில்கள் மிகுந்த வன்முறையை உள்ளடக்கியவை - முதலீட்டாளாரைத் தவிர யாருடைய நன்மையையும் கருத்தில் கொள்ளாதவை. ஒரு கிராமத் தொழிலாளியின் ஆண்டு வருமானம் ரூ 60,000 என்று கொண்டோமானால், ஆறு லட்ச ரூபாய் முதலீட்டில் துவங்கப் படும் தொழில் 10 பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். குறைந்தது 18 மாத வருமானம் மூலதனமானால், 6-7 பேருக்காவது வேலை கொடுக்க வேண்டும். இதுவே ஒரு நல்ல சிறுதொழிலின் உரைகல்.
இதை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்களைக் கிராமத்தில் இருத்துவது எப்படி, சிறு தொழில்கள் தொடங்கத் தேவையானவை என்ன, உழவன் விடுதலையும், கிராம சுயராச்சியமும் எப்படி இத்தகைய சிறு தொழில்களால் சாத்தியப்படும், இதில் தன்னார்வலர்கள் எப்படிப் பங்கு கொள்வது, நகரத்தில் வசதியாய் இருந்தாலும் மனசாட்சி உறுத்தலுக்காய் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுவோர் என்ன செய்யலாம் போன்றவற்றை வரும் இதழ்களில் ஆராய்வோம்.