அறிவியலும் அரசியலும் பிரிக்க முடியாத கூறுகளாக இருப்பதை நம்மில் பலர் ஒப்புக்கொள்வதில்லை. அறிவியல் தனித்தியங்கும் தன்மை கொண்டது என்றும் அதற்கு எவ்வித சார்புத் தன்மையும் இல்லை என்றும் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். வேளாண்மையில் அறிவியல் நிகழ்த்திய மாற்றங்களை விட அரசியல் அறிவியலின் துணைகொண்டு வேளாண்மையில் நிகழ்த்திய மாற்றங்கள் மிகவும் ஆழமானவை. வேளாண்மைத் தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றங்களைச் செய்து வேளாண் பொருளியலையே தமது கைகளில் வைத்துக்கொண்ட அரசியல் வரலாற்றை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பரந்துபட்ட மக்களுக்கான பயன்களைத் தரும் அறிவியலைப் புறந்தள்ளி ஒரு சிலரின் வளத்தை நோக்கமாகக் கொண்ட குவியப்படுத்தப்பட்ட அறிவியல் முன்னெடுக்கப்பட்டது. நாம் அறிவியல் (Science) வேறு, நுட்பவியல் அல்லது தொழில்நுட்பம் (Technology) என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் அடிப்படை உண்மைகளை விளக்குவதன் பின்னர் தோன்றிய தொழில்நுட்பத்திற்கு பக்கச் சார்பு இருப்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். கத்தியைக் கொண்டு பழத்தையும் வெட்டலாம் ஆளையும் வெட்டலாம் என்ற பழைய பல்லவியை இப்போது பாடிக்கொண்டிருக்க முடியாது. ஏனெனில் அணுக்குண்டை வைத்துக் கொண்டு எந்த நன்மையும் செய்ய முடியாது, என்றுமே அது கொலைகாரக் கருவிதான்.சில தொழில்நுட்பங்கள் இயல்பாகவே பரந்துபட்ட மக்களுக்கு எதிராக இருப்பதை கருத்தில் கொண்டு நாம் சிக்கல்களை அணுக வேண்டும்.
இயற்கை ஆண்டாண்டு காலமாக தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதோடு தன்னை இளமையாகவும் வைத்துக் கொள்ள முயல்கிறது. அதற்காக மிக நுட்பமான கெழுமைப்பாடு (Complexity) கொண்ட பல உயிர்களைப் படைக்கின்றது. இது பன்னெடுங்காலமாக உலகம் தோன்றிய நாள் முதலாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஒரு சில்லி (cell) உயிரியை உருவாக்கிய இயற்கை -அதாவது உண்ணவும் இனத்தைப் பெருக்கவும் மட்டுமே தெரிந்த உயிரிகளைப் படைத்த இயற்கை- ஆறு அறிவு கொண்ட மாந்த குலத்தையும் படைத்தது. ஒவ்வாரு கால கட்டத்திலும் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப ஒவ்வொரு வகையான உயிரினத்தைத் தோற்றுவிக்கிறது. இந்த இயற்கையின் ஓட்டத்தைத் தெரிந்து கொண்ட மாந்தகுலம் அதன் போக்கில் தனக்குரிய வசதிகளை முதலில் ஏற்படுத்த முனைந்தது. இது இதற்கு முந்தைய எந்த உயிரினமும் செய்யாத முயற்சியாகும். இந்த முயற்சிகள் இயற்கையின் மீது அழுத்தந் திருத்தமான மாற்றங்களை உருவாக்கின. இந்த முயற்சிகள் தொழில்நுட்பங்களாக வளர்ந்தன. அறிவியல் அடிப்படை உண்மைகள் தெரிந்துகொள்ளப்படுவதற்கு முன்பே தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. புவிஈர்ப்பு விசை என்றால் என்ன என்று அறியும் முன்பே 'கல்லை எறிந்தால் மாம்பழத்தை வீழ்த்த முடியும்' என்று அறிந்து கொண்டனர். எனவே 'அறிவியலை'விட தொழில்நுட்பம் முந்தையது என்று கூறலாம். இந்த முந்தை நுட்பவியல் (Primitive technology) பெரிதும் இயற்கையின் போக்கிலேயே உருவாக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் பல பண்டைத் தொழில்நுட்பங்கள் அறிவியல் அடிப்படைகளைக் கணக்கில் கொள்ளாமல் பட்டுத் தெளிதல் (trial and error) என்ற முறையிலேயே உருவாக்கப்பட்டன.
இந்த வரலாறு அறிவியல் மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பின்னர் மாறியது. இயற்கைக்கும் தொழில்நுட்பத்திற்கும் இருந்த பிணைப்பு மெல்ல அறுபட்டது. இயற்கை செயற்கை என்ற பிரிவினை தோன்றியது. இதைப் புரிந்து கொள்ளாமல் பண்டை அறிவியலை மூடத்தனமாக மறுப்பதும் ஆதரிப்பதும் தவறாகப் போய்விடும். எடுத்துக்காட்டாக ஒரு சிலர் இப்போது வேதகால வேளாண்மை என்று இக்கால அறிவியல் முன்னேற்றங்களுக்கு முரணான சிலவற்றைக் கூறிவருகின்றனர். இதனால் ரசாயன வேளாண்மை ஆதரவாளர்கள், இயற்கைவழி வேளாண்மை என்றாலே அறிவியலுக்குப் புறம்பானது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். விருட்ச ஆயுர்வேதம் என்ற கிபி 12ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட நூலை வேதகாலம் என்று பேசி குழப்பியும் வருகின்றனர். இப்போது பயன்படுத்தப்படும் 'பஞ்சகவ்யம்' என்ற கலவை முற்றிலும் நொதித்தலை அடிப்படையாகக் கொண்டு நுண்ணுயிர் பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஆனால் சிவக்கோயில்களில் தரப்படும் பஞ்சகவ்யத்தில் சர்க்கரை சேர்க்கப்படுவது கிடையாது. அதில் நொதித்தல் செயல்பாடும் கிடையாது. மேலும் விருச்ச ஆயுர்வேதத்திலோ ரிக் போன்ற வேதப் பனுவல்களிலோ இதுபற்றிய குறிப்புகள் இல்லை. திருமந்திரத்தில் திருமூலர் 'ஆனைந்து' என்று முதன் முதலாகக் கூறுகின்றார். சங்க இலக்கியங்களில் ஆனைந்து பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.
அறிவியலையும் தொழில்நுட்பத்தையம் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் பண்டைப் பெருமையில் மூழ்குவதும் ஆபத்தானது. பண்டைத் தொழில்நுட்பங்களுக்கும் புதித (modern) அறிவியலுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு அறிவியல் அடிப்படைகளைப் பற்றிக் கவலைப்படாமல் அல்லது தெரியாமல் கட்டப்பட்டது என்பதற்கும் அறிவியல் அடிப்படைகளைக் கண்டறிந்து அதன்மீது கட்டப்பட்டது என்பதற்குமான வேறுபாடு என்பதாகும். இதனால் பண்டைத் தொழில்நுட்பம் குறைவானது என்றோ, புதிதத் தொழில்நுட்பங்கள் நிறைவானது என்றோ பொருளல்ல. இரண்டிலும் நிறை குறைகள் உள்ளன. ஆனால் பண்டைத் தொழில்நுட்பங்கள் எளிய மக்களுக்கு ஏற்றதாகவும், சிக்கல்சிடுக்குகள் இல்லாததாகவும் சார்புத் தன்மை குறைவானதாகவும் இருந்தன. அதே சமயம் அந்தந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ற முறையில் கண்டுபிடிப்புகள் இருந்தன. இதற்கு மாறாக புதித தொழில்நுட்பங்கள் அமைந்தன என்பதோடு இயற்கையின் சமநிலைப்பபாட்டைச் சிதைக்கும் கூறுகளைக் கொண்டதாகவும் இருந்தது. இதில் நாம் உற்று நோக்க வேண்டியது பரந்துபட்ட மக்களுக்கான அறிவியல் தொழில்நுட்பமா? ஒரு சிலருக்கான தொழில்நுட்பமா? என்ற அரசியலாகும். வானூர்திகளைக் கட்டுவதற்கான மூலப்பொருள் வேண்டும் என்பதற்காக தூத்துகுடி மாவட்ட சிற்றூர்களில் வாழைச் சாகுபடி செய்யும் உழவனைத் துரத்திவிட்டு அங்கு டிட்டானியம் தோண்டுவது என்பதும், ஒரிசாவின் காடுகளில் ஆண்டாண்டு காலமாக வாழும் பழங்குடிகளை விரட்டிவிட்டு அங்கு பாக்சைட் சுரங்கம் வைத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து அயல்நாட்டுச் செலாவணி ஈட்டுவோம் என்பதும் எந்தவகை அறம்? சென்னையில் உள்ள நீர் தரும் குளங்களை எல்லாம் மூடி வணிக வளாகங்கள் கட்டிக்கொள்வோம், வீராணம் உழவன் எக்கேடு கெட்டாலும் சரி, ஏரித் தண்ணி சென்னைக்கு வேண்டும் என்று 'அடம்' பண்ணுவது எந்த ஞாயம்? என்பதே இன்றுள்ள நமது கேள்வி.
மாந்த குல வரலாற்றில் இதுவரை நடந்திராத தீமைகளைக் கொண்ட இந்த புதித தொழில்நுட்பங்கள் மாசுபாடு என்ற சொல்லாட்சியைச் சுமந்து கொண்டன. இதற்கு முன்பு இயற்கையிடமிருந்து வேளாண்மையைக் கற்றுக் கொண்ட மாந்தன் அதைப் பார்த்து அது போலச் செய்தான். மரங்களில் இருந்து இலைகள் உதிர்கின்றன, அவற்றின் மீது பறவைகளும் பிற விலங்குகளும் எச்சங்களை இட்டுச் செல்கின்றன, பின்னர் மழைத்துளி விழுகின்றது. இந்தச் செயல்பாடுகளால் அங்கு வாழும் நுண்ணுயிர்கள் மட்காக்குதல் (composting) என்ற பணியை மிக இயல்பாகச் செய்கின்றன. மரங்களும், பறவைகளும் பிற விலங்குகளும் விதைத்த விதைகள் அதன் மீது விழுந்து முளைக்கின்றன. இதனால் பல்வேறு தன்மை கொண்ட பன்மயம் (diversity) மிக்க செடி கொடிகள் வளர்கின்றன. இதைப் பார்த்து பண்டை மாந்தன் தனது வயலில் மட்கிய குப்பைகளைப் போட்டு வேளாண்மை செய்தான் 'தொய்யாது வித்திய துளர்படு துடவை'களைப் (உழாமல் விதைத்த நிலம்) பயன்படுத்திய பண்டைத் தமிழரை சங்க இலக்கியம் பகர்கிறது. இன்று இயற்கை வழி வேளாண்மையைப் பற்றி பேசுபவர்கள் கி.பி. 1905 ஆம் ஆண்டளவில் இந்தியாவிற்கு வேளாண்மையைக் கற்றுக் கொடுக்க வந்த ஆல்பர்டு ஃகோவார்டு என்பவர் கூறியவற்றை கூறுவதோடு நின்றுவிடுகின்றனர்.
அவர் இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்ட முறையை வைத்து மட்காக்கும் புதியதொரு மட்குமுறையைக் கண்டறிந்தார். தமிழகத்தில் உள்ள உழவர்கள் தங்கள் நிலங்களிலேயே மட்காக்கும் முறையை மிகச் செப்பமாக செய்த முறையை திருச்சிராப்பள்ளியில் 1803 ஆம் ஆண்டளவில் பணியாற்றிய பக்கிள் (Puckle) என்ற ஆங்கிலேய அதிகாரி குறிப்பிடுகிறார்.(1) அதாவது நிலத்திலேயே பசுந்தழைகளைக் கொண்டுவந்து ஊற வைத்துப் பயன்படுத்தும் முறை, ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை அமர்த்துதல் போன்ற எளிய நுட்பமான முறைகளைக் கையாண்டதை வாலஸ் என்ற திருச்சிராப்பள்ளியில் ஆட்சியராக இருந்த ஆங்கிலேயரும் குறிப்பிடுகின்றனர். ஃகோவார்டு அவர்களுக்கு இது தெரிந்திருந்தால் அவரது ஆராய்ச்சி மேலும் செழுமைப்பட்டிருக்கும், ஆனால் அவருக்கு தென்னிந்தியாவைப் பற்றி மிகக்குறைவான அறிவே இருந்துள்ளது நன்கு தெரிகிறது. ஏனெனில் அவர் 'வடஇந்திய மக்கள் கோதுமை உண்பவர்கள் என்றும் தெற்கு, கிழக்கு, மேற்கு இந்தியாவில் வாழ்பவர்கள் அரிசி உண்பவர்கள் என்றும் வடஇந்திய மக்கள் உடல்வலிமை உள்ளவர்கள் என்றும் பிற பகுதி இந்தியர்களுக்கு உடல்வாகு குறைவு'(2) என்றும் குறிப்பிடுகிறார். அதாவது கோதுமையில் அதிகம் புரதம் இருப்பதால் அதை உண்பவர்கள் உடல்வாகு மிக்கவர்களாக இருப்பார்களாம். அரிசி உணவு உண்பவர்கள் உடல்வாகு குறைவாக இருக்குமாம்.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அவருடைய காலகட்டத்தில் அரிசி உண்பவர்கள் மிகவும் குறைவானவர்கள். அத்துடன் பார்ப்பனர் போன்ற மேட்டுக் குடியினர்தான் அதிகம் அரிசி உண்டனர். பெரும்பான்மை மக்கள் புஞ்சைத் தவசங்களான கம்பு, சோளம், குதிரைவாலி, சாமை, வரகு போன்றவற்றை உண்டனர். ஒப்பீட்டளவில் கோதுமையைவிட பல மடங்கு ஊட்டங்களை குதிரைவாலி கொண்டுள்ளது. கோதுமையைவிட ஆறுமடங்கு நார்த்தன்மை (fibre) கம்பில்(11.8) அதிகம். கோதுமையைவிட(11.6) புரதம்(3) அதிகம். அத்துடன் பல வகைகளில் புஞ்சைத் தவசங்களைவிட கோதுமை குறைபாடு கொண்டது. அத்துடன் புழுங்கல் அரிசியை ஆய்வுக்கு எடுத்து ஆராய்வது பொதுவாக இல்லை. இவரது ஆய்வுகள் சிறந்ததாக இருப்பினும் முழுமை கொண்டதாக இல்லை என்பதை மனங்கொள்ள வேண்டும்.
இயல்பான அழுத்தநிலை, இயல்பான வெப்பநிலையைக் கொண்டு ஒரு பொருள் மற்றொரு பொருளாக மாற்றமைடைந்து கிடைப்பதை இயற்கைப் பொருள் என்று கூறலாம். அவ்வாறல்லாமல் அதிக அல்லது மிகக்குறைந்த வெப்பம், அதிக அழுத்தம் உள்ள நிலையை ஏற்படுத்தி ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றுவதால் கிடைப்பதை செயற்கைப் பொருள் என்றும் கூறலாம். எடுத்துக்காட்டாக பவளப்பூச்சிகள் தங்களது உமிழ்நீர் கொண்டு சுண்ணாம்பை உருவாக்குகின்றன. இந்தச் செயல்பாடு இயல்பான வெப்ப, அழுத்த நிலையில் நடக்கின்றது. ஆனால் இதையே தாதுக்களை வெட்டி நீற்றுலைகளில் இட்டு வேகவைத்து எடுப்பதன் மூலமாகவும் சுண்ணாம்பை உருவாக்கலாம். இந்த இரண்டிற்குமான மாறுபாடுதான் மனங்கொள்ள வேண்டியது. செயற்கைப் பொருள்களின் ஆக்கத்தில் நிலம், நீர், காற்று ஆகியவை மாசடைகின்றன. இந்தப் பின்னணியில் நாம் இந்தியாவிற்குள் செயற்கை உரங்கள் வந்திறங்கிய கதையைக் காண்போம். செயற்கை உரத்தின் வரலாறு வெடியுப்பைப் பயன்படுத்தியதில் இருந்து தொடங்குவதாகக் கொள்ளலாம். 1665ஆம் ஆண்டு நெல்ம் டிக்பை என்ற ஆங்கிலேயர் விளைச்சலை அதிகமாகப் பெற வெடியுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.(4) இவர் ராயல் சொசைட்டியை உருவாக்கியவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது சிலி போன்ற நாடுகளில் இயற்கையிலேயே பாறை உப்பாகவும் கிடைத்து வந்தது. இந்த உப்பின் மிக மோசமான மறுபக்கம் என்னவென்றால் இஃது ஒரு வெடிமருந்து என்பதுதான். உலகப் போர்களில் மிக அதிகமாகப் பயன்பட்ட வெடியுப்பான இது வேளாண்மையிலும் பயன்பட்டதுதான் வியப்பானது. பின்னர் 1804 ஆம் ஆண்டளவில் நிக்காலஸ் தியோடர் சசூர் என்ற சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர் சாம்பலில் இருந்து சாம்பரம் என்ற பொட்டாசைப் பயன்படுத்தும் ஆய்வில் இறங்கி அறிவியல் சமுதாயத்தைத் தன்பக்கம் ஈர்த்தார். இதன் பிறகு மிக முதன்மையான ஆய்வுகளில் ஒன்றான தாதுத் தேற்றம் (mineral theory) என்ற கோட்பாட்டையும் குறைந்தளவு விதி (law of minimum) என்ற கோட்பாட்டையும் 1840இல் ஜஸ்டர் வான் லீபிக் என்ற செருமானியர் விளக்கினார். இவரையே 'செயற்கை உரத் தொழிலின் தந்தை' என்கின்றனர்(5) ஜஸ்டர் வான் லீபிக்
இது செயற்கை உரத் தொழில் முனைவில் அழுத்தமான விளைவுகளை உருவாக்கியது. இவருக்கு ஆதரவாக அமெரிக்க வேதியியலாளரான தாமஸ் கிரீன் கிளம்சன் இருந்தார். இவர் அமெரிக்க வேளாண்மை, வேதியியல் ஆய்வில் பெயர் பெற்றவரும் மெரிலான்ட் வேளாண் கல்லூரியின் தோற்றுநரும் ஆவார். இவர் கூறுகிறார், 'மக்கள் இல்லாமல் நாகரிகம் இல்லை, உணவில்லாமல் மக்கள் இல்லை, ஆனால் பாஸ்பாரிக் அமிலம் இல்லாமல் உணவு இல்லை' லீபிக்கின் கருத்தாளர்கள் தழையூட்டம் பற்றிக் கவலை கொள்ளவில்லை என்பதோடு அதிக அளவு எருவைக் கொட்டினால் எந்தப் பயனும் இல்லை என்றே கூறினர். இந்தக் கருத்து ஏறத்தாழ 1857வரை இருந்தது. ஆனால் செடிகளுக்கு தழையூட்டம் எனப்படும் வெடியீன் (நைட்ரசன்) அல்லது அமோனியாவின் தேவையை லாஸ், கில்பர்ட், புஃக் என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞர்கள் நிறுவினார்கள்.
கடல்பறவைகளின் எச்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தழையூட்டத்தைக் கொடுக்க முடியும் என்பதை 1802ஆம் ஆண்டில்தான் ஃகம்போல்ட் என்ற செருமானியர் கண்டறிந்தார். அதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளாகவே தென்னமரிக்கப் பழங்குடிகள் இதனைச் சிறப்பாகப் பயன்படுத்தி வந்தனர். (தமிழகத்தில் கிடை அமர்த்துதல் பசுந்தாள் உரங்கள் போடுதல் போன்றவை வழக்கில் இருந்து வந்துள்ளன). பின்னர் கடற்பறவை எச்சங்கள் பெரு நாட்டில் இருந்து மேலை நாடுகளுக்கு இறக்குமதியானது. 1849ல் முதல் உரத்தொழில்சாலை செருமனியில் உருவானது. பின்னர் 1854இல் நூற்றுக்கணக்கான உரத்தொழிற்சாலைகள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் உருவாயின. இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உருவாகிய செயற்கை உரத்தொழிற்சாலைகள் தழையூட்டத்தைப் பிரித்தெடுக்கும் நுட்பத்தை 18ஆம் நூற்றாண்டு வரை கண்டறிய முடியவில்லை. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பலரும் இந்த ஆராய்ச்சியில் தோல்வியுற்றனர். 1909ஆம் ஆண்டு செருமனியைச் சேர்ந்த ஃபிரிட்ஸ் ஃகேபர்(6) என்பவர் முதன்முதலாக வளிமண்டலத்தில் உள்ள வெடியீனை (நைட்ரசனை) சொட்டுச் சொட்டாக ஒரு கருவி மூலம் பிரித்தெடுக்கும் நுட்பத்தை கண்டறிந்தார். பின்னர் இவருடன் இணைந்து கார்ல் போட்ஸ் என்பவர் பெருமளவு வெடியீன் பிடிக்கும் கருவிகளை உருவாக்கினர். இதற்காக ஃகேபருக்கு 1918ல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. (1931ல் போட்சுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது).
இந்தக் கொடுமைக்கார அறிஞர் அமோனியா மட்டுமல்லாது குளோரின் போன்ற நச்சுவளிகளையும் கண்டறிந்தார். இவரே வேதிப்போரியலின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். இவரது மனைவியும் ஓர் அறிவியலறிஞரே. ஃகேபரின் ஆராய்ச்சிகளை மிகக் கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாது நெஞ்சில் துப்பாக்கி கொண்டு சுட்டுத் தற்கொலையும் செய்து கொண்டார். தன் மனைவி தற்கொலை செய்யும்போது ருசியர்கள் மீது நச்சுவளி பீய்ச்சியடிப்பதைப் பார்வையிடச் சென்றார் அந்த 'அறிவியலறிஞன்'. யூத இனத்தில் பிறந்த இவரது கண்டுபிடிப்பே பின்னர் ஃகிட்லரின் நாசிகளால் தனது இன அழிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது வரலாற்றின் நகைமுரண். இவரது மகனும் தற்கொலை செய்துகொண்டார். இவரது குடும்பம் வதைமுகாமில் கொல்லப்பட்டது. இவரை நாசிகள் நாடு கடத்தினர். பல நாடுகளில் அலைந்து திரிந்து நெஞ்சாங்குலை இயங்காமல் நின்றதால் 1934 ஆம் ஆண்டு இறந்தார். இவர் மற்றொரு கொடூர ஆய்வையும் மேற்கொண்டார் அதாவது Zyklon B என்ற சையனைடு நச்சு வளி ஆய்வைச் செய்தார். அதுவே களைக்கொல்லிகளாக வருகிறது. இது பற்றி மற்றொரு கட்டுரையில் காண்போம். இந்த நுட்பவியலை தொழில்முறைத் தயாரிப்பிற்காக பிஏஎஸ்எஃப் (BASF) என்ற கும்பணி வாங்கியது. இதுவே பின்னர் ஐ.ஜி ஃபார்பென் (IG Forben), ஃகொய்ச்ட் (Hoechst), பேயர் (Bayer), என்று வளர்ச்சி பெற்றது தனி வரலாறு.
ஆனால் இங்குதான் வரலாறு தனது முகத்தைச் சற்று சுருக்கிக் கொள்வதைக் கவனிக்க வேண்டும். வேளாண்மைக்கான ஆராய்ச்சி போருக்கானதாக மாற்றப்பட்டது. கரிமருந்து எனப்படும் வெடியுப்பு முன்னர் வைக்கோலை எரித்து மாட்டுச் சிறுநீருடன் கலந்து வடிகட்டி பிரிக்கப்பட்டு எடுக்கப்பட்டு வந்தது. தொழில்முறையாக இது முதல் உலகப்போரில் BASF மூலம் வெடிமருந்தாக உர வகை அமோனியா பயன்படுத்தப்பட்டது. ஃகேபர் முறையைப்போல மற்றொரு முறையான சையனைடு முறையும் உரத்திற்கும் வெடிமருந்திற்கும் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் செருமனியில் நைட்ரசனின் ஆக்கம் முதல் உலகப்போர் காலக்கட்டத்தில் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் இதற்குப் போட்டியாக பிரான்சிலும், இத்தாலியிலும், இங்கிலாந்திலும் நைட்ரசனாக்கும் கும்பணிகள் பெருமளவில் தோன்றின. இது இரண்டாம் உலகப்போர் வரையிலும் தொடர்ந்தது. வேளாண்மைக்கு மட்டுமல்லாது, போருக்கும் நைட்ரசன் தேவைப்பட்டதால் இதற்கான போட்டிகள் உருவாயின. இதுவரை வெடிமருந்து தொழிற்சாலைகள் உரத்தொழிற்சாலையாக மாற்றப்பட்டன என்று கூறிய கதையை மாற்ற வேண்டியாக உள்ளது. அதாவது செயற்கையுரத் தொழிற்சாலைகள் வெடிமருந்துத் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டன. போர் முடிந்த பின்னர் மீண்டும் பழைய உரத்தொழிற்சாலைக்குத் திரும்பின என்றுதான் கூறவேண்டும். NPK கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவிலும் வேதியுரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தீவிர சாகுபடித் திட்டம் என்று முதலிலும் பின்னர் பசுமைப் புரட்சி என்ற பெயரிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கதையை அடுத்துப் பார்ப்போம்.
குறிப்புகள்:
- G.O.No. 1928 Revenue dated October 26, 1863
- Howard, A. (1943). An Agricultural Testament, Oxford University Press, London
- Sources: Hulse. Laing and Pearson. 1980: United States National Research Council/National Academy of Sciences. 1982. USDA/HNIS. 1984.
- Discourse Concerning the Vegetation of Plants - Kenelm Digby
- www.britannica.com/EBchecked/topic/335263/Justus-von-Leibig
- en.wikipedia.org/wiki/Haber_process