தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றையவை - பசுந்தீவனம் - ஜெய்சங்கர்

சென்ற இதழில் அடர் தீவனம் மற்றும் உலர் தீவனம் பற்றி அறிந்து கொண்டோம். மூன்றாவதாக, பசுந்தீவனம் - மாடுகளின் உணவில் மிகவும் முக்கியமானது. மாடுகளுக்கு தேவையான எல்லா ஊட்டச் சத்துக்க்களையும் அளிக்க வல்லது. இதை இரண்டு வகையாக அளிக்கலாம். ஒன்று, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவது, மற்றொன்று தீவனப் புற்களை விளைய வைத்து வெட்டி அளிப்பது. மேய வைப்பது மிகச் சிறந்தது. மாடுகளுக்கு உடற் பயிற்சியும் தானாக கிடைக்கும். மாட்டுக் கொட்டகையும் பகல் நேரத்தில் சாணி, கோமியம் ஆகியவை விழாமல் உலர்ந்து இரவில் மாடு படுக்கவும், நோய் பரவாமல் இருக்கவும் ஏதுவாக இருக்கும். கட்டுத்தறியில் மட்டுமே உள்ள மாடுகளுக்கு உடற்பயிற்சியும் கிடைக்காது, சூரிய ஒளியும் கிடைக்காது, திறந்த வெளிக் காற்றும் கிடைக்காது. இதனால், உடல் நலம் பாதிக்கும். மேலும், மாடுகளுக்கும் கணிணி மென் பொருள் கழகங்களில் வேலை செய்யும் மனிதர்களைப் போல் உடற்பருமன் அதிகமாகி, (obesity) அதனால் பல உடல் நலக் கேடுகள் விளையும். சினை பிடிப்பதற்கும் தாமதமாகும். எனவே, நமது முக்கிய குறிக்கோளான மாடு உற்பத்தி பாதிக்கப்படும். எனவே, மேய்ப்பது என்பது இன்றியமையாதது.

சுழற்சியில் மேய வைக்க, சராசரியாக ஒரு மாட்டிற்கு கால் காணி (33 செண்ட்) நிலம் வேண்டும். உங்களிடம் மேய்ப்பதற்காக தனியாக இடம் ஒதுக்க இயலா விட்டால், சுழற்சியில் இரண்டு மூன்று கழனிகளை மாடுகளை மேய்ப்பதற்கென வருடா வருடம் ஒதுக்கலாம். மாடுகள் மேய்வதால், களைகள் அதிகமானாலும் சாணி, கோமியம் ஆகியவை விழுந்து மக்கி கழனி வளம் அடையும். அப்படியும் செய்ய முடியாவிட்டால் ஒரே வருடத்தில் பயிர் சுழற்சியில், ஏதாவது சில கழனிகள் பயிர் இல்லாமல் இருக்குமாறு திட்டமிட்டுக் கொண்டு (மாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்) வரப்புப் புற்களில் கூட மேய்க்கலாம். போதுமான அளவு மேய்ச்சல் இருந்தால் சிறிது வைக்கோல் தவிற வேறு தீவனத் தேவை இருக்காது. செலவும் அதிகம் ஆகாது. மேய்ச்சலுக்கென்று இடம் உங்கள் பண்ணைக்குள் மட்டுமே அமைய வேண்டும் என்பதில்லை. பண்ணைக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலங்கள், ஏரி, குளம் இவற்றை ஒட்டி உள்ள இடங்கள் ஆகியவற்றில் மேய வைத்தும் வளர்க்கலாம். பெரும்பாலான ஊர்களில் மேய்க்கால் புறம்போக்கு என்று ஊரில் உள்ள மாடுகள் மேய்வதற்கென்றே நிலம் ஒதுக்கப் பட்டிருக்கும். ஆனால், அவை வெகு அருகில் இல்லா விட்டால் மாடுகளை ஓட்டிச் சென்று மேய்க்க ஆள், மற்றும் நேரம் தேவை. மேலும், பழ மரத் தோப்புகளிலும், மரங்கள் ஓரளவு வளர்ந்ததும் மாடுகளை மேய்க்கலாம்.

மேய்ச்சலுக்கென்று இடம் ஒதுக்க முடியுமானால், அவற்றில் பல ரக, நீண்ட கால புல் வகைகளை மழைக்காலத்தில் கலந்து விதைத்து, சிறிது காலம் வளர்ந்த பின்னர் மாடுகளை மேய்க்கலாம். இவ்வாறு மேய்க்கும் போது தன்னிச்சையாக மேய விடாமல், மாடுகளை கயிற்றால் கட்டி ஒரே இடத்தில் மேய விட்டு, அடுத்த நாட்களில் மேய்ந்த இடத்திற்கு அருகில் கட்டி, சுழற்சியில் மேய்க்கலாம். பிறகு, அதே இடத்தில் சில வாரங்கள் கழித்து மீண்டும் புற்கள் தானாக வளர்ந்தவுடன் சுழற்சி செய்யலாம். இவ்வாறு விதைப்பதற்கு ரோட்ஸ் புல், முயல் மசால், வெலி மசால், குதிரை மசால், கொழுக்கட்டைப் புல், யானைப்புல், நேப்பியர் புல், கினியாப் புல் போன்றவற்றை கலந்து விதைக்கலாம். மேலும், உங்கள் பகுதியில் தானாக விளையும் புற்களின் விதைகளையும் சேகரித்து விதைக்கலாம்.

குளிர் நாட்களில் பனி உலர்ந்த பின்னரே மாடுகளை மேய்வதற்கு அனுமதிக்க வேண்டும். பனியுடன் புல் மேய்வது மாடுகளுக்கு நாவில் சில தொந்தரவுகளை (நாவரி) உருவாக்கும். கத்திரி வெய்யில் போன்ற கடும் வெய்யில் காலங்களில் மதியம் ஒரு மணி முதல் நான்கு மணி வரை உள்ள வெய்யிலின் சூடு மாடுகளால் தாங்க முடியாது. அக்காலங்களில் மாடுகளுக்கு தண்ணீர் அளித்து மர நிழல்களில் இருக்கச் செய்து பின்னர் நான்கு மணிக்கு மேல் ஆறரை மணி வரை கூட மேய்க்கலாம்.

மேய்ச்சலுக்கு போதிய அளவு இடம் இருந்தாலும் மழை பெய்யும் நாட்களில் மாடுகளை மேய்ப்பது இயலாது. அந்நேரங்களில் பச்சைப் புற்களை வெட்டி அளிப்பது இன்றியமையாதது. எனவே, மாடுகளுக்கு தேவையான தீவன புற்களை விளைய வைக்க சிறிது இடமாவது ஒதுக்குவதும் விளைய வைப்பதும் அவசியம். மேய்ச்சலுக்கு இடம் குறைவாக இருந்தாலும் தீவனப் புற்களை விளைய வைத்து, வெட்டி அளிப்பதன் மூலம் குறைந்த இடத்தை செம்மையாக பயன்படுத்தலாம். அதே கால் காணி நிலத்தில் தீவனப் புல் வளர்ப்பதன் மூலம் ஐந்து மாடுகளை பராமரிக்கலாம். என்ன மாதிரியான புற்களை விளைவிக்கலாம்? புல் என்று பொதுவாக சொன்னாலும் அதிலும் பல வேறு கூறுகள் உள்ளன. அதுவும் மேய விடாமல் தீவனப் புற்களை அறுத்து கொடுப்பதானால் பல வித புற்கள் கலந்து இருக்குமாறு பார்த்துக் கொள்வது ஊட்டச்சத்து சமமாக கிடைக்க வழி வகுக்கும். தீவனப் புற்களை தானியத் தீவனப் பயிர்கள், பயறு வகை தீவனப் பயிர்கள் மற்றும் புல் வகை தீவனப் பயிர்கள் என்று பிரிக்கலாம்.

தானியத் தீவனப் பயிர்களில் தீவன சோளம் (கோ-27 இரகம் மற்றும் 2001ல் தயாரிக்கப்ட்ட கோ. எஃப். எஸ். 29), தீவன மக்காச்சோளம் (ஆப்பிரிக்கன் நெட்டை மற்றும் ஏ.ப்.எஃப்.எம். 8 ஆகிய இரகங்கள்), தீவன கம்பு (கோ-8, டி.என்.எஸ்.சி 1 இரகங்கள்) ஆகியவற்றை விளைவிக்கலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் எளிதில் சீரணமாகும். பூ பிடிக்கும் பருவத்தில் அறுத்து தீவனமாக அளிக்கலாம். இவை பொதுவாக நட்ட 50 முதல் 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். தண்ணீர் தேவை மிகவும் குறைவு. இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். ஒரு நல்ல மழை பெய்து விட்டால் அதுவும் தேவைப்படாது.

பயறு வகை தீவனப் பயிர்களில் புரதச்சத்து அதிகம். பாலின் கொழுப்பு சத்தை அதிகரிக்க இவை உதவும். தட்டைப் பயறு (கோ-5 இரகம்), பெர்சீம், அகத்தி, வேலி மசால், குதிரை மசால், முயல் மசால் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கலாம். இதில் அகத்தி மரமாக வளரும் தன்மை உடையதால், கழனிகளின் ஓரத்தில் ஒரு மீட்டர் இடைவெளியில் நடலாம். தனியாக இடம் தேவையில்லை. இவற்றையும் பூ பிடிக்கும் பருவத்தில் தான் அறுவடை செய்ய வேண்டும். இவை நட்ட 60 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். வேலி மசால் அறுத்த பிறகு தண்ணீர் பாய்ச்சினால் மீண்டும் வளர்ந்து பூ பிடிக்கும். அதனால் இதை புல் வகை பயிர்களுடம் கலந்தும் விதைக்கலாம். புல் வகை பயிர்களில் மிகவும் பிரபலமானது கோ-3 மற்றும் கோ-4 என்ற புல். இது கம்பு மற்றும் நேப்பியர் புல்லை ஒட்டி தயாரிக்கப்பட்டது. இவற்றை கரும்பு போன்று கரணைகளாக நட வேண்டும். நடுவதற்கு நன்கு முற்றிய கரணைகளை பயன்படுத்த வேண்டும். மண்ணில் பாதியும் வெளியில் பாதியுமாக இருக்குமாறு செருகி நட வேண்டும். மேலும் தீனாநாத் ஒட்டு இரகம் கோ-1 மற்றும் கினியா ஒட்டான கோ-2 இரகங்களும் நடலாம். இவற்றை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நட்ட 90 நாட்கள் கழித்து அறுவடைக்கு தயாராகும். இவற்றை வரப்பு சற்று அகலமாக இருக்குமானால் வரப்புகளில் கூட நட்டு வைக்கலாம். இவை தவிற நேப்பியர் புல், கொழுக்கட்டைப் புல், ரோட்ஸ் புல் போன்றவற்றையும் விளைவிக்கலாம். புல் வகைகள் யாவுமே பல அறுவடைகளுக்கு இருக்கும்.

புல் வகை பாதியும், மீதி பாதிக்கு சம அளவில் தானிய மற்றும் பயறு வகை தீவனப் புற்களை கலந்து மாடுகளுக்கு அளிப்பது சரிவிகிதமாக இருக்கும். தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களையும் வழங்கி வயிற்றுக்கும் நிறைவாக இருக்கும். ஒரே கழனியை பல பாகமாக பிரித்துக் கொண்டு (வேர்கடலைக்கு தண்ணீர் பாய்ச்ச பிரிப்பது போல்) அதில் சில நாட்கள் இடைவெளியில் தீவனப் பயிர்களை நட்டால், எல்லாம் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வருவதை தவிர்க்கலாம். நீண்ட நாட்களுக்கு, பயிர்களை கலந்து அறுத்து மாடுகளை பராமரிக்கலாம். இதில் இரகம், இடம் மற்றும் நீர் மேலாண்மை உங்கள் நில அமைப்பு மற்றும் தீவனத்தேவையைப் பொறுத்து அனுபவத்தின் மூலமே பிடிபடும். முயற்சி செய்தால் கால் காணி இடத்தின் மூலமே ஐந்து மாடுகளை செம்மையாக பராமரிக்கலாம். பல வித தீவன பயிர்களை ஆண்டு முழுவதும் சுழற்சியில் பயிர் செய்தால் கால் காணி நிலத்திலேயே ஒரு ஆண்டிற்கு இருபது டன் பசுந்தீவனம் அறுவடை செய்யலாம்.

வறட்சி மற்றும் கோடை காலங்களில் மர இலைகளை மாடுகளுக்கு பசுந்தீவனமாக அளிப்பது ஒரு உத்தி. மரங்களை வேலி ஓரங்களில் நடலாம். பாதைகளில் நிழலுக்காக நடலாம். மேய்ச்சல் நிலம் இருக்குமானால் அவற்றில் எட்ட மரங்களை நட்டு நிழலுடன் கூடிய முல்லை மேய்ச்சல் நிலமாக அமைக்கலாம். பழ மரத்தோப்பு வைத்திருந்தால் அவற்றில் பழ மரங்களின் ஊடே சில தீவன மரங்களை நட்டு வைக்கலாம். வேளாண் நிலங்களிலும் வரப்பு ஓரமாக நிழல் அதிகம் வராத குறு மரங்களை நட்டு வளர்க்கலாம். இப்படி மரங்களை பல விதமாக வளர்த்து வறட்சி காலங்களிலும் மாடுகளுக்கு பசுந்தீவனம் வழங்கலாம். மேலும், மரங்கள் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து பலனளிக்கும்.

மனிதருக்கும் மாட்டுக்கும் சிறந்த உணவாகும் அகத்திக் கீரை என்னென்ன மரங்கள் நடலாம்? முன் சொன்னது போல் அகத்தி ஒரு சிறந்த தீவனம், அதைத்தவிர‌ கல்யாண முருங்கை, சிசு, சுபாபுல், கிளைரிசிடியா என்கிற சீமைக்கொன்றை, மலை வேம்பு, வேம்பு, பூவரசு, மல்பெரி, வாகை போன்று பல வகை மரங்களின் இலைகளை மாடுகளுக்கு வழங்கலாம். ஆனால், பல இலைகளை கலந்து அளிக்க வேண்டும். மாடுகள் உண்ண மறுத்தால், சிறிது புற்களுடன் கலந்து பசி நேரத்தில் அளித்து பழக்க வேண்டும். சாப்பிடும் மாடுகளை சாப்பிடாத மாடுகள் அருகே கட்டியும் பழக்கலாம். இந்த உத்தி எந்த தீவன மாற்றத்துக்கும் பொருந்தும். புது தீவனத்தை பழைய தீவனத்துடன் கால் பங்கு கலந்து ஒரு வாரம், அரை பங்கு ஒருவாரம், முக்கால் பங்கு ஒரு வாரம் என்று பழக்கி பின் பழைய தீவனத்தை அறவே நிறுத்தலாம். தீவனத்தை ஒரே நாளில் முழுமையாக மாற்றினால் சில மாடுகள் உண்ண மறுக்கும். எனவே, படிப்படியாக மாற்றவும்.

உணவுடன் சேர்ந்து மாடுகளுக்கு அளிக்க வேண்டிய மற்றொன்று - தண்ணீர். தூய்மையான குடிநீர் அளிப்பதும், தேவையான அளவு அளிப்பதும் அவசியம். ஒரு மாட்டிற்கு அதன் எடையைப் பொருத்து இருபது முதல் நாற்பது லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் தூய்மையாக, சுகாதாரமாக இல்லா விட்டால் நோய் பரவும் அபாயம் அதிகம். பொதுவாக தொற்றும் வியாதிகள் தண்ணீர் மூலம் பரவும். தண்ணீரை நீங்கள் உயர் நிலை தொட்டிகள் மூலம் சேமித்து அளிப்பீர்களானால் அதை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும். மாடுகளுக்கு தண்ணீர் அளிக்கும் தொட்டி அல்லது வாளியும் சுத்தமாக இருக்க வேண்டும். இதைத் தவிற ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஓடைகள் போன்ற நீர் நிலைகளிலும் தண்ணீர் காட்டலாம். ஆனால், அந்த இடங்கள் மக்களால் மாசு படாமல் உள்ளதா என்பதை ஆராய்ந்து பின்னர் பயன்படுத்தவும். இவ்வாறு தீவன மேலாண்மை செய்தால் மாடுகளை அதிக செலவின்றி, நோயில்லாமல் மாடுகளை பராமரிக்கலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற மாடு (செல்வம்!). அடுத்த இதழில் குறைவற்ற மாடுகளை உருவாக்க இனப்பெருக்கம் பற்றிய தகவல்களுடன் சந்திப்போம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org