
01. ஐக்கிய சோயாபீன் குடியரசு
க்ளாரின் அண்ட் லா நாசியோன் ( Clarin and La Nacion) என்ற அர்ஜென்டீனப் பத்திரிக்கையில் சிஞ்ஜென்டா கும்பணி ஒரு விளம்பரம் அளித்திருந்தது. அதில் பிரேசில், அர்ஜென்டினா,உருகுவே,பராகுவே ஆகிய நாடுகளின் பகுதிகளை இணைத்து “ஐக்கிய சோயாபீன் குடியரசு” (United Republi of Soybean) என்று தன் சந்தையை மார்தட்டிக் கொண்டுள்ளது. விதையால் வளரும் நாடுகளை ஆளுமை கொள்ள இந்நாசகாரக் கும்பணிகள் துடிக்கின்றன என்பதற்கு இதைவிட ஒரு நல்ல சான்று வேண்டுமோ?

02. மக்கள் எழுச்சியின் வெற்றி
கொலம்பியாவில் விதைகளைச் சேகரிப்பது சட்டப்படி குற்றம் என்ற Resolution 970 என்னும் அரசியல் சட்டத் திருத்தத்தால் பாரம்பரிய விதைக்கிடங்குகள் அழிக்கப்பட்டு, பன்னாட்டுக் கும்பணி விதைகளை மட்டுமே உழவர்கள் வாங்க வேண்டும் என்ற சூழ்ச்சியைப் பற்றி உணவும் உரிமையும் கட்டுரையில் சரா எழுதி இருந்தார். பொதுமக்களின் ஒன்று திரண்ட எழுச்சியின் விளைவால் அரசு வேறு வழியின்றி இத்திருத்த மசோதாவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்துள்ளது (கைவிடவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும்!).நாமெல்லாம் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து விடாமல் பொதுப் பிரச்சினைகளுக்காகக் கொஞ்சம் அவ்வப்போது தெருவில் இறங்கிக் குரல் கொடுக்க வேண்டும் என்று இது உணர்த்துகிறது