தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம்

வேளாண்மையும் கிராமத் தொழில்களும்

(ஊரக வளார்ச்சிக்கு ஒரு ஒட்டு மொத்தத் திட்டம் - An Overall Plan for Rural Development - என்ற குமரப்பாவின் அறிக்கையிலிருந்து. 1946ல் பூனாவில் மந்திரிகளின் கூட்டம் ஒன்றில் அவர் அளித்த பேச்சில் இருந்து தொகுத்தது இவ்வறிக்கை)

இத்தலைப்பில் நாம் கிராமப் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுகிறோம். இது ஒரு பெரிய, அகன்ற தலைப்பு. கிராமப் பொருளாதாரத்திற்கு வேளாண்மையே அடித்தளம்; வேளாண்மை என்பதில் கால்நடை வளர்ப்பும் அடங்கும்.

வேளாண்மை

இரண்டு முக்கிய விடயங்களைக் கருத்தில் கொண்டு நாம் வேளாண் உற்பத்தியை ஒழுங்காற்றவும், நிர்வகிக்கவும் வேண்டும்.

(1) ஒவ்வொரு பகுதியும் தன் உணவுத் தேவைகள் மற்றும் வாழ்விற்கு அடிப்படைத் தேவையான பிற பொருட்கள் அனைத்தையும் தானே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்.

(2) அவ்வப் பகுதியில் உள்ள வேளாண் உற்பத்தி, கிராமத் தொழில்களுக்கு மூலப் பொருளாக வேண்டுமேயன்றி பெரும் ஆலைகளுக்கு அல்ல: உதாரணமாக, பெரும் ஆலைகள் விரும்பும் அடர்ந்த கம்புக் கரும்பையும் (thick rind sugarcane), நீண்ட இழைப் பருத்தியையும் விளைவிப்பதை விட, உள்ளூர் வெல்ல ஆலைகளால் அரைக்கக் கூடிய மென்மையான தண்டுடைய கரும்பையும், ராட்டையால் நூற்கக் கூடிய குறு இழைப் பருத்தியையும் விளைக்க வேண்டும். எஞ்சிய நிலப்பரப்பை, சுற்றியுள்ள மாவட்டங்களுக்குத் தேவையான பயிர்களை விளைவிக்கப் பயன்படுத்த வேண்டும். ஆலைக்கரும்பு, புகையிலை, சணல் போன்றவற்றை விளைக்கப் பயன்படும் விளைநிலத்தை மிகவும் குறைக்கவோ அல்லது ஒட்டு மொத்தமாகத் தவிர்க்கவோ வேண்டும். இத்திட்டத்தை உழவர்கள் கடைப்பிடிக்க ஏற்றவாறு, அவ்வப் பகுதியில் விளைவிக்க வேண்டிய பயிர்களுக்கு அனுமதிச் சீட்டுக்கள் அளித்து ஒழுங்காற்ற வேண்டும். பணப் பயிர்கள் விளைவிக்கும் நிலங்களுக்கான நில வரி கடுமையாக உயர்த்தப் பட வேண்டும். இத்திட்டம், உழவர்களைப் பணப்பயிர்களில் இருந்து கட்டுப் படுத்தி, உணவுப் பயிர்களை விளைவிக்க ஊக்குவிக்கும். அரசு தேவைப்படும் கட்டுப்பாடுகளால்,தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப் படும் பொருட்களுக்கு இணையாக வேளாண் விளைபொருட்களின் விலை இருக்குமாறு செய்ய வேண்டும். புகையிலை, கரும்பு, சணல் போன்ற பணப்பயிர்கள் இரட்டை நாசம் செய்கின்றன. மனிதர்களுக்கு உணவைக் குறைப்பது மாட்டுமின்றிக் கால்நடைகளுக்கும் உணவின்றிச் செய்கின்றன. தானியங்கள், பால் போன்ற உணவுப் பொருட்களில் இருந்து சாகோ மாவு (starch ), கேசீன் (casein) போன்றவற்றைத் தயாரிப்பதைத் தடை செய்ய வேண்டும்.

சர்க்கரை ஆலைக் கரும்பு விளைப்பதால் குறையும் வெல்லம்/கருப்பட்டி உற்பத்தியைப் பனைமரங்களில் இருந்து வெல்லம்/கருப்பட்டி எடுப்பதன் மூலம் நிறைவு செய்ய வேண்டும். தரிசு நிலங்களில் பனை மரங்களை வளர்த்தால், தேவையான் வெல்லம் கிடைப்பதால், கரும்பிற்கு ஒதுக்கப்படும் பெரும் நிலப்பரப்பும், நீரும், தனியங்கள், பழம், காய்கறி போன்று, தற்போது நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் உணவுப் பொருட்களை விளைக்கலாம்.

[தமிழ்நாட்டில் ஏறத்தாழ 51 லட்சம் ஏக்கர் விளைநிலம் உள்ளது. இதில் 8 லட்சம் ஏக்கர்களுக்கு மேல் கரும்பு பயிரிடப் படுகிறது. நிலத்தடி நீர் கவலைக்கிடமான ஆழத்தில் போய் உப்பும், உவருமாக மாறி விட்டதற்க்குக் கரும்பும், மஞ்சளுமே பெரும் காரணிகள் - ஆசிரியர்]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org