தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


பின்வழி ஊடுருவல்


நம்நாட்டில் மன்சான்டோவின் பி.டி கத்தரியை உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் அனுமதித்ததும், அதை எதிர்த்துப் பல பொது மக்களும், தன்னார்வலர்களும் ,விஞ்ஞானிகளும், தொண்டு நிறுவனங்களும் நாடெங்கும் பொங்கி எழுந்து எதிர்ப்புத் தெரிவித்ததும் அதன் பின் வேறு வழியின்றி அத்தொழில்நுட்பத்திற்கு அரசு தாற்காலிகத் தடை விதித்ததும் நாம் அனைவரும் அறிவோம்.உச்ச நீதிமன்றத்தில் அருணா ரோடெரிகுவஸ் தொடுத்த பொது நல வழக்காலும், அதற்கெனக் கடுமையாக உழைத்து வரும் வந்தனா சிவா, தேவீந்தர் சர்மா, கவிதா குருகண்டி, சிரீதர் ராதாகிருட்டிணன் போன்றோராலும் இன்றுவரை மன்சான்டோவால் உணவுப் பொருட்களில் மரபீனி மாற்றுத் தொழில்நுட்பத்தைப் புகுத்த முடியவில்லை. இப்போது முன்வாசலில் நுழைய முடியாத திருடன், எல்லோரும் அசந்த நேரத்தில், கொல்லைப்புறத்தில் கன்னம் வைக்க முயல்வதுபோல் மன்சான்டோ ஒரு சகுனித்தனமான வேலை செய்து விட்டது. ஆம், நம் அண்டை நாடான வங்க தேசத்தில் பி.டி கத்தரிக்கு அனுமதி வாங்கி அங்கே விதை விற்பனையில் இறங்கத் தொடங்கிவிட்டது. இத‌னால் நமக்கென்ன பாதிப்பு என்றால், வங்க தேசத்துடன் நில வழி எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மேற்கு வங்கம்தான் நம் நாட்டின் மிகப்பெரிய கத்தரி உற்பத்தி மாநிலம். என்ன ஒரு நூதனமான சூழ்ச்சி!

காற்று வழியாகவும், தேனி, வண்டு, தாதூண் பறவை போன்ற உயிரினங்களாலும், வங்க தேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு பி.டி.கத்தரி மகரந்தச் சேர்க்கை ஏற்படும். கத்தரி அயல் மகரந்த்தச் சேர்க்கை கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. இது மட்டுமின்றி, ஒன்றுமறியாத பாமர உழவர்களுக்கு ஓட்டைச் சல்லடை போன்ற எல்லைக் கட்டுப்பாடுகளை மீறி விதைகளை வேண்டுமளவு விற்றுவிட்டுச் சில வருடங்களுக்குப் பின், ” நீங்கள் தடை விதித்தாலும் உழவர்கள் பி.டி.கத்தரி நட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்; மக்கள் ஆரோக்கியமாகத் தானே இருக்கிறார்கள்? எனவே பி.டி தொழில்நுட்பத்தால் ஆபத்து ஏதும் இல்லை” என்று அனுமதி பெற இது வாய்ப்பாகும். நம் அர‌சியல்வாதிகளோ, வேலியே பயிரை மேய்வதுபோல் எப்போதுடா கம்பணிக்கு வால் பிடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். முன்பு பி.டி. ப‌ருத்தி பாகிஸ்தான் மூலமாக இந்தியாவுக்கும், பிரேசில் நாட்டில் பி.டி.மக்காச்சோளம் அர்ஜென்டினா மூலமாகவும் ஊடுருவியது இப்படித்தான். வங்க தேசத்தின் இறையாண்மையில் தலையிட நமக்கு எந்த உரிமையும் இல்லை - மீறி மூக்கை நுழைத்தால் நமக்கும் அமெரிக்காவிற்கும் எந்த வேற்றுமையும் இல்லாது போய்விடும்! ஆனால் இவ்விடத்தில்தான் நாம்

கார்தெகெனா உயிரிப் பாதுகாப்பு ஒப்பந்தம் (Cartegena Biosafety Protocol) என்ற ஒன்றை நினைவு கொள்ளவேண்டும். 165 நாடுகள் உறுப்பினர்களாகக் கையெழுத்திட்டுள்ள இவ்வொப்பந்தம், உலகளாவிய உயிரிப்பன்மையத்தைக் (bio-diversity) காக்கும் ஒரு முயற்சியாகும். இதில் வங்க தேசமும், இந்தியாவும் உறுப்பினர்கள். எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் ஒருவரின் உயிர்ப்பன்மையத்தை ஒருவர் உருக்குலைக்காமல் இருப்போம் என்ற உறுதி இது. வங்க தேசம் பி.டி கத்தரி பயிரிட்டால், இவ்வொப்பந்த்தம் மீறப்படுவதால், இதைக் காரணம் காட்டி நாம் அதைத் தடுக்க அரசு பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால் அரசுக்குக் கொஞ்சம் குடிமக்கள் மீது அக்கறை வேண்டும் - அதுதான் குதிரைக் கொம்பாய் இருக்கிறது!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org