நாம் தாளாண்மையில் இயற்கை வேளாண்மை என்ற கட்டத்தைத் தாண்டித் தற்சார்பு வாழ்வியல் என்று பொருள்தெரியாத ஆட்டு மந்தை வாழ்முறைக்கு மாற்றாக ஒரு வாழ்வியலின் தேடலில் இறங்கியுள்ளோம். மன நலம், உடல் நலம், புவி நலம் ஆகிய மூன்று நலன்களும் நம் இலக்குகள். தோரோவைப் போல் தனிமனிதர்கள் காட்டில் போய் தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவு செய்து கொள்ள முயற்சிப்பது ஒரு பகுதி. அது தனிமனிதத் தற்சார்பு. அதற்கு அடுத்த வட்டமாகச் சிறு குமுகங்களைத் தேடி, நம் அண்மையில் உள்ளவற்றைக் கொண்டு வாழ்வில் நிறைவு காண்பது காந்தி கனவு கண்ட கிராம சுயராச்சியம்; குமரப்பா கூறிய காந்தியப் பொருளியல்; சூமாக்கர் போற்றிய சிறியதே அழகு என்ற கோட்பாடு. இல்வாழ்வில் தற்சார்பு அடைவது எப்படி? அல்லது இயன்றவரை அண்மைப் பொருளாதாரமும் ,தற்சார்பும் கொண்டு நம் இல்லறத் தேவைகளை நிறைவு செய்வது எங்ஙனம்? இது குமுகத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு அடிப்படைக் கேள்வி.
இக்கேள்விக்கு விடை காணப் புறப்பட்டால் முதலில் தோன்றுவது நம் தேவைகள் என்ன என்ன என்ற பட்டியல் இடுவதே. ஒரு சராசரி இந்தியக் குடும்பத் தலைவனும், தலைவியும் தங்கள் மற்றும் தங்களைச் சார்ந்தவர்களின் தேவைகளைப் பட்டியல் இட்டால் இது ஒருவாறு வடிவு பெறும்.
அடிப்படைத் தேவைகள்
உணவு (நல்லுணவு)
உடை
இருப்பிடம்
பாதுகாப்பு
உடல்நலம்