தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

எந்த உழவு இனியது? - பாமயன்


வேளாண்மையில் உற்பத்தித் திறன் என்ற கருத்தாக்கம் மிகவும் முதன்மைப் படுத்தப்படுவதுண்டு. உலக வேளாண்மை வரலாற்றில் மனிதர்கள் தங்களது உழைப்பைப் பயன்படுத்தி தங்களது உணவுத் தேவையை நிறைவு செய்து கொண்டனர். பின்னர் விலங்குகளைப் பயன்படுத்தி உணவு பெறும் நுட்பங்களைப் பெருக்கினர். இப்படியாக வேளாண்மை என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு வடிவம் எடுத்தது. அதன் பயனாக பொருளாதாரக் கண்ணோட்டத்தில் வேளாண்மை பேசப்படும் அண்மைக் காலங்களில் ஓர் ஏக்கரில் அல்லது ஓர் எக்டேரில் எவ்வளவு விளைச்சல் எடுக்கப்படுகிறது என்ற கணக்கு முன்வைக்கப்படுகிறது. முன்னர் தேவைக்கான உற்பத்தி என்றபோது இந்தக் கணக்கு முன்வைக்கப்படவில்லை. தனக்கும் தனது அண்டைச் சமூகத்திற்குமான உற்பத்தி நடந்தால் போதுமானது என்ற பார்வை இருந்தது.

ஆனால் வணிகமயமான வேளாண்மைச் சூழலில் இந்தக் கணக்கு மிகவும் முதன்மை பெறுகிறது. இதை உற்பத்தித் திறன் (productivity) என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட இடத்தில் அதிகபட்ச விளைச்சல் எடுப்பவர் சிறந்த உற்பத்தியாளர் என்று கவனிக்கப்படுகிறார். இது ஒரு வகையான ஒப்பீட்டுக் கணக்காகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்ட உழவர்களின் விளைச்சலையும் ஈரோடு மாவட்ட விவசாயிகளின் விளைச்சலையும் ஒப்பிட்டு ஈரோடு மாவட்ட விவசாயிகளின் உற்பத்தி அதிகமாக உள்ளதால் அவர்களது உற்பத்தித் திறன் அதிகம் என்ற முடிவிற்கு வருகின்றனர். அதேபோல இதை நாட்டுக்கு நாடு ஒப்பிட்டுக் கொள்கின்றனர். சீன உழவர்கள் இந்திய உழவர்களைவிட உற்பத்தித் திறன் மிக்கவர்கள். அமெரிக்க உழவர்கள் இன்னும் உற்பத்தித் திறன் மிக்கவர்கள் என்று ஒப்பிடுவார்கள். எடுத்துக்காட்டாக இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நெல் ஒரு எக்டேரில் 3,590 கிலோ விளைந்துள்ளது, சீனாவில் 6,686 கிலோ விளைந்துள்ளது. ஆகவே இந்திய உழவர்களின் வேளாண்மை முறை திறன் குறைந்தது என்று ஒரு கணக்கை முன்வைப்பார்கள்.

அதேபோல கோதுமை இந்தியாவில் எக்டேருக்கு 1,661 கிலோ விளைந்துள்ளது, சீனாவிலோ எக்டேருக்கு 4,838 கிலோ விளைந்துள்ளது என்றும் நமது கொள்கை வகுப்பாளர்கள் கூறுவர். இதேபோல அமெரிக்கா எக்டேருக்கு 7.5 டன் நெல்லை உற்பத்தி செய்துள்ளது. மேலும் அது எக்டேருக்கு 3.11 டன் கோதுமையை உற்பத்தி செய்துள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள் யாவும் நம்பகத் தன்மை கொண்டவைதாம். ஏனெனில் இதை வெளியிட்டவர்கள் உணவு, வேளாண்மை நிறுவனத்தினர் (FAO).

ஆகவே இதை எல்லாம் கணக்கில் வைத்து நமது வேளாண்மை பிற்போக்கானது, பத்தாம் பசலித் தனமானது, அந்த மிகுந்த உற்பத்தி எடுக்கும் வித்தக நாடுகளின் பின்னால் நாம் சென்று அவர்களது முன்னேற்றமான, அல்லது முற்போக்கான உத்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். அதற்கான திட்டங்களை வகுக்கின்றனர். அதிக அளவு எந்திரங்கள், அதிக அளவு வேதி உரங்கள் என்று மிகவும் செலவு பிடிக்கக் கூடிய எந்திரமயமான மேற்கத்திய வேளாண்மையைப் புகுத்துகின்றனர்.

உண்மையில் உற்பத்தித் திறன் என்பது இவர்கள் கூறும் அளவுகோல்களை வைத்துப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும். ஆனால் இது ஒரு குறையுடைப் பார்வை உற்பத்தித் திறனை அதாது உண்மையான உற்பத்தித் திறனை, நீடித்த உற்பத்தித் திறனை அளவிட வேறு சில அளவீடுகளும் (parameters) தேவைப்படுகின்றன. ஆனால் ரசாயன, எந்திர வேளாண்மை ஆதரவாளர்கள் (நாம் கருவிகளை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மையை எதிர்க்கவில்லை எந்திர‌மயமாகும் வேளாண்மையைத்தான் எதிர்க்கின்றோம்) அந்த அளவீடுகளைக் கணக்கில் எடுப்பதில்லை. அதில் ஒன்றுதான் ஆற்றல் திறன்மை (energy efficiency) எனப்படும் அளவீடு. அதாவது ஓர் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும்போது எவ்வளவு ஆற்றலை உள்ளீடு செய்கிறீர்கள், எவ்வளவு ஆற்றலை அதிலிருந்து பெறுகிறீர்கள் என்பது முதன்மையானது. அப்படியான கணக்கில் பார்த்தால் சீனாவும், அமெரிக்காவும் மட்டுமல்ல ரசாயன ஆதரவாள‌ர்களும் அதல பாதளத்தில் விழுந்துவிடுவார்கள்.

இப்பொழுது நமது உண்மையான உற்பத்தித் திறன் கணக்கைப் பார்ப்போம்.

இந்திய உழவர்கள் அதாவது 'பத்தாம் பசலி' உழவர்கள் மாட்டைக் கொண்டு உழவு செய்யும் 'அப்பாவிகள்' ஒரு எக்டேரில் கோதுமை சாகுபடி செய்து உத்திரபிரதேசத்தில் எக்டேருக்கு 821 கிலோ எடுக்கிறார்கள். இதில் பயன்படுத்ப்பட்ட ஆற்றல் 2703 கிலோ கலோரிகள். இந்த புள்ளிவிவரத்தை தேர்ந்த ஆய்வார்கள் செய்துள்ளனர். (Food, Energy, and Society, - David Pimentel, Ph.D., Marcia H. Pimentel, M.S).. ஆனால் இது காலத்திற்கு காலம் பருவநிலைக்கு ஏற்ப மாறும் என்பது உண்மை. இது ஒருபுறம் இருக்கட்டும். இதே நேரத்தில் அமெரிக்காவில் விளைச்சல் எக்டேருக்கு 2670 கிலோவாக உள்ளது. இதற்குப் பயன்பட்ட ஆற்றல் 9035 கிலோ கலோரி. அப்படியானார் இருவரும் சராசரியாக கிலோவிற்கு 3500 கலோரி செலவிடுகின்றனர். ஆகவே இரண்டு பேர்களுடைய உற்பத்தித்திறனும் சமமாக உள்ளதாகக் காணலாம். இதுவும் உண்மையல்ல. ஏனெனில் இரண்டும் சமமே என்று ரசாயனத்தை ஊக்குவிக்க முடியும். உண்மை இதுவல்ல, அதாவது மாட்டை வைத்துச் செய்த வேளாண்மையில் ஆற்றல் உள்ளீடு என்பது ஏறத்தாழ எக்டேருக்கு 2247 கிலோகலோரிகளாக உள்ளது. மாட்டின் ஆற்றல் அருகில் உள்ள புல்லில் இருந்து பிற தாவரக் கழவில் இருந்தும் கிடைப்பது. ஒரு உழவருக்கு கிட்டத்தட்ட பணமதிப்பற்றது.

ஆகவே அதைக் கழித்துப் பார்த்தால் (2703 - 2247 = 456 கி.க) 456 எக்டேருக்கு 456 கிலோ கலோரி. இதை வைத்து அவர் எக்டேருக்கு 821 கிலோ கோதுமையை அறுவடை செய்கிறார். அதாவது கிலோவிற்கு வெறும் 555 கலோரிகளையே பயன்படுத்துகிறார். இதேபோல நெல்லுக்கும் நம்மிடம் புள்ளிவிவரங்கள் உள்ளன.

சரி இதை மற்றொரு அளவீட்டுடன் ஒப்பிடுவோம், ஒரு கிலோ கோதுமையை உண்டு நீங்கள் வேலை செய்தால் கிடைக்கும் ஆற்றல் 3,151.4 கலோரிகள் என்று உணவு அறிவியல் கூறுகிறது. அதாவது ஆற்றல் மிக்க அறிவு மிக்க அமெரிக்க உழவர் 3500 கலோரியை செலவிட்டு 3,151.4 கலோரியை எடுக்கின்றார். பாமர இந்திய உழவரோ 555 கிலோ கலோரியை செலவிட்டு 3,151.4 கலோரியை 'முட்டாள்தனமாக' எடுக்கின்றார். என்னே நமது அறிவாணர்களின் 'வியாக்யானங்கள்', விளக்க உரைகள்! அதுமட்டுமா? நமது உழவரின் ஆற்றல் பசுமையானது, சூழலை மாசுபடுத்தாதது. இந்த உழவைப் பாதுகாக்காமல் நாம் அந்த உழவுக்கு ஏங்குகிறோம். இன்னும் நிறைய புள்ளிவிவர ஏமாற்றுகள் உள்ளன.

எவ்வாறு நோக்கினும் இயற்கையுடன் இயைந்த, காலத்தால் நிரூபிக்கப் பட்ட பண்டைய வேளாண் முறைகளே இனியது என்பது திண்ணம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org