தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கற்பதும் கசடும் - வழிப்போக்கன்


நாம் தாளாண்மையில் இயற்கை வேளாண்மை என்ற கட்டத்தைத் தாண்டித் தற்சார்பு வாழ்வியல் என்று பொருள்தெரியாத‌ ஆட்டு மந்தை வாழ்முறைக்கு மாற்றாக ஒரு வாழ்வியலின் தேடலில் இறங்கியுள்ளோம். மன நலம், உடல் நலம், புவி நலம் ஆகிய மூன்று நலன்களும் நம் இலக்குகள். தோரோவைப் போல் தனிமனிதர்கள் காட்டில் போய் தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவு செய்து கொள்ள முயற்சிப்பது ஒரு பகுதி. அது தனிமனிதத் தற்சார்பு. அதற்கு அடுத்த வட்டமாகச் சிறு குமுகங்களைத் தேடி, நம் அண்மையில் உள்ளவற்றைக் கொண்டு வாழ்வில் நிறைவு காண்பது காந்தி கனவு கண்ட கிராம சுயராச்சியம்; குமரப்பா கூறிய காந்தியப் பொருளியல்; சூமாக்கர் போற்றிய சிறியதே அழகு என்ற கோட்பாடு. இல்வாழ்வில் தற்சார்பு அடைவது எப்படி? அல்லது இயன்றவரை அண்மைப் பொருளாதாரமும் ,தற்சார்பும் கொண்டு நம் இல்லறத் தேவைகளை நிறைவு செய்வது எங்ஙனம்? இது குமுகத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு அடிப்படைக் கேள்வி.

இக்கேள்விக்கு விடை காணப் புறப்பட்டால் முதலில் தோன்றுவது நம் தேவைகள் என்ன என்ன என்ற பட்டியல் இடுவதே. ஒரு சராசரி இந்தியக் குடும்பத் தலைவனும், தலைவியும் தங்கள் மற்றும் தங்களைச் சார்ந்தவர்களின் தேவைகளைப் பட்டியல் இட்டால் இது ஒருவாறு வடிவு பெறும்.

அடிப்படைத் தேவைகள்


உணவு (நல்லுணவு)
உடை
இருப்பிடம்
பாதுகாப்பு
உடல்நலம்

அதன் பின்னர் நியாயமான தேவைகள் என்றால் குழந்தைகள் கல்வி மற்றும் முதியோர் மருத்துவ நலம் இவை இரண்டையும் சொல்லலாம். அதன் பின் முளைக்கும் தேவை பொழுதுபோக்கு. இதன் பின்னர்த் தோன்றுவதுதான் குமுக மரியாதை, கௌரவம் போன்ற மாயைகள்.

இவற்றில், உணவும். உணவு உற்பத்தி செய்யும் உழவும் பற்றித் தாளாண்மை விடாது ஆராய்ந்து வருகிறது. விடைகளை வெளியிடுவது மட்டுமின்றி, இதில் ஒளிந்துள்ள சந்தைச் சக்திகளின் அரசியல் மற்றும் சூதுக்களை வெளிச்சமிட்டும் வருகிறது. பீடையிலாதது ஓரு கூடு என்ற தொடரில் சூழலுக்குக் குறைந்த அளவு மட்டுமே கேடு விளைவிக்கும் வீடுகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். எஞ்சியிருக்கும் தற்சார்பு மருத்துவம், மற்றும் தற்சார்புக் கல்வி ஆகியவற்றைப் பற்றி நாம் ஆராய்ச்சிகளைத் தொடங்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இத்தொடரில் தற்காலக் கல்வி எப்படி இருக்கிறது. இதற்கு மாற்று என்ன என்று நாம் ஆராய்வோம்.

முதலில் 'கற்றதனால் ஆய பயனென்கொல்' என்று வள்ளுவர் மாதிரிக் கேட்கத் தொடங்கினால், 'கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்' என்று தாயுமானவர் போலக் 'கற்றதெல்லாம் மூடம்' என்ற முடிவுக்கு வந்து விடுவோம்! கல்வி என்பது மனித நாகரிகத்தை விடப் பழமையானது. ஆனால் பண்டைக் கல்விமுறைமை வாழ்வோடு இயைந்து இருந்தது. குலவித்தை கல்லாமல் பாகம்படும் என்ற பழஞ்சொல்லில் இருந்து நாம் இதை அறியலாம்.

தற்கால அடிப்படைக் கல்வி

தற்காலத்தில் கல்வி என்பதன் நிலைமை என்ன? இளஞ்சிறார்களின் கல்வியைப் பார்த்தால் மூன்று தட்டுகளில் மூன்று விதமான அடிப்படைக் கல்வி பயிற்றுவிக்கப் படுகிறது. கீழ்த்தட்டில் விவசாயத் தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் ஆகியோர் மட்டுமே பயன்படுத்தும், அரசின் இலவசக் கல்வி பெரும் செலவில் நடத்தப்படுகிறது. பள்ளிக் கல்வியை அதிகம் விரும்பாத மாணவர்களைப் பள்ளிக்கு ஈர்ப்பதற்காக இலவச சத்துணவு, சீருடை, புத்தகங்கள், மடிக்கணினி, மிதிவண்டி என்று பலப்பல கொடைகள் வாரி வழங்கப் படுகின்றன. பள்ளி ஆசிரியர்களுக்கு மிக அதிகமான ஊதியம் வழங்கப் படுகிறது. பெரும்பாலான அரசுப் பள்ளிகள் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளன. இவற்றில் மாதம் 30,000 முதல் 40,000 வரை ஊதியம் பெரும் ஆசிரியர்கள் கிராமங்களில் தங்குவதில்லை. அருகில் உள்ள சிறு நகரத்திலோ அல்லது பேரூரிலோ வீட்டை அமைத்துக் கொண்டு அங்கிருந்து வந்து போகிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை, ஆங்கில வழிக் கல்வியில், இரண்டாம் தட்டுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்!

மெட்ரிகுலேசன் பள்ளிகள் என்று முன்னர் அழைக்கப் பட்ட நடுத்தட்டுப் பள்ளிகள், சற்றுக் கடுமையான மாதக் கட்டணங்களுடன், வித விதமான வண்ணங்களில் சீர் (அற்ற) உடைகளுடன், குறைவான ஊதியம் பெரும் ஆசிரியர்களைக் கொண்டு சிறு நகரங்களில் நடத்தப் படுகின்றன. இங்கு ஆங்கிலம் பேசுவதற்கும், எழுதுவதற்கும் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மனப்பாடக் கல்விக்கும், மதிப்பெண்ணே இலக்காகச் செலுத்தப்படும் பயிற்சிக் கல்விக்கும் பெரும் முக்கியத்துவம் தரப்படுகின்றது. ஒரு பள்ளி, தன் மாணவர்கள் 10வது மற்றும் 12வது வகுப்புகளில் பெறும் தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண்களை மிகவும் தீவிரமாக முயற்சித்து அடைந்தும், சக பள்ளிகளை விட அதிகமாக‌ இருப்பதற்குப் போட்டியிட்டும் பெற்றோரிடம் கல்விச் சந்தையில் தான் முன்னிற்குமாறு எப்போதும் முனைந்து கொண்டே இருக்கிறது.

கிராமங்களில் உள்ள வசதியானவர்களோ, தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள சிறு நகரங்களுக்கு பள்ளி வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கிறார்கள்! அரசின் பணத்தால் பெரும் ஊதியம் பெரும் ஆசிரியர்கள் சிறூர்களில் இருந்து கிராமங்களுக்கு வருகிறார்கள். தங்கள் பிள்ளைகளைத் தங்களில் மூன்றில் ஒரு பங்கு ஊதியம் பெரும் ஆசிரியர்களிடம் அடிப்படைக் கல்வி பெற அனுப்பி வைக்கிறார்கள். கிராமங்களில் உள்ள வசதியானவர்களும் அரசின் ஊழியர்கள் மேலோ, தங்கள் மேலோ சுத்தமாக நம்பிக்கையின்றித் தங்கள் குழந்தைகளை சிறு நகர‌ப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதைவிட மிகப்பெரிய வேடிக்கை, இவ்வாங்கிலப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், தாங்கள் எப்படியாவது அரசுப் பணியில் சேர்ந்து விடவேண்டும் என்று சதா நேரமும் TET எனப்படும் ஆசிரியர் தேர்வை எப்படியாவது வென்று விடவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்! இது ஒரு விதமான குமுக மடமையே!

இவற்றால் எல்லாம் பிள்ளைகளின் அடிப்படைக் கல்வி, நாற்றங்காலிலேயே மிதிபடும் நெற்பயிரைப் போல, எண், எழுத்து, தாய்மொழியில் வாய்ப்பாடு, தாய்மொழியில் மொழி இலக்கணம், வரைதல், பாடுதல், பிற கலைகள் போன்ற அடிப்படையான விடயங்களை எதுவுமே புகட்டாது வீணாகி விடுகிறது. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளைப் போல மனப்பாடமும் மதிப்பெண்களுமே கல்வியாகி விடுகின்றன‌.

இதையெல்லாம் கடந்து மேல்தட்டில் "சமச்சீர் கல்வி வேண்டாம் , நாங்கள் உயர்ந்தவரகள் எனவே உயர்கல்வியே எங்கள் பிள்ளைகளுக்குத் தேவை" என்று பணக்காரகளும், பணக்காரர்களாகத் தோற்றம் அளிக்க விரும்புபவர்களும் மாநிலக் கல்வியைப் புறக்கணித்து ICSE , CBSE போன்ற‌ தில்லிக் கல்வியைக் கைக்கொள்கின்றனர். இம்முறைமைகளில் பயிற்றுவிக்கும் பள்ளிகள் தாங்கள் தேவலோகத்தில் இருந்து நேரே குதித்ததைப் போல் அனைவரையும் மூக்கால் பார்த்துத் திமிருடன் திரிகின்றன. ஆனால் இங்குதான் ஓரளவேனும் அடிப்படைக் கல்வி போதிக்க மற்றும் கற்கப் படுகின்றது என்பது உண்மையே. தமிழக அரசு சமச்சீர் கல்வி கொண்டு வந்தபின், தமிழகம் எங்கும் CBSE பள்ளிகளின் சந்தை மதிப்பு மிகவும் அதிகமாகி விட்டது. அவர்களும் மார்க்கெட் அதிகமான சினிமா நடிகர்போல் தங்கள் கட்டணங்களைக் கடுமையாக உயர்த்தி விட்டன. இன்று சீர்காழி, மாயவரம் போன்ற ஊர்களிலேயே ஒரு குழந்தையை ஒன்றாவது முதல் ஐந்தாவது வரை CBSE கல்வி முறைமையில் படிக்க வைப்பதற்கு வருடம் சுமார் 50,000 செலவாகிறது! சென்னை பங்களூரு போன்ற நகர(ரக)ங்களில் நிலைமை என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

நன்றாகப் படிக்கும் (நெட்டுருப் போடும்) குழந்தைகள், இப்பள்ளிகளுக்கு துணிக்கடையில் வைக்கப்படும் அழகிய பொம்மைகள் போன்று விளம்பரக் கருவிகளாகப் பயன்படுத்தப் படுகின்றன. மிகவும் போராடி 97 மதிப்பெண் எடுக்கும் ஒரு குழந்தையை 100 எடுக்க வைக்கப் பெற்றோரும், ஆசிரியர்களும் செய்யும் மனோரீதியான வன்முறைகள், குமுகத்தில் "நன்றாய்க் குழந்தையைக் கவனிக்கிறார்கள்" என்று பாராட்டப் படுகின்றன. தனியார் பள்ளிகளில் மாணவர்கள், கல்விச் சந்தையில் விலைபேசப்படும் கால்நடைகள் ஆகி விடுகின்றனர்.

இதையெல்லாம் தாண்டி மிகக் கொழுத்த செல்வந்தர்கள் மட்டுமே செல்லக்கூடிய , ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில், வெள்ளைக்காரர்களைக் காப்பியடிக்கும் கோட், டை போன்ற உடைகள் கொண்ட, தங்கிப் படிக்கும் வசதி கொண்ட சர்வதேசப் பள்ளிகளைப் பற்றி நாம் இங்கே கவலைப்படத் தேவையில்லை. அவர்களெல்லாம் தாளாண்மையையோ தமிழையோ படிக்கப் போவதில்லை!

தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி யிருப்பச் செயல்

என்றார் வள்ளுவர்.

பொதுவாகக் கல்வி கற்பதன் தற்கால நோக்கம் வேலை வாய்ப்பு மட்டுமே என்பது பரவலாக அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கருத்து.

நல்ல கல்வி என்பது என்ன, நல்ல கல்வியைத் தற்சார்பாக நம் பிள்ளைகளுக்கு அளிப்பது எப்படி, நல்ல கல்வியால் பொருள் ஈட்ட இயலுமா, அதற்கு என்னென்ன வாய்ப்புக்கள் தற்காலக் குமுக அமைப்பில் உள்ளன என்று தொடர்ந்து தேடுவோம்

(தொடரும்)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org