தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா


முளைப்பயறுக் கூழ்

பொதுவாக முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுவகைகள் உடல்நலத்திற்கு மிகவும் ஏற்றவை. இவற்றில் உடலுக்குத் தேவையான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும், நார்ச்சத்தும் மிகவும் அதிகமாக உள்ளன. மேலும் கொழுப்புச் சத்து இல்லாத புரதச் சத்தை இவை அளிப்பதால் இவை மிகச்சிறந்த உணவு என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க இயலாது. பயறு வகைகளில், பச்சைப் பயறு அனைத்திலும் சிறந்தது; ஏனெனில் வாயுத் தொல்லையை உருவாக்காத ஒரு புரத ஊற்றாக இது உள்ளது. இவ்விதழில் பச்சைப் பயறை எவ்வாறு எளிதாக முளைக்கட்டுவது, அதனால் எவ்வாறு கூழ் செய்வது என்றும் காண்போம்.

தேவையான பொருட்கள்

1.முழுப் பச்சைப் பயறு - தேவையான அளவு (100 கிராம் பயறு 400 கலோரிகளைக் கொண்டது. ஒரு ஆளின் ஒரு வேளை உணவுத் தேவையை நிறைவு செய்யக் கூடியது).

2.தயிர் (அ) பால் - விருப்பப் பட்டால்

3.உப்பு - தேவையான அளவு

4.பிற சுவைப் பொருட்கள் - இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், பூண்டு போன்றவை - அவரவர் சுவைக்கு ஏற்ப.

பயறை முளைக் கட்டுதல்

இதற்கு நாம் சாதாரணமாகப் பயன் படுத்தும் எஃகுத் தட்டே (எவர்சில்வர் - stainlesssteel) சிறந்தது. மண்பாண்டத்தை விட எஃகில் நன்றாய் முளை கட்டும். இதற்கு ஈரத் துணியில் கட்டித் தொங்க விடுவது போன்ற மெனக்கெடல்கள் எல்லாம் தேவையில்லை. நன்றாய்க் கழுவிச் சுத்தம் செய்த முழுப் பச்சைப் பயறை தட்டில் பரத்த வேண்டும். அது மூழ்கும் அளவு குடிநீர் விட வேண்டும். இன்னொரு எஃகுத் தட்டால் மூடி விட வேண்டும். நீர் அதிகமானால் ஊறவைத்த உளுந்தைப் போல் ஒரு நெடி வரும் - எனவே பயறு தண்ணீரில் இருக்கும் அளவு நீர் விட்டால் போதும்.

12 மணி நேரம் கழித்துப் பயறு நன்றாய் உப்பி நீரை முழுதும் குடித்துத் தட்டு முழுவதும் பெருத்து இருக்கும். அப்போது இன்னும் நீர் விட்டுக் கையால் பயறைப் பரத்தி விட்டு மீண்டும் மூடி வைத்து விட வேண்டும். மீண்டும் 12 மணி நேரம் (மொத்தம் 24 மணி நேரம்) சென்று பார்த்தால் தட்டு முழுவது பயறு முளைத்து மலர்ந்து இருக்கும்.

இதைத் (தோல், முளை அனைத்துடனும்) தயிருடன் சேர்த்து சிறு அரவை இயந்திரத்தில் (மிக்ஸி) இட்டுக் கூழ்போல் திருப்ப வேண்டும். உப்பு மற்றும் பிற பொருட்கள் அவரவர் சுவைத் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.

அவ்வளவுதான்! கூழ் தயார். இது அப்படியே உண்ண மிகச் சிறந்த ஒரு உணவு. நீரிழிவு, இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பு போன்ற நோய் உள்ளவர்களுக்கு சிறந்த காலை உணவு. மலச் சிக்கல், குடல்புண் மற்றும் அதிக அமிலத்தன்மை போன்ற‌ நோய் உள்ளவர்கள், இரவில் காரம் எதுவும் சேர்க்காமல் இதைக் குடித்து விட்டுப் படுத்தால் காலையில் நல்ல மாறுதல் தெரியும். குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால் கண்பார்வைக் கோளாறுகள் வராது.

குறிப்பு: 1. இது ஒரு சமச்சீரான, புரதச் சத்து மிக்க‌, முழுமையான‌ உணவு. இதனுடன் பிற உணவு வகைகளை உண்டால் செரிமானம் மற்றும் வாயுத் தொல்லைக்கு வழிவகுக்கும். 2. இயற்கை உணவு மிகுந்த விலை உயர்ந்தது என்று பொதுவாகப் புலம்புவர்கள் பலர். இச்சமச்சீர் உணவிற்கு ஆகும் செலவு ஒரு கோப்பைத் தேநீரை விடச் சற்று அதிகம் அவ்வளவே!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org