ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான கிரீசு தற்பொழுது கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. நாடே திவால் ஆவது என்பது இப்பொழுது அவ்வளவு அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்கக்கூடாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ்லாந்தும், அதன் பின்னர் அயர்லாந்தும் கவிழ்ந்தன. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமே நிர்மூலமாவதும், அவர்கள் மீண்டு எழ முடியுமா என்ற கேள்வியும் இந்த "உலகமயமாக்கல்" மற்றும் "திறந்த பொருளாதாரத்தின்" பரிசுகள். அதற்கு முன் இப்படி நாடுகள் திவாலாவது கேள்விப்படாத ஒன்று . அதன் சிறப்பு எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி இப்படித் திடீர் நெருக்கடியாகத்தான் எல்லா நாடுகளிலும் வந்திருக்கிறது.
கிரீஸின் நெருக்கடியின் தொடக்கம் இப்படித்தான் 2010ல் திடீரென நிகழ்ந்தது. முதல் கடன் என்றுமே எளிதல்லாவா? பன்னாட்டு நிதியம் முதலிய நிதி அமைப்புகள் கிரீசுக்குக் கடன் வழங்கின. பின்னர் 2012லும் பெரும் தொகை எளிதாக அளித்தன. இப்பொழுது சமீபத்தில் மீண்டும் நெருக்கடி வர, பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய நடுவண் வங்கி, ஐரோப்பிய யூனியன் ஆகியன முழித்துக்கொண்டன. கடன் மீட்பதற்கான வழிகளையும் யோசிக்கத்தொடங்கின. கடன் மீட்புத் திட்டம் என்னும் பெயரில் சில நிபந்தனைகளை வலியுறுத்தின, அவர்களை "கடும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என அழுத்தம் கொடுத்தன.
மேலும் வரிகளை உயர்த்தி, அரசின் வரவு செலவுகளைக் குறைத்து, உள்ளூர் வணிகம் பெருக்கி என்று இப்பொழுது விழித்துக்கொண்டு அறிவுறைகள் வழங்கின. ஆனால் அவை அவர்களது தன்மானத்தையும், கண்ணியத்தையும் அசைப்பதாக மக்கள் நினைத்தனர். இதனால் அப்படி சிக்கன நடவடிக்கைகளை எடுத்துப் பல பொதுநல திட்டங்களை குறைப்பதா என்று ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தியது கிரேக்க அரசு. அதற்குப் பெருவாரியான மக்கள் "கூடாது" 'வேண்டாம்' என்றே வாக்களித்தனர். அவர்கள் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து விலக வாய்ப்புகள் ஏற்படும் சூழல் கூட அமைந்தது. அதனால் கிரேக்கர்கள் நிபந்தனைகளை ஒரு மிரட்டலாகவே பார்த்தனர்.
ஒரு விதத்தில் இவர்கள் வேண்டாம் என்று கூறியது தான் சரி. இவ்வளவு காலமாக இந்த உலகமயமாக்கல், உலக வங்கி இவற்றின் சொல் கேட்டு நடந்த பொருளாதாரக்கொள்கைகளின் தோல்வி தானே இந்த நிலமை, அப்புறம் என்ன மறுபடியும் அவர்களின் சொல்கேட்டு மேலும் குழிக்குள் வீழ்வதா?
கடன் அதுவும் இதைப் போன்ற பெரும் கடன்கள் அடைக்கப்படும் என்றோ அடைக்கப்பட வேண்டும் என்பதோ முதலாளித்துவத்தின் நோக்கம் அல்ல. கடனாளி கடானாளியாகவே இருப்பது தான் அதன் ஆசை, அப்போது தான் அவர்களை தம் இழுப்புக்கெல்லாம் ஆடுமாறு செய்ய முடியும். ஆனால் எல்லாக் கடன்காரர்களும் ஒரே மாதிரி அல்ல. அமெரிக்கா தான் உலகிலேயே பெரிய கடனாளி, ஆனால் அவர்கள் இந்த நிபந்தனைகளை போடக்கூடியவர்களையும், அந்த நிபந்தனைகளையுமே ஆட்டும் திறன் படைத்தவர்கள் (நம் நாட்டு பெரும் முதலை முதலாளிகள் போல்- பெரும் கடனை பெற்று வங்கிகளையும், அரசாங்கத்தையுமே ஆட்டும் மல்லயா போல்!)
ஒரு விதத்தில் கிரீசு ஐரோப்பிய யூனியனை விட்டு செல்வது தான் நல்லது. அவர்களிடம் தனி நாணயம் இல்லாததும் ஒரு பிரச்சினை. அமெரிக்கா எப்போதும் செய்வதைப் போல அல்லது ஐஸ்லாந்து எப்படி சமாளித்ததோ அப்படி (ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு) சமாளிக்கவும் முடியாத நிலை. கிரீசு யூரோவை விட்டுச்சென்றால் அடுத்து இத்தாலி, போர்சுகல் என்று பல நாடுகளும் விட்டு ஓடிவிடுமோ என்ற பயம் ஐரோப்பிய யூனியனுக்கு உண்டு. ஐரோப்பிய யூனியன் உடைவதில் பெரும் மகிழ்ச்சி அடையக்கூடிய நாடு அமெரிக்கா (இந்த தொல்லை எல்லாம் அவர்கள் தூண்டியதாகக்கூட இருக்கும் என்று பல வல்லுனர்கள் கூறுகின்றனர்)
இன்று அங்கு இருந்த ஊழலை குறை கூறும் ஐரோப்பிய யூனியன், இதற்கு முன்பிருந்த ஊழல் அரசுடன் ஒட்டி உறவாடியது. இன்று தான் இந்த நடிப்பு. மேலும் அவர்களது நலத்திட்டங்களால் தான் கிரீசு கவிழ்ந்தது போல் எழுதும் ஐரோப்பிய ஊடகம் சொல்வது மெய்யல்ல. பெரும் வங்கிகளும், பன்னாட்டுப் பெரும் வியாபார முதலைகளாலும்தான் இந்த வீழ்ச்சி. இது மேலே கூறியது போல் 'முதலாளியம்' மற்றும் முதலாளிகள் சேர்ந்து அளித்த பரிசு.
இது பல விதங்களில் நமது நாட்டு விவசாயிகளின் நிலைமை போன்றதே. அதுவும் கடன் தொல்லையில் வாடி தற்கொலை வரை செல்லும் நமது விவசாயிகளின் நிலைமையே. கடன் கொடுப்பது (அல்லது அதைப்போல் ஒரு சூழல் உருவாக்குவது), பின்னர் அதனால் பயனடைவது வேறு யாரோ. பெரும் நெருக்கடி வரும் பொழுது மட்டும் கடன் ரத்து என்று சில நாடகங்களை அரங்கேற்வது- அதிலும் மல்லயாக்களுக்கே லாபம்! உண்மை நிலமை: கடன் ரத்தானாலொழிய இந்த சிறு விவசாயிகளால் இயங்க முடியாது, எழ முடியாது. அவர்களின் இந்த நிலைக்கு தள்ள பொறுப்பானவர்களே இவர்களுக்கு வழி தேடுவது போலவும் அதற்கு அவர்கள் என்ன என்ன செய்ய வேண்டும் என்றும் நிபந்தனைகளை போட்டு அவர்கள் எப்பொழுதும் அந்நிலையில் அடங்கி இருந்து நன்றிகடன் பட்டது போல் வாழ வேண்டும் என்பதே இவர்கள் விருப்பம்.
உண்மை நிலை
கிரேக்கம் சில சிக்கன நடவடிக்கைகள் எடுத்து தான் ஆக வேண்டும்- ஐரோப்பா கூறியதால் அல்ல, இவர்களது நன்மைக்காக. ஐஸ்லாந்தை பார்த்துக் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது- அவர்கள் நாணயம் வேறாகிருந்தாலும் (அவர்களது யூரோ இல்லை, அதனால் மேலும் நாணயம் அச்சு அடிப்பது போன்ற சில வசதிகள் இருந்தன). அவர்கள் செய்ததில் முக்கியமானவை பெரும் வங்கிகளை திவாலாகவிட்டது மற்றும் நாட்டில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கவேண்டும் (வங்கிகளில் இருந்து மக்கள் இவ்வளவு பணம் மட்டுமே எடுக்கமுடியும் என்று) அறுதியிட்டது - இந்தக் கட்டுப்பாடு இப்போதுதான் விலக்கப்படுகிறது.
ஐஸ்லாந்தின் 3 மிகப்பெரிய வங்கிகள் வெளிநாட்டவர்களிடமிருந்து (குறிப்பாக ஹாலண்ட் மற்றும் பிரிட்டன்) கூடுதல் வட்டி தந்து முதலீட்டை வாங்கி, அம்முதலைக் கொண்டு தேவையற்ற வணிகக் குழுமங்களையும், விளையாட்டு அணியினரையும் தேவைக்கு அதிகமாகவே பணம் கொடுத்து வாங்கி அவற்றையும் ஒழுங்காக நிர்வகிக்க முடியாத தருணத்தில் அமெரிக்காவின் லெஹ்மன் குழுமம் திவாலான பொழுது அவையும் சேர்ந்து நொடிக்க ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட 10 மடங்கு மூலதனம் கொண்ட வங்கிகள் இவை! லெஹ்மன் குழுமம் முழுகாதிருந்தாலும் கூட இவ்வங்கிகள் நொடிக்காமல் இருந்திருக்காது, அந்த அளவு மேலாண்மையில் குளறுபடி (இவ்வங்கிகளின் தலைவர்கள் சிலர் சிறைக்கு சென்றதற்கும் இதுவே காரணம்). ஐஸ்லாந்தின் அரசு முயன்றிருந்தாலும் கூட இவ்வங்கிகளை காப்பாற்றியிருக்க முடியாது! ஆனாலும் இவ்வாறு வங்கிகள் நொடித்ததனால் பாதிப்பு என்னவோ அந்த வெளிநாட்டவர்க்கு மட்டுமே. ஐஸ்லாந்து மக்களின் பணம் மட்டுமே அந்த நாட்டின் அரசினால் பாதுகாக்கப்பட்டது. இந்த சிக்கலில் இருந்து மீண்டு வருவதற்காக ஐஸ்லாந்து தனது அரசு செலவுகளை மிகவும் குறைக்க வேண்டியதாயிற்று (அயர்லாந்து, போர்சுகல், ஸ்பெயின், பிரிட்டன், ஏன்,லாத்வியாவை விடக் கூடுதலான அளவில்).
ஆனால் இவையெல்லாவற்றிற்கும் இறுதியில் மிகச் சில ஆண்டுகளிலேயே ஐஸ்லாந்து பொருளாதாரத்தில் நிமிர்ந்து விட்டது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது அதற்கு மிக நன்றாயிற்று. இன்று கிரேக்கமும் அதே பாதையில் செல்வதே அறிவான நடைமுறை. நிலம் மற்றும் கிராமம் சார்ந்த வாழ்முறைகளுக்கு இப்போதே பல அறிவுள்ள கிரேக்கர்கள் திரும்பத் தொடங்கி விட்டனர். நபர் ஒன்றுக்கு நம்மைப்போல் இரண்டு மடங்கு விளைநிலம் கொண்ட கிரேக்கம், கிராமிய இயக்கத்தைப் பின்பற்றினால் மிகவும் எளிதாகத் தன் கடன்சுமையில் இருந்தும் பொருளாதாரச் சிக்கலில் இருந்தும் மீளலாம். ஆனால் அரசு பிடிவாதமாக ஐரோப்பிய யூனியனிலேயே தொடர்வதையும், மேம்படுத்துதல் என்னும் அழிவுப் பாதையையுமே தேடுகிறது.
விழித்துக் கொள்ளுமா கிரேக்கம்? இது நமக்கும் ஒரு பாடமே. நம்மை விடப் பத்தாண்டுகளுக்கு முன்னரே கிரேக்கம் உலகமயமாகியது. இப்போது ஓட்டாண்டி ஆகி உள்ளது. நிர்வாகச் சீர்கேட்டிற்கும், ஊழலுக்கும் பேர்பெற்ற நம் பாரதம் இந்த மேம்படுத்தும் மூடர்கள் கையில் என்னவெல்லாம் அல்லலுறப் போகிறதோ?