தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


இம்மாத நாயகர் வரிசையில் நாம் சந்திக்கும் நண்பர், கேரளாவைச் சேர்ந்தவர். கடந்த இரு இதழ்களில் கண்ட இளைஞர்களைப் போல் வேளாண்மை மட்டுமே இவர் தொழில் அல்ல. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் முதலைமடை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகன் பத்திச்சிறா, நகரத்தில் வேலையோ தொழிலோ தேடாமல், கடுமையாய் 20 வருடங்கள் போராடிக் கிராமத்தில் 100 பேருக்கும் மேல் வேலையளிக்கும் சிறு தொழிலதிபர். அவரது கிராமத்தில் ஒரு சோப்புத் தொழிற்சாலையை வெற்றிகரமாக கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி அவ்வட்டாரத்தில் நிகழும் பல சுற்றுச் சூழல் பாதுகாப்பு செயல்களுக்கு உறுதியான ஆதரவும், வழிநடப்பும் அளிக்கிறார். தொண்ணூறுகளின் தொடக்கத்தில், சில சமூக அக்கறையுள்ள இளைஞர்கள், காந்திஜி யுவ சங்கடனா எனும் அமைப்பில் இருந்து, கிராமப்புறத்தில் ஒரு இயற்கை சோப்பு தயாரிக்கும் தளவாடத்தை, (கிராமப்புற பெண்களுக்கு சுய தொழில் வாய்ப்பாகக் கூடும் என்ற நோக்குடன்) பரவலாக்க முயற்சி மேற்கொண்டனர். இதன் தலையாய நோக்கம், வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சிறு பொருளாதார ஊக்கமும் தன்னம்பிக்கையும் கிடைக்க வேண்டும் என்பதே. எனினும், சோப்பு தயாரிப்பிற்கு மூலப் பொருள் தொடர்ந்து கிட்டாமை, சோப்பு விற்பனையில் தொய்வு, போதிய தொழில் நுட்பப் பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால், அம்முயற்சி எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.

இப்புதிய சோப்பு, இச்சிக்கல்களை மீறி, பயன்படுத்துவோரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. எனவே, அச்சங்கத்தை சேர்ந்த பத்து இளைஞர்கள், சிறு முதலீடு செய்து, (ஓவ்வொருவரும் ஐந்தாயிரம் வீதம், மொத்தம் ஐம்பதாயிரம் ரூபாய்கள்), அத்தளவாடங்களை, மேம்படுத்தி ஒரு சிறு தொழிற்சாலை அமைக்க முனைந்தார்கள். பாலக்காடு மாவட்டத்தில் வடவனூர் கிரமத்தில் ஒரு நிறுவனம் பதிவு செய்யப் பட்டது. இதுவே “ஹாப்பி சோப் மானுஃபாக்சரிங் சொசைட்டியின்” துவக்கம். அக்குழுவில் ஒருவரான ஆறுமுகன், நாம் பயன் படுத்தும் சோப்பைப் பற்றி, அதில் உள்ள ரசாயனங்களைப் பற்றி ஆழமாக ஆராயத் தொடங்கினார். சிறிது சிறிதாய் இடுபொருட்களில் செயற்கை பொருட்களைக் குறைத்து அதற்கு ஈடான இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தத் துவங்கியது, இப்புதிய நிறுவனம். [பொதுவாய் எல்லா சோப்புகளிலும் 12 விதமான வேதிப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் ஹாப்பி சோப்பில் Lye (NaOH - Caustic Soda) எனப்படும் ஒரே ஒரு வேதிப் பொருள் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றது. இது இல்லாமல் சோப்பு தயாரிப்பது இயலாது என்கிறார் ஆறுமுகன். இவர் சோப்பு தயாரிக்க இயற்கை முறையில் ஆட்டிய செக்குத் தேங்காய் எண்ணையைப் பயன்படுத்துகிறார்.] இப்படியாக சில வருடங்கள் சென்றன. சமூக அடிப்படையில் “ஹாப்பி” புது கிராம வேலை வாய்ப்பை உருவாக்கியது எனினும், முதலீடு செய்தவர்களுக்குப் பொருளாதாரப் பலன் எதுவும் கிட்டவில்லை. ஆறுமுகன், சக தோழர்களின் ஆற்றாமையை உணர்ந்தார். 1996 ஆம் வருடம், மற்ற அனைவருக்கும், முதலீட்டுக்கு ஈடு செய்து விட்டு தொழிற்சாலையை முதலைமடைக்கு இட மாற்றம் செய்தார்.

இதைப்பற்றி கூறும் பொழுது, ஆறுமுகன் “நாம் எதைச் செய்தாலும் ஒரு தொலை நோக்குடன், பண/லாப நோக்கத்தைக் கடந்த ஒரு இலக்கைக் கொண்டால் தான் தொழில் சிறக்கும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எங்கள் அமைப்பு, லாப நோக்கில் தான் செயல் படுகிறது. ஆனால், லாபம் மட்டுமே குறிக்கோளல்ல. இந்தப் புரிதல் ஒரு தொழிலைத் திறம்பட நடத்த வேண்டுமெனில், மிக அவசியம்” என்றார். சற்றே விளக்குமாறு கேட்டோம். அவர் ” நாங்கள் சோப்பு, கூந்தல் தைலம், சிகைக்காய், இன்னும் பல உடல் சுத்தம் மற்றும் உடல் நலன் / எதிர்ப்புச் சக்தி அளிக்கும் ஊட்டச் சத்து உணவு வகைகள் என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட‌ பொருட்களைத் தயாரிக்கிறோம். இங்கு பணி புரியும் அனைவருக்கும் அரிச்சுவடி பாடமாய் சொல்வது ஒன்று தான். இந்தப் பொருட்களைத் தான் நீங்களும் உட்கொள்ளுகிறீர்கள், பூசிக்கொள்கிறீர்கள். உங்கள் உறவினர், குழந்தைகள், பெற்றோர். நண்பர்கள் எல்லாருக்கும் கொடுக்கிறீர்கள். எனவே ஒவ்வொரு சிறு வேலையையும் அந்த எண்ணத்தை அடித்தளமாகக் கொண்டு கவனமாகச் செய்ய வேண்டும். நம்முடைய பொருளைப் பயன் படுத்துவோரின் நலனை விட வேறு எதுவும் முக்கியமானதல்ல. இப்போதைக்கு சிறிதளவே அதிக பணம் கிட்டும் என்றெண்ணி தரத்தில் கவனம் செலுத்தாமல் போனால் பிற்காலத்தில் நம் தொழிலே இல்லாமல் போகும் நிலை வரலாம். இதைத் தான் லாபம் மட்டுமே குறிக்கோளல்ல என்று கூறினேன்.” என்று தெளிவுறித்தினார்.

2006 ஆம் வருடம் முதல் முறையாக இந்த அமைப்பு செலவுக்கு மேல் பொருளீட்ட துவங்கியது. இடையில் பத்து வருடங்கள் “ஹாப்பி ஹெர்பல்” மிகுந்த போராட்டதுடன் சென்றுள்ளது. சில ஆண்டுகள் தொடர்ந்து சிரம கதியிலேயே நடந்தது ஹாப்பி ஹெர்பல் சோப்பு நிறுவனம். சிறு சிறு கூடுதல் முதலீடுகள் செய்து கொண்டே இருந்த போதும், நிறுவனம் சொல்லுமளவுக்கு ஒரு வளர்ச்சியை அடையவில்லை. சில ஆண்டுகள் தொடர்ந்து சிரம கதியிலேயே நடந்தது ஹாப்பி ஹெர்பல் சோப்பு நிறுவனம். சிறு சிறு கூடுதல் முதலீடுகள் செய்து கொண்டே இருந்த போதும், நிறுவனம் சொல்லுமளவுக்கு ஒரு வளர்ச்சியை அடையவில்லை. ஆறுமுகன் ஒரு க‌ணிசமான முதலீடின்றி தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் நிலையான பொருளாரதார நிலை கிட்டுவது கடினம் என்று உணர்ந்தார். கேரளா காதி அமைப்பினை அணுகி ஐந்து லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றார். அந்தப் பத்து வருடங்களும் ஆறுமுகனும் அவர் துணைவியாரும் பொருளாதாரச் சிக்கல்களை கண்டு அயராது விடா முயற்சியுடன் நிறுவனத்தை தம் உழைப்பால் நிலை நிறுத்தியுள்ளார்கள். அவருடைய கொள்கை உறுதியும், முரட்டுப் பிடிவாதமும், சரியான இலக்கை நோக்கி கலங்காமல் செல்வதும், அவரை முதல் முறை சந்திக்கும் போதே தெளிவாக அடையாளம் காணக் கூடியதாக உள்ளன. இவ்வுறுதியே ஆறுமுகன் என்று நம்மால் எளிதில் உணர முடிகிறது. இப்போது ஹாப்பி நிறுவனம், சுமார் நான்கு கோடி மதிப்புள்ள கட்டமைப்பு, தளவாடங்கள், இடுபொருட்கள் என்று ஓங்கி வளர்ந்திருக்கிறது. வருடத்திற்கு ஏறக்குறைய மூன்று கோடி ரூபாய் விற்பனை நடக்கிறது. பல கிராமத்து இளைஞர்கள், நகரத்துக்கு குடி பெயராமல், தம் ஊரிலேயே நல்ல பணியிலிருக்கிறார்கள்.

இப்பொழுது அவர் நிறுவனத்தில், தயாரிப்புப் பணிகளில் மட்டும் அறுபதுக்கும் அதிகமானவர்கள் பங்கு பெறுகிறார்கள். பெரும்பாலும், பத்து கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பெண்கள். எல்லாப் பணியாளர்களுக்கும், சுய இலக்குகள் (வேலை இலக்குகள் அல்ல) நிர்ணயிக்கப் படுகின்றன. - உதாரணத்திற்கு, பத்தாம் வகுப்பே படித்து இங்கு 18 வயதில் வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண், இப்போது பணியில் இருந்து கொண்டே, அஞ்சல் வழிக் கல்வி மூலம் வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார். எல்லோருக்கும் மதிய உணவு தொழிற்சாலையிலேயே வழங்கப் படுகிறது. அவர்களுடைய திருமணம், குழந்தைப் பேறு, உடல் நலன், தகுதி மேம்பாடு போன்றவைகளுக்கு ஊதியம் அல்லாமல் தனியே நிதி உதவி அளிக்கப் படுகிறது. ஆறுமுகனின் மனைவி அர்சாத், மதிய உணவுத் தயாரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். அருகில் உள்ள சிறு இயற்கை விவசாயிகளிடமிருந்து, உணவுக்கான காய்கறிகள் வாங்கப் படுகிறது. அர்சாத் “இது ஒருவித சுயனலம் தான். எங்களிடம் பணி புரிபவர் உடல் நலம் நன்றாக இருந்தால் தானே, பொருள்கள் சரியான முறையில், சரியான நேரத்தில் நுகர்வோரைச் சென்றடையும்?” என்கிறார். பணி புரிபவர்களுடன், நாமும் உணவு அருந்தினோம். எளிமையான, சுவையான கேரள முறைப்படி செய்த வீட்டு உணவு. ஆறுமுகனும், அவர் மனைவியும் இயற்கை விவசாயத்தையும், பாரம்பரிய வாழ்வு முறையையும், பெரிதும் நேசிக்கிறார்கள். அதீத இயந்திர மயமாக்கல், இராசயன இடுபொருட்கள் இவை யாவும் எந்நாளும்ளும் அதிக விளைச்சலை அளிக்க முடியாது என்பதைப் புள்ளி விவரங்களுடன் ஆறுமுகன் நமக்கு விளக்கினார்.

அவர்கள் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ளார்கள். அங்கிருந்து வரும் விளைபொருட்களும் உணவிற்குப் பயன் படுத்தப் படுவதாகக் கூறினர். இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட நேரடி விற்பனையாளர்களும் பணியாற்றுகிறார்கள். இவர்களுடைய சோப்பு, கூந்தல் தைலம், சுக்கு பானம், சத்து மாவு போன்ற பொருட்கள், கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிங்களில் விற்பனை செய்யப் படுகிறது. இதுவரை கடைகளூக்கு விற்பனை செய்யப் படவில்லை என்று அர்சாத் தெரிவித்தார். அதாவது, விற்பனையாளர்கள் நேரடியாக, நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்கள். சில கடைக்காரர்கள் வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். நாங்களும் அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆறுமுகன் கூறினார். பிறகு சற்று நேரம் அங்குள்ள பணியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தோம்.

அவர்களிடம் பொதுவாகக் காண முடிந்த இரண்டு முக்கிய அடையாளங்கள் - தங்கள் வேலை மற்றும் நிறுவனத்தின் மீதான சுய மரியாதை உயர்ந்ததாக இருப்பது மற்றும் நேர்மையான, வருங்காலத்தை ஆவலுடன் எதிர் நோக்கும் மனப்பான்மை.

அவர்கள் ஆறுமுகன் குடும்பத்தாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பதை தெளிவாகக் காண முடிந்தது. ஆறுமுகன், தன் கிராமத்தில் உள்ள பொதுச் சிக்கல்களிலும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்கிறார் என்ற தகவலை அவர்களே நமக்குத் தந்தார்கள். அருகில், ஒரு பெரிய பண பலம் வாய்ந்த ஒரு கல் உடைக்கும் தொழிற்சாலை சில ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது . அது துவங்கிய நாள் முதலே, சூழல் கேட்டை விளைவித்து, நிலத்தடி நீரை பாதிக்கும் என்றுணர்ந்தாராம் ஆறுமுகன். அவ்வாலைக்கு எதிராக கிராமத்தில் ஒரு போராட்டக் குழு அமைத்தார்கள். ஆறுமுகன் முக்கிய பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அக்குழு பல முறை திருவனந்தபுரம் சென்று, இப்போதைக்கு, அவ்வாலை செயல் பாட்டிற்கு, தடை விதிப்பு பெற்றுள்ளார்கள். இன்னும் வழக்கு தொடரலாம் என்று அவர்கள் கூறினார்கள். அதைப் பற்றி பேசும் பொழுது, அப்பெண்கள் அப்போராளிகளுக்கு (ஆறுமுகன் உட்பட) பலமுறை அச்சுறுத்தல்கள் வந்ததாகவும், எனினும் அவர்கள் மிக்க நேர்மையுடன் அதை எதிர் கொண்டதாகவும் தெரிவித்தார்கள்.

ஹாப்பி ஹெர்பல் நிறுவனம், பொள்ளாச்சியில் இருந்து திருச்சூர் செல்லும் சாலையில், மரங்கள் அடர்ந்த ஒரு கட்டித்தில் அமைந்துள்ளது. அவ்விடத்தின் இயற்கை சூழல், ஆறுமுகன் குடும்பத்தாரின் இயல்பான எளிமையான அணுகுமுறை. அங்கு பணியாற்றும் மக்களின் மகிழ்ச்சியான, திறந்த, தயக்கமற்ற பேச்சு யாவும் நமக்கு அதிக உற்சாகத்தைத் தருவதாக இருந்தது. மீண்டும் அவர்களைக் காண வேண்டும் என்ற எண்ணத்துடனே அங்கிருந்து புறப்பட்டோம்.

[தொடர்பிற்கு : செம்மல் 9994447252; ஆறுமுகன் 09288181655 ]

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org