[கடந்த சில மாதங்களாக ராம் அவர்கள் கிராமிய வாழ்வாதாரங்கள் குறித்து எழுதி வருகிறார். இவர், ஆரோவில்லுடனும், தமிழக அரசுடனும் இணைந்து, Sustainable Livelihood Institute என்ற பெயரில் முழுவதும் தற்சார்பான வாழ்வாதாரப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளார்]
புதுப்புது இலக்குகளுக்கு நாம் இரையாவோமா?
நிலைத்தன்மை என்றால் என்ன ?
இந்தக் கேள்வியைப் பல கோணங்களில் காணவேண்டியுள்ளது. வரும் மாதங்களில், நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகளை [Millioneum Development Goals (MDG)] உலக நிறுவனங்கள் கைவிட்டு, அதற்கு மாற்றாக நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை [Sustainable Development Goals (SDG)] அறிவிக்க உள்ளன. ஏற்கனவே உள்ள இலக்குகளை எட்டாத இயலாமையை மறைக்கப் புதுப்புது இலக்குகள் நிர்ணயிப்பது பொதுவாகத் திட்டமிடுவோரின் ஒரு கண்கட்டு வித்தை. இவற்றை வரையறுப்பது யார்? உலகுக்கு எது ‘வளர்ச்சி இலக்கு’ என்று சொல்ல யாருக்கு உரிமையோ புரிதலோ உள்ளது? இது எதனைக்கொண்டு வரையறுக்கப் படுகிறது? என்று பல கேள்விகள் நமக்கு எழவேண்டும். நமது கிராமப்புற மக்களின் இன்னல்களைப் போக்குகி்றோம் என்ற பெயரால் ஏறத்தாழ ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் குடும்பமும் மூன்று முதல் எட்டு அரசுத் திட்டங்களில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைக்கப்பட்டுள்ளன. இப்போழுது ஒவ்வொரு ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு விதமான அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. விரைவில் நமது மக்கள் இத்தகைய அட்டைகளைப் பாதுகாக்கவும், சுமக்கவுமே தனியாக மானியம் கேட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை!
இத்தகைய திட்டங்களினால், நமது கிராமப்புற மக்கள் குறைந்த செலவில் அழகற்ற, சூழலுக்கு ஒவ்வாத வீடுகளைக் கட்டிக்கொள்ளவும், வசதியற்ற கழிப்பறைகளை கட்டிக்கொள்ளவும், முன்பின் தெரியாத பயிர்களை வளர்க்கவும், தங்களுக்குப் புரியாத, பழக்கமற்ற இன மாடுகளை வளர்க்கவும், கடன்படவும், கடனுடன் கூடிய மிகச்சில தொழில்கள் தொடங்கவும், அத்தகைய தொழில்களைத் தொடங்குவதனால் எந்த வருமானமும் இல்லாமல் போனால், முகம் சுளிக்காமல் கடனைச் சொந்த உடைமைகளை விற்றாவது மீண்டும் திருப்பிக்கட்டவும், கட்டாயப் படுத்தப்ப்படுகின்றனர். எல்லாம் யாரோ முடிவெடுத்த அரசுத் திட்டத்தின் புள்ளிவிவரத்திற்காக நடத்தப்படும் நாடகமாகவே தோன்றுகின்றது. இதன் மூலமாக தப்பித்தவறி யாரேனும் உண்மையிலேயே பயனடைந்துவிட்டால், அதனை அரசும், மக்களுக்கு உதவி செய்துவிட்டோம் என்பதற்கு சாட்சியாக படம் பிடித்து மக்களுடன் சேர்ந்து கொண்டாடுகின்றது; அந்த திட்டத்தின் மூலமாக பயனடைந்தவர்களின் புள்ளிவிவரங்களும் மறக்கப்படுகின்றன. இதர, பெரும்பாலான மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் ஏன் பயன் சென்று சேரவில்லை என்று யாரும் சிந்திப்பதும் இல்லை. நமது கிராமங்களைச் சுற்றிப் பார்த்தோமேயானால், மக்களுக்குப் பலவிதமான திட்டங்களும், சலுகைகளும், சென்று அடையவில்லை என்று உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரியும். ஆனால் அரசுப் புள்ளி விவரங்களின்படி அந்தச் சலுகைகள் அனைவரையும் சென்றடைந்ததாக நாம் பல திட்டங்களிலும் காண்கின்றோம். இந்த புள்ளிவிவரங்களின் மாயம் என்ன?
புள்ளிவிவரங்கள்: எய்ட்ஸ், ஒரு உதாரணம்
எய்ட்ஸ் என்னும் மிகக்கொடிய நோய்! பத்தாண்டுகளுக்கு முன்னர் நாம் அனைவரும் மிகவும் பயந்த நோயானது எய்ட்ஸ்! “புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?” என்கிற விளம்பர வாசகம் சிறு குழந்தைகளைக் கூடச் சென்றடைந்தவாறு இந்த நோயைக் குறித்து ஒரு பீதி நிலவியது. ஆனால் இன்று நாம் எய்ட்ஸ் குறித்து பேசுவதோ, எழுதுவதோ இல்லை. ஏன்? 2002இல், 0.4% இந்தியர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அரசு புள்ளிவிவரம், சமீபக்கணக்குபடி, 0.27% மக்கள்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. 2006-7 ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் எய்ட்ஸ் 50 விழுக்காடாகக் குறைந்ததாக அரசும் அறிவித்தது. சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு சில வருடங்களில் இத்தகைய பெரும் மாற்றம் ஏற்பட்டதாக வேறு எந்த ஒரு நிகழ்வையும் கூற முடியுமா என்பது சந்தேகமே. எப்படி இந்த அசாதாரண நிகழ்வு நடந்தது? மக்கள் எவ்வாறு எய்ட்ஸ் குறித்து அபாயத்தை உள்வாங்கி அதனைத் தடுக்கவும், பாதியாகக் குறைத்து சாதனை படைக்கவும் வல்லவர்களாயினர்? எல்லாம் புள்ளிவிவரம் என்னும் மாயை. அரசும் அந்த நாள்வரை நமது நாட்டில் எத்தனை பேர் எயிட்ஸினால் பாதிக்கிப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரத்தை கணக்கிட்டதோ, அதனைத் தவறு என்றும், சரியான, விஞ்ஞான முறைப்படி கணக்கிட்டால் உண்மை அதில் சரிபாதியாகத்தான் இருக்கும் என்றும் சில வல்லுனர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்த பிறகே, தனது தவறை உணர்ந்த அரசும் அதனை திருத்திக்கொண்டது. அதனால் ஒரே வருடத்தில் 50% மாற்றம், சரிவு. அதனுடன், எய்ட்ஸ் நிவாரணப் பணி என்ற பெயரால் இந்தியாவிற்குள் வரும் பணமும், பலரது வருமானமும் குறைந்தன! அத்துடன் எய்ட்ஸ் பற்றி வரும் விளம்பரங்களும் குறைந்து, நமது மக்களும் அதனை அவ்வளவு பெரிய “பீதி” விளைவிக்கும் நோயாக நடுங்குவதை நிறுத்திவிட்டனர்; சிலர் மறந்தேவிட்டனர். அனைவரும் தங்கள் வாழ்கையை வழக்கமான அச்சங்களுடன் எதிர்காலத்திற்குப் பயந்து நடத்தி வருகின்றனர்.
நமது நாட்டில் அரசு புள்ளிவிவரம் என்பதை எந்த அரசு அதிகாரியும் நம்புவதில்லை. ஒரு முறை திட்டக்குழுக் கூட்டத்தில் ஒரு அரசு அதிகாரி ஒரு கருத்தைத் தெரிவித்தபொழுது அதற்கு ஏதேனும் ஆதாரம் அளிக்கும் விதத்தில் புள்ளிவிவரம் உள்ளதா? என்று கேட்டதற்கு, “எங்களது புள்ளிவிவரங்களை நாங்கள் நம்பமாட்டோம்! அது எப்படி இலக்காக நிர்ணயிக்கப்படுகின்றன, பின் இலக்கை எட்டிவிட்டதாக எப்படி நாங்களே புள்ளிவிவரங்களை அளிக்கின்றோம் என்று எங்களுக்கு தெரியும். அதனால், நீங்கள் யாராவது சுதந்திரமாக ஏதேனும் ஆராய்ச்சி செய்திருந்தால் அதனை நாங்கள் ஒப்புக்கொள்ளுகின்றோம்” என்று கூறினார்!
யார் நிர்ணயிக்கின்ற இலக்கு?
இத்தகைய போக்கினால்தான், பன்னாட்டு நிறுவனங்கள், நமது அரசிடம் தங்கள் தவறான தகவல்களை நமது புள்ளிவிவரங்களாக மிக எளிமையாகவே, ‘உண்மை’ என்று வலியுறுத்தவும் மற்றும் அதனைக்கொண்டு நமது அரசின் திட்டங்களை மாற்றவும், புதிய திட்டங்களை நிர்ணயிக்கவும், அத்தகைய திட்டத்தைக் கொண்டு அடிமை அதிகாரிகளுக்கு இலக்குகளை நாள்தோறும் புதிது புதிதாக ஏற்படுத்தவும் இயல்கின்றது. இந்தியாவில் எமர்ஜென்ஸி் இருந்த காலத்தில், எவ்வாறு கருத்தடை இலக்குகளை எட்டுவதற்காக, கிழவர்களுக்கும், பருவமடையாத பெண்களுக்கும் கூட கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக அரசு அதிகாரிகள் கணக்கு காண்பித்தாக படித்திருக்கிறோம். அதனைப் போலவே, பி. சாய்நாத், தன்னுடைய, புத்தகத்தில் மற்றொரு இலக்கு சார்ந்த திட்டத்தினால், எவ்வாறு விவசாயிகள் தங்களிடமிருந்த கால்நடைச் செல்வத்தையும் இழந்து கடனாளியாக மாறினர் என்று விவரமாக எழுதியுள்ளார். எல்லாம் இலக்கைச் சார்ந்த அரசுப் போக்கினால் வந்த விளைவுகள். இன்றும் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவோம் என்று அனைத்து திட்டங்களும் கூறினாலும், அவை ஒரு திட்டத்தைச் செயலாக்குகின்ற துறைக்கும், மற்ற, தொடர்புடைய, திட்டத்தைச் செயலாக்குகின்ற துறைகளுக்கும் இடையே எந்த உறவும் இல்லாமல்தான் இயங்கி வருகின்றன. விவசாயத்துறை சேர்ந்த விரிவாக்கப் பணியாளர், வாழ்வாதார திட்டத்தைச்சேர்ந்த களப்பணியாளருடன் சேர்ந்து வேலை செய்யமாட்டார். அதேபோல, சுகாதார மற்றும் ஆரோக்கியத்தை சேர்ந்த திட்டங்களை நிறைவேற்றிவரும் உடல்நலத்துறையைச் சேர்ந்தவர்கள் இதர துறைகளில் உள்ளவர்களுடன் சேர்ந்து வேலை செய்யமாட்டார்கள். வனத்துறை அதிகாரிகளை குறித்து கேட்கவே வேண்டாம், அவர்கள் வேறு எந்த துறையுடனும் இணையாது தனித்துச் செயல்படுவதை, இதர துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளே அங்கலாய்ப்புடன் தேரிவிக்கின்றனர். அவரவர், அவரவர் இலக்கை அடைவதற்காக நமது கிராமத்து மக்களை தங்கள் திட்டத்தில் பங்காளிகளாகவும் (பகடைக் காய்களாகவும்), பயனாளிகளாகவும் சேர்ப்பதில் குறியாக உள்ளனர். இவர்கள் பலமுறை அடுத்த துறைகளில் என்ன திட்டங்கள் உள்ளன என்றே தெரியாத நிலையிலேயே தங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கின்றனர். யாரும் நம்ப முடியாத இலக்கை நோக்கிப் பயணித்து வாழ்கையைக் கழிக்கின்றனர். இத்தகைய பதவியை அடைவதற்காகத்தான், நமது மக்கள் பலர் தவமாய் தவித்து, பலர் கால்களிலும் விழுந்து, மாடாய் உழைக்கின்றனர் என்றால் விந்தையாகத்தான் உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களின் மென்மையான போர்
இந்த அரசின் செயல்படும் முறையில், நடைமுறைக்கு எந்தத் திட்டமேனும் ஒத்துவருமா, வராதா என்று ஆய்வுசெய்து, சிந்திப்பதற்கெல்லாம் நேரமில்லை.இதனை நிறுவனங்கள் தங்கள் வியாபார உத்திகளுக்கு மிக வசதியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதன் உச்சகட்ட வெளிப்பாடுதான் இன்று பன்னாட்டு நிறுவனங்களும் , அவற்றின் தத்துப்பிள்ளைகளான தொண்டு நிறுவனங்களும் நமது அரசின் ஏதோ ஒரு துறைக்குப் புதிதாக இலக்கு நிர்ணயிக்கின்ற அவலநிலை. சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் வியாபார ஒப்புதல்கள் சார்ந்த கடன் என்ற காட்டமான அணுகுமுறை ஒரு புரமிருக்க, ‘வளர்ச்சி’ என்ற மென்மை அணுகுமுறையைக் கொண்டும் பன்னாட்டு நிறுவனங்களின் வாணிபம் பெருக்கப்படுவதை நாம் பார்க்கின்றோம். நமது மக்களின் துயரை பன்னாட்டு நிறுவனங்கள் (அவர்களுக்கு லாபம் ஈட்டும்) தொழில்நுட்பம் கொண்டோ, அல்லது ஒரு திட்டத்தைக் கொண்டோ முழுவதுமாக அகற்றமுடியும் என்று எந்த அரசு அதிகாரியும் நினைக்கவில்லை. ஆனால் அதனை ஒப்புக்கொள்ளும் வரை நமது அரசுக்குக் கிடைக்கும் பன்னாட்டு வாணிகம் கிடைக்காமல் செய்ய அரசை மறைமுகவாகவும், நேர்முகவாகவும் இன்று வலியுறுத்த பல நிறுவனங்கள் உருவாகியுள்ளன. அவற்றைதான் “Public Relations“ என்கின்றோம். ஒரு அரசுத் திட்டத்தையோ அல்லது உத்தியையோ உருவாக்குவதற்கான அனைத்து தகுதிகளும் அந்த அரசிடம் இருக்கவேண்டும் என்ற காலம் போய், இப்போழுது, “நீங்கள் எங்களிடம் அனைத்து அரசு வேலைகளையும் விட்டுவிடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்”, என்று பன்னாட்டு நிறுவனங்கள், “உங்களுக்கு எங்களை அரசில் இணைத்துக்கொள்ள வேண்டிய திட்டங்களையும் நாங்களே தீட்டித்தருகின்றோம்” என்று கூறத்துணிந்துவிட்டன. இந்த “PR“ நிறுவங்களின் வேலை, தொடர்ந்து நமது அரசைச் சேர்ந்தவர்களுடன் உறவு மேற்கொள்ளுதல், மற்றும் அவர்களிடம் தங்கள் நிறுவனப் பொருட்களுக்கு ஏற்றவாறு அரசுத்திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்தல் போன்றவை!
நிறுவனங்கள் மட்டும் இந்தச் சூதைச் செய்யவில்லை. உலக வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புக்களும் இதே போல, பன்னாட்டு வாணிபத்திற்கு (அதாவது, பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு) எந்த விதத்திலும் கேடு விளைவிக்காத விதத்தில் தங்கள் கொள்கைகளையும், திட்டங்களையும் அமைத்தும் செயல் பட்டும் வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில், உள்நாட்டுத் தொழில்நுட்பம், உருவாக்கும் திறன் மற்றும் தொழிற்சாலைகளை முடக்கியே இப் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வாணிபத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும். அதாவது இந்த நாட்டின் தற்சார்பான உற்பத்தித் திறனை அழிப்பதற்கான ஒரு போர், ஒரு மென்மையான போர், இந்த நிறுவனங்களால் ஏவப்படுகின்றது. அதற்கு முடிந்தவரை நமது அரசு திட்டங்களையே மூலமாக அமைத்து, அதற்கேற்றாற்போல் புள்ளி விவரங்கள் சமைத்து இவை நமக்கு அளிக்கின்றன. கண்பார்வை இழந்த இந்தியா
எடுத்துக்காட்டாக உருவாக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தையும், கண்கள் இரண்டிருந்தும் காணும் திறமையற்ற பத்திரிகைகளின் குருட்டுப் போக்கையும் காண்போம். “இந்தியாவில் 10 லட்சம் பேர் வைட்டமின் ஏ பற்றாக்குறையினால் ஒரு வருடத்திற்கு கண்பார்வை இழக்கின்றனர்”, அதனால் அவர்களுக்கு மரபீனி மாற்றப்பட்ட விதைகளை கொண்ட தங்க அரிசி (Golden Rice) மிகவும் அவசியம் என்று 1999-2000ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்றா பத்திரிக்கையான TIMES ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டது. அச்சமயத்தில், நமது நாட்டில் சில பத்திரிகைகளும் இந்த பிரபல பத்திரிகையின் கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி எழுதின. ஆனால் இந்திய அரசுத் துறைகளின் எந்த இடத்திலும் 10 லட்சம் பேர் கண்பார்வை இழக்கின்றனர் என்பதற்கு சான்று இல்லை. இருந்தும் இந்த புள்ளி விவரத்தை யாரும் மறுக்கவுமில்லை. அதே சமயத்தில் இந்தியாவிற்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி இந்தப் புள்ளி விவரத்தைப் பல கூட்டங்களிலும் முன்வைத்து நமக்கு மரபீனி மாற்றப் பயிர்களை விற்பனை செய்தார். அதனையும் நமது பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதும் யாரும் நமது அரசுப் புள்ளி விவரத்திற்கும் இவர் கூறுவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எழுதவில்லை. நமது நாட்டில் கண்பார்வை இழப்பு அதிகமாகி வருவதை உணர்ந்து அதற்கான எளிய முயற்சியாக முருங்கக்கீரை மற்றும் பப்பாளி உட்கொள்ளுதலை வலியுறுத்தி ஒரு அரசுத்திட்டமே இருந்த காலமது! இருந்தும் அந்த திட்டத்தை குறித்து யாரும் எழுதவில்லை; நமது நாட்டில் நிலவும் இன்னல்களைச் சமாளிக்கும் திறன் நம்மிடமே இருப்பதை ஒப்புக்கொள்ள முயலவில்லை. அமெரிக்க நிறுவனங்களுக்கு நமது உணவு உற்பத்தியைத் தாரை வார்கும் இந்தத் ‘தொழில்நுட்பத்தை’ யாரேனும் எதிர்த்தால், அவர்களை ‘வளர்ச்சிக்கு எதிரி’ என்று சித்தரித்துப் பல பத்திரிகைகள் எழுதின. பதினைந்து வருடங்கள் கழித்து அதே மரபீனி ‘தங்க அரிசி’ இன்னமும் ஆராய்ச்சிக் கட்டத்தைகூட தாண்டவில்லை. பாவம் இந்தத் தொழில்நுட்பத்தை நம்பியிருந்த இந்தியக் குடிமக்கள் , அன்றைய அமெரிக்கக் கணக்குபடி, 150 லட்சம் பேராவது இந்தக் காலகட்டத்தில் கண்பார்வை இழந்திருக்க வேண்டும். அது உண்மையா என்றால், நிச்சயமாக இல்லை. ஆனால் அன்று ஒரு அமெரிக்க கும்பணியின் விதை விற்பனைக்காகக் காவடி தூக்கிய நமது பத்திரிகைகளும், இன்றும் இந்தத் தொழில்நுட்பத்தைக் குறித்து எழுதுகையில், இதே புள்ளிவிவரத்தை முன்வைத்து எழுதுகின்றனர். சுயமரியாதை உள்ள எந்த எழுத்தாளனும் தான் எழுதுவதற்கு ஆதாரமாக ஏதாவது ஒரு அரசு புள்ளிவிவரமாவது இருக்குமா என்று சிந்திப்பான். ஆனால் பெரும்பாலானவர்கள் அத்தகைய சிந்தனை படைத்தவர்களாகத் தெரியவில்லை.
அரசு அதிகாரிகள்
‘இலக்கை எட்டிவிட்டோம்’ என்கின்ற புள்ளிவிவரத்தைத் தயார் செய்வதை மட்டுமே தங்கள் வேலையாகக் கொண்ட பல அரசு அதிகாரிகள், நமது நாட்டின் அரசு இயற்றும் பல திட்டங்களை, மிகவும் திறாமையாகவும், அறிவுத்திறன் கொண்டும், நிறைவேற்றி வருகின்றனர். இவர்கள் பலர் தங்களுக்கு இத்தகைய இலக்கு்சார்ந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள குறைகளை உணர்கின்றார்கள். பல திட்டங்களின் குறைபாடுகளையும், அவை நமது மக்களுக்கு பொருந்தாமல் இருப்பதையும் இவர்கள் உணர்ந்த போதும், தங்கள் அரசு வேலைகளைத் தக்க வைத்துக்கொள்ளுவதற்காக, மக்களை விரட்டியேனும்- அல்லது எண்களைப் பிழிந்தேனும்- தங்கள் இலக்கை எட்டிவிட இவர்கள் முனைகின்றனர். இத்தகைய அதிகாரிகள் கையில், நிலைத்த, நீடித்த வளர்ச்சி என்னும் ஒரு கொள்கையை சில எண் இலக்குகளாக வகுத்துக் கொடுத்தால் அது என்ன பாடுபடும்? நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். என்று மடியும் இந்த எண்கட்டு வித்தை?