தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம்


திட்டமிட்ட பொருளாதாரம்

உடல்நல‌ம் என்பது நல்ல சமச்சீரான உணவு உண்பதைச் சார்ந்து இருப்பதைப்போல், ஒரு சமூகத்தின் நல்வாழ்வு என்பது அதன் வேலைகளும் தொழில்களும் சமச்சீராய் நிர்வகிக்கப்படுவதைச் சார்ந்து உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் அதன் குடிமக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து த‌ரத் தேவையான அளவு கைத்தொழில் வல்லுனர்களும் தேவை. அடிப்படை உணவைத் தாண்டி மனிதனுக்குப் பிற தேவைகள் உள்ளன. ஒரு கிராமத்தில் எல்லோரும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டால் அக்கிராமத்தில் திறமைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் - இது ஒரு சமூகப் பற்றக்குறை நோயாக முடியும். நம் இந்தியாவில் இதுவே தற்போதைய பெரும் பிரச்சினை. எடுத்துக்காட்டாக, பண்டைய தங்க ஆசாரிகள் தங்கள் தொழிலை இழந்து விட்டார்கள்; அவர்களின் நுணுக்கமான விரல்கள் தெருப்போடக் கல்லுடைக்கும் நிலைமைக்கு ஆளாகி விட்டன‌. பல நூற்றாண்டுகளாக அவர்கள் பரம்பரையாகப் பெற்ற திறமைகள் இப்போது வீணாகிக் கொண்டு இருக்கின்றன‌ ; இது மனித இனத்தின் முன்னேற்றத்திற்கே ஒரு பேரிழப்பு. தற்போதைய மாறிவரும் சமூகத் தேவைக்கு ஏற்ப, கைக்கடிகாரம், சுவர்க்கடிகாரம் போன்றவற்றின் தயாரிப்பில் நாம் பண்டைய தங்க ஆசாரிகளை ஈடுபடுத்தியிருந்தால், அவர்களின் திறமைகள் நன்றாய்ப் பயன்பட்டிருக்கும். தம் மண்ணின் மைந்தர்கள் வேலையின்றி வாடும்போது, இப்பொருட்களை இந்தியா இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறது.

உழைப்பைப் பகிர்தல்

ஒரு நபர் தன் தினப்படி வேலையில் செய்யும் செயல் அவரின் முழுமையான வளர்ச்சிக்குப் பயன்படும்படி இருக்க வேண்டும். ஒரே சீரான உற்பத்தியை விரும்பும் மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறைமை, உற்பத்தியைச் சிறு துண்டுச் செயல்களாகப் பிரித்துக் கலைத்தன்மைக்கோ, தனித்தன்மைக்கோ முற்றும் இடமில்லாமல் செய்து விடுகிறது. ஆலை உற்பத்தியின் சேவகன் ஒரு ராட்சதச் சக்கரத்தின் ஒரு பல்லைப் போல் ஆகி விடுகிறான். தன் தனித்தன்மையையும், செயல் சுதந்திரத்தையும் இழக்கிறான். ந‌ம் நாட்டில் பெரும்பகுதி மக்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். உடல் உழைப்பாளிகள் மிக அதிகமாகவும், முதலீடு மிகக் குறைவாயும் உள்ளது. எனவே ஒரு அகிம்சைச் சமூகம், வருவாய் சார்ந்ததாகவும், முதலீட்டைச் சாராததாகவும் இருத்தல் வேண்டும். இக்காரணங்களால் நாம் மிகக் குறைந்த முதலீடோ அல்லது முதலோ தேவைப்படாத உற்பத்தி முறைமைகளைப் பரிந்துரைக்கிறோம். அவ்வுற்பத்திக்கு அண்மையிலேயே ஒரு உடனடி சந்தையும் இருத்தல் வேண்டும். நாம் எவ்வளவுதான் மாற்றி ஆசைப்பட்டாலும், இவ்வுண்மைகளை யாராலும் மாற்ற இயலாது; இவற்றை அலட்சியம் செய்யும் எவ்விதத் திட்டமிடலும் வெல்ல இயலாது. எனவே கிராமத்தொழில்களே மக்களின் முக்கிய வேலைவாய்ப்பாக இருக்க இயலும் என்ற முடிவிற்கு நாம் அறிவுபூர்வமாக இட்டுச் செல்லப் படுகிறோம். பாமர மக்களுக்கு மையப்படுத்தப்பட்ட உற்பத்தியை ஒருநாளும் பரிந்துரைக்க இயலாது. [இப்போது இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்று நம் பிரதமர் உலகமெங்கும் சென்று யாசகம் செய்வதன் பின்விளைவுகளை குமரப்பா அன்றே தீர்க்க தரிசனத்துடன் ஞானக் கண்ணுடன் கண்டுள்ளார் - கேட்கத்தான் யாருக்கும் காதுகள் இல்லை!]

[“கிராமிய இயக்கம் எதற்காக? ” (Why the Village Movement) என்ற ஜே.சி. குமரப்பாவின் கட்டுரையில் இருந்து (1936)] - தமிழாக்கம், மற்றும் பகர அடைப்புக் குறிப்புகள் - பயணி

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org