தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பசுமைப் படை - அனந்து

வேளாண்மை என்பது ஒரு மதிப்பிற்கு உரிய தொழிலாக இல்லை என்றால், விவசாயத் தொழிலாளர்களின் நிலைமையோ அதை விடவும் மரியாதை குறைந்ததாகச் சமூகத்தில் இருக்கிறது. வேளாண் தொழிலாளர்களுக்கு என்று ஒரு அமைப்பும், அதை ஒரு சீர்படுத்தப்பட்ட சேவைப் பிரிவாகவும், மரியாதைக்கு உரிய தொழிலாகவும் ஆக்க இயலுமா? ஆம் என்று அழுத்தமாகக் கூறுவது மட்டுமின்றி செயலாக்கியும் காட்டிருக்கிறது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பசுமைப் படை (Green Army) அமைப்பு.

முதல்முறை நான் இதை பற்றி கேள்வி பட்ட பொழுது என் கற்பனைக் குதிரை பறந்தது. நான் ஒரு பெரும் பட்டாளமே இயற்கை வேளாண் முறைகளில் பயின்று, சீரிய இயற்கை வழி பூச்சி மேலாண்மை உட்படக் கையாண்டு பல விவசாயப் பண்ணைகளில் இதனைச் செயலாக்கி , மிராசுதார், வேலையாள் இருவருக்கும் லாபம் உண்டாகும் வகையில் கற்பனை செய்திருந்தேன். ஆனால் திருச்சூரில் இதனை நேரில் சென்று பார்த்த பொழுது இது நம் கற்பனையை எல்லாம் மீறிய சீரியதொரு முயற்சி, சாதனை என்றே புரிந்தது.

நான் சென்ற பொழுது பருவ மழை தொடங்கியிருந்தது. எங்கும் பச்சை நிறம். பசுமையாக ஊரே அழகாக பூசி மெழுகியது போல் ஜொலித்தது. அவ்வப்பொழுது ஒரு சாரல்..எனக்கு அப்பொழுதும் தெரியாது இதெல்லாவற்றையும் விட பெரிய பசுமைப் புரட்சி எனக்கு காத்திருந்தது என்று தெரியாது.

ஒரு ஆட்டோவில் ஏறி மன்னுத்தி வேளாண் ஆராய்ச்சி மையத்திற்கு செல்லுமாறு கூற, அவர் எந்த வளாகத்திற்கு என்று கேட்கவும் தான் தெரியும் அங்கு இரண்டு வளாகங்கள் உள்ளது என்று. நாம் உடனே பேராசிரியர் ஜெயகுமாரன் என்று எங்களுக்குள் கூற, அந்த ஆட்டோ ஓட்டுன‌ர் 'ஓ..ஜெயகுமாரா? எனக்கு தெரியும்..என் நண்பர் தான்.." என்று கூறி அவரிடம் நாம் எங்கு வர வேண்டும் என்று தெரிந்து கொண்டார். ஒரு ஆட்டோ ஓட்டுனர் என் நண்பர் என்று கூறி, இயல்பாக பேசக்கூடிய வேளாண் விஞ்ஞானி, பேராசிரியர் இன்று இருக்க முடியும் என்றால், அப்பொழுதே நமக்குத் தெரிகிறது இவர் ஏதோ சாதாரண ஆள் இல்லை என்பது. அவரது அறைக்கு சென்றால் ஒரு ராணுவ ஒழுக்கம் தெரிகிறது . அவருக்கு ராணுவத்தின் பேரில் ஒரு பெரும் ஈர்ப்பு, அதனால் பல சிந்தனைகளும் செயல்பாடுகளும், திட்டங்களும் ராணுவ ஒழுக்கத்துடன் இருக்கும். எல்லா இடங்களிலும் சிறப்பான பெயர்/விளக்க அட்டைகள். அங்கங்கு சீரிய பணியில், சீருடைகளில் , மிகவும் நேர்த்தியாக ஒரு பெரும் ஒழுங்குமுறையுடன், ஆண்களும், பெண்களும் (எல்லாம் சிரித்த முகத்துடன்).

பேராசிரியர் ஜெயகுமாரனுடன் பேசத் தொடங்கினால், எண்களும், தரவுகளும் சரளமாக வந்து விழுகின்றன. 55 லட்சம் வேலையற்றவர்கள் இருக்கும் தமது மாநிலத்தில் 25 லட்சம் வெளி மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள்; 20000 கோடி ரூ இவர்களுக்கு செலவு செய்யப்படுகிறது; இருந்தும் 8.5 லட்சம் ஹெக்டேரிலிருந்த நெல் சாகுபடி 2.5 லட்சம் ஹெக்டேருக்கும் கீழ் குறைந்துள்ளது என்று பொரிந்து தள்ளுகிறார்.

பலரும் , அதிக கூலி மற்றும் இடு பொருள் செலவினால், தங்கள் நிலத்தைத் தரிசாக விட்டு விடுகின்றனர்- இப்படி தரிசாக விடுவது அவை வீடுகளாகவும் ரியல் எஸ்டேட்டாகவும் மாறுவதற்கான முதல் படி என்கிறார். "உணவும், பாலும் குறைந்தால் கடவுளையும் பட்டினி போட்டுவிடுவோம். நான் ஒவ்வொரு வேளை உண்ணுவதற்கு முன்பும் கடவுளுக்கும், இந்த உணவை உற்பத்தி செய்த 'அன்னதாதா' வான விவசாயிக்கும் நன்றி கூறுவதை மரபாக கொண்ட வழியில் வந்தவன். ஆனால் விவசாயிகளை நம் போன்றவர் சென்று நெல் சாகுபடி செய், விவசாயம் செய் என்று எந்த தார்மீக உரிமையில் கேட்பது? என் மக்களை விவசாயத்தில் விடாமல் எப்படிக் கூற இயலும்" என்கிறார். (இத்தனைக்கும் இவரது மகன் ராணுவத்தில் உள்ளார்! )

ஆகவே இதனை ஒரு நல்ல, மதிப்புள்ள, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக மாற்றுவதே சரியான வழியாகும் என்று யோசித்துத் தனது ராணுவ ஈர்ப்பையும் கொண்டு- எல்லோரும் எல்லா வேலையும் செய்யக்கூடிய (வேண்டிய) ஒரு "மாதிரியை" உருவாக்குகிறார். அதுவே உணவுப் பாதுகாப்புப் படை (Food Security Army). (அது பின்னாளில் இயற்கை வழிகளை மட்டுமே கையாண்டு Green Army - பசுமைப் படை என்று வளர்கிறது. அதனை நாம் பின்னால் பார்ப்போம்)

ஆகவே சமூக நலன்கள் அடங்கிய‌, கீழிருந்து மேல் நோக்கிச் செல்லக்கூடிய 'வளர்ச்சி'யை, கிராமிய இந்தியாவை மேம்படுத்துவதாக இருக்கும் ஒரு வழிமுறையைத் தான் கொண்டுவரவேண்டும் என்று முனைந்து இதனை வடிவமைத்தார். "மிகவும் கடுமையான‌ உடல் உழைப்பு நிறைந்த, ஆனால் அதற்கேற்ற மரியாதையோ, பணமோ, கவர்ச்சியோ அற்ற இதனை மாற்ற வேண்டும். இவர்கள் வழங்குவது தேச சேவை- தேச உணவு பாதுகாப்பிற்காக உழைக்கும் இவர்களது உழைப்பைக் கூலி என்று இழித்துரைக்க‌ விரும்பவில்லை. ஆதலால் எங்கள் வழி ஒரு சேவை வழங்குனர் (service provider) ஆகவும், இவர்களது பணி ஒரு சேவையாக ம‌ட்டுமே வழங்கப்படும் - இதில் முக்கியமாக‌ சமூக அக்கறையும் இருக்க வேண்டும். ஒரு (தென்னை) மரமேறி காப்பீடு இல்லாமல் ஏன் பணி செய்ய வேண்டும்? ஒரு விவசாயக் கூலி வேலை செய்பவர் ஏன் வேறு நலன்கள் இல்லாமல் செய்ய வேண்டும்? " என்று கேட்ட ஜெயகுமார் , காப்பீடு, சேமலாப நிதி (provident fund) எல்லாம் அடங்கிய சிறந்த ஒரு மாதிரியை படைக்கிறார்.

உணவுப் பாதுகாப்புப் படை உருவாகிறது. 1996ல் இவர் ஒரு நாற்று நடும் சீன இ­யந்திரம் ஒன்றைப் பார்க்கிறார். இவர் நாம் தினமும் பார்க்கும் வேளாண் விஞ்ஞானி போல் ஒரு விஷயத்தைச் பற்றி அறிவுரை வழங்கி செல்பவர் அல்லர். வாங்கிப் பயன்படுத்துகிறார். தமது விவசாயிகளுக்கு எடுத்துச் செல்ல ஒரு பெரும் வியூகம் தீட்டுகிறார். ஒத்திகை, சோதனை, தரக்கட்டுப்பாடு, எளிதாக வளர்க்கக்கூடிய நெல் வகைகள் என்று பல பரிசோதனைகளுக்கு பின் 2004ல் தான் முழுமையாகக் கொணர்ந்து பயிற்சிகள் துவங்குகிறார். பயிற்சி முகாம் அமைக்கப்படுகிறது. பெண்கள் உட்பட இங்கு தங்கிப் பயின்று செல்கின்றனர். அந்த இயந்திரத்தை முழுவதுமாகப் பிரித்து, அறிந்து, இயக்கி பின்னரே செல்கின்றனர். ஆம்! இந்த வேளாண் விஞ்ஞானி அவர்களை பயின்று, பின்னர் அவரது வேளாண் பல்கலைகழகத்தின் நிலத்தில் நடைமுறையில் இயங்க வைத்து, மேலும் அவர்களுக்கு தமது நிலத்திலும் உபயோகிக்கவும் விட்டார். (சாதாரணமாக இயந்திரங்கள் நமது பல்கலை வளாகங்களில் துரு பிடித்து விழுந்து கிடப்பதையோ அருங்காட்சியகம் போல அலங்கார பொருளாக மட்டுமே இருப்பதை கண்ட நமக்கு பெரும் ஆச்சரியம்).

இவரது இந்த அரிய வழி (நெறி)முறைகளால் பல பெண்கள் வந்து பயிற்சி பெற்றுப் பெரும் வளர்சி அடைந்துள்ளனர். இன்று வரை 190 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு 2544 ஆண்களும் 1809 பெண்களும் பயனடைந்துள்ளனர். இதில் கேரளாவிற்கே ஆன சிறப்பு இந்தப் பயிற்சிக் கட்டணங்கள் யாவும் அந்தந்தப் பஞ்சாயத்து அல்லது ஊரக வங்கிகளே கட்டின. அதே போல இந்த இயந்திரமும் பஞ்சாயத்து அல்லது ஊரக வங்கிகள் வாங்கி இவர்களுக்கு வாடகைக்கோ இனாமாகவோ கொடுத்துள்ளன.

கேரளத்தில் இன்று ஒரு பெண்ணிற்கு கூலி 400/- ஆணுக்கு 600/- முதல் 750/- ஆகும். சாதாரணமாக நெல் நடவு செய்ய‌ ஒரு ஏக்கருக்கு 30 ஆட்கள் வேண்டி இருக்கும், இந்த இயந்திரம் கொண்டு 7 பேர் (5 கூட) இதனைச் செய்ய முடியும் என்கின்றனர்) 2.5 முதல் 3 ஏக்கர் ஒரு நாளில் செய்து முடிக்க முடியும்.ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 10-12 ஆயிரம் வரை ஆகக்கூடிய செலவு, இந்த முறையின் மூலம், விதை மற்றும் நாத்தங்கால் தயாரிப்பும் போக 3500/- தான் . குறைந்தது 8000/- வரை சேமிப்பு. இந்த பசுமைப் படை வீரர்களுக்கோ கேரளத்தின் கூலியை விட இரட்டிப்பு மடங்கு கிடைக்கும். தன்மானம், நிறைவு, எல்லாம்!

உண்மையான‌ பொருளாதார விடுதலை அடைந்த பெண்கள், குழுக்களைக் கண்டேன். கூட்டாக இயங்க வேண்டிய கட்டாயமும் இதில் உள்ளது ஒரு சிறப்பு.

இந்த உணவுப் பாதுகாப்புப் படை பிரபலம் அடைந்ததற்கு 2009ல் ஒரு பெரும் சவால் வந்தது . 'ஆபரேஷன் பொன் அமுதா' என்று அழைக்கப்பட்ட இந்த சவால்- 5 நாட்களில் 300 எக்கரில் நாற்று நட வேண்டும். அதுவும் கடல் மட்டத்திற்கு கீழ் இருந்த சதுப்பு நிலங்களில் . ராணுவ நுட்பத்துடன் நாத்து தயாரிப்பதிலிருந்து, நடவு, இடைவெளிகளில் மீண்டும் நடவு, எல்லாம் திட்டமிட்டார். 9 ரெஜிமென்டுகள், 24 பட்டாலியன் என்று வியூகம் அமைத்து தனது எல்லா மாணாக்கர்களையும் களம் இறக்கினார். இந்த 24 அணிகளும் தலா ஒரு நாளைக்கு60 ஏக்கர் பூர்த்தி செய்து 5 நாட்களில் 300 ஏக்கர் முடிக்குமாறு திட்டம் தீட்டினார். இது மட்டுமா? பல பெண்கள் கொண்ட அணிகளாதலால் நடமாடும் கழிப்பறைகள் முதல் உடை மாற்று அறைகள், நடமாடும் பழுது பார்க்கும் யூனிட்டுகள், மேற்பார்வை, உணவு, மருத்துவம் என்று எல்லாம் துல்லியமாக திட்டமிடப்பட்டு நிறைவேற்றி சாதனை படைத்தனர். இதனை ஒரு ராணுவப் பயிற்சி போல் திட்டமிட்டு, மிகச் சிறப்பாக நிறைவேற்றினார் இந்த படைத்தளபதி. ஒவ்வொரு ரெஜிமென்ட்டுக்கும் 5 லட்சம் வீதம் மொத்தம் 45 லட்சம் வரவு! (இந்த மொத்த திட்டமிடலையும், ஒவ்வொரு கட்டத்தின் நிகழ்வுகளையும், சில சறுக்கல்காலையும், அதிலிருந்து கற்ற பாடங்களையும் மிகத் துல்லியமாக http://foodsecurityarmy.org/operations/operation-ponnamutha-300-5 என்ற‌ வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் தவறுகளை மறைக்காமல் மிகவும் வெளிப்படையாகப் பதித்திருப்பது பேராசிரியர் ஜெயகுமாரனின் முத்திரை.)

1996ல் ஒரு இயந்திரத்தை பார்த்து, பின்னர் முழுவதுமாக பிரித்து, பின்னர் பலருக்கும் பயின்று, ஒவ்வொரு தடங்கலாக தாண்டி, ஒரு முகத்துடன் மிக துல்லியமாக திட்டங்கள் தீட்டி, பயிற்சி முகாம்கள் முதல் களப்பரிசோதனை மற்றும் மதிப்பீடு என்று எல்லாம் முடிந்து 2008லிருந்து தான் முழு மூச்சுடன் பல இடங்களிலும், குழுக்களுடனும் இது பரவாலாகிறது!

தன்மானம் நிறைந்த, பொருளாதார விடுதலை கண்ட, சமூக நீதி நிலை நாட்டிய பெண்களை நாம் காண முடிகிறது.

அப்படி என்றால் இந்த இயந்திரமயமாக்கலும், கூலி வேலை செய்பவர்களை இடம்பெயர்த்தலும் சரியா? என்ற கேள்வி வரும் அல்லவா? வேலைக்கு ஆள் கிடைக்காததாலும், கிடைத்தாலும் மிக அதிக சம்பளத்தினாலும் கம்யூனிஸ்டுகள் கொண்ட‌ கேரளத்தின் இன்றைய கட்டயாம் இது . ஆனால் இங்கு மதிப்புள்ள, நல்ல வருமானம், சமூக அக்கறையுடன், தேச சேவையாகவும், குழுவாக இயங்குதல் என்று எல்லாம் ஒன்றாக வருவதைப்பார்த்தோம்.

வேறு இடங்களில் - விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள (அல்லது குறைந்த‌ சம்பளம் இருக்கக்கூடிய) இடங்களில் மிகவும் கவனமாகத்தான் திட்டமிட வேண்டும். அலுப்புத்தட்டும் அதிக உடல் உழைப்பைக் குறைக்கும் விதமாகவும், விவசாயத் தொழிலாளர்கள் இடம் பெயரா வண்ணம் திறமைகளையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து ஒரு சரியான மாதிரியையும் இயந்திரத்தையும் கொணரவேண்டும். உதாரணத்திற்குப் பருத்தி அறுவடைக்கு, சிறு தானியங்களை உமி நீக்க, எண்ணை ஆட்ட, களை எடுக்க என்றும் கொள்ளலாம். ஊதியம் குறைவாக‌ இருக்கும் இடங்களிலும் இக் கூட்டுறவு முறை, கூலி ஆட்களைக் குறைக்க இல்லாமல், கடின உழைப்பைக் குறைக்கப் பயன்படுத்த முடியும். இந்த இயந்திரத்தை கொண்டு செயல்பட்டாலும் விவசாயிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் லாபகரமாகவே இருக்கும்.

இன்றும் அவர் ஆய்வு மற்றும் அதன் இடைவெளி, விவசாயிகளுக்கான முன்னேற்றம், தன்மானம், பொருளாதாரம் இவை பற்றி தான் உரையாடுகிறார். இவ்வளவுக்கு பிறகும் ஆசை? இருக்கிறது: இங்கு ஒரு பயிற்சி கல்லூரி வர வேண்டும், மற்றும் இந்த மையத்தை தேசிய சிறப்புத்திறன் மையமாக‌ (national centre of excellence) ஆக்க வேண்டும்! இதனைத் தனி நபர் வணிகம் (தொழில்) ஆகவோ, கூட்டுறவாகவோ செயலாக்க‌ முடியும். அப்படிச் சிறந்து விளங்கும் சில எடுத்துக்காட்டுகளை - லதா ரவிந்திரன் என்னும் பெண் தனி ஆளாக சாதித்தவையும், அனூப் கிஷோர் என்னும் பஞ்சாயத்துத் தலைவர் உருவாக்கிய பசுமை போராளிகள் என்னும் இயற்கை வேளாண் வழிகள் சார்ந்த கூட்டுறவு மாதிரியையும் அடுத்த இதழில் பார்ப்போம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org