தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நல்லூரில் ஒரு சந்திப்பு - உழவன் பாலா


12 ஆகஸ்ட் 2015

நாகை மாவட்டம் வடகோடியில், கொள்ளிடத்திற்குக் கிழக்கே உள்ள ஒரு சிறு கிராமம் நல்லூர். இங்கே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு இளங்கலை வேளாண் மாணவிகள் கிராமம் தங்கிப் பணியாற்றும் (Village Stay Program) திட்டத்தின் கீழ்க் கடந்த 45 நாட்களாக இக்கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் விரிவாக்கப் பணியாற்றி வருகின்றனர். இதன் இறுதி நிகழ்ச்சியாக விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு இயற்கை வேளாண்மையைப் பற்றிய அறிமுகம் மற்றும் தொழில்நுட்பத் தகவல்கள் வழங்குவதற்காக என்னையும், நம் இயற்கை விவசாயி திரு.ஜெயக்குமாரையும் அழைத்திருந்தனர்.

விவசாயிகளைச் சந்திப்பது எப்போதுமே ந‌மக்கு விருப்பமான நிகழ்வானதால் நாங்கள் உடனே ஒத்துக் கொண்டோம். நல்லூர் என்பது தேவாரப் பாடல் பெற்ற தலமான ஆச்சாள்புரத்தை அடுத்தது. திருஞான சம்பந்தர் திருமணம் செய்து கொண்ட ஊர் என்பதால் இதற்குத் திருமண‌ நல்லூர் என்று பெயர் வழங்கிப் பின்னர் அது நல்லூர் ஆயிற்று. வழக்கம்போல் விவசாயிகள் 10 மணிக் கூட்டத்திற்கு 11 மணிக்குத்தான் வந்தனர். அந்நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு (ஆளே இல்லாத) ஆச்சாள்புரம் கோவிலில் இருந்த மிக நுட்பமான சோழர்களின் வெண்கலச் சிலைகளை ரசித்து விட்டு நாங்கள் கூட்டத்திற்குச் சென்றோம்.

சுமார் 100 விவசாயிகளும், 20 மாணவிகளும், வேறு சிலரும் வந்திருந்தனர். ஊர்ப் பெரியவர்கள் முக்கியஸ்தர்கள் எல்லாம் அவரவர் கருத்தைக் கூறி எங்களை வரவேற்றபின் ஜெயக்குமார் தன் அனுபவங்களைக் கூறினார். தான் 10 வருடம் சென்னையில் மனைவியுடன் வேலை பார்த்தது, அதன் பின்னர் நகரத்தில் இருந்து கிராமம் பெயர்ந்தது, தன் சொந்த மண் 20 எக்கரில் தன் தந்தை 30 வருடங்களாக வேதி வேளாண்மை செய்தது, அதன் பின்னர் தான் முதலில் 3 ஏக்கர் மட்டும் பரிசோதனை முயற்சியாக இயற்கை முறையில் கிச்சடி சம்பா நட்டது , அதன் பின்னர் 10 ஏக்கர் இயற்கைக்கு மாற்றியது, பின்னர் இப்போது முழுவதுமாக இயற்கைக்கு மாறியது போன்ற அனுபவங்களை உணர்ச்சி பொங்கக் கூறினார். இயற்கை வேளாண்மையில் இடுபொருள் செலவு குறைவதையும், காவிரிக் கடைம‌டைப் பகுதிகளில் வேதி விவசாயம் ஒரு ஏக்கருக்கு 15000 முதல் 18000 இடுபொருள் செலவு ஆவதால் போட்ட காசை மீட்கவே உயர்விளைச்சலில் 80% தேவை என்று விளக்கினார். நெல் வேளாண்மை என்பது தோற்கும் தொழில் ஆகாமல் விவசாயிகள் மீண்டு வருவதற்கு பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் நட்டு, அதை நல்ல விலைக்கு விற்க வேண்டும் என்று கூறினார்.

அடுத்துப் பேசிய நான் உழவிலும், உணவிலும் இழையோடி வரும் அரசியல், வாணிபம் மற்றும் பன்னாட்டு வேளாண் நிறுவனங்களின் சந்தைச் சூது இவற்றை விளக்கி விட்டு, உழவன் விடுதலைக்கு இயற்கை வேளாண்மை ஒன்றே வழி என்றும் இதில் வெல்வதற்கு, இயற்கை உழவோடு சந்தைப் படுத்துதலும் மிக முக்கியம் என்றும் விளக்கினேன். இடைத் தர‌கர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்றால் உழவனுக்கு விற்பனை விலையில் 10 முதல் 15 சதவிகிதம்தான் செலவு போக எஞ்சும் என்றும், மதிப்புக் கூட்டிய பொருளாக விற்க வேண்டும் என்றும் எங்கள் அனுபவத்தில் இருந்து கூறினேன்.

இறுதியாக, கூட்டத்தில் யார், யார் பரிசோதனை முயற்சியாக ஆளுக்கு 1 மா (கால் காணி = 33 சென்ட்) நிலப்பரப்பில் இவ்வருடம் இயற்கை வேளாண்மையில், பாரம்பரிய ரகங்கள் நடப் போகிறார்கள் என்று கேட்டதும் 10 - 12 பேர் முன்வந்தனர். இதை நல்லூரிலேயே வசிக்கும் நண்பர் கரு.முத்து அவர்கள் ஒருங்கிணைப்பதாக ஏற்றுக் கொண்டுள்ளார். கடைமடைப் பாசனப் பகுதியில் இயற்கை நெல் சாகுபடி பரவ நல்லூர் ஒரு ஆலம் விதையாகுமா என்று காலம்தான் பதில் சொல்லும்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org