சென்ற மாதம் இழப்புக்கள் மிகவும் வருத்தப் பட வேன்டியவை. ஒன்று முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் காலம். அரசியலில் நல்லவர்கள் என்று இப்போது யாரும் இருப்பதில்லை. நல்லவர்களாய் இருந்தால் அவர்கள் அரசியலில் நிலைப்பதில்லை; நிலைக்கவிடுவதில்லை. இச் சூழலில் அணு விஞ்ஞானியான அப்துல் காலம் குடியரசுத் தலைவர் ஆனதும் அதன் பின்னர் மிகவும் எளிமையாகத் தன் வாழ்வை வாழ்ந்ததும் தற்போதைய இந்தியாவில் ஒரு வியப்பான நிகழ்வே. மையப் பொருளாதாரம், தொழில்நுட்பம், அணுவாற்றல் போன்றவற்றை திரு கலாம் நம்பினாலும். அவரின் தனி மனித ஒழுக்கமும், நேர்மையும், எளிமையும் எல்லோருக்கும் பாடமாய் அமையும் என்பதில் ஐயமில்லை. அவர் மறைவுக்கு நாடே திரண்டு அஞ்சலி செலுத்தியது தற்செயலாய், இயல்பாய் நிகழ்ந்த ஒன்று யாரும் இதை எதிர்பார்க்கவோ, திட்டமிடவோ இல்லை. இது அவரின் வாழ்நெறிக்குச் சான்றாயினும், அதன் அடிப்படை உண்மை பொது வாழ்வியல் நல்லவர்களின் வறட்சியே.
இன்னோரு பேரிழப்பு காந்தியவாதி சசி பெருமாளின் மரணம். தன் வாழ்வின் கடைசி வருடங்களை மதுவுக்கு எதிராகப் போரிட்டுத் தன் உயிரையே விலையாகக் கொடுத்தவர் திரு சசி பெருமாள். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசு, மதுவிற்பதற்காக ஒரு அரசு நிறுவனத்தை உருவாக்குவதும், அதனால் அரசுக்கு வருமானம் வருகிறது என்று அதை நியாயபடுத்துவதும் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும் ஒரு அவமான நிகழ்வு. ஒரு உள்ளக்கிடக்கையின் ஊற்றாக எழுந்த சசி பெருமாளின் விடாத அறப்போரும் அதனால் அவருக்கு நேர்ந்த மரணமும், அதற்குத் தமிழகமே திரண்டு பொங்குவதும் மக்களின் மனதில் இழையூடி நிற்கும் மதுவுக்கு எதிரான போக்கையே காட்டுகிறது. முன்னர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாகப் பொதுமக்கள் தானாய்த் தரண்டதும் ஊழலின் பேரில் பொதுமக்கள் கொண்ட கடும் சினத்தயே காட்டுகிறது.
வழக்கம்போல், எல்லா அரசியல் கட்சிகளும், எரிகிற வீட்டில் பிடுகிய கொள்ளி என்பதுபோல், இதைப் பெரிதாக்கி அரசியல் ஆதாயம் காண நினைக்கின்றன. மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்த வண்ணம் உள்ளன. அவற்றைத் தூண்டி விடும் கட்சிகளின் தலைவர்கள் , அவர்களின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் மதுபான நிறுவனங்களின் நேரடி/மறைமுக முதலாளிகள் என்பது வசதியாக மறைக்கப்பட்ட/மறக்கப்பட்ட உண்மை. ஊழல் அதிகமாயினும், இப்போதைய மாநில அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கும் அளவு எந்தப் பிரச்சினையும் இல்லாத நிலமையில், இம்மது எதிர்ப்பு ஒரு போர்வாளாக எதிர்க்கட்சிகளால் கையாளப் படுகிறது அவ்வளவே. உண்மையான மக்கள் நலனில் அக்கறை இருந்தவர் சசி பெருமாள் மட்டுமே!
பள்ளி சிறுவர்கள், பெண்கள் என்று பலரும் மது போதையில் திரியும் காட்சிகளை ஊடகங்களும், வலைத்தளங்களும் பரப்பியதால் டாஸ்மாக் கடைகளுக்கும் அதைக் காக்கும் மாநில அரசுக்கும் எதிராய் ஒரு சினௌணர்வ்ய் இப்போது மேலோங்கி நிற்கிறது. ஆனால் தமிழனுக்கு மறதி மிகவும் அதிகம். அரசு எதேனும் குழந்தைக்கு மிட்டாய் குடுப்பதுபோல் சலுகை கொடுத்து விட்டால் அடங்கி விடுவோம். மழையைப் பற்றி எழுதிய பாரதி "உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்பட மாட்டான்" என்றூ எழுதினான். வரும் காலங்களில் மதுவின் ஈரம் இல்லாமல் உலர்ந்த தமிழனைத் தேடி அலையும் காலம் வரலாம்.
சிறுமை கண்டு பொங்கும் போர்க்குணம் நமக்கு மிகவும் குறைந்து விட்டது. சராசரி மனிதன் மரத்துப் போய் விடான். குறைந்த பட்டம் நாம் பொங்கத் தகுதியான சிறுமைகளைத் தேர்தல் வரையாவது மறக்காது இருக்க வேண்டும்.
நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இயக்கம்
மேலே அறிய »எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
Phone: +91 4364 271190
Email: info@kaani.org