தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

விசும்பின் துளி - 6

நிலமும் பொழுதும் - பாமயன்

உலகின் எகிப்து, சுமேரியா, சீனா, சிந்துத் சமவெளி என்று பல்வேறு பண்டைய நாகரிகங்கள் உலகெங்கிலும் கண்டறியப்பட்டுள்ளன. மிக நெடிய வரலாற்றைக் கொண்ட பண்டைய எகிப்து நாகரிகம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. இவர்களது வாழ்க்கை பெரிதும் சடங்குகளையும் வழிபாடுகளையும் அடிப்படையாகக் கொண்டது. அதாவது இறப்பு, இறப்பிற்குப் பின்னும் வாழ்வு என்ற நம்பிக்கை இவர்களது வாழ்வியலைத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் பிரமிடுகள் எனப்படும் கூர்ங்கோட்டங்களை உருவாக்கி னார்கள். இங்கு கடவுளுக்கும் 'ஃபாரோ' அரசனுக்கும் வேறுபாடு கிடையாது. கடவுளுக்குக் கொடுக்கும் மதிப்பு மன்னனுக்கும் உண்டு. தமிழில் கோயில் என்பதும் இறை என்பதும் மன்னனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் நெருக்கத்தை உணர்த்துவதை நாம் அறிவோம். தமிழில் உள்ள குறில் நெடில்போல பண்டை எகிப்தியர் எழுத்துமுறையில் குறில் நெடில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (vulture - short A, as in cat; forearm - long A, as in table) இதேபோல சுமேரிய மக்கள் எகிப்திய மரபில் இருந்து மாறுபட்டிருந்தாலும் அவர்களது வாழ்க்கை என்பதும் சமயச் சடங்குகளின் அடிப்படையயில் ஆனதுதான். இம்மக்கள் தங்கள் அரசர்களை எகிப்தியர்களைப்போல கடவுளாகப் பார்க்காமல் கடவுளின் வழித்தோன்றல்களாகப் பார்த்தனர். இவர்கள் இந்த உலகின் தோற்றமானது 'மார்டுக்' என்ற கடவுளால் ஆக்கப்பட்டது (Enuma Elish) என்றும் வெள்ளம் பெருக்கு ஒன்றில் இருந்து படைக்கப்பட்டதாகவும் புரிந்து கொண்டனர். சிந்து நாகரிகமோ தெள்ளத் தெளிவாக ஒரு பூசாரியே அரசனாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. சடங்குகள் இந்தச் சமூகத்தை இயக்கி வந்தன. கிரேக்கச் சிந்தனை மரபு பெரிதும் தருக்கம் எனப்படும் ஏரண முறையை (logic) அடிப்படையாகக் கொண்டு உருவானது. பண்டைய உலகத்தின் சிந்தனை மரபுகள் யாவும் சமயம் அல்லது சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்தபோது தமிழ்ச் சிந்தனை மரபு இயற்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிந்தனை மரபை உருவாக்கிக் கொண்டுள்ளது. இதற்கான காரணம், தமிழகம் அமைந்துள்ள புவியில் அமைப்பும் அங்கு தோன்றி வளர்ந்துள்ள சூழல் அமைப்புமே. நிலநடுக்கோட்டுக்கு அருகே அமைந்துள்ள பகுதிகளின் வளமை அதன் பின்புலத்தின் தோன்றிய பண்பாடு, மொழி, அறிவு போன்றவை அவற்றுக்கே உரிய தனித்தன்மையைக் கொண்டிருக்கின்றன. பண்டைத் தமிழகம் பல தெய்வ வழிபாட்டு முறையைக் கொண்டிருந்தது என்பதற்கு தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியம் வரையான சான்றுகள் உள்ளன. ஆனால் அதே சமயம் தமிழ்ச்சிந்தனை மரபு தனித்தன்மை கொண்ட ஒரு சமயம்சாரா சிந்தனையையும் கொண்டது. அதாவது உலகின் தோற்றம், வாழ்க்கையின் போக்கு அதன் தேவை போன்றவை இயற்கையின் இயல்பான போக்கில் இருந்து உருவானவை என்று தமிழ்ச்சிந்தனை மரபு கருதியது. உலகம் தோன்றிய முறையை ஐம்பூதங்களின் இயல்பான சேர்க்கையினால் உலகம் தோன்றியதாகக் கருதினார்கள். 'நிலம் தீ நீர் வளி விசும்பாடைந்தும் கலந்த மயக்கம் உலகம்' (தொல்: பொரு: 635) இதே செய்தியை புறநானூறு தெளிவாக்குகிறது. “மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை”

புறநானூறு இந்த ஐம்பூத இணைவை அடுத்ததாக உயிரையும் மெய்யையும் வகுத்தனர். அதன் பின்னர் அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். இந்த முறையில் இன்றைய அறிவியல் முறைமைக்குச் சற்றும் குறைவிலாது தமது சிந்தனை மரபைப் கட்டி எழுப்பிக் கொண்டு வந்தனர். தெய்வம் பற்றிய தமது கருத்தாக்கத்திலும் ஒரு தனித்தன்மையை அவர்கள் கொண்டிருந்தனர். தெய்வம் என்பது கருப்பொருளில் ஒன்று, உணவு, மரம், விலங்குகள் போன்றவற்றில் ஒன்றாக இருக்கும் என்று இலக்கணப்படத்திக் கொண்டனர். மிக நீண்ட நாட்களுப் பின்னர் வந்த பழங்கதையாடல்கள் அதன் வழியான தொன்மங்கள் இவற்றுடன் மயங்கிய சமயம் சார்ந்த மெய்யியல் என்பது தமிழர்களுக்கு மிகப் பின்னரே உருவானது. தமிழர்களின் பண்டைய தனித்த இயற்கைசார்ந்த சமயம்சாராத ஒரு சார்பிலிக் (secular) கோட்பாடாக திணையியல் கோட்பாடு இலங்கியது. இந்த அடிப்படையில் முதற்பொருளாக நிலத்தையும் பொழுதையும் தொல்காப்பியம் பதிவு செய்கிறது. 'முதலெனப்படுவது நிலம்பொழுதிரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே' (தொல்: பொரு: 14) இது தொல்காப்பியருக்கு முன்பே இடம் பெற்றுவிட்ட ஒரு கருத்து. இதை அவர் பதிவு செய்கிறார். அதை அவர் மனச்சான்றோடு 'மொழிப' என்றும் குறிக்கின்றார். ஒரு சமூகத்தின் முதற்பொருளாக கடவுள் அல்லவா இருக்க வேண்டும்? தமிழ் மரபு நிலத்தையும் பொழுதையும் அதாவது வெளியையும், காலத்தையும் முதன்மைப்படுத்துகிறதே. ஏன் இதை நமது தமிழ்ப் படிப்பாளிகள் உலகம் ஆய்வு செய்யவில்லை. நிலத்தை அகம் புறம் என்ற தளத்தில் வைத்துப் பார்த்தால், நிலமானது தன்மை முன்னிலை படர்க்கை என்ற அகத்தளத்தில் அமைந்தது. 'செலவினும் வரவினும் தரவினும் கொடையினும் நிலைபெறத் தோன்றும் அந்நாற்சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூவிடத்தும் உரிய என்ப' (தொல்: சொல்:28) புறத்தளத்தில் நிலத்தை முதற்பொருளாகக் கையாளும் தொல்காப்பியர் அவற்றின் இருப்பிற்கேற்ப நானிலங்களாகப் பிரித்தார். 'முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’ (தொல்:பொரு: 4) அதன் பின்னர் அஃது ஐவகை நிலமாக அறியப்பட்டது. நிலமானது மிகவும் திட்டமானது, கண்ணால் வெளிப்படையாகக் காணக் கூடியது, தொட்டு உணரக் கூடியது. நிலம் எனப்படும் மண் அதனோடு உறவு கொள்ளும் பிற உயிருள்ள உயிரற்றனவற்றின் உறவால் தனக்கான தகவமைமை ஏற்படுத்துகிறது. 'மண்திணிந்த நிலனும்' என்று புறநானூறு கூறுவதை இங்கு கவனிக்க வேண்டும். மண்ணுக்கும் நீருக்கும் உள்ள உறவு, மண்ணுக்கும் காற்றுக்கும் உள்ள உறவு, மண்ணுக்கும் வெப்பத்திற்கும் உள்ள உறவு என்பதாடு அல்லாமல் மண்ணுக்கும் மரம், விலங்குகள் என்று பல உயிரினங்களுக்கும் உள்ள உறவுகள் வளர்ந்து வளர்ந்து ஒரு கெழுமைப்பாடு (complexity) ஏற்பட்டுவிடுகிறது.

இதனால் அந்த அந்த நிலத்திற்கேற்ற தனித்தன்மை உருவாகிறது. அதன் பயனாக ஒழுகலாறுகளிலும் தனித்தன்மை வந்துவிடுகிறது. இந்த இயங்கியல் தன்மை பல்வேறு புதிய புதிய உயிரினங்கள் முதலாக சிந்தனைவரையாக எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்திவிடுகிறது. இதை பின்வரும் ஒரு படத்தின் வாயிலாக விளக்க முடியும். பொழுது எனப்படும் காலம் நிலத்தைவிட கூடுதலான நுட்பத் தன்மை கொண்டுள்ளது. காலத்தை இரண்டாக அதாவது பெரும்பொழுது, சிறுபொழுது என்று வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். பெரும்பொழுது என்பது பருவங்களையும், சிறு பொழுது, நாள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அதை வேறுமுறையில் சொல்வதானால் கதிரவனை பூவுலகம் சுற்றுவதால் பெரும்பொழுதும் (பருவங்கள்) தன்னைச் தானே சுற்றுவதால் சிறுபொழுதும் (இரவு-பகல் என்ற நேரம்) ஏற்படுகின்றன. இந்த நிலம்-பொழுது-ஒழுகலாறு என்ற இணைப்பினை 'திணை' என்று தமிழச் சிந்தனை மரபு கூறுகிறது. வாழும் இடம் என்ற பொருளையும், ஒழுகலாறு என்ற பொருளையும் கொண்ட திணை (Eco), அதன் பயனாக உருவாகிய சிந்தனை திணையியல் இன்று மிக இன்றியமையாத இடத்தைக் கொண்டு விளங்குகிறது.

முதற்பொருளை அடுத்து கருப்பொருள் உரிப்பொருள் என்ற மூன்றின் அடிப்படையில் திணை அமைகிறது. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களாக இவை அமையும். முதற்பொருளின் பாற்பட்டு கருப்பொருளும் இந்த இரண்டின் கூட்டுறவால் உரிப்பொருளும் அமைகின்றன. இந்தத் திணையியல் கோட்பாடு இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் உள்ள உறவை மேம்படுத்துகிறது. இன்றைய அறிவுலகம் பார்க்கின்ற இதை இப்போது வியந்து போன்றுகின்றது. திணையியல் (ecology) என்ற கருத்தாக்கம் இலக்கிய வகைபாடு என்ற அளவிலேயே நமது மரபுசார்ந்த கல்வியியல் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு விரிந்த பார்வையுடன் கூடிய மெய்யியல் என்பதைக் காணத் தவறிவிட்டது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org