தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தற்சார்பு வாழ்வியல் - 1

சேவை எனப்படுவது யாதெனின் - சாட்சி

நம்மில் பலருக்கும் மனித இனத்தைப் பற்றிய அக்கறையும், அதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமும் உண்டு. ஆனால் என்ன செய்வது என்ற தெளிவு நம்மில் மிகச் சிலருக்கே இருக்கிறது. உண்மையான சேவை என்பது என்ன? நம் அளவில் நம்மால் என்ன செய்ய இயலும்? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். இதற்கு முதலில் நாம் தற்போதுள்ள சமூக, பொருளாதார சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மால் என்ன செய்ய இயலுமோ அதைச் செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் தாக்கத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாகாது. அது மிகுந்த மன உளைச்சலை உருவாக்கிக் கடும் மனக்கசப்பிலும், விரக்தியிலும் கொண்டு போய் விட்டு விடும்.

தற்கால மானுடத்தைப் பார்க்கும் போது, உலகெங்கும், இன, நிற, மத. மொழி வேற்றுமை இன்றி இரண்டே சாதிகள் இருப்பதைக் காணலாம். ஒன்று சுரண்டும் இனம், இன்னொன்று சுரண்டப்படும் இனம். வரலாற்றில் கொடுங்கோல் மன்னர்களும் அவர்களின் அடிவருடிகளும் சுரண்டும் இனமாய் இருந்திருக்கிறார்கள். பெரிதாய்ப் புகழப்படும் இராசராச சோழனின் ஆட்சியில் நில வரிகள் விளைச்சலில் 16% வரை இருந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. எல்லாப் பண்டை நாகரிகங்களிலும் ஆண்டான் - அடிமை இனங்களும், ஏழை - பணக்காரன் வித்தியாசமும் இருந்துள்ளன. இவ்விரு சாதிகளும் மனித நாகரிகத்திற்கும் முற்பட்டவை என்று சற்று உற்று நோக்கினால் புலனாகும். “மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியில்லை” என்று பாரதி சுதந்திர இந்தியாவை உருவகிக்கிறான் (ஆனால், இனத்தாலும், நிறத்தாலும் மட்டுமே ஆங்கிலேயரிடமிருந்து மாறுபட்ட வேறு ஒரு சுரண்டும் கூட்டத்தை அல்லவோ நாம் வளர்த்து விட்டோம்!). மக்கள் ஆட்சி என்ற பெயரில், அரசியல், வலியோர் மட்டுமே ஆடக் கூடிய களமாக மாறி விட்டது. நல்லவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறார்கள். [நாட்டில் உள்ள இவ்வளவு மக்கள் சபை, மாநில சபை உறுப்பினர்களில் எவ்வளவு பேரை “இவர் சிறந்த சேவை செய்தவர், தன்னலம் இல்லாதவர்” என்று விரல் விட்டு எண்ண முடியும்?] தேர்தலில் வெற்றி பெற மிகுந்த பணம் தேவைப்படுவதால், பெரும் வியாபார நிறுவனங்கள், அரசியல் கட்சிகளை எளிதாகத் தம் கைக்குள் போட்டுக் கொள்ள இயல்கிறது.

அதிக பட்சமாக சுரண்டும் இனத்தில் பணக்காரர்களும், பதவியில் இருப்போரும் இருக்கிறார்கள். சுரண்டும் இனத்திற்குக் கைக்கூலிகளாய் இருப்பதை நாம் நல்ல வேலை என்கிறோம். இச்சூழலில், ஒரு சராசரி மனிதனால் என்ன செய்ய இயலும்? தனி மனிதனால் என்ன மாற்றம் ஏற்படுத்த இயலும்? அல்லது விதியை நொந்தபடி ஆட்டு மந்தையுடன் போவதுதான் வழியா? மையப்படுத்தப்பட்ட இச்சமூகப் பொருளாதார வாழ்முறையில், வேலைக்குப் போய் சம்பளம் வாங்குவதும், அச்சம்பளத்தைக் கொண்டு சந்தையில் நமக்குத் தேவையான வற்றை நுகர்வதும்தான் நமக்குத் தெரிந்த வாழ்க்கை. ஆணாய் இருந்தால் பணக்காரன் ஆவதும், பெண்ணாய் இருந்தால் பணக்கார னுக்கு மனைவி ஆவதும் வாழ்க்கையின் வெற்றியாகிறது. இதை ஒரு குதிரை வண்டியுடன் ஒப்பிடலாம்.

நாம் செல்ல வேண்டிய ஊருக்கு நடந்து போவது கடினமாதலால் குதிரை வண்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் ஏறி அமர்ந்து விட்டால் பின் அது நம்மை இழுத்துக் கொண்டு போய் விடும். எத்தனை பேர் இருக்கிறோம்? எத்தனை குதிரை வண்டிகள் உள்ளன? எல்லோருக்கும் வண்டியில் இடம் இருக்கிறதா? குதிரைகளால் தொடர்ந்து நம்மை இழுத்துக் கொண்டு போக முடியுமா? என்பன எல்லாம் நமக்குத் தேவையற்ற கவலைகள்! முண்டியடித்து ஏறி நுழைந்துவிட வேண்டியது. ‘‘சரி ஏறி விட்டோமே! இனி நிம்மதியாய் இருப்போமா? என்றால் அதுவும் இல்லை. உட்கார எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும். உட்கார்ந்தாலோ, ‘‘கொஞ்சம் கால் நீட்டிக் கொண்டால் தேவலாம்’’ போல இருக்கிறது. பின்னர் படுக்க இடம் வேண்டும். அந்த இடம் நம் குடும்பம், பிள்ளை குட்டிகள், உற்றார் உறவினர் எல்லருக்கும் கிடைக்க வேண்டும். அது மட்டும் போதாது ‘‘நான் பிடித்த இடம் சாகும் வரை எனக்கு வேண்டும், அதன்பின் என் பையனுக்கு, பேரனுக்கு என்று எல்லா இடமும் எனக்கே வேண்டும், என்னைச் சுற்றி உள்ளவர் எல்லாரையும் விட எனக்கு அதிக இடம் வேண்டும்’’...!

இப்போது குதிரையைச் சற்று நோக்குவோம். புவியிலுள்ள இயற்கை வளங்களும், நீர், நிலம், காற்று போன்ற வாழ்வாதாரங்களும், ஆற்றல் (சக்தி) ஆதாரங்களும், பிற கனிம வளங்களும், தாவர, விலங்கு உயிர்ப் பெருக்கங்களும் எல்லாம் மனித இனத்தை இழுத்துக் கொண்டு போகும் குதிரைகள். அவற்றின் முதுகில் சவாரி செய்து செய்துதான், நாம் நடக்காமல் ஊர் போய்ச் சேர்கிறோம். வலுத்தவர்கள் எல்லாம் குதிரை வண்டியில் மிகுந்த இடங்களை வளைத்துப் போட்டு விட்டதாலும், மிக வலுத்தவர்கள் சொந்தமாய்க் குதிரைகளை வாங்கி இருப்பு வைப்பதாலும், சராசரி மக்களுக்கு என்று குறைவான குதிரை வண்டிகளே மிஞ்சுகின்றன. அவற்றில் ஏகப்பட்ட நெரிசல் இருப்பதால் குதிரை பெருமூச்சு விட்டு, எலும்பெடுத்து, நுரை தள்ளிக் கொண்டிருக்கிறது. எனினும் நடக்க முடியும் என்பதையே மறந்து விட்ட நாம், முண்டியடித்து வண்டியில் ஏறுகிறோம். வண்டியில் ஏறியதும், எல்லா நல்லவர்களும், குதிரை படும்பாட்டைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கிறோம்; ‘குதிரையைக் காப்பாற்ற என்னவென்ன வழிகள் இருக்கிறது’ என்று கருத்தரங்குகள் நடத்துகிறோம்; சற்றுத் துணிவுள்ளவர்கள், ‘கொழுத்த செல்வந்தர்களுக்கு இவ்வளவு குதிரைகள் ஏன்?’ என்று புரட்சி செய்கிறோம்; ‘பொதுவுடைமை தேவை’ என்கிறோம்.

வேறு சில நல்லவர்கள், ‘கடவுளை நம்புங்கள்! அவர் குதிரையையும் நம்மையும் காப்பாற்றுவார்’ என்று பக்தி மார்க்கத்தையும் அவரவர் தெய்வங்களையும் பரப்புகின்றனர். ‘நீ கருப்பு சாமியைக் காட்டுகிறாய், என் சாமி வெள்ளை’ என்று இந்நல்லவர்களில் ஒருவொருக்கொருவர் வண்டிக்குள்ளேயே சண்டை போட்டு மாய்கின்றனர். வேறு நல்லவர்கள், 'செயல் ஒன்றுதான் சேவை; மற்றெல்லாம் வீண்' என்று குதிரையின் புண்களுக்கு மருந்து வைப்பதும், அதற்கு வலிக்காமல் இருக்க களிம்பு தடவி விசிறி விடுவதும் எல்லாம் செய்கின்றனர். மனசாட்சி உறுத்தலாலோ அல்லது எல்லோரும் தன்னைப் பற்றிப் பெருமையாய் எண்ண வேண்டும் என்றோ பல செல்வந்தர்கள், குதிரைகளுக்கு அன்னதானம், நெரிசலில் சிக்கி அடி பட்டோருக்கு இலவச சிகிச்சை முகாம் எல்லாம் நடத்துகிறார்கள். இதற்கு வட்ட நாற்காலி, சதுர மேசை போன்ற பல அமைப்புகள் ஏற்படுத்தி அவரவர் கடையை விரித்துக் கொள்ளுகிறார்கள். ஆனால், இவ்வளவும் செய்யும் நம்மில் ஒருவரேனும், “அந்தக் குதிரை பாவமப்பா வண்டியில் இருந்து இறங்கி நடந்து போவோமே” என்று எண்ணுவதில்லை. அது முடியாவிடினும், 'எனக்கு நிறைய இடம் இருக்கிறது; எனக்கிது போதும் மற்றவர்கள் அமர்ந்து கொள்ளுங்கள்' என்று சொல்லத் தயாரில்லை. மனித இனத்தையும் நம் புவியையும் பீடித்துள்ள மிகப் பெரிய பீடை இந்த நுகர்ச்சிதான். “அளவாய் நுகரும் அருமைப் பண்பும்” என்று தாளாண்மையில் கவிஞர் செல்வமணி எழுதியிருந்தார். அதுதான் உலகிற்கு நாம் செய்யும் மிகப் பெரிய சேவை. காந்தியும் “எல்லாருடைய தேவைக்கும் நம்மிடம் உள்ளது; ஆனால் எவருடைய பேராசைக்கும்தான் எதுவும் இல்லை” என்றார் (Earth provides enough to satisfy every man’s need, but not any man’s greed).

இந்த இடத்தில் நாம் சூழல்சுவடு (ecological footprint) என்ற முக்கியமான ஒரு கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவு, அதன் இயல்பு, அது பயணிக்கும் தூரம், உடை, வீடு, நிர்வகிக்கும் முறை, வருட மின்சக்தி உபயோகம், போக்குவரத்துக்கு நாம் செலவழிக்கும் பெட்ரோல், டீசல் போன்ற பலவற்றையும் கூட்டி, நம் தேவைகளை எல்லாம் தயாரிக்கத் தேவைப்படும் மொத்த நிலப் பரப்புதான் நம் சூழல்சுவடு. இது பொதுவாக எக்டேர் அளவில் கணக்கிடப்படும். இது ஒரு உத்தேசமான கணக்கு ஆனாலும், நாம் எந்த அளவில் இருக்கிறோம் என்று அறிய உதவியாய் இருக்கும். 2007 கணக்கீட்டின்படி அரபு நாடுகள் நபர் ஒன்றுக்குச் சராசரியாக 10 எக்டேர் நிலமும், டென்மார்க், பெல்ஜியம், அமெரிக்கா ஆகியவை 8 எக்டேர் நிலமும் தேவைப்படும் வாழ்முறையில் இருக்கின்றன. இந்தியாவில் 2007ல் நபர் ஒன்றுக்குச் சராசரியாக 0.91 எக்டேர் நிலம் தேவை. (இது 5 வருடங்களில் மாறியிருக்கும். ஆனால் பெரும்பாலான ஏழைகள் எந்தச் சூழல்சுவடுமே பதிக்காது இருப்பதால்தான் சராசரி அளவு நம் நகர வாழ்முறையின் அசிங்கத்தை மறைத்து விடுகிறது). நாம் இந்தப் புவிக்கும், மனித இனத்திற்கும் செய்யும் மிகப் பெரிய சேவை நம்முடைய சூழல்சுவட்டைக் குறைப்பதுதான். குதிரை வண்டியில் இருந்து இறங்குவது என்பதும் இதுதான். வண்டியில் இருந்து இறங்கி நடந்து போக முயற்சிப்பது எல்லாரும் முயற்சிக்கக் கூடிய செயல். இதைத்தான் நாம் தற்சார்பு வாழ்வியல் என்கிறோம். இதை தனியே முயற்சிக்கத் துணிவில்லாவிடில், நாம் நெரிசல் அதிகமற்ற, ஆரோக்கியமான, சொந்தக் குதிரையில் சவாரி செய்யலாம். நமக்கென்று ஒரு சிறு சமூகத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கலாம். இதைத்தான் ‘கிராம சுயராச்சியம்’ என்று காந்தி கூறினார். தென்னாப்பிரிக்காவில், இந்தியர்களுக்கான சுதந்திரப் போராட்டத்தின் போது, ‘டால்ஸ்டாய் பண்ணை’ என்று ஒரு தற்சார்பான சமூகத்தை காந்தி உருவாக்கினார். உணவு, வீடு, கல்வி, மருத்துவம் போன்ற அனைத்தையும் அவர்கள் தற்சார்பாகவே நிறைவு செய்து கொண்டனர். 'தென்னப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்' என்ற தன் நூலில் இப்பண்ணையின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி அவர் அதிகமாக எழுதி உள்ளார். இப்பண்ணை நடத்திய போது தாங்கள் பெற்ற ஆன்ம சுத்தியும், தவ வலிமையுமே தென்னாப்பிரிக்க சத்தியாக் கிரகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

தற்சார்பைப் பற்றிப் பேசும் பொழுது ‘தோரோவைப்’ பற்றிப் பேசாமல் இருக்க இயலாது. 1817ல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்த தோரோ (Henri David Thoreau - 1817-1862), தற்சார்பு வாழ்வியலைத் தேடித் தன் 28ஆம் வயதில் (1845) வால்டன் என்னும் குளக்கரையில் தானே தன் கையால் கட்டிய ஒரு குடிசை வீட்டில் 2 வருடம் 2 மாதம் தங்கி, எந்தக் கொள்முதலோ, பண்டமாற்றோ இன்றித் தன் உழைப்பால் மட்டுமே தன் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள இயலுமா என்று ஆராய்ந்தார். இவ்வனுபவங்களைத் தொகுத்து வால்டன் (Walden or Life in the woods) என்னும் புத்தகமாக வெளியிட்டார். இன்றளவும் தற்சார்பு வாழ்வியலைப் பற்றிய அடிப்படை நூலாக அது கருதப்படுகிறது.

இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்!
அதற்கு முன் வள்ளுவருக்கு ஒரு வணக்கத்துடன் ஒரு புதுக்குறளுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்.

‘சேவை எனப்படுவது யாதெனின்,
யாதொன்றும் தேவை இலாத நடை’

(நடை = வாழ்முறை; எதுவும் நுகராத வாழ்முறையே மிகப்பெரிய சேவை)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org