தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பாராளுமன்ற வேளாண் நிலைக்குழு அறிக்கை

நமது பாராளுமன்ற வேளாண் நிலைக்குழு 500 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மரபீனி மாற்று பயிர்கள் தேவை இல்லை என்பதை அழுத்தமாக கூறியதுடன் பல முற்போக்கான குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது, சீரிய ஆய்விற்குப்பின். பாசுதேப் ஆச்சார்யாவின் தலைமையில் 31 பேர் கொண்ட இந்த குழுவில் தமிழ்நாட்டிலிருந்து மூவர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட ஆவணங்களையும், நூற்றுக்கணக்கான பத்திரங்களையும் ஆராய்ந்து, 56 சாட்சிகளை விசாரித்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்! அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய இந்த குழுவின் அறிக்கையில் திருத்தமோ அபிப்பிராய பேதமோ இல்லாமல் எல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு அனைத்து சிபாரிசுகளையும் ஒப்புக்கொண்டுள்ளனர். மிகவும் பிரதானமாக முக்கியமாக கூறியிருக்கும் செய்தி: ‘மரபீனி மாற்று பயிர்கள் இந்தியாவிற்கு தேவை இல்லை!’

ஆகஸ்ட் 9 -ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் இருந்து சில முக்கிய அம்சங்கள்:

பி.ட்டி கத்திரி நிலுவையை ஆரம்பம் முதல் சீராக சோதித்து, நடுநிலை ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலாளர்களை வைத்து ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும். பாராளுமன்ற வேளாண் நிலைக்குழு அறிக்கை GEAC என்னும் மரபீனிப் பொறியியல் மதிப்பீட்டு ஆணையம் மற்றும் RCGM போன்ற ஒழுங்காற்று ஆணையங்களின் ஒழுங்குபாடு கவனிக்கப்பட வேண்டும். சீரமைக்கப்பட வேண்டும். இந்த ஒழுங்காற்று ஆணையங்களின் செயல்பாட்டை சீரமைக்கவும் ‘மார்க்கர்’ மரபீனிக்களை திணிக்கும் இயற்கைக்கு மாறான தொழில்நுட்பங்களை உபயோகிக்கும் நவீன அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயம் இது போன்ற அரைகுறை ஆணையங்களால் முடிவு செய்யப்படக்கூடாது. முரண்பாடுகள் நிறைந்த BRAI என்னும் உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்று ஆணையம் என்னும் சட்டம் மிகவும் குறுகிய நோக்குடன் இருப்பதால் அதனை கைவிட்டு உயிரிப் பன்மயத்தை கடைபிடிக்கும் உயிரிப் பாதுகாப்பு சட்டம் வர வேண்டும் (பல வெளி நாடுகளின் சட்டங்களை பார்த்ததில் நார்வே நாட்டின் சட்டமே மிக சிறந்தாக இருந்தது. அதனை பின்பற்றி நாம் வரைவது நல்லது)

இந்த மரபீனி மற்றும் உயிரி தொழில்நுட்பத்தினால் ஒரு சில பன்னாட்டு கம்பனிகள் மட்டுமே நன்மை அடையும். அவர்கள் கூறுவது போல் இவை நம் உணவுபாதுகாப்பிற்கு அல்ல, அவர்களது மேம்பாட்டிற்கு மட்டுமே. இது நமது இறையாண்மை மற்றும் நம் நாட்டின் சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே உலுக்கும் விஷயம்.

பொருளடக்கம் மற்றும் இலச்சினையிடல்(labeling):

மரபீனி பொருட்கள் முறையாக தெரிவிக்கப்பட வேண்டும், எல்லா பொருட்களின் மீதும். இதனை சரியான ஒழுங்காற்று முறையின் வாயிலாக கொண்டு வருவது நுகர்வோரின் தேர்வுக்கு அவசியம்.

மரபீனி மாற்று தொழில்நுட்பம் உணவு பாதுகாப்பிற்கு மற்றும் நிறைவிற்கு என்றும உற்பத்தியை பெருக்க என்றும் சொல்லுவது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. இந்த தொழில் நுட்பம் இல்லாமலேயே நமது மதிற்பிற்குரிய உழவர் பெருமக்கள் 1950-களில் வெறும் 50 மில்லியன் டன்களாக இருந்த உற்பத்தியை 2010 -2011 இல் 241 மில்லியன் டன்களாக சாதனை படைத்துள்ளனர்.

உயிரிப் பன்மயம் என்பது அழிந்தே போகும் என்பது தெளிவாக பி.ட்டி பருத்தி வந்த பின் இன்று விளங்குகிறது. நமது பாரம்பரிய பருத்தி மற்றும் நாட்டு விதைகள் என்பது இன்று அறவே இல்லாமல் போய் விட்டன.

பி.ட்டி பருத்தியால் பல நன்மைகள், மிக அற்புத விளைச்சல், உழவர்களுக்கு நன்மை என்று இந்த விதை கம்பனிகள் விளம்பரப்படுத் தியது எல்லாம் பொய். பல மாநிலங்களில் பி.ட்டி விளைவிக்கும் பகுதிகளை சென்று கண்டதில், விவசாயிகளுக்கு பிரச்சினைகளே மேலோங்கி இருந்தன. இந்த விளைச்சல், லாபம் என்பதெல்லாம் பொய் என்பதே நிரூபணமாயிற்று. மகாராஷ்டிரம் போன்ற சில மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலைகள் இந்த பி.ட்டி விளைவிக்கும் பகுதிகளிலேயே மிகுந்து இருந்தன.

ஆக இந்த தொழில்நுட்பத்தை அவசரமாக கொண்டு வர வேண்டியது இல்லை. சொல்லப்போனால் திறந்த பொருளாதாரத் தினால், புதிய பொருளாதாரக் கொள்கை களினால், அமெரிக்க மற்றும் உலக வங்கியின் அழுத்தத்தால் மட்டுமே இதனை நமது அரசாங்கம் கொண்டு வர முனைகிறது. மருந்து, கனிம சுரங்கங்கள், போன்ற துறைகளை திறந்ததனால் நாம் கண்ட இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசினை மனதில் கொண்டு செயல் பட வேண்டியது முக்கியம். இவற்றால் சாமானிய மனிதனுக்கு உண்டான தொல்லைகள் ஏராளம். பல அறிவியலாளர்களும் வெளி நாட்டு அறிஞர்களும் இந்த மரபீனி மாற்றத்தினால் உண்டாகும் கேடுகளை மிக தெளிவாகா எழுதியும், பல ஆய்வுகளை வெளியிட்டும் உள்ளனர். அவற்றைக் காணும்போது இதற்கு இப்பொழுது எந்த தேவையும் இல்லை என்பதே புரிகிறது.

ஆகையால் field trials என்னும் திறந்தவெளி களப் பரிசோதனைகளை உடனே கை விட வேண்டும். திறந்த வெளிகளில் இந்த மரபீனி மாற்று பயிர்களை சோதனை செய்வது மிகவும் அபாயகரமானது என்று நிரூபிக்கப் பட்டுள்ளதால் பரிசோதனை சாலைகளில் மட்டுமே செய்ய வேண்டும். மிகவும் முக்கியமான ஆனால் நமது ஊடகங்களால் ஓரம் கட்டப்பட்ட விஷயம் ஒன்று இதில் உள்ளது. இந்த குழு ஒரு மத்திய மந்திரி பி.ட்டி கத்திரி அனுமதிக்கப்பட வேண்டும் என்று GEAC என்னும் மரபீனி பொறியியல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு வெகுவாக அழுத்தம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர். இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாக இருந்தும் இதை பற்றி எதிர்க்கட்சிகளோ ஊடகங்களோ கண்டுகொள்ளதது ஒரு பெரும் குறையே. இருந்தும் இந்த முயற்சி ஒரு பெரும் முன்னேற்றமே. பி.ட்டி கத்தரி தற்காலிக நிறுத்ததிற்கு முன் நடந்த பொதுமக்களுடனான கலந்துரரையாடல் மற்றும் கலந்தாலோசனைக்கு பின் நடக்கும் ஒரு சிறப்பான முயற்சி ஆகும். செயலாற்றும் குடியாட்சியின் (functioning democracy ) அற்புத வெளிப்பாடுகள் இவை. இந்த முயற்சியையும், அதனை மேற்கொண்ட இந்த குழுவையும், அவர்களது சீரிய உழைப்பினையும் அதனை வெளிக் கொணர்ந்த ஊடகங்களையும் போற்றுவோமாக!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org