தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வேளாண் தொழில்நுட்பக் கட்டுரை

இயற்கை முறை மா சாகுபடி - சுந்தரராமன்

முக்கனிகளில் முதன்மையானது மாங்கனி. தமிழகத்திற்கே உரிய சிறப்பான பழமரம் இது. இதில் பல வகை உள்ளன. இராசபாளையம் சப்பட்டை, நீலம், ருமானி, காலப்பாடு, பெரியகுளம் 1 மற்றும் 2 (பி.கே.எம்) செந்தூரம் போன்றவையும் ஏற்றுமதித் தரமான அல்போன்சா, பங்கனபள்ளி போன்றவையும் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன. வடிகால் உள்ள செம்மண் நிலம் மா சாகுபடிக்கு ஏற்றது. அமில-கார அளவு 6.5 முதல் 8 வரை இருக்கலாம். ஆடி, ஆவணி முதல் மார்கழி மாதம் வரை நடவு செய்யலாம். நடவு செய்வதற்கு ஒட்டுக்கன்றுகளைத் தேர்வு செய்வது நல்லது. அப்போதுதான் விரைவில் பயன் கிட்டும்.

மூன்றுக்கு மூன்றுக்கு மூன்று என்ற முறையில் நீள அகல ஆழத்திற்கு குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எடுத்த மேல் மண்ணுடன் 10 கிலோ தொழுவுரம், 50 கிராம் என்ற அளவில் சூடோமோனஸ், டி.விரிடி ஆகியவற்றைக் கலந்து குழியை நிரப்ப வேண்டும். குழியின் நடுவில் கன்றை நட வேண்டும். குழியில் நீர் தேங்காதவாறு மண் அணைக்க வேண்டும். அரை அடி உயரத்திற்குத் தரையைவிட்டுத் தூக்கலாக கன்று இருக்க வேண்டும். சராசரியாக முப்பது அடி இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இடையே தழை ஊட்டத்தைப் பிடிக்கும் பயறு வகை மரங்களை நடவேண்டும். இதன் மூலம் மண் வளம் பெருகும். வசதி இருந்தால் ஊடு பயிரும் செய்யலாம். மா மரத்திற்கு நீர்த் தேவை குறைவு என்ற போதும் இளங்கன்றுகளாக இருக்கும் போது ஈரப்பதம் குறையாமல் கொடுத்துவர வேண்டும்.

இதற்கிடையே மழை நீர் அறுவடை செய்ய வரிசைகளுக்கு இடையில் 2 அடி அகலம் 1 அடி ஆழம் உள்ள வாணி (கால்வாய்போல) எடுத்து, அதில் வரும் மண்ணை ஒரு பக்கம் மட்டும் போட்டு கரை அமைத்தல் வேண்டும். வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்ச வசதி இருப்பின் கிளைரிசிடியா, அகத்தி, நொச்சி, கருவேப்பிலை, கொழுஞ்சி, எருக்கு, ஊமத்தை, பெரியாநங்கை, சிரியாநங்கை, ஆடாதொடா போன்றவற்றைக் கரையில் வளர்த்தல் வேண்டும். இவை நான்கு அடி உயரம் வளர்த்த பின்னர் இவற்றை வெட்டி வாய்க்காலில் போடுதல் வேண்டும்.

வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்ச வசதி இருப்பின் மாதம் ஒருமுறை பாசன நீரில் ஏக்கர் ஒன்றுக்கு பழக்காடி கரைசல் 100 லிட்டர், தொல்லுயிர் கரைசல் 100 லிட்டர், ஆவூட்டம் 10 முதல் 20 லிட்டர் அல்லது அடர் அமுதக்கலவை 20 முதல் 50 லிட்டர் அல்லது தேமோர், அல்லது சீயக்காய்மோர் 10 லிட்டர் என வரிசை முறையில் தொல்லுயிர் கரைசலில் கலந்து பாய்ச்சலாம்.

வாய்க்காலில் பாசனம் செய்ய வசதி இல்லாதவர்கள் நன்கு மழை பெய்யும்போது ஆண்டுக்கு 2 முறை அல்லது 3 முறை அவரவர் வசதிக்கு ஏற்ப ஏக்கர் ஒன்றுக்கு 1 டன் அடர் அமுதக்கலவை தயாரித்து வாய்க்காலில் இடலாம்.

அடர் அமுதக் கலவை தயாரிப்பு முறை:

நன்கு மக்கிய தொழுஉரம் அல்லது மண்புழு உரம் 800 கிலோ
சாம்பல் 200 கிலோ (மொத்தம் 1000 கிலோ)
தொல்லுயிர் கரைசல் 50 லிட்டர்
பழக்காடி 50 லிட்டர்
ஆவூட்டம் 100 லிட்டர்
சூடோமோனஸ் அரை கிகி
டிரைகோடெர்மாவிரிடி அரை கிகி
பெருக்கிய திறமி 3 லிட்டர் கலந்து அடர் அமுதக் கலவை மீது தெளித்து சீரான ஈரப்பதம் உண்டாக்கி வாய்க்காலில் இடலாம்.
சீரான வளர்ச்சி, பூச்சிநோய் தாக்குதல் கட்டுப்படுத்த வசதி உள்ளவைகள் மாதம் ஒருமுறை மற்றவர்கள் 2 அல்லது 3 மாதம் ஒருமுறை. ஆவூட்டம் 3 லிட்டர், மூலிகை பூச்சிவிரட்டி ஊறல் கரைசல் 10 லிட்டர், தொல்லுயிர் கரைசல் 200 லிட்டர், சூடோமோனஸ் அரை கிலோ, 67 லிட்டர் நீர் சேர்த்து மொத்தம் 100 லிட்டர் கரைசல் தயாரித்து தெளிக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு மேற்படி அளவில் கரைசல் தெளிக்கச் செய்யும் அளவை தீர்மானிப்பது அவரவர் வசதிக்கு ஏற்ப திட்டமிடவும்.மரம் பெரியதாக இருப்பதைப் பொருத்து தெளிக்க கரைசல் அளவும் கூடுதலாக பயன்படுத்த வேண்டும்.

பூக்கும் பருவம்

தேமோர் கரைசல் - 5 லிட்டர்
பூச்சிவிரட்டி கரைசல் - 10 லிட்டர்
சூடோமோனஸ் - 500 கிராம்
தொல்லுயிர் கரைசல் - 20 லிட்டர்
நீர் - 65 லிட்டர்
மொத்தம் - 100 லிட்டர் கரைசல் தயாரித்து ஏக்கர் ஒன்றுக்கு மரத்தின் வளர்ச்சியை பொருத்து மொத்த கரைசல் தேவையை தீர்மானித்துப் பயன்படுத்த வேண்டும்.
நன்கு வளர்ந்த மாந்தோப்புகளில் மாதம் ஒருமுறை ஏக்கருக்கு முட்டை ஒட்டுண்ணி, சப்பானிகம் 2 சி.சி, கைலோனிஸ் 2 சி.சி. வீதம் பயன்படுத்துவது மிக நல்லது. தொடர்ச்சியாக 3 அல்லது 4 வருடங்கள் பயன்படுத்தினால் நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள் நிரந்தரமாக வாழும் நிலை உருவாகும். அனுபவரீதியில் பின்னர் ஒட்டுண்ணி பயன்பாட்டை படிப்படியாக குறைக்கலாம்.
இலையைச் சேதம் செய்யும் புழுத் தாக்குதல் மிக அதிகம் இருக்கும் சமயங்களில் பிரகானிட் பூச்சி, ஏக்கர் ஒன்றுக்கு 5 முதல் 10 பாக்கெட் வீதம் 15 நாள் இடைவெளியில் 3 அல்லது 4 முறை பயன்படுத்தலாம். மேற்படி முட்டை ஒட்டுண்ணி தொடர்ச்சியாக பயன்படுத்தும் சூழலில் புழுத் தாக்குதல் கணிசமாக குறைந்துவிடும். இத்தகைய சூழலில் பிரகானிட் பயன்படுத்துவது குறையும். பிரகானிட் பூச்சி விலை கூடுதல் என்பதால் விவசாயிகள் முட்டை ஒட்டுண்ணி தொடர்ச்சியாக பயன்படுத்துவது பிரகானிட் பூச்சி வாங்கும் செலவை குறைக்க இயலும்.
மாந்தோப்பில் மேற்கூறிய கரைசல்களை தொடர்ச்சியாகத் தெளிக்க வந்தால் மாவிலுள்ள சிக்கலான பிரச்சனைகளான செதில்பூச்சி (இது மா இலைகளில் கருப்பாக ஒட்டிக் கொண்டிருக்கும்), இலைகளை தாக்கும் புழுக்கள், மாம்பழத்தை சேதமாக்கும் மாம்பழ வண்டு ஆகியவற்றை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

கவாத்து

பங்குனி - வைகாசி (ஏப்ரல் - சூன்) முடிய உள்ள காலங்களில் அவரவர் சூழலுக்கு ஏற்ப சிறிய பிஞ்சுகள் காய்கள் அனைத்தும் பறித்துவிட வேண்டும். இலைகளைப் பறித்து செடிச்சாறம் தயாரித்துக் கொள்ளலாம்.

தயாரிப்பு முறை:

மாம் பிஞ்சு - 5 கிலோ
தண்ணீர் - 5 லிட்டர்
பெருக்கிய திறமி - 250 மிலி
நாட்டுச் சக்கரை - 250 கிராம்
இவற்றைச் சேர்த்து ஏழு முதல் 10 நாள் வைத்திருந்து பின்னர் தெளிக்க வேண்டும். இதன் பின்னர் அடிமரத்தில் இருந்து மேல் நோக்கிப் பார்த்து வெயில்படாத குச்சிகள், கிளைகள் ஆகியவற்றை கவாத்து செய்துவிட வேண்டும். வெயில் நன்கு கிடைக்கக் கூடிய கிளைகளை வெட்டக் கூடாது. பெரிய கிளைகளை அகற்றும்போது காயம் பெரியதாக இருக்கும். இதன் மூலம் தண்டு துளைப்பான், பட்டைத் துளைப்பான் மற்றும் பல தீமை செய்யும் பூசனங்கள் ஊடுறுவ வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே அந்தப் பகுதியை பூச்சுக் கலவை கொண்டு பூசுவது சிறந்தது.

கலவை தயாரிப்பு:

கரையான் புற்று மண் - 1 கிலோ
சோற்றுக் கற்றாழை சோறு - 1 கிலோ
வெல்லம் - 250 கிராம்
சூடோமோனஸ் - 100 கிராம்
பவேரியா - 100 கிராம்
மெடாரைசியம் - 100 கிராம்
இத்துடன் செடிச்சாறத்தை பசைபோல் செய்யும் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலே சொன்னவற்றை நன்கு கலந்து பிசைந்து காயத்தில் பூசிவிட வேண்டும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org