தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உயிருள்ள தமிழ‌க ஆறு - ராம்கி

“வாழும் ஆறுகள், மடிந்த ஆறுகள்” என்ற தலைப்பில் பத்து பாகங்களைக் கொண்ட தொடர் விரிவுரை நிகழ்ச்சி 2011 டிசம்பர் 7 அன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் ஏழாம் பாகம் தமிழக, கேரள ஆறுகளைக் குறித்தது. அதில் மேம்பாட்டு ஆய்வுகளுக்கான சென்னைக் கழகம் (The Madars Institute of Development Studies) என்னும் அமைப்பைச் சேர்ந்த திரு சனகராசன் தமிழக ஆறுகளைக் குறித்த தன் கட்டுரையைப் படித்தார். “உயிருள்ள ஆற்றைத் தேடித் தமிழகத்தில் பயணிப்போம்” என்ற தலைப்பிட்ட அவருடைய கட்டுரையின் சாரம்.

பாலாற்றுப் படுகை

பாலாற்றுப் படுகை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட குளங்களும் ஏரிகளும் நிறைந்தது. இது தஞ்சைக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியமாகக் கருதப்படுகிறது. இப்போது இவ்விரண்டு களஞ்சியங்களுமே குதறப்பட்டுவிட்டன. மாசுபடுத்துதல், நிலத்தடி நீரை மிக அதிக அளவில் உறிஞ்சியெடுத்தல், குறைந்த நீர்வளத்தைப் போட்டி போட்டுக்கொண்டு நுகர்தல் ஆகியவற்றின் காரணமாக பாலாற்றுப் படுகையில் பெருஞ்சிக்கல் நேர்ந்துள்ளது. இப்பகுதி மிக அதிக அளவுக்கு நகரமய மாக்கப்பட்டுவிட்டது. ஊர்ப் புறங்களில் இருந்து தண்ணீரை உறிஞ்சி நகர்ப் புறங்களில் விற்பது ஊதியம் மிகுந்த தொழிலாகிவிட்டது. தோல் பதனிடுதல், சாயமிடுதல் ஆகிய தொழில்கள் மிக வேகமாகப் பெருகி இப்பகுதியின் பொருளா தாரத்தில் முதன்மையான பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள தோல் ஆலைகளில் முக்கால் பங்கு ஆலைகள் இப்பகுதியில் உள்ளன. இந்தியத் தோல் ஏற்றுமதியில் முப்பது விழுக்காடு இங்கிருந்து செல்கிறது. ஐயாயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் தொழிலாக அது விளங்குகிறது.

தோல் ஆலைகளுடைய நீர்த் தேவை அளவிலாதது. அவை சூழலைப் பெருமளவு மாசுபடுத்தும் தன்மையுடையன. நாளொன்றுக்கு 380 லட்சம் லிட்டர் கழிவுகளை வெளியேற்றுகின்றன. குரோமியம், சிறிதளவு சயனைட் உள்ளிட்ட பல திட நச்சுக் கழிவுகள் அதில் கலந்துள்ளன. தோல் பதனிடு தொழில் நகரங்களான ராணிப் பேட்டையிலும் வாணியம்பாடியிலும் சூழல் மிக மோசமான அளவுக்கு மாசுபட்டுள்ளது. இப்பகுதியில் விளைச்சல் வீழ்ச்சியடைந்துவிட்டதால் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1999 புள்ளிவிவரப்படி பாலாற்றுப் படுகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெல் விளைச்சல் எக்டேருக்கு 628 கிலோவும் பாதிக்கப்படாத பகுதிகளில் 7,118 கிலோவும் உள்ளன. கிணறுகள் பயன்படுத்தப்படாதிருத்தல், நிலத்தடி நீரிலும் மேலேயுள்ள நீரிலும் மாசுகள் நிறைந்திருத்தல், கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு, மிக மோசமான உடல்நலக் குறைபாடுகள் ஆகியவற்றை இப்பகுதி மக்கள் எதிர் கொண்டுள்ளனர். வேளாண் வேலை வாய்ப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவருவதால் பல்லாயிரக் கணக்கானோர் ஊர்ப் புறங்களில் இருந்து வெளியேறிவிட்டனர். பொதுக் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆலைகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டன. சூழல் மாசுபாட் டினைக் கண்காணித்தல், சூழல் சட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகிய இரண்டிலும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போதுமான கவனம் செலுத்துவதில்லை. உலக ஆறுகளில் மாசுகள் நிறைந்த பத்தினைக் குறித்த தகவலை நியூ யார்க் நகரில் உள்ள பிலாக் சுமித் கழகம் (The Blacksmith Institute,New York) 1996-ஆம் ஆண்டு வெளியிட்டது.

(அ) பாதிக்கப்பட்ட மக்கள் தொகை (35 லட்சத்துக்கும் அதிகம்),
(ஆ) நச்சுகளின் கடுமை அதிகமாக இருத்தல்,
(இ) குழந்தைகளின் நலனும் மேம்பாடும் பாதிக்கப்படுதல்,
(ஈ) ஆற்று நீர் எவ்வகைகளில் பாதிக்கப் பட்டது என்பது குறித்த சான்றுகள் கிடைத்தல்,
(உ) உடல்நலக் குறைபாடுகள் குறித்து போதுமான சான்றுகள் கிடைத்தல்
ஆகிய ஐந்து வரையறைகளின் அடிப்படை யில் உலக ஆறுகள் அளவிடப்பட்டன. உலகிலேயே மாசுகள் நிறைந்த அந்தப் பத்து ஆறுகளில் நம் பாலாறும் ஒன்று!

நொய்யல்

தமிழ்நாட்டின் நீராதாரத்தில் முதன்மைப் பங்கு வகிக்கும் காவிரியாறு தன் வழி நெடுகப் பல நகர்ப்புறக் கழிவுகளையும் ஆலை நச்சுகளையும் சுமந்து கடலுக்குச் செல்கிறது. நொய்யல் (காவிரியின் கிளையாறு) பாயும் பகுதி பன்னெடுங் காலமாகவே வறட்சி மிக்கது. அங்கு வாழும் மக்கள் நிலத்தடி நீர் வளத்தையே பெருமளவு நம்பியிருக்கிறார்கள். நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. பல இடங்களில் முற்றிலும் வறண்டுவிட்டது. கடந்த சில பத்தாண்டுகளில் மின் மோட்டார்கள் தொழில்நுட்பம் வளர்ந்ததற்கேற்ப நீர்ப் பயன்பாடும் வழங்கலும் (விநியோகம்) பெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளன. இப்பகுதியில் மழைப் பொழிவு பருவ கால மாற்றங்களை பெருமளவு சார்ந்தது. ஆகவே நிலத்தடி நீர்வளம் குறைந்து வருவதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

நொய்யல் பாசனப் பகுதியில் உள்ள திருப்பூரும் அதன் சுற்றுப் புறங்களும் நெசவு, பின்னலாடைத் தொழில்களில் அடைந்த வளர்ச்சி காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. சுமார் மூவாயிரம் பின்னலாடை ஆலைகளும் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட துணிகளுக்குச் சாயமிடும் ஆலைகளும் துவைக்கும் ஆலைகளும் இப்பகுதியில் இயங்குகின்றன. இவை நிலத்தடி நீரைப் பெருமளவு பயன்படுத்துவது மட்டுமன்றி, கழிவு நீரை நொய்யல் ஆற்றில் கலந்து விடுகின்றன. நாளொன்றுக்கு இந்த ஆலைகள் பத்துக் கோடி லிட்டர் நீரைப் பயன்படுத் துவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுக்கக் கழிவுகளைச் சுமக்கும் நொய்யல் ஆறு பார்ப்பதற்கு மிகவும் பாவமாகத் தோன்றுகிறது. ஒரத்துப்பாளையம் அணை நிறைந்து கழிவு நீர் வெளியேறியதால் பல ஊர்கள் மோசமாக பாதிக்கப்பட்டதை நாம் அறிவோம். ஒருமுறை காவிரியில் நீர் வரத்துக் குறைவாக இருந்தபோது பொதுப் பணித் துறை முன்னெச்சரிக்கை இன்றி ஒரத்துப்பாளையம் அணை மதகுகளைத் திறந்துவிட்டது! அதன் விளைவுகள் மிக மோசமானவையாக இருந்தன. பயிர்கள், மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள், மண் (நிலம்), நிலத்தடி நீர் ஆகிய அனைத்தும் பாதிக்கப்பட்டன. கழிவு கலந்த நீரைப் பருகியதால் பல நூற்றுக்கணக்கான விலங்குகள் இறந்துவிட்டன. இழப்பீடு கோரி பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால் அவற்றால் எந்தப் பலனும் இல்லை. கழிவுகளின் அடர்த்தியைக் குறைப்பதற்காக அந்த வறட்சிப் பருவத்தில் அரசு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு இருபதாயிரம் கன அடி அளவில் நீரைத் திறந்துவிடவேண்டிவந்தது.

சென்னை நகர ஆறு, கால்வாய்கள்

அடுத்ததாகச் சென்னை நகரில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியன குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம். ஒரு காலத்தில் தூய நீர் பாய்ந்த இவற்றில் இப்போது மாநகரக் கழிவுகளும் ஆலைக் கழிவுகளும் நிறைந்துள்ளன. இவற்றைத் தூய்மைப்படுத்து வதற்காக ஆயிரங்கோடி ரூபாய்களுக்கும் மேல் செலவிடப்பட்டும் அதனால் எந்தப் பலனும் இல்லை. சுமார் 750 சாய்க்கடை மற்றும் ஆலைக் கழிவுகளில் இருந்து நாள்தோறும் எழுபது கோடி லிட்டருக்கும் அதிகமாக தூய்மைப்படுத்தப் படாத கழிவு நீர் இந்த ஆறுகளில் விடப்படுகிறது. இவை இறுதியாக வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றன. கூவம் ஆறு முன்னொரு காலத்தில் நன்னீர் ஆதாரமாக இருந்தது. மீன் பிடித்தல், நீர் வழிப் போக்குவரத்து ஆகியன இந்த ஆற்றில் முந்தைய நிகழ்வுகள். இப்போது சுமார் 75 சிறிய குளங்களில் இருந்து பொங்கி வழியும் நீரை எடுத்துச் செல்லும் வடிகாலாகச் சுருங்கிவிட்டது. மொத்தம் 65 கி.மீ. நீளமுள்ள இந்த ஆறு சென்னை மாநகருக்குள் 18 கி.மீ. தொலைவு பயணிக்கிறது. நகரின் கட்டுக்கடங்கா வளர்ச்சியின் விளைவுகளை இந்த ஆறு அனுபவிக்கின்றது.

சென்னையில் பாயும் மூன்று ஆறு/கால்வாய்களில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது பக்கிங்காம் கால்வாய். சென்னை மாநகரக் குடிநீர் வடிகால் வாரியமும் தூய்மைப்படுத்தாத கழிவுநீரை இந்தக் கால்வாயில் கலந்துவிடுகிறது. சென்னை நகரின் வெள்ள வடிகாலாக இருந்த அடையாறு ஆற்றின் இப்போதைய நிலைமையும் மிக மோசமாகத் தான் உள்ளது. நகரக் கழிவுகளும் ஆலைக் கழிவுகளும் நிறைந்திருப்பதால் மழைக் காலங்களில் நேரும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. நம் நீராதாரங் களையும் பிற இயற்கை வளங்களையும் அழித்தொழிக்காமல் தொழில் வளர்ச்சி, நகர்ப்புறங்களின் வளர்ச்சி ஆகியனவற்றை அடைய முடியாதா? அனைத்து இன்னல் களுக்கும் தக்க மாற்றுகள் சந்தைப் பொருளாதாரத்தில் இருப்பதாகக் கூறும் பொருளாதாரவாதிகள் இவற்றுக்கு என்ன விடை சொல்லப் போகிறார்கள்? அரசாங்கங்கள் என்ன செய்கின்றன? ஒவ்வொரு இன்னலுக்கும் மக்கள் நீதிமன்றங்களை நாடவேண்டுமா? நம் நாட்டில் நிலவும் சனநாயக முறையில் இத்தகைய பெருந் தவறுகளைத் தவிர்க்க முடியாதா? அப்படியானால் நம் சனநாயக முறையைத் திருத்திக் கொள்ள முடியுமா? முடியுமெனில் அதற்கான வழிமுறைகள் என்ன?

மூலம்: http://www.indiawaterportal.org/post/28242

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org