தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம்

உணவும் மருந்தும் -தமிழில்: அமரந்தா

ஜே,சி,குமரப்பா தற்சார்புப் பொருளியலின் தந்தை, காந்தியச் சிந்தனையாளர் தமிழகம் தந்த நல் முத்து, இவர் நம்நாட்டின் தற்சார், அமெரிக்க-ஐரோப்பிய அடிமையாக்க எதிர்ப்பு பற்றி எழுதியும் ஆராயந்தும் தந்தவை ஏராளம்...

மனிதருக்கான சத்துக்களை அளிப்பதில் அடிப்படை உணவுக்கும் மருந்துக்கும் உள்ள வேறுபாட்டை மனிதர்கள் அறிவார்கள். அதிக அளவில் உண்ணப்படும் அடிப்படை உணவு மனித உடலுக்குத் தேவையான அடிப்படை சத்துக்களை ஏறத்தாழ சரியான விகித்தில் கொண்டிருக்கின்றது. பால், கொழுப்புச் சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ‘ஏ’ தவிர மற்றவற்றையும் கொண்டி ருக்கிறது. ஆனால் உடல் நலிவின் காரணமாக ஒரு நோயாளிக்கு பாலில் உள்ளதைக் காட்டிலும் அதிக அளவு வைட்டமின் ஏ சத்துள்ளவற்றைத் தரலாம். எனவே சாதாரண உணவுக்கும் மருந்துக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் அறிவோம். குறிப்பிட்ட நோயாளியின் தேவைக்கும் நிலைக்கும் ஏற்ப சிறிய அளவுகளில் மருந்துகள் தரப்படுகின்றன. வயதானவர், நடுத்தர வயதினர், குழந்தைகள் என நோயாளியின் வயதுக்கேற்றாற் போலவும் மருந்தின் அளவு மாறுபடலாம்.

மண் உணவுக்கு எதிராக மருந்து

இயற்கை தந்த சக்திக்கு மேலாக கூடுதல் சக்தி தேவைப்படும்போது சில மருந்துகள் ஊக்கிகளாக வும் தரப்படுகின்றன. இரவு விடுதிகளில் நடனமாட விரும்புவோர் கூடுதல் சக்தியைப் பெறுவதற்காக மார்ஃபியா போன்ற மருந்துகளை ஊசி மூலம் ஏற்றிக் கொள்கிறார்கள். உடனடியாக மிகுந்த புத்துணர்வும் சக்தியும் பெறுவதாக உணரும் இவர்கள், நேரம் செல்லச் செல்ல ஊக்க மருந்தின் பின் விளைவுகளை உணர்வார்கள். எனவே நரம்புகளையும் சதையையும் அளவுக்கு அதிகமாக சோர்வடையச் செய்யாத இயல்பான வாழ்வை வாழ விரும்புவோர், சாதாரண உணவில் கிடைக்கும் சக்தியை சரிவர பயன்படுத்தி திருப்திப் பட முடியும்.

Pathalogical நோய்க்குறிக்கு ஏற்ப மருந்துகள் தரப்படுகின்றன. ஆனால் ஊக்கிகளோ இயல்புக்கு மாறாக இருப்பதால் அவை உடல் நலத்துக்கு அபாயமானவை. ஆக உணவு, மருந்து, ஊக்கி இம்மூன்றுக்கும் தனித்தனி தன்மைகள் இருப்பதால் ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்றைத் தர இயலாது. ஆரோக்கியமானவருக்கு உணவு, நோயாளிக்கு மருந்து, அதிகப்படி அலட்டிக்கொள்பவருக்கு ஊக்கி.

தாவரத்தின் வாழ்விலும் இதுபோன்ற நிலைமைகள் உண்டு. விலங்குகளைப்போலவே தாவரங்களுக்கும் உணவு தேவைப்படுகிறது. தண்ணீரின் உதவியோடு தாவரங்கள் தமது உணவை காற்றிலிருந்தும் மண்ணிலிருந்தும் பெற்றுக் கொள்கின்றன. தாவரத்தின் உணவில் ஏதாவது குறிப்பிட்ட குறைபாடு இருக்குமானால் அதனை சரியாகக் கண்டுபிடித்து சரிக்கட்டி விடலாம், மனிதரைப் போல தாவரத்தையும் ஊக்கப்படுத்தலாம்.ஆனால் அது இயற்கைக்கு மாறானது. தாவரங்களுக்குத் தேவையான சத்துக்கள் யாவும் அது எளிதில் எடுத்துக் கொள்ளும் வகையில் மண்ணில் நுண்ணுயிரி களாக உள்ளன. கால்நடைகள் இயற்கையாக மண்ணில் விளைவதை உண்டு வேலை செய்யத் தேவையான சக்திக்கும் நமது வளர்ச்சிக்கு தேவையானதை செரித்துக்கொண்டு மீதத்தை கழிவாக மீண்டும் தாவரத்திற்கு உணவாக்கி இயற்கைச் சுழற்சி முறையை நிறைவு செய்கின்றன. இந்த சுழற்சியைத் தடை செய்வதென்றால் அதற்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும். அனைத்து தாவரங்களுக்கும் இயற்கையாகத் தேவைப்படும் உணவு தொழுவுரமும் பிற உயிரிகளும் மட்டுமே. மனித உணவு செரிமானத்தில் உயிர்ம ரசாயன மாற்றங்களுக்கு வைட்டமின்கள் உதவுவதுபோல ஆக்ஸின்ஸ் (Auxins) எனப்படும் தனிமங்கள் பயிர்கள் உணவைச் சரிவர உறிஞ்ச உதவுகின்றன. மனிதருக்கு இன்றியமையாத வைட்டமின்களைப் போல தாவங்களுக்கு இன்றியமையாத இந்த ஆக்ஸின்களும் பிற உயிர்மப் பொருட்களும் தொழுவுரத்தில் அபரிமிதமாக இருக்கின்றன.

வெள்ளத்தாலும் மண் அரிப்பினாலும் ஒரு சில கனிம உப்புக்கள் குறைந்து போகுமபோது அந்தக் குறைபாட்டை நீக்க சில ரசாயனங்களைப் பயன்படுத்த நேரலாம். ஆனால் அது மனித உடலின் நோய்க்கு மருந்துபோல் அளவாக இருத்தல் வேண்டும். முறையாக மருத்துவம் பயின்றவரால் நோயாளியின் உடல் எவ்வாறு சோதிக்கப்பட்டு பின்பு நிலைமைக்கேற்ப மருந்து சிபாரிசு செய்யப்படுகிறதோ அதேபோல மண்ணை முறையாக சோதித்து, விளைவிக்கப்படும் பயிருக்கு ஏற்றவாறு ரசாயன உரமும் இடப்பட வேண்டும். மண் பரிந்துரை செய்யாத ரசாயன உரத்தை மண்ணில் இடுவது மருத்துவர் பரிந்துரை இன்றி நோயாளிக்கு மருந்து கொடுப்பதற்கு ஒப்பாகும் என்பதால் அதன் விளைவுகளும் மிக மோசமாகவே இருக்கும். எனவே செயற்கை உரங்கள் மண்ணுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட வேண்டுமேயன்றி உணவாக அல்ல.

மார்ஃபியா போன்ற ஊக்கிகளைப் பயன்படுத்தி மனித உடலை இயல்புக்கு மீறி செயல்படுத்துவதுபோல, தாவரங்களுக்கும் ஊக்கிகளைப் பயன்படுத்தி அதிக வளர்ச்சலையும் சிறிது காலத்துக்கு ஏற்படுத்தலாம். ஆனால் இந்த விளைவு ஆரோக்கியமற்றது, தொலைநோக்குப் பார்வையற்றது, இயற்கைக்கு முரணானது. மனித உடலுக்குத் தேவைப்படும் உணவை விவசாய உற்பத்தியின் மூலம் பெறவேண்டுமானால், அந்த உணவைத்தரும் தாவரங்களும் ஆரோக்கியமாக, இயற்கையாக, நன்கு வளர்ந்ததாக இருக்க வேண்டும். எவ்வித செயற்கை ஊக்கியும் செயற்கை உரமும் நமது உணவை பாதிக்கும். காரணம் நம் நாட்டில் உணவுக்காக நாம் தாவரங்களையே பெரும்பாலும் நம்பியிருகிறோம். எனவே தாவரங்களுக்கு அளிக்கப்படும் உணவு, நோய்க்கு அளிக்கப்படும் ஊக்கி, என அனைத்தையும் மிக கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியம். எந்த நிலையில் பொருந்தாத எதை அளித்தாலும் இறுதியில் அது உணவு விளைவிக்க அந்த மண்ணைப் பயன்படுத்தும் மனிதரையே பாதிக்கும்.

ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்யும் நியூசிலந்தின் மக்களிடம் மூக்கடைப்பு, கனிக் காய்ச்சல், நச்சுத் தன்மையுடன் நாத்தடித்தல் (Septic Tonsils), பல் சொத்தையாதல் போன்ற நோய்கள் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மவுண்ட் ஆல்பர்ட் இலக்கணப் பள்ளி விடுதியில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர், ஆகியோரில் 60 பேரைத் தேர்ந்தெடுத்து, நியூசிலந்தின் உடல்-மனநல சய்கத்தின் டாக்டர் சாப்மேன் பல சோதனைகளை செய்து பார்த்தார் ரசாயன உரமிட்டு விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகளைத் தவிர்த்து தொழுவுரமிட்டு பயிர் செய்யப்பட்ட உணவு மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்பட்டது உடல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்து, பொதுவாக காணப்படும் நோய்கள் இன்றி, பற்கள் ஆரோக்கியமடைந்து வந்துள்ளது என்று அவரது அறிக்கை கூறுகிறது. கடந்த போரின்போது இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கு மேற்பட்டோர் பல்நோய்களின் காரணமாக தகுதியற்றவர்களென நிராகரிக்கப்பட்டனர். எனவே இந்திய மக்களின் உடல்நலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், நாம் ரசாயன உரங்களைத் தவிர்த்து விட வேண்டும். முழுக்க முழுக்க நமது உணவைக் கருத்தில் கொண்டு செயல்பட விட வேண்டும்.

செப்டம்பர் & அக்டோபர் 1947 (கிராம் உத்யோக் பத்ரிகா)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org