தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்

வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்கள் - ஆசிரியர்

ஆளும் நடுவண் அரசு, பொருளியல் சீர்திருத்தம் என்ற பெயரில் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக் கான விதிமுறைகளை தளர்த்துதல், பெட்ரோலிய மானியத்தை (உரங்களுக்கும் சேர்த்து) முழுமையாகக் குறைத்தல் இப்படியாக உலக வங்கியின் அறிவுரைகளை தலைமேல் கொண்டு செயலாக்கி வருகின்றது. அது மக்களிடம் கடும் எதிர்ப்பை உருவாக்கியபோதும், இந்திய அரசியல் சூழல் இன்றைய ஆளும் கட்சிக்குச் சாதகமாகவே உள்ளது. கொள்கையற்ற எதிர்க்கட்சிகள், அதிகாரத்தைப் பிடிப்பதிலேயே முழு நோக்கம் என்ற அளவில் உள்ளதால் மிகத் துணிச்சலாக பல முடிவுகளை நடுவண் அரசு எடுக்க முடிகிறது.

நாம் அனைத்திற்கும் மானியம் வேண்டும் என்று வாதாடுபவர்கள் அல்ல. ஆனால் சமச்சீரற்ற பொருளாதாரச் சூழல் உள்ள இந்தியாவில் சில காலம் சில துறைகளுக்கு மானியம் தேவையான ஒன்றாக உள்ளது.

மானியம் பெறாமல் இயங்கும் சமூகத்தைப் படைக்கும் வக்கற்ற அரசாக நமது அரசுகள் அறுபது ஆண்டுகளுக்கு மேல் குப்பை கொட்டிவிட்டன. பெட்ரோலியப் பொருளா தாரத்தை ஊக்குவித்து அதை நம்பியே வாழ வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டு இன்று ‘மானியம் தரமாட்டேன்’ என்று கூறுவது, தேரை இழுத்துத் தெருவில் விட்டுச் செல்வதற்குச் சமமாகும். அன்றே குமரப்பா பெட்ரோலியப் பொருளாதாரம் மிக ஆபத்தானது என்ற மாய்ந்து மாய்ந்து கதறினார். அதை அன்றைய நேரு அரசும் சரி, அதற்குப் பின் வந்த அரசுகளும் சரி காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இன்று மானியம் இல்லை என்று சொல்பவர்கள் அதற்கு மாற்றாக ஏதாவது திட்டத்தை மக்கள் முன் வைக்கிறார்களா? இல்லை. பெட்ரோலியம் என்பது புதுப்பிக்க முடியாத வளம். அதை நம்பி வாழ்க்கையை அமைப்பது நமது தலைமுறைகளை முட்டுச் சந்துக்குள் இட்டுச் செல்லும்.

அதுபோலவே நமது நாட்டின் மின்சாரக் கொள்கை. எந்தவிதத் தொலைநோக்கும் இன்றி இப்படியான கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. பரவல்மய மாக்கப்பட்ட எளிய மின்னாக்க முறைகளைப் பற்றிய எந்த கொள்கையும் கிடையாது. அதுபோலவே போக்குவரத்துக் கொள்கையும். நமது காளை மாடுகளை அடி மாட்டுக்கு அனுப்பிவிட்டு டீசலில் ஓடும் வண்டிகளை நம்பி நாம் பொருள்களை அனுப்பி வருகிறோம். குறைந்தபட்சம் சரக்குப் போக்குவரத்தையாவது மாடுகளைக் கொண்டு இயக்க முடியும். முப்பது முதல் ஐம்பது கிலோ மீட்டருக்கு ஒரு முனையத்தை எற்படுத்தி மாடுகளை மட்டும் மாற்றிக் கொண்டு வண்டியை குமரி முதல் சென்னை வரை கொண்டு செல்ல முடியும். குமரியில் பூட்டிய மாட்டு வண்டி நெல்லையில் நிறுத்தப்பட்டு மாடு மட்டும் மாற்றப்பட்டு நெல்லையில் ஏற்கனவே வந்திருக்கும் சரக்கு வண்டியை இழுத்துக் கொண்டு குமரி செல்ல முடியும். அதுபோல நெல்லையில் புறப்படும் வண்டி விருதுநகருக்கு வந்து சேரும். இந்தச் சங்கித் தொடர் பயணம், மிக எளிதாக கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தும். எதற்கு வேண்டும் வெளிநாட்டுச் செலாவணி?

இப்படி ஒவ்வொரு துறையிலும் சிந்தித்து மக்கள்மயப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்ளைகளை வகுத்தோமானால் மானியமும் தேவையில்லை, வறுமைக்கும் வாய்ப்பில்லை. ஆனால் இந்த முறையில் பன்னாட்டு கும்பணிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் லாபம் கிடைக்காது. பணம் நேரடியாக மக்களிடமே புழங்கும். விலைவாசி குறையும். மையத்தில் இருந்துகொண்டு யாரும் யாரையும் ஆட்டுவிக்க முடியாது. எனவே இதை இன்றைய கொள்கை வகுப்பாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதன் பயனாக எளிய மக்கள் எல்லாச் சுமைகளையும் சுமக்கிறார்கள். தங்களது நிலையை அறியாது இலவசங்களுக்கு ஏங்கும் இந்த வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களை மீட்க என்று ஒரு மீட்பர் வருவாரோ?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org