அக்கரை பார்வை - 11 - அனந்து
கர்நாடகத்தின் பெல்காம் பகுதிக்கு நாம் போகும்போது, இந்த ஆண்டிற்கான முதல் பருவ மழை அப்பொழுது தான் வந்திருந்தது..மற்ற எல்லா இடங்களையும் போல் கால தாமதமாகத்தான் வந்திருந்தது. ஆனால் அதில் ஒரு அதிர்ஷ்டம் நமக்கு. நாம் போகும் வழி நெடுகிலும் பசுமை அதற்குள்..எங்கு நோக்கினும் எருதுகள் கொண்டு உழுது கொண்டிருந்தனர் உழவர்கள். பைல்ஹோங்கள் என்னும் ஊரை தாண்டி பெலவாடி என்னும் கிராமத்திற்கு செல்லும் வழி எங்கும் அழகு..அந்த அழகிற்கு அழகு சேர்த்தன எருதுகள் மற்றும் அவை உழுது இடப்பட்டிருந்த கரும் கோடுகள்- நோக்கும் இடம் எல்லாம்! மொத்தத்தில் இரண்டே இரண்டு ட்ராக்டர் தான் நாம் கண்டது, அந்த பகுதி மொத்தமும், மற்ற எல்லாம் எருதுகளே..கண் கொள்ளாக்காட்சி. நாம் இன்று சந்திக்க போகும் விவசாயப் பெண்மணியின் சிறப்பின் முன் அறிவிப்புகளோ?
நாம் செல்லவேண்டிய கிராமத்தைத் தவறாகத் தாண்டி சென்று விட்டோம். நிறுத்தி வழியைக் கேட்டால், “பல எருமைகளை வைத்துக் கொண்டு, இயற்கை விவசாயம் பார்க்கும் அந்தப் பெண்ணின் பண்ணைக்கா?” என்று கேட்டு வழி சொன்னார்கள். திரும்பி அந்தக் கிராமத்தைச் சென்றடைந்து அவரது பண்ணைக்குள் சென்றோம். அது வேறு ஒரு உலகம் என்று உடனே தெரிந்தது. அங்குள்ள பயிர்களின் பன்மயம் தெளிவாக முதல் பார்வையிலேயே பட்டது. போகும் பாதையில் ஒரு ‘ஸ்டைலான’ சரக்கு வாகனம், அதை அடுத்து பல எருமைகள். முந்தைய தினத்தின் மழை, அதற்குள்ளாகவே களைகளாக, பற்பல செடிகளாக.. சுற்றிலும் மரங்களும் அழகாக மிளிர்கின்றன. நமது கதையின் நாயகி ‘லட்சுமி லோக்குர்’ இயற்கை விவசாயம் செய்யும் 22 ஏக்கர் நிலத்தில் அத்தனை பசுமை. முன்தினம் தான் முதல் மழை வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
பத்தாண்டுகளுக்கு முன் மும்பை நகரில் பைகள் தைக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்த லட்சுமி, தந்தையின் உடல் நலக்குறைவினால் சொந்தக் கிராமத்திற்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். அதனால் அவர் எள்ளளவும் வருந்தவில்லை. மகிழ்ச்சிடன் தமது ஊரிலேயே விவசாயம் செய்யலாம் என்று முடிவு செய்தார். பெண்கள் விவசாயத்தில் முழுமையாக அதுவும் படித்த பெண்கள் ஈடுபடுவது என்பது அரிது. குடும்பத்தினரும் ஊராரும் அதனை ஆதரிப்பதில்லை. பெற்றோரின் நிலத்தில் கூட இதனைக் கடைபிடிப்பது மிகவும் அரிது. ஆனால் இங்கே அவரது தந்தையே ஆசானாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்து ஊக்கப்படுத்தினார். முதலில் ஒரு ஏக்கரில் மட்டுமே ஆரம்பித்து இன்று 22 ஏக்கரில் விரிந்துள்ளது இவரது விவசாயப் பயணம். விவசாயம் செய்வது என்று முடிவெடுத்தவுடன், லட்சுமி, பெல்காமில் உள்ள ஒரு கல்லூரியில் வேளாண்மை பற்றிய ஒரு பட்டயப் படிப்பில் சேர்ந்தார். அங்கு இவர் நிறைய நேரம் செலவிட்டது அங்கிருந்த பண்ணையிலும், நாற்றங்காலிலுமே!
அப்படியாக விவசாயத்தின் நுணுக்கங்களை வகுப்பறையின் வெளியில் கற்றுத் தெரிந்து இன்று இந்தப் பகுதியின் முன்னோடியான இயற்கை விவசாயியாக திகழ்கிறார். இவர் விவசாயத்திற்கு வந்த முதல் நாளிலிருந்தே இயற்கை விவசாயத்தை விட்டு வேறு எதுவும் நினைக்கவும் இல்லை கடைபிடிக்கவும் இல்லை. ‘‘ஏனோ அந்த நச்சு ரசாயனங்களிலிருந்து தள்ளியே இருந்தேன், இனியும் இருக்க விரும்புகிறேன்’’ என்றார். இன்றைய மேற்படிப்பு படிக்காததாலோ, வேளாண் பல்கலைகழகங்களின் பக்கமே செல்லாததாலோ இவர் சிறப்பாக பாரம்பரிய சீரிய இயற்கை வேளாண்மையை மட்டுமே கடைபிடித்து வருகிறார். அதனால் பொருளாதார ரீதியிலும் சுற்றுச்சூழல் பார்வையிலும் இவரது வேளாண்மை சிறப்பாக இருக்கிறது. நீடித்த, நிலையான, தற்சார்பான விவசாயத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். முதலில் பொருளாதார ரீதியில் ஸ்திரத்தன்மை வருவதற்கு எருமைகளை வளர்த்து அவற்றின் பாலை விற்பனை செய்து, அந்தச் சாணத்திலிருந்து மண்புழு உரம் தயாரித்து விற்று, பண்ணையை விரிவுபடுத்தினார்.
இவரது முன்னறியும் திறமையில் சிறந்து விளங்குகிறார். விவசாயத்திற்கு வந்த சில
ஆண்டுகளிலேயே, காக்கை கூடு கட்டுவதை வைத்து வரும் ஆண்டின் பருவ மழை எப்படி
இருக்கும் எனக் கண்டறிந்தார். காக்கை மரத்தின் உள் பக்கம் கூடு கட்டினால் நல்ல
மழை வரும், வெளி பக்கத்தில், கிளைகளின் கடைசி ஓரத்தில் கூடி கட்டினால்
குறைவாகத்தான் பெய்யும் என்று ஊகித்தார். அப்படியே இவரது பண்ணை திட்டங்களுக்கு
அதை ஒட்டியே முடிவெடுத்து வெற்றியும் கண்டார். தானாக கற்றுத் தேர்ந்து
சிறப்பாக நிறைவேற்றவும் செய்தார். ஊடுபயிர், கலப்புப்பயிர், பொறிப்பயிர் என
எல்லா நுட்பங்களையும் கடைபிடித்து பல வெற்றிகளை கண்டார். மேலும் ஆமணக்கு போன்ற
பொறி பயிரை சிறு கொடிகளுக்கு சாயும் (தாங்கு) கொம்புகளாகவும் இரட்டை வேடம்
கொடுத்தார். கரும்பு கூட ஊடு பயிராக விளைகிறது. பல கற்பனை திறன்கொண்ட முன்னோடி
எண்ணங்கள்/திட்டங்களை செயல் படுத்துகிறார். வெளி ஓரத்தில் பள்ளங்கள் தோண்டி
ஒரு பக்கம் (மேட்டில்) வேம்பு, எலுமிச்சை, தேக்கு போன்ற நெடுங்காலப்
பயிர்களையும், மற்றப் பக்கத்தில் கொடிக் காய்களையும் பயிரிடுகிறார். நெடும்
மரங்களின் வேர்கள் ஆழமாகச் செல்வதால் இவற்றை பாதிக்காது. மேலும் கிழங்குகளை
இவர் கீரைகள் மற்றும் மத்திய கால பயிர்களான வெங்காயம், பூண்டுடன்
விளைவிக்கிறார். சில வாரங்களில் கீரைகளை பறித்த பின் சில மாதங்களில் மத்திய
காலப் பயிர்களான வெங்காயம் முதலியன அறுவடையாகின்றன. அப்பொழுது கிழங்கு வகைகள்
பெரிதாகி நல்ல இடைவெளியுடன் பல்கிப் பெருகுகின்றன. இப்படி பல உக்திகள் பல
திட்டங்கள். டிரை கோடர்மா, திறமி, ஜீவாம்ருதம் முதலியவை சொட்டு நீர்ப்
பாசனமாகச் செல்கின்றன. நீர் பாய்ச்சுவதிலும், பல வகையான பயிர்களை சீராக
வளர்ப்பதிலும் (சந்தையை மனதில் வைத்து) மிக அருமையான திட்டமிடல் செய்கிறார்.
இப்படி அவர் அங்கு வளர்க்கும் பயிர்கள், நெல், கோதுமை, பல பயறு வகைகள்,
பருத்தி, எல்லா வகையான காய்கறிகள், கீரைகள், மரங்கள் மற்றும் பூண்டுகள்
(களைகளும் கூட).
இவர் ஒரு இயற்கைத் தலைவி. இயற்கையாகவே தலைமைப் பண்புகள் கொண்டவர். நாம்
பார்க்கும் போதே. நமக்கு அந்த பண்ணையைச் சுற்றிக் காண்பிக்கும் போதே,
மற்றவர்களுக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துக் கொண்டே
செல்கிறார். ஒருவரிடம் எந்தெந்தக் கீரை பறித்து சந்தைக்கு செல்வது பற்றி, வேறு
ஒருவரிடம் நீர் பாய்ச்சுவது பற்றி, மற்றவரிடம் நாளைய இவர்களது செயல்திட்டம்
பற்றி, இன்றைய மதிய உணவிற்கு வேண்டிய காய்கள் பற்றி... இப்படி
சென்றுக்கொண்டிருக்கும் வேளையில், அனாயாசமாக களைகளைப் பிடுங்கிக் கொண்டும்,
சில காய்களைப் பறித்து தனது இடையில் அழகாகக் கட்டிய ஒரு பெரிய துணியில்
போட்டுக்கொண்டும் வருகிறார்.
பின்னர் நாம் அவரது பொருட்களுக்கான சந்தை என்ன? அதில் சிரமங்கள் உள்ளனவா? இயற்கைப் பொருள்களுக்கு மதிப்பும் காசும் இருக்கிறதா? சந்தை படுத்த முடியாதவற்றை என்ன செய்கிறார்? என்பது பற்றிக் கேட்டோம். அதற்கு அவர் கொடுத்த பதில்தான் மிக முக்கியமான பாடம். ‘‘எதற்கு எனக்கு தனி விலையும் காசும் வேண்டும்? எனக்கு வேண்டாம். எனது விளைபொருட்களுக்கு இங்கு பெல்காம், தார்வாட், முதல் பெங்களூர், மங்களூர் வரை சந்தை இருக்கிறது” என்றார். எங்கு? எப்படி என்று நாம் கேட்க, ‘‘என்னுடன் வாருங்கள்’’ என்றார். அருமையான சுவையான மதிய உணவிற்கு பிறகு, தானே தனது சரக்கு வாகனத்தை ஒட்டிக் கொண்டு, ‘‘என்னைப் பின்தொடருங்கள்’’ என்றார். என்ன ஒரு முழுமையான தற்சார்பான விவசாயி! காலை முதல் அவரது திட்டமிடல், பறிப்பது முதல் களை எடுப்பது வரை அவரது உழைப்பைப் பார்த்தோம். இப்பொழுது சரக்கு வண்டியையும் ஓட்டிக் கொண்டு செல்கிறார். நமது ஆவல் இன்னும் அதிகரிக்கிறது. அப்படி எங்கு செல்கிறார்? எப்படி உள்ளது அவரது சந்தை?
நாம் சென்றது ‘தார்வாட்’ என்னும் அழகிய சிறு நகரம். அதுதான் கர்நாடகத்தின்
மிகப் பிரபலமான வேளாண் பல்கலைக்கழகம் இருக்குமிடம்! நம்மில் பலருக்கும் அரசு
வேளாண் பல்கலைகழகங்களை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கும். சொல்லப் போனால்
(மிக சரியாகத்தான்) அவர்களது செயல்பாடுகளின் மேல் வருத்தமும் கோபமும்கூட
இருக்கும். அவற்றை எப்படி மாற்றுவது, அவர்களை எப்படி இயற்கையின் பால்
மாற்றுவது, உழவர்களுக் காக செயல்பட வைப்பது என்று 'ரூம்' போட்டு யோசிப்போம்.
இந்த வீராங்கனை அங்கே அந்த சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று சிங்கங்களின்
பிடரியை வருடியும், இழுத்தும் அங்கேயே தனது இயற்கை பொருட்களை விற்கிறார்,
அதாவது வாரம் இரு முறை! அதுமட்டுமல்ல வேளாண் துறையிலும் (Dept of
Agriculture) வாரம் இருமுறை - தனது இயற்கை காய்கறிகள், கீரைகள்,
தானியங்கள் எல்லாவற்றையும் தனது வண்டியில் கொண்டு சென்று விற்கிறார். இன்னொரு
நாள் பெல்காமிலும் மற்றொரு நாள் தர்வாடின் ‘ஆல் இந்தியா ரேடியோ’
அலுவலகத்திலும் விற்பனை செய்கிறார். ரசாயன வேளாண்மையைப் பரப்பும் ஒவ்வொரு
குகையினுள்ளும் அந்த நச்சு வேளாண்மையையும் கம்பனிகளின் பிடியில் சிக்கிக்
கொண்டிருக்கும் இன்றைய அரசு சார்ந்த வேளாண் பல்கலைக்கழகத்தையும் இவர் தனது
இயற்கை விளைபொருட்களால் வென்றுள்ளார். அங்கும் வேளாண் துறையிலும் இவரை பல முறை
இயற்கை விவசாயம் பற்றி பேசுவதற்கே கூட அழைத்துள்ளனர்! என்ன ஒரு புதுமை. நாம்
அவருடன் சென்ற பொழுதும் அவரது வண்டியின் வருகைக்கு காத்திருந்த நபர்களை
பார்க்கப் பார்க்க ஆனந்தம்! இவரது கீரைக்கும் இவரது நேர்மையான விலைக்கும் நல்ல
வரவேற்பு. நாம் பார்க்கும் போதே பல தரப்பினரும் வந்தனர். கீழ்மட்ட தொழிலா
ளர்கள் வரை வாங்குவதைக் கண்டு நமது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சில
நிமிடங்களில் பல பொருட்களும் காணவில்லை. விற்கப்பட்டு விட்டன. அப்பொழுது
திடீர் என்று ஓங்கிய குரலுடன் கொஞ்சம் சத்தம் கேட்க, அருகில் சென்று
பார்த்தால், பக்கத்துக்கு அரங்கிலிருந்து (அதே அரசுத் துறையின் வேறு ஒரு
பிரிவிலிருந்து) “எங்களது கட்டிடதின் அருகிலும் வந்து காய்கறிகள்
விற்கவேண்டும்” “அங்குதான் முதலில் வர வேண்டும்' என்று போர்க் கொடி தூக்கினர்!
நச்சு விவசாயத்தையும் கம்பனி விவசாயத்தையும் பரப்புபவர்களிடமே இயற்கை விளை
பொருட்களுக்கு சிறந்த விலை! அதாவது சிங்கத்தின் குகையினுள்ளேயே நுழைந்து அதன்
பிடரியை உலுக்குவது போல...
ஒவ்வொரு ஊரிலும் ஒரு லட்சுமி லோக்குர் தேவை! லட்சுமியின் சிறப்பான பணி
தொடரட்டும், மேலும் பலர் இதனைக் கண்டு வளரட்டும்.