மேற்குலகின் வள்ளல் தன்மையும், அதன் பின்னாலான வளம் சுரண்டலும் எனும் போக்கினை, புலம் பெயர் சூழலில் அன்றாடம் நன்றாகவே பட்டுணர முடிகிறது. இந்தப் பட்டுணர்தல் இல்லாததினாற்தானோ பாமர மக்கள் முதல், படித்தவர்கள் வரை இவ்வாறான மேற்கின் வளம் சுரண்டும் வள்ளல்தனத்துக்குப் பலியாகிப் போகின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. ஆனாலும் அதனை அவ்விதம் சுலபமாகச் சொல்லி விலக்கிவிடமுடியாது. ஏனெனில் மேற்கின் போலித்தனத்தையும், வளங்களைக் கொள்ளையிடும் குணத்தினையும், வரலாற்றின் பல பக்கங்கள் சாட்சியமாய் எடுத்துரைக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அபாயத்தினை எண்ணி, அப்பகுதியில் வாழும் அன்றாடம் காய்ச்சிகளான மக்கள் போராடிவருகின்றார்கள். ஆனால் நகர வாசிகள் சிலரும், நாட்டின் அரசியல்வாதிகள் பலரும், மாடு விழுந்த பக்கத்துக்கு குறி சுடும் கொள்கை மிகு ஊடகங்கங்களும், இப் போராட்டத்தினை அறிவிலிகளின் போராட் டமாக, அச்சப்பட வேண்டிய அவசியமில்லாத விடயமாகவும், தமிழகத்தின் மின்தேவைக்கு அவசியமானது அணுமின்நிலையம் எனவும் சொல்லி வருகின்றார்கள்.
எரிபொருட்களின் விலையேற்றம் என்பது, இன்று உலகின் எல்லாப் பகுதிகளையும், ஆட்டிப்படைக்கிறது. அச்சப்படவும் வைக்கிறது. அதனை எதிர்கொள்ள எல்லா நாடுகளிலும் எண்ணற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. இவ்வாறான முயற்சியே கூடங்குளம் அணுமின்நிலையம், இதுவே இலகுவான வழிமுறை என்கிறார்கள் அத்திட்டத்தினை ஆதரிப்போர். ஆனால் அறிவியலிலும், அதற்கு மேலான பொருளாதார பலத்திலும், திளைத் திருக்கும் மேற்குலக நாடுகள், அணுமின்நிலையம் போன்ற நடவடிக்கைகளைத் தங்கள் நாடுகளில் மட்டுப்படுத்திக் குறைத்துக் கொண்டு வருகின்றன. அதேவேளை, வளர்முகநாடுகளிள் வளங்களை அழிக்கும் வகையில் அமைகின்ற இவ்வாறான திட்டங்களுக்கு வாழ்த்தும், வசதிகளும் செய்து கொடுக்கின்றன. ஒரு வருடகாலத்தின் பின்னர் கடந்த வாரத்தில், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் சுற்றுப் பயணம் செய்கையில், அந் நாடுகளில் அணுமின்னுக்கு மாற்றீடாக சூரியவெப்ப மின்சார உற்பத்தியினை அதிகரிக்கச் செய்திருப்பதனை நேரடியாகக் காணமுடிந்தது. இவ்வாறான அதிரடி மாற்றத்திற்கு இந்நாடுகள் தயாராவதற்கான காரணங்களாக இரு முக்கிய விடயங்களைக் கருத்திற் கொள்ள முடியும். ஒன்று அதிகரித்து வரும் எரிபொருள்விலை, மற்றையது இறுதியாக இயற்கைப் பேரிடரில் இடம்பெற்ற புகுசிமா அனுமின்நிலைய விபத்து. இந்த இரு வேறு அனுபவங்களிலுமிருந்து ஐரோப்பிய நாடுகள் கற்றுக் கொண்டதன் கவனப் பெறுமானமே, இன்று அந்நாடுகளில் என்றுமில்லாதவாறு சூரிய வெப்ப மின் உற்பத்தி. ஆனால் வருடத்தின் அரைப்பகுதி, அதிகளவு சூரிய வெப்பம் பெறமுடியாத நாடுகள் இவை என்பது நாம் கவனத்திற் கொள்ள வேண்டியது.
ஆயினும் குறைந்த கால, குறைந்த பரப்பளவு, என்பவற்றில் அதிகளவு மின் உற்பத்திக்கான ஆய்வுகளையும் இந்நாடுகள் முடுக்கியுள்ளன. புகுசிமா அணுமின் நிலைய விபத்தின் பின்னால், இயற்கைப் பேரிடரின்போது, அணு உலைகளின் பாதுகாப்பை, மக்களுக்கு உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே, இந்நாடுகளில் அடுத்து வரும் பத்தாண்டுகளில் பெரும்பாலான அணு உலைகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளன. இவ்வாறான நிலையில் இந் நாடுகளில் அணுமின்சாரத்துக்கு மாற்றீடாக அறிமுகப்படுத் தப்பட்டுவரும், இரு வழிமுறைகளாக சூரிய ஒளி மின்சாரத்தையும், காற்றாலை மின்சாரத்தையும், தமது நாடுகளில் பரவலாகவும், மிகப்பெரிய அளவிலும் அறிமுகப்படுத்தி வருகின்றன. மேலும் அவ்வாறான முயற்சிகளுக்கு அரசாங்கக் கடனுதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன. இந்தியாவின் அரசியற் களத்தில் முதன் நிலை வகிக்கும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியின் சொந்த நாடான இத்தாலியின் தென்பகுதி நிலங்கள் பெரும்பாலும் ஒலிவ் மரத் தோட்டங்களாகவே இருந்தன. அவை தவிர்ந்த பிரதேசங்களெல்லாம் வெற்றுத் தரிசு நிலங்களாகவும், விலை மதிப்பில்லாதவையாகவும், இருந்தன. கடந்த ஒரு வருடத்தில் இத்தரிசுநிலகளிலும், ஒலிவ் தோட்டங்களிலும் உருவாகியிருக்கும் புதிய பண்ணைத் தொழிலாக சூரிய வெப்ப மின்சாரம் பெறுதல் உருவாகியுள்ளதுடன், அது லாபம் மிகுந்த ஒரு புதிய தொழிலாகவும் அங்கு உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான மின் உற்பத்தி லாபம் தரும் தொழிலாகத் தென்படவே, தரிசு நிலங்களிலில் மட்டுமல்லாமல், வேக வீதிப் பெருந்தெருக்களில் அமைந்துள்ள பெரிய வாகன நிறுத்துமிடங்களில், தொழிற்சாலைகளின் தளக் கூரைகளில் என, பெரிய அளவில் இம்மின்னுற்பத்தியில் முதலாளிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
மொத்தத்தில் அங்கு அது லாபம் தரும் ஒரு புதிய தொழிலாக உருவாகி வருவதையும், வளர்ந்து வருவதையும் கவனிக்க முடிகிறது. தனது நாட்டின் மின் தேவைக்காக வருடந்தோறும், அண்டைநாடுகளான சுவிட்சர்லாந்திடமும், பிரான்சிடமும், பெருந்தொகைப் பணத்தை வாரியிறைக்கும் நாடு இத்தாலி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்காக அவர்கள் அணுமின்சாரத்திலும் பாதுகாப்பான சூரிய மின்சாரத்தைத் தெரிவு செய்துள்ளார்கள். மேலும் ஐரோப்பிய நாடுகளில், ஆசிய நாடுகளுக்கு இணையான சூரிய ஒளியினை, மத்திய கோட்டுக்குச் சமீபமாக வரும் இத்தாலியின் தென்பகுதி வருடத்தின் பெரும்பகுதி பெற்றுக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது. இதுபோலவே செர்மன் நாட்டிலும் மாற்று மின்சாரத்தின் வழிமுறைகள் வெகுவேகமாக அறிமுகம் செய்யப்பட்டு வருவதை நேரிடையாகக் காணமுடிந்தது. பெரும்பாலும் மலைவெளிகளாக இருந்த பிராங்போட் பகுதியில் பயணம் செய்கையில், பெரும்பாலான வீடுகளின் கூரைகளில், சூரியமின் தகடுகள் பொருத்தப்பட்டிருப்பதையும், பொருத்தப்பட்டு வருவதையும் கவனிக்க முடிந்தது. அதுபோலவே பெரும் தொழிற்சாலைகளின் கூரைகளிலும் இப்பணி நடைபெற்று வருகின்றன. இவை தவிர மலைச்சரிவுகளில் உள்ள பண்ணை மேய்ச்சல் நிலங்களிலும், இவை பல ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படத் தொடங்கியுள்ளதைக் காண முடிந்தது.
புகுசிமா விபத்துக்களின் பின்னதாக செர்மன் தனது பழைய அணு உலைகள் சிலவற்றை உடனடியாக மூடியமை நினைவிருக்கலாம். அணுநிலையம் தொடர்பான பாதுகாப்பு, மற்றும் கழிவு அகற்றல் தொடர்பில், இருக்கக் கூடிய மிகக் கடுமையான நடைமுறைகளே, அவற்றினை மூடி, மாற்று வழியிலான மின்சாரத் தேடலுக்கு அவர்களை உந்தியிருக்கிறது. இவ்வகையான மின்உற்பத்திக்கு மக்கள் வாழ்விடங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதனால், அதனை மக்களிடத்தில், அறிமுகம் செய்து ஊக்கப்படுத்துவதிலும் களமிறங்கியுள்ளன. இவ்வாறான பகுதிகளில் வீடுகளின் கூரைகள் மேல் சூரியமின் செல் பொருத்துவதற்கு அரசு மானியம் கொடுத்து உதவுகையில், அவர்களது கூரையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அப்பகுதி மின்சார வாரித்துக்கே நேரடியாகச் செல்கிறது. அவர்களது வீட்டு மின்பயன்பாட்டுக்கான மின்சாரம் வழமைபோல் மின்வாரியத்தால் வழங்கப்படுகிறது. உற்பத்திக் கான விலை, பயன்பாட்டுக்கான விலை என்பன தனித் தனியாகக் கணிப்பிடப்பட்டு, மானிய மாகக் கொடுக்கப்பட்டு, கடன், லாபத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. இது நீண்ட காலக் கடனடிப்படை வசதியில் மேற்கொள்ளப் படுவதனாலும், கைகாசில் கடன் கட்ட வேண்டி யில்லாதிருப்பதனாலும், பெருமளவு மக்கள் இத்திட்டத்தில் ஆர்வம் கொள்கின்றார்கள். அதனால், தனிநபர் வீடுகளிலும் இம்முயற்சி வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள மலைப்பிரதேசம் தவிர்ந்த பரந்த நிலப்பரப்புக்களிலும், பண்ணை மேய்ச்சல் நிலங்களிலும், பெரிய அளவில் மேற்கொள்ளப் படும் மாற்று மின்னுற்பத்தியாகக் காற்றாலை மின்உற்பத்தி இடம்பெற்று வருகிறது. இவ்வகையான மின்னுற்பத்தி முயற்சியும் வளர்ந்து வருவதைக் காண முடிகிறது. ஆயினும் இது பெரிய முதலீட்டினைக் கொண்டிருப் பதாலும், பொருத்தமான இடங்களில் மட்டுமே சாத்திப்படும் என்பதாலும், பரவலாகக் காண முடியவில்லை. காற்றாலை மின்சார முறையில், தொழில்நுட்ப அடிப்படையிலும், உற்பத்தித் திறன் வகையிலும், டென்மார்க் முன்னேற்றம் கண்டு வருவதாகச் சொல்கிறார்கள். இதற்கான சிறப்பான தொழில் நுட்பத்தினைக் கொண்டிருக்கும் அவர்கள், தங்கள் நாட்டிலும், அண்டை நாடுகளிலும், உலக நாடுகள் சிலவற்றிலும், காற்றாலை மின்சார உற்பத்தி முறைமைக்கான வழங்கல்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இது தொடர்பிலான உள்ளூர் உற்பத்தித் துறையிலும் அவர்கள் வளர்ச்சி கண்டு வருவதாகவும் அறிய முடிகிறது. எரிபொருள் தேவையின் மாற்றீடாகவும், சூரிய மின்சாரத்தை பயன்படுத்த முனையும் ஆய்வுகளும், ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்று வருகின்றன. சுவிட்சர்லாந்து இவ்வகையான ஆய்வுகளில் முன்னிலை வகிக்கிறது. எதிர்கால நோக்கில் மேற்கொள்ளப்படும் இவ்வகையான ஆய்வுகளி னாலும், கண்டுபிடிப்புக்களினாலும் கூடத்தான் இந்நாடுகள் வளர்முக நாடுகளாகவுள்ளன.
வருடத்தில் குறைந்தளவிலான சூரிய வெப்பத்தினைப் பெறும் ஐரோப்பிய நாடுகளே தங்கள் மின் தேவைக்கான மாற்று வழியாக சூரிய ஒளியினைக் காண முனைகையில், இந்திய அரசியலாளர்களும், அறிவார்ந்தவர்களும், அணுமின் உற்பத்தியே தீர்வு என அடம் பிடிப்பதற்கான காரணம், அணுவின் மீதான காதலா..? அல்லது அதற்கும் மேலான தேவையா..? இவ்வாறான தகவல்களின் அடிப்படையில், கூடங்குளம் விவகாரத்தைப் பார்க்குமிடத்து, கூடங்குளம் அணுமின் நிலையம்தான், தமிழகத்தின் மின் தேவைக்கான இறுதித் தேர்வு என்பது ஏற்புடையதாகவில்லை. ஏனெனில் இந்தியாவின் குசராத்திலும் மாற்று மின்சாரத்திற்கான வழிமுறை தொடங்கப்பட்டு வெற்றிகரமாகவும் தொடரப்படுவதை அறிய முடிகிறது. இங்கே குறிப்பிட்ட மாற்று மின்உற்பத்தி குறித்தும், அணுமின் உற்பத்தியின் அபாயம் குறித்தும் தெரியாதவர்கள் இத் திட்டத்தினைச் செயற்படுத்த முனைவதாகவும் சொல்ல முடியாது. அவ்வாறாயின் இத்திட்டத்தினை நிறைவேற்றுவதில் இவ்வளவு ஆர்வம் கொள்வதும், நாட்டின் சொந்த மக்களைப் பலிகளாக்க முனைவதும் ஏன்? கூடங்குளத்தில் மறைக்கப்படுவது என்ன..? இதுவே அப்பகுதி மக்களும், அவர்களுக்கு ஆதரவானோரும் எழுப்புகின்ற கேள்வி..? இதற்குப் பதிலளிக்க வேண்டியவர்கள் பதிலளிப்பார்களா?