தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


சமீபத்தில் இரண்டு நீதி மன்றத் தீர்ப்புக்கள் மிகுந்த வியப்பை ஏற்படுத்தின. ஒன்று செல்வி. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தகுந்த நிரூபணம் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்தது. இன்னொன்று ஒரு விபத்துக் கொலை வழக்கில் 13 ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பாக‌ 5 ஆண்டுச் சிறைத் தண்டனை பெற்ற இந்தி நடிகர் சல்மான் கான், இரண்டே மணி நேரத்தில் பெயிலில் வெளியே வந்தது.

முதல் வழக்கில் கூட்டல் கழித்தலில் பிழை என்ற ஒரு சற்றும் ஏற்றுக்கொள்ள இயலாத காரணத்தைக் காட்டி ஜெயலலிதாவை விடுவித்தார் நீதிபதி. ஒட்டு மொத்தத் தமிழக அ.தி.மு.க தொண்டர்களும் மொட்டையடித்தல், அலகு குத்தல், உண்ணாவிரதம், பாற்குடம் ஏந்தல் போன்று தத்தம் பகுத்தறிவைப் பறைசாற்றிக் கொண்டிருக்கையில், ஜெயலலிதா புன்முறுவலுடன் நீதி வென்றது என்று வெளிவந்திருக்கிறார். ஒரு உயர்நீதி மன்ற நீதிபதிக்கு இல்லாத கணக்கு வசதிகளா? அவர் நினைத்தால் எத்தனை தணிக்கையாளார்களைக் கலந்து கணித்திருக்கலாம். அல்லது இதற்கு முன் தண்டனை வழங்கிய நீதிபதி கணக்குத் தெரியாதவரா? இங்கே மக்களைத் தவிர‌ யார் குழம்பினார்? யார் ஏமாற்றப்பட்டார்? இதில் மத்திய அரசின் அல்லது பாரதிய ஜனதா கட்சியின் தலையீடு இருந்ததா இல்லையா என்பது தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அடுத்த ஆண்டு ஏற்படும் கூட்டணியில் இருந்து புலனாகும். உண்மையில் இதில் விடுதலை திரு.பன்னீர் செல்வத்திற்குத் தான்!

முழுக் கட்டுரை »

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


நிறைவைத் தேடி

கடந்த 12 இதழ்களாகப் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற தலைப்பில், தற்போதைய இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று எழுதி வருகிறோம். இதில் புதுமை எதுவும் இல்லை. அன்றே காந்தியும், குமரப்பாவும் கூறியதுதான். தோரோ, டால்ஸ்டாய், சூமாக்கர் எல்லோரும் அவரவர் சொந்த அனுபவத்தில் கண்டறிந்த உண்மைகள்தான். 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்று நாம் சொல்வதை யாரும் கேட்காவிடினும், 'எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்' என்று தர்மக் கூச்சல் போடுவது நம் கடமையாகிறது. சொன்னதையே மீண்டும், மீண்டும் சொல்வதைத் தவிர்த்து இது வரை சொன்னதைத் தொகுத்தால்:

தற்போதைய பொருளாதாரக் கொள்கையின் தவறான திசை

மொத்த உள்நாட்டு உற்பத்தி

மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொ.உ.உ (GDP) என்பதே ஒரு மிகத் தவறான குறியீடு. வளர்ச்சி என்பது மொ.உ.உவின் வளர்ச்சி அல்ல. வளர்ச்சி என்பது பசியும், பிணியும், பகையும் அற்ற நாட்டை உருவாக்குவதே. "உண்மையில் வளர்ச்சி, வளர்ச்சி என்று இந்தியா மார்தட்டிக் கொள்வதில் பெரும்பங்கு பணவீக்கத்திற்கே சேரும். கடந்த 10 ஆண்டுகளில் 862 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த ஜி.டி.பி 1876 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ந்துள்ளது. இது 2.17 மடங்கு வளர்ச்சி.

முழுக் கட்டுரை »

தோரோ பக்கம் - சாட்சி


ஐந்து வருடங்களுக்கு மேலாக நான் என் உடல் உழைப்பால் மட்டுமே என்னைப் பாதுகாத்துக் கொண்டேன். இதில் நான் கண்டது என்னவென்றால், ஒரு வருடத்தில் ஆறு வாரங்கள் மட்டுமே வேலை செய்வதனால் என் வாழும் செலவுகள் அனைத்தையும் என்னால் ஈடு செய்ய முடிந்தது. இதனால் பனிக்காலம் முழுவதும், வேனில் காலத்தின் பெரும்பகுதியும் என் தேடல்களுக்குச் செலவிட இயன்றது.

நான் பள்ளி ஆசிரியனாக இருந்திருக்கிறேன். அதில் என் செலவுகள் என் வரவுக்கு ஏற்றாற்போல் (வரவை விடவும்) அதிகமாயின. ஏனெனில் நான் நாகரிகமாக உடை அணிவதும் பழகுவதும் மட்டுமின்றி, அவ்வாறே சிந்திக்கவும் நம்பவும் தேவைப்ப்ட்டதால் அதில் என் நேரம் தொலைந்ததாகவே உணர்கிறேன். நான் என் சக மனிதர்களின் நன்மைக்குப் பாடம் சொல்லித் தராமல் என் பிழைப்பிற்காகச் சொல்லித் தந்ததால் இது ஒரு தோல்வியே!

நான் வாணிபத்தை முயற்சித்திருக்கிறேன்; எனினும் அதில் வெற்றி பெறப் பத்து வருடங்களாகும்; அந்நேரம் நான் சாத்தானுடன் பயணித்திருக்கக் கூடும். அச்சமயம் நான் மிக வெற்றிகரமாக‌ வாணிபம் செய்து கொண்டிருப்பேனோ என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது. என் இளமைக் காலத்தில், என் நண்பர்களின் விருப்பத்திற்கு இணங்கி, நான் என்ன தொழில் செய்வது என்று சுற்றியும் பார்த்து, நாவல் பழங்களைப் பொறுக்கி விற்கலாமா என்று யோசித்ததுண்டு; இது என்னால் நிச்சயமாகச் செய்யக் கூடியது; அதன் குறைவான வருவாய் எனக்குப் போதுமாயிருக்கும் - ஏனெனில் என் மிகப் பெரிய திறமை மிகக் குறைவான தேவைகளுடன் இருப்பதுதான் - இத்தொழிலுக்கு முதலீடு எதுவும் இல்லை, என் இச்சைக்கேற்பத் திரிவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றெல்லாம் நான் முட்டாள்தனமாகச் சிந்தித்ததுண்டு.

முழுக் கட்டுரை »

குமரப்பாவிடம் கேட்போம் - அமரந்தா


சேய்மை உற்பத்தியின் தீமைகள்

உற்பத்திக்கும், நுகர்ச்சிக்கும் உள்ள இடைவெளி

சேய்மை உற்பத்தி முறைமையானது [மையப் படுத்தப்பட்ட, கச்சாப் பொருட்களிலிருந்தும், நுகர்வோரிடத்து இருந்தும் தள்ளிச் சென்றுவிட்ட, அந்நியப் படுத்தப்பட்ட, முகம் தெரியாத மைய‌ உற்பத்தி முறைமை] மிகுந்த விலையுயர்ந்த கருவி மற்றும் இயந்திரங்களைக் கோருவது மட்டுமின்றி, பணத்தையும் புழக்கத்தில் இருந்து விலக்கி விடுகிறது. உற்பத்தியின் லாபத்தால் உருவாகும் வாங்கும் திறனின் ஒரு பகுதி [தொழிற்சாலைகளால்] முதலீட்டை மீட்டுருவாக்கவும், வைப்பிற்கெனவும் ஒதுக்கப் பட்டு விடுகிறது. இதனால் உற்பத்தியின் கூலியானது, நுகர்வோரின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்ய இயலாமல் போகின்றது. இதுவே உலகில் தற்போதுள்ள பணவீழ்ச்சிக்குக் காரணம். [1930 முதல் 1940 வரை இருந்த பெரும் பணப் பற்றாக்குறையைக் குறிப்பிடுகிறார் திரு. குமரப்பா. இக்கடின நிலையை இரண்டாம் உலகப் போர் செய்தே தீர்க்க இயன்றது. இக்காலத்தில் உலகச் சந்தையில் வேளாண் விலை பொருட்களின் கடுமையான விலை வீழ்ச்சியால் இந்திய உழவர்கள் பெரிதும் துயருற்றனர் ]

மக்களின் பொருளாதார வாழ்க்கை என்பது ஓட, ஓட வேகமும் வலிமையும் பெறும் ஒரு ஆற்றைப் போன்றது என்றால், உற்பத்தி செய்ய‌ப்பட்ட பொருட்களை நுகர்வதற்கும் மிகப்பல வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு வாங்கும் திறனை விடுவிப்பதே சரியான வழி - கட்டுப்படுத்துவது அல்ல‌ . நல்ல நீர்கொண்டு ஓடும் ஒரு பெரும் ஆற்றின் கரையில் மாந்த இனம் கடுமையான தாகத்துடன் நிற்கிறது - அள்ளிக் குடிப்பதற்கு ஒரு தங்கக் கோப்பை கையில் இல்லாததால்! முதலாளிய ஆட்சி முறைமையின் கீழ், நம் அனைவருக்கும், கையில் தங்கக் கோப்பை இல்லாமல் நீரை நெருங்கக் கூடாது என்று பாடம் கற்பிக்கப் பட்டுள்ளது - நம் தாகத்தைத் தீர்ப்பதற்கு அது ஒன்றே வழி என்றும் நம்மையறியாமல் ஏற்றுக் கொண்டு விட்டோம்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org