உணவு, உடை, இருக்கை (இருப்பிடம்), ஒழுகலாறு (வாழ்முறை) ஆகியவற்றை அடிப்படைத் தேவைகளாகக் கூறுகிறது சங்கத் தமிழ். விடுதலையைப் பற்றி எழுதிய நம் மீசைக்கவி பாரதியும், விட்டு விடுதலையாகி நிற்பாய் என்று தேவைகளை வரிசையிடும்போது “பீடையிலாததோர் கூடு கட்டிக் கொண்டு” என்கிறான். பீடைகள் எவையெல்லாம் என்று ஜெய்சங்கர் தன் வீடு கட்டிய அனுபவத்தை எழுதும் பொழுது விவரித்திருந்தார். கம்பி, சிமென்ட், கான்கிரீட், ஆற்றுமணல் போன்றவை பெரும் சூழல்சுவடைத் தம் உற்பத்தியிலும், வினியோகத்திலும் உள்ளடக்கி இருப்பதால் அவற்றைத் தவிர்த்து எவ்வாறு வீடு கட்டுவது என்ற தேடலின் விளைவுதான் பீடையிலாததோர் கூடு. சூழல்சுவடைப் பற்றிக் கவலைப் படாத சுயநலவாதிகளாக இருப்பினும், வீடு என்பது அவரவர் தேவையையும், பணவலுவையும் பொறுத்தது எனினும், ஒரே அளவு வசதிகளுக்கு மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாகச் செலவழிப்பது அறியாமையினால் அல்லது வறட்டுக் கவுரவத்தினால் மட்டுமே. இயற்கை அழிவைக் குறைக்கும் கட்டிடத் தொழில்நுட்பங்களைக் குறிப்பெடுப்பதும், அவ்வாறு பீடையிலாத கூடு கட்டி வாழும் விடுதலைக் குருவிகளின் அனுபவங்களைப் பதிவு செய்வதும் தற்சார்பு வாழ்வியல் இதழான தாளாண்மையின் பணிகளில் ஒன்று.
அவ்வரிசையில் முதலில் நாம் காண்பது கற்பகம் ஸ்ரீராம் தம்பதியினரின் எளிய, ஆனால் மிகுந்த நளினத்துடன், எல்லா வசதிகளும் கொண்ட இனிய வீடு. [கற்பகம், ஸ்ரீராம் இருவரும் மும்பையில் பெரு நிறுவனங்களில் பணி புரிந்தவர்கள். நகர வாழ்க்கையின் வன்முறையும், சுரண்டலும் பிடிக்காமல் பொருள்செறிந்த வாழ்வைத் தேடிக் கிராமம் (மதுராந்தகம் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உழவெட்டி) நோக்கிப் பெயர்ந்தவர்கள். இவர்கள் சிந்தனைகளும், செயல்களும், வாழ்க்கையில் எடுத்துள்ள முடிவுகளும் மிகுந்த வியப்பையும், நம்பிக்கையையும் ஊட்டுபவை. இவர்களைப் பற்றி நாம் அடுத்த இதழில் "நம்மிடையே உள்ள நாயகர்கள்" தொடரில் காண்போம்.]