[பசுமை வெங்கிடாசலம் : +91 94435 45862]
ஈரோடு மாவட்டத்தின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தின் உள்பகுதியில் அமைந்துள்ளது பூணாச்சி என்கிற சிறிய கிராமம். இது மேட்டூர் அணையில் இருந்து அந்தியூர் வழியாக சத்தியமங்கலம் செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இது மழை மறைவு பிரதேசமாக அமைந்துள்ளதால் இங்கு பூமி பெரும்பான்மையாக மானாவாரியாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இன்று வரையிலும் இதுவே தொடர்கிறது.
இந்த பூணாச்சியை ஒட்டியுள்ள சிறிய குடியிருப்பு கோணமூக்கனூர். இங்கு வசிக்கும் பாலு (எ) தேவநாராயணனுக்கு சுமார் 10 ஏக்கர் விவசாய பூமி சொந்தமாக உள்ளது. இவர் பரம்பரை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். 1985 ஆம் வருடம் வரை இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கிடைத்த நீரைக்கொண்டு பல விதமான பயிர்களை பயிர் செய்துவந்துள்ளார். அதன் பின் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். இதற்கிடையில் இவரது அப்பா காலத்தில் இருந்து மாட்டை கட்டி எண்ணெய் எடுக்கும் செக்கு வைத்து சுற்று வட்டார மக்களுக்கு எண்ணெய் ஆட்டிக்கொடுத்துவந்துள்ளனர். பின்னர் அதில் மின்மோட்டாரை பொருத்தி பயன்படுத்திவந்துள்ளனர். 1980 வாக்கில் அந்தப்பகுதியில் பல பெரிய எண்ணெய் மில்கள் அமைக்கப்பட்டதால் சிறிய மரச்செக்கின் தேவை படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் அதையும் சுத்தமாக நிறுத்த வேண்டியதாயிற்று. இவர்கள் அந்த செக்கை சொந்தமாக பயன்படுத்தி எண்ணை எடுத்து விற்க முயன்ற போது கலப்பட எண்ணெய்களுடன் போட்டி போட முடியாமல் அதுவும் தடைபட்டது. மரச்செக்கு இன்று வரையிலும் முற்றிலும் ஓட்டமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வறட்சி மற்றும் கலப்பட வியாபாரத்தினால் இந்த குடும்பம் மிகவும் மோசமான பொருளாதார சிக்கலில் அல்லல்பட்டுள்ளது. 2001 இல் இவருக்கு திரு. நம்மாழ்வார் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. பல இயற்கை வழி விவசாயக்கூட்டங்களில் கலந்துகொண்டபின் இவர் தனது வறண்ட நிலத்தில் மரங்கள் வளர்க்க திட்டமிட்டார். 2006 வாக்கில் சுமார் 4 ஏக்கர் நிலத்தில் 10 அடி வரிசையில் 10 அடிக்கு ஒரு மரக்கன்று நட முடிவு செய்து 2x2 அடியில் 1 1/2 அடிக்கு குழி எடுத்துள்ளார். அருகில் உள்ள ஈஷா மையம் வழங்கிய இலவச மரக்கன்றுகளையும் தமிழக அரசு வனத்துறை கொடுத்த பலவிதமான மரக்கன்றுகளையும் பெற்று மழைக்காலத்தில் நடவு செய்துள்ளார்.செடிகளுக்கு அருகில் தனக்கு கிடைத்த மக்காச்சோளத்தட்டு கதிரின் கழிவு மற்றும் எள் தாள் போன்றவற்றை சேகரித்து மூடாக்கு கொடுத்துள்ளார். பஞ்சகவ்யா தயாரித்து நீரில் கலந்து தெளித்தும், ஊற்றியும் வந்துள்ளார்.
இடையில் ஏற்பட்ட கடுமையான வரட்சியில் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை நீரை விலைக்கு வாங்கி லாரியில் கொண்டுவந்து ஆட்களை வைத்து குடத்தில் பிடித்து செடிகளுக்கு ஊற்றியுள்ளார். இதை இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து செய்துள்ளார். மூன்றாவது வருடம் முதல் தண்ணீர் ஊற்றுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். இன்று 7 வருடங்கள் கடந்த நிலையில் மரங்கள் அனைத்தும் 30 அடிக்கு குறையாமல் வளர்ந்து நிமிர்ந்து நிற்கின்றன. தேக்கு, மருது, ஈட்டி, தான்றி, மகாகனி, பூவரசு, வேம்பு, மலைவேம்பு, மூங்கில், வாகை போன்ற தடி மரங்களும், நெல்லி, மா, கொய்யா, எலுமிச்சை, மாதுளை, சப்போட்டா போன்ற பழ மரங்களும் இன்று பசுமை போர்த்தி நேர்த்தியாக நிமிர்ந்து நிற்கின்றன.
நெல்லி நன்றாக காய்க்கத்தொடங்கிவிட்டது. மற்ற பழ மரங்களும் ஓரளவு மகசூல் கொடுக்கத் தொடங்கிவிட்டன. 10 அடி வரிசைக்கு இடையில் சோளம்,எள், உளுந்து, பச்சைப்பயறு, நரிப்பயறு போன்ற தானியப்பயிர்களையும் பருப்பு வகைகளையும் மானாவாரியாக பயிர் செய்கிறார்.
கடந்த 20 வருடங்களாக சாண எரிவாயுக்கலன் (Biogas) பயன்படுத்தி சமையல் செய்யப்படுகிறது. வீட்டிலேயே ஒரு சிறிய மாவு அரைக்கும் எந்திரமும், கடலைக்காய் உடைக்கும் எந்திரமும் வைத்து அருகில் உள்ளவர்களுக்கு அறவை செய்துகொடுக்கிறார். இவருக்கு உறுதுணையாக இவரது மனைவி ஜானகி எல்லா வித வேலைகளையும் பகிர்ந்துகொள்கிறார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். மகன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை செய்கிறார்.
மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியிலும் வறட்சியிலும் மிகவும் மன உறுதியுடன் தனது சொந்த முயற்சியினால் இன்றும் தனது 6 1/4 ஏக்கர் பூமியில் பல விதமான மரங்களை வளர்த்து சாதனை மனிதராக தலை நிமிர்ந்து மகிழ்வுடன் வாழ்கின்றார். தனது தோட்டத்தைச் சுற்றி மெல்ல மெல்ல மாங்கிளுவை கொண்டு வேலி அமைத்துள்ளார். இதற்கு இடையில் இவர் தன் தோட்டத்தில் 800 அடியில் ஆழ்துளைக் குழாய் போட்டு தண்ணீர் கிடைத்துள்ளது. மின் இணைப்பும் பெற்ற பின் துரதிஷ்டவசமாக மறு வருடமே வறட்சியில் தண்ணீர் வற்றிப்போய்விட்டது.
பெற்ற பிள்ளை சோறு போடாவிட்டாலும் வைத்த மரம் காப்பாற்றும் என்ற பழமொழி உண்மை என்பது இவரது வாழ்க்கையில் தெளிவாக தெரிகிறது. இவரது முயற்சியின் வெற்றி மற்றவர்களுக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இவர் தனது அனுபவங்களை மற்றவர்களோடும் பகிர்ந்து உதவி செய்ய தயாராக உள்ளார். விருப்பம் உள்ளவர்கள் இணைந்து பயன்பெறலாம்.
கட்டுரை வடிவாக்க உதவி - பாபுஜி