தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - பரிதி


(இது காலின் டட்சு எனும் உயிரியலாளர் 2005-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றின் சுருக்கப்பட்ட தமிழாக்கம். இது இறுதிப் பகுதி. அவருடைய இணையதள முகவரியும் ஆங்கில மூலக் கட்டுரைக்கான சுட்டியும் இந்தத் தமிழாக்கத்தின் இறுதியில் உள்ளன. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புகளுக்குள் தரப்பட்டுள்ளன. ) - பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

மக்கள்நாயகத்தின் இயல்பும் அதைச் செயல்படுத்துதலும்

பெருவாரியான மக்கள் இணக்கமானவர்களாகவும், அமைதியை விரும்புபவர்களாகவும், பிறருடன் கூட்டுறவு பாவித்து ஒத்துழைப்பவர்களாகவுந்தான் இருப்பார்கள் என்று ஊடாடு கருத்தியல் கட்டியங்கூறுகிறது. மக்களுடைய விருப்பங்களுக்கு முதன்மை தந்தால் - அதாவது, குமுகங்கள் உண்மையிலேயே மக்கள்நாயகத் தன்மையுடையனவாக இருந்தால் - குமுகங்கள் இப்போதைக்காட்டிலும் மிக நல்ல நிலையில் இருக்கும் என்பதையே இது காட்டுகிறது. ஆனால், அமைதியை நாடும் பெரும்பாலான மக்கள் அதிகாரத்தைத் தேடுவதில்லை. அந்த வேலையை ஒரு சில 'கெட்டிக்காரர்களுக்கு' விட்டுவிடுகின்றனர். அந்த ஒரு சிலர் தம்முடைய பேரவாக்களையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதற்கேற்பக் குமுகத்தை வழிநடத்துகிறார்கள். இப்படியாக, அமைதிப் புறாக்களின் அமைதித் தன்மையானது கெட்டிக்காரர்களின் ஆட்சிக்கு வழிவகுக்கிறது. இது குமுகத்தில் உள்ள முரண். இந்தச் சிக்கலை நாம் புரிந்துகொண்டால் அதிலிருந்து மீண்டு, உண்மையான மக்கள்நாயகம் உள்ள குமுகத்தைக் கட்டமைப்பது நம்மால் இயலாத ஒன்றல்ல.

முன்னேற்றம், மேம்பாடு என்பவற்றின் பொருள்

முன்னேற்றம், மேம்பாடு ஆகியவை முதன்மையானவை. தொழில்மயமாதல், மொஉஉ-ஐ உயர்த்துதல் எனப் பொருளியல் அடிப்படையிலேயே இப்போது நாம் அவற்றைக் காண்கிறோம். அதற்கு மாறாக, குமுகவியல், மனவியல் துறைகளின் பார்வையில் அவற்றைப் பார்க்கவேண்டும். மாந்த நல அடிப்படையில் இவ்விரண்டையும் அளக்கவேண்டும். நிலையான சூழலில் ஒன்றோடொன்று அமைதியான வழியில் உறவாடும் குமுகங்களில் வாழும் ஒவ்வொரு தனி மனிதருடைய நிறைவான வாழ்க்கைக்கும் முன்னேற்றம், மேம்பாடு ஆகியன எவ்வாறு பங்களிக்கின்றன என்பது தான் அவற்றை அளவீடு செய்வதற்குச் சரியான களங்கள். இதற்கு மாறாக, இப்போது மேல்நிலையில் உள்ள சிலரால் முன்வைக்கப்படும் முன்னேற்றம், மேம்பாடு ஆகியன அவற்றுக்கு நேர்மாறான நிலைமைக்குத் தான் நம்மை இட்டுச்செல்கின்றன.

மாந்த நலம் பேணுவதற்கேற்ற புதிய முதலாண்மைப் பொருளாதாரம்

இப்போது உலகை ஆள்கின்ற பெருநிறுவன முதலாண்மைப் பொருளாதாரமும் நடுவண்மயமான அரசுகள் திட்டமிட்டுச் செயல்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளும் பெரும்பான்மை மக்களுக்கு நன்மை தரமாட்டா. அவற்றுக்கு எதிரான புதிய பொருளாதார முறைகளே இன்றைய தேவை. [இதையே அன்று காந்தியும் குமரப்பாவும் காந்தியப் பொருளியல் என்றும், பின்னர் சூமாக்கர் பௌத்தப் பொருளியல் என்றும் கூறினர் - நாம் புதிய பொருளாதாரக் கொள்கை என்று கூறி வருவதும் இக்கருத்தே - எனினும் இக்கருத்தை மேலை நாடுகளில் ஒரு அறிவியலாளார் கூறுவதும், அதை நடுவண்மயமான பொருளாதரத்தைத் தவிர எதையும் அறியாத மக்களும், ஊடகங்களும் ஏற்றுக் கொள்வதும் ஒரு முக்கிய நிகழ்வே - ஆசிரியர்]

செய்தொழிலின் முதன்மை

வேளாண்மை என்பது அடிப்படையில் ஒரு செய்தொழில்; சிறுதொழில். அது மீண்டும் முதன்மை நிலையை அடையவேண்டும். அறிவியல் [தொழில்நுட்பம்] ஒரு கருவி; அது முன்னிலை வகிக்கலாகாது. அனைத்துவகையான செய்தொழில்களும் அவற்றுக்குரிய முதன்மையும் சிறப்பும் பெறவேண்டும். மனித இனம் ஈடுபடுவது செய்தொழில்களில்தான். அந்தச் செயல்பாடுகள்தாம் மனித இனத்தின் அடையாளம்.

வேளாண்மைசார்ந்த வாழ்வியலின் முதன்மை

கடும் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகின்ற இவ்வுலகில் வேளாண்மையில் தான் நிறையப் பேருக்கு வேலை தர முடியும். அது மட்டுமன்றி, வேளாண்மை தான் நிலையான வேலை வாய்ப்புத் தரும். சொல்லப்போனால், வேளாண்மையில் எந்த அளவுக்கு மாந்த உழைப்பு அதிகம் தேவைப்படுகிறதோ அந்த அளவுக்கு அது நிலைத்த தன்மையுடையதாக இருக்கும். ஏனெனில், திடீர் திடீரென மாறும் இயல்புள்ள குறிப்பிட்ட நிலவியல் அமைப்பு மற்றும் சூழல் ஆகியவற்றுடன் இயைந்து செயல்படுவதற்கு ஏற்ற நூதனமான முறைமைகளை இயக்குவதற்கு மனிதரால்தான் முடியும், இயந்திரங்களால் முடியாது. (மாந்தச் செயல்பாடுகளால் புவியின் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாகப் பருவ காலங்கள் முன்கூட்டிக் கணிக்கவியலாதவாறு மாறப்போகின்றன. அதற்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் வேளாண் முறைகள் இப்போது தேவை. அப்படியானால், உடனடியாகச் சிந்தித்துச் செயல்படக்கூடியவர்கள் வேளாண்மையில் ஈடுபடவேண்டும். இயந்திரங்களும் ஓரினப் பயிர் சாகுபடி முறைகளும் பெருமளவு இறுக்கமானவை; நெகிழ்வுத் தன்மை இல்லாதவை.)

ஆனால், வேளாண்மைசார்ந்த ஊர்ப்புற வாழ்முறை மட்டமானது என்ற கருத்து தொழிற்புரட்சி தொடங்கிய காலம் முதல் பரப்பப்பட்டுவருகிறது. அத்தகைய வாழ்முறைதான் உலகின் முதற்பெரும் சிக்கல் என்றும் அதுதான் 'முன்னேற்ற'த்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது போலவும் இப்போது பரவலாகக் கருதப்படுகின்றது. நகரமயமாதல்தான் 'மேம்பாட்டின்' முதன்மை அளவீடாக உள்ளது. எந்த அளவு குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் நிலத்தில் நேரடியாக வேலை செய்கிறார்களோ அந்த அளவு அனைவருக்கும் நல்லது என்ற கருத்துக் கொண்ட கொள்கைத்திட்டங்கள் உலகெங்கும் பரப்பப்பட்டுவருகின்றன. ஆனால், [எடுத்துக்காட்டாக] இந்தியாவும் அமெரிக்காவைப் பின்பற்றினால் என்ன ஆகும்? ஏறத்தாழ ஐம்பது கோடிப்பேருக்கு வேலை போகும்!

ஒரு நாட்டில் எத்தனை விழுக்காட்டு மக்கள் நகர்ப்புறங்களில் வாழலாம், எத்தனைப் பேர் ஊர்ப்புறங்களில் வாழலாம் என்பது குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் உடனடித் தேவைகள். ருவான்டா நாட்டில் தொண்ணூறு விழுக்காட்டினர் ஊர்ப்புறங்களில் வாழ்கின்றனர். நகர்ப்புறங்களில் வாழும் மீதிப் பத்து விழுக்காட்டினரைக் கொண்டு சற்று மேம்பாடடைந்த குமுகத்தைக் கட்டமைக்க இயலாதுபோகலாம். அதனால் அங்கு அந்த விகிதத்தை மாற்றவேண்டியிருக்கலாம். ஆனால், அமெரிக்கா, ப்ரிட்டன் ஆகிய நாடுகளில் இருப்பதைப்போல, ஒரேயொரு விழுக்காட்டினர் மட்டும் ஊர்ப்புறங்களிலும் பிறர் நகர்களிலும் வாழ்வது பெரும் குமுகவிய மற்றும் சூழலிய ஆபத்துகளுக்கே வழிவகுக்கும். எந்தவொரு நாடும் தன் மக்கள்தொகையில் குறைந்தது இருபது முதல் அதிகப்படி அறுபது விழுக்காட்டு மக்களை வேளாண்மையில் ஈடுபடுத்தவேண்டும் என்பதை முதல் கணிப்பாக வைத்துக்கொள்ளலாமோ? இப்போது உலகில் அறுதிப் பெரும்பாலான உழவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் வாழ்க்கை மிக மிகக் கடினமானதாக உள்ளது. அவர்கள் அனைத்தையும் இழந்தவர்களாகத்தான் உள்ளனர். ஆனால் ஊர்ப்புற வாழ்க்கை இப்படி மோசமாக இருக்கவேண்டியதில்லை. முதன்மையான நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தொழில்நுட்பங்கள் நம்மிடையே உள்ளன. முறையான நிலச் சீர்திருத்தம் தேவை. வேளாண்மையில் இருந்து நிலத்தைப் பறிப்பதற்கு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு வழிகளைக் கையாள்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தவறானவை; மாற்றப்படவேண்டியவை. எப்படியாவது ஊர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்தவேண்டும், அத்தகைய வாழ்க்கையின் மதிப்பை அதிகரிக்கவேண்டும். இதுதான் முதலில் செய்யப்படவேண்டிய மாற்றம். [தாளாண்மையின் கோட்பாடுகளில் ஒன்றான 'கெடுமுன் கிராமம் சேர்' என்பதை இங்கு நினைவு கொள்ளவும்!]

அறிவியல் மீட்பு

அறிவியலும் அறிவியல்வாணர்களும் தவறான கூட்டத்துடன் இணைந்துள்ளனர். அவர்கள் பெருந்தொழில்களின் கையாள்களாகிவிட்டார்கள். ஆனால் அவர்கள் அதைவிட மிக மேன்மையான பொறுப்பு வகிக்கக் கடமைப்பட்டவர்கள். அவர்கள் தம் அறிவுத் துறைகளில் கட்டுப்பாடற்று இயங்குவதையும் மெய்யாகவே மாந்த நலனுக்குகந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும் நாம் அனைவரும் உறுதி செய்யவேண்டும்.

சமைத்தலின் முதன்மை

மக்கள் மீண்டும் சமையற்கலையில் ஈடுபட்டு உடலுக்கு நன்மை தரும் உணவு வகைகளைச் சமைத்தால் அவற்றுக்கான விளைபொருள்களின் தேவை பெருகும்; அவற்றை விளைவிப்பதற்கு உழவர்கள் ஊக்குவிக்கப்படுவர்; அவர்களின் வாழ்நிலையும் மேம்படும். [இப்போது இங்கு சிறுதானியங்களின் தேவை அதிகரித்துவருவதை ஓரளவு இத்துடன் பொருத்திப்பார்க்கலாம்.]

அடித்தட்டு மக்களுடன் இணைதல், உலக உணவுக் கழகம் அமைத்தல்

மிகப் பெரும் மாற்றமே இப்போதைய தேவை. அரசாங்கங்கள் இவற்றைச் செய்யும் என நாம் எதிர்பார்க்கமுடியாது. உலக வரலாற்றில் அடிப்படை மாற்றங்கள் அனைத்துமே அடித்தட்டு மக்கள் இயக்கங்கங்களால் தாம் கொண்டுவரப்பட்டன. உயிர்ம‌ வேளாண்மையும் இப்போது அப்படித்தான் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. முற்போக்கு உழவர்கள், உணவு பதப் படுத்துபவர்கள், நுகர்வோர், சமையற் கலைஞர்கள் ஆகிய அனைவரையும் இணைக்கும்வகையில் உலக உணவுக் கழகம் ஒன்றை நாம் நிறுவவேண்டும். நல்ல வேளாண் பொருள்களை வாங்குவதாக நுகர்வோர் உறுதியளித்தால் உழவர்களும் பதப்படுத்துவோரும் உடனடியாகத் தம்மை அம்முயற்சியில் ஈடுபடுத்திக்கொள்வார்கள். இத்தகைய அமைப்பிற்கான வித்துகள் ஏற்கெனவே உள்ளன: இத்தாலியில் தொடங்கப்பட்ட [உடனடி உணவு, துரித உணவு ஆகியவற்றுக்கு மாறான] 'மெதுவான உணவுக் கழகம்', பல்வேறு உயிர்ம‌ வேளாண் இயக்கங்கள், கால்நடைகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் இயக்கங்கள், மாந்த நேய அடிப்படையில் அமைந்த மாற்றுத் தொழில்நுட்ப ஆர்வலர்கள், சூழலியாளர்கள் உள்ளிட்ட பலரும் உலக உணவுக் கழகத்தில் இணையலாம்.

முடிவுரை

உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் சத்தான உணவைக் கொடுக்க முடியும்; அதையும் சூழலைக் கெடுக்காத வழிகளில் செய்யவியலும். அதற்கான அறிவும் தொழில்நுட்பங்களும் நம்மிடையே உள்ளன. அதற்குகந்த செயலுத்திகளும் திட்டக்கொள்கைகளுந்தான் இப்போதைய தேவைகள். பொருளாதாரம், நீதிநெறி, அரசியல், அறிவியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த சிந்தனை தேவை. உண்மையான மக்கள்நாயகச் செயல்பாட்டை அனைத்துக் குமுகங்களிலும் நடைமுறைப்படுத்துவது மேற்கண்ட அனைத்துக்கும் நடுநாயகமான தேவை. அதிகாரம் மக்களிடம் இருக்கவேண்டும்; ஒரு சிலரிடம் அன்று. நுணுக்கமான, இயற்கை சார்ந்த வேளாண் முறைகளைக் [கொச்சையாக] எளிமைப்படுத்தும் வல்லுநர்களுடைய முயற்சிகளைக் காட்டிலும் சாதாரண மக்களின் திறன்களும் அடிப்படை நீதிநெறிப் பண்பும் உயர்ந்தவை.]

<சில விளக்கங்கள் http://levine.sscnet.ucla.edu/general/whatis.htm, http://www.bbc.com/news/magazine-31503875 ஆகிய இணைய தளங்களில் இருந்து பெறப்பட்டன. மேலும், சென்னைப் பல்கலைத் தமிழ் அகரமுதலி, பேரா. அருளி தொகுத்த 'அருங்கலைச் சொல் அகரமுதலி' (தஞ்சைப் பல்கலை), dictionary.tamilcube.com எனும் இணைய தளம் ஆகியவையும் மொழியாக்கத்தின்போது பயன்படுத்தப்பட்டன.

மூலக் கட்டுரையாளருடைய இணையதள முகவரி: http://www.colintudge.com

மூலக் கட்டுரை: Colin Tudge, “Feeding People is Easy: But we have to re-think the world from first principles”, Public Health Nutrition: 8(5A, 716-723, 2005.

அருஞ்சொற்பொருள், அயல்மொழிச் சொற்கள்


1. ஊடாடு கருத்தியல் - (வெவ்வேறு சூழ்நிலைகளில் மக்கள் ஒருவரோடொருவர் எப்படி உறவாடுகிறார்கள், முடிவெடுக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வுகள்; மேலும், குழுக்களிடையே நிலவும் பிணக்குகள் மற்றும் செயலுத்திகள் தொடர்பான ஆய்வுகள்) game theory
2. குமுகம் - சமூகம் என்பதன் தமிழ் வடிவம்
3. மக்கள்நாயகம் - சனநாயகம் என்பதன் தமிழ் வடிவம்
4. பேரவா - பேராசை என்பதன் தமிழ் வடிவம்
5. மொஉஉ - மொத்த உள்நாட்டு உற்பத்தி gross domestic product (gdp)
6. முதலாண்மைப் பொருளாதாரம் - முதலாளித்துவம் (capitalism) என்பதன் தமிழ் வடிவம்
7. நடு, நடுவண் - 'மைய', 'மத்திய' என்பவற்றின் தமிழ் வடிவம்
8. சூமாக்கர் - Schumacher
9. விழுக்காட்டு - சதவீத என்பதன் தமிழ் வடிவம்
10. ருவான்டா - Rwanda
11. இத்தாலி - Italy
12. உலக உணவுக் கழகம் - World Food Club
13. மெதுவான உணவுக் கழகம் - Slow Food Club
14. செயலுத்தி - Strategy

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org