Indian Robin (Saxicoloides Fulicata)
தோற்றம்
குருவி அளவு தான் இருக்கும். ஆண்கள் கருப்பு நிறத்திலும், சிறகுகளில் வெள்ளை இழைகள் மற்றும் வால் அடியில் சிகப்பு நிறத்திலும் இருக்கும். கருப்பு நிறம் மிகவும் பளபளப்பாக அமைந்து இருக்கும். பெண்கள் சாம்பல் / பழுப்பு நிறத்தில் இருக்கும். இருவருக்கும் சற்று வால் தூக்கியே அமைந்திருக்கும்.
காணும் இடம்
இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய இடங்களில் காணலாம். மக்கள் அதிகம் வாழும் இடங்களில் இவற்றை காணலாம். நகரம், கிராமம், பூங்கா, வயல்கள் என்று எல்லா இடங்களிலும் இவற்றைக் காணலாம். இந்திய பறவையியல் கழகத்தில் பி.ராஜசேகர் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில், ஒரு ஆண் பறவையின் ஆட்சி எல்லை சுமார் ஒன்றேகால் காணி (6650 ச. மீ) என்று குறிப்பிட்டுள்ளார். அதிக இடங்களைச் சுற்றிப் பார்க்கும் பழக்கம் இதற்கு இல்லை போல.
உணவு
ஆண் கருஞ்சிட்டு
படம் உதவி: ராம்கி சீனிவாசன்பூச்சிகள், புழுக்கள்,சிலந்திகள்,தவளைகள்,பல்லிகள், கரையான் அனைத்தையும் உண்ணும். உழவனின் நண்பனே!
இனப்பெருக்கம்
பங்குனி முதல் ஆனி வரை (March to June) இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஆண்கள் பெண்ணைச் சுற்றிச் சுற்றி வந்து தன் பக்கம் ஈர்க்கும். ஒரு பெண்ணுக்குக் குறைந்தது நான்கு ஆண் பறவைகள் போட்டியிடும். சிறகுகளை படபட என்று அடித்து மற்ற ஆண்களைத் துரத்தும். ஆண்பறவை தன் அழகிய குரலாலும் பெண்ணை ஈர்க்கும். மரவங்குகளி்ல் அல்லது பாறை வங்குகளி்ல் தன் கூட்டைக் கட்டும். குழாயில் குப்பைகளைக் கொண்டு கூடு கட்டியதைக் கவிதையாக வடித்திருக்கிறார் கவிஞர் சாரல் (பார்க்க இவ்விதழின் கவிதைப் பக்கம் : 36p). பாம்புத் தோல், மற்ற பறவைகளின் சிறகுகள், வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு கூடு கட்டும். 2 - 3 முட்டைகள் இடும். பெண்களே அடைக்காக்கும். ஆண்கள் குஞ்சு பொரித்த பிறகு உணவு ஊட்ட ஈடுபடும்.
சிறப்புச் செய்தி
இவற்றில் பல வகைகள் இருக்கின்றன. நிறத்தை வைத்துதான் அடையாளம் கண்டு கொள்ள முடியும். Fulicata இனம் தமிழ் நாட்டில் தென்படுவது.