தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

சென்னையில் விதைத் திருவிழா - அனந்து


சென்னையில் ஒரு விதைத் திருவிழா! விதை, விதை உரிமை மற்றும் விவசாயம் விவசாயிகளின் கையிலே மட்டுமே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உலகமெங்கும் மே 23 அன்று " மார்ச் அகைன்ஸ்ட் மொன்சான்டொ" என்னும் மொன்சான்டோவிற்கு எதிரான போராட்டம் 500க்கும் மேற் பட்ட நகரங்களில் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவிலும் பல நகரங்களில் நடந்தது, தமிழகத்தில் மதுரை, திருவாருர், சென்னை மற்றும் பாண்டியிலும் நடந்தது.

விவசாயத்தில் பெரும் கம்பனிக்களின் ஆதிக்கம் இருக்ககூடாது. அதன் ஒரு குறியீடாகவே பெரும் அரக்கக்கம்பனியான மொன்சான்டோவிற்கு அதிராக, விவசாயிகளின் உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் காத்திட இந்த போராட்டம் வருடாவருடம் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு சென்னையில் போராட்டமாக இல்லாமல், நம் பாரம்பரிய விதைகளை எடுத்துக்காட்டும் விதமாகவும், விதை பன்மையத்தை எடுத்துரிக்கவும் பாரம்பரிய விதைகளை கண்காட்சிக்கு வைத்து அவற்றை போற்றி பாதுகாத்து வரும் விவசாயிகளையும், விவசாயக்குழுக்களையும் கவுரவிக்கவும் இதனை " பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பினர்" நடத்தினர்.

பல வகையான பாரம்பரிய நெல் வகைகள், அவ்வரிசிகளின் குணம் மற்றும் பயன், காய் கறி விதைகள், பழ வகைகள், சிறு தானியங்கள், பருத்தி வகைகள் என பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

இதில் மறந்து/மறுக்கப்பட்டு விட்ட கருங்கண்ணி பருத்தியை திண்டுக்கல்லில் அதனை ஒரு விவசாயக்குழுவுடன் காப்பாற்றி வரும் விஸ்வாசம் அவர்களின் குழு இடம் பெற்றது .

தமது 14 வயதில் தந்தையை (விவசாயக்கடன் தொல்லையால்) தற்கொலைக்கு பறி கொடுத்த கர்னாடகாவின் தார்வாட் ஜில்லாவை சேர்ந்த சங்கரப்பா அவர்கள், இயற்கை விவசாயத்தால் தலை நிமிர்ந்து, இன்று 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் சேர்ந்து 80 வகையான் நெல், பல பருப்பு மற்றும் சிறுதானியங்களின் விதைகளை காத்து வருகிறார்.

முசிறியில் 20 விவசாயிகளுடன் இணைந்து நாட்டு காய் கறிகளின் விதைகளை  பாதுகாத்து வரும் யோகானந்தம் குழுவினர்.

பல பாரம்பரிய விதைகளை காத்தும், இந்தியாவின் ஒரே விவசாயிகளின் சொந்த விதை கம்பனியை உருவாக்கிய கர்நாடகாவின் சஹஜ சம்ருத்தா, மற்றும் தளி மற்றும் கர்நாடகாவில் விதை பாதுகாத்து வரும் 'க்ரீன் ஃபவுன்டேஷனு'ம் வந்திருந்து சிறப்பிதிருந்தனர்.

மைசூர் அருகில் 800 நெல் வகைகளையும் 120 மா வகைகளையும் பாதுகாக்கும் அப்துல் கனி அவர்கள்.

தனி பெண்மணியாக மிகவும் நேர்த்தியுடனும் சிறப்பாகவும் சிறு இடத்திலிருந்து விதைகளை காத்தும் அந்த அரிய காய்கறி விதைகளை தனது நட்பு வட்டத்தின் வாயிலாக பலருக்கும் கொடுத்து காத்து வரும் ஆரோவில்லின் தீபிகா..

இப்படி பல விதை விற்பன்னர்கள் சென்னைக்கு வந்திருந்தது  முதல் முறை. சென்னையும் அவர்களை பலமாக ஆதரித்தது. ஒரு நகரத்தின் மக்கள் விதையை இப்படி கொண்டாடுவார்களென இந்த விழாவின் ஏற்பாட்டாளர்கள் கொஞ்சமும் நினைக்கவில்லை..பல தரப்பட்ட மக்களும் வந்து எல்லா வகையான விதைகளையும் பார்த்து பல கேள்விகளை கேட்டு தங்கள் மாடித்தோட்டத்திற்கு அல்லது ஊரிலுள்ள விவசாய நிலனுக்கு என்று பல விதைகளையும் பாவித்தனர்.

70 வயதே நிரம்பிய அரியலூரின் மோஹனகிருட்டினனின் பல வகையான மூலிகை செடிகள் மற்றும் அவரது விளக்கங்களும் எல்லொராஇயும் ஆச்சிரியப்பட வைத்தது. இவை தவிர, மரபணு மாற்றுப்பயிர்கள்/உணவுகளின் கேடு பற்றி சில அரங்குகளும், பல தரவுகளும் மிக அழகாக எடுத்துரைக்கும் வண்ணமிருந்தன. மேலும் மாடித்தோட்டத்திற்கான பயிற்சி, ஆலோசனைகள் மற்றும் பொருட்கள்; இயற்கை விவசாய பொருட்கள், காய், பழங்கள்; இயற்கை பருத்தியினின்று கைதறியாக நெய்து, இயற்கை சாயம் பூசி, கையால் தைக்கப்பட்ட "துலா" ஆடைகள் என பலவும் எல்லோரையும் ஈர்த்தது.

இவை எல்லாவற்றையும் விட பெரிய கவர்ச்சி - இயற்கை இடுபொருட்களாலான பாரம்பரிய உணவு வகைகள். தினை பணியாரம், வரகு சாம்பார் சாதம், பல தானிய லட்டு, தினை பால் கொழுகட்டை, முடக்கித்தான் சாறு, மூலிகை டீ, என பல வகையான சிறந்த ஊணவுப்பொருட்கள். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை சம்பா தோசை வார்த்து வழங்கிய வண்ணம் இருந்தனர் சமீபத்தில் இயற்கை விவசாயத்திற்கு வந்து தாமே விளைவித்த மப்பிள்ளை சம்பாவினின்று இளைஞர் குழு ஒன்று!  

இயற்கை விவசாயத்தில் ஈடுபாடும் தாங்களே நேரடி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ந‌டிகர்கள் பசுபதி, கிஷோர், ரோஹினி போன்றவர்களும், மற்றும் பல துறையினின்றும் பிரபலங்கள் வந்திருந்தனர். ஆயினும் எல்லொரும் கேட்ட கேள்வி- " எப்படி இவ்வளவு இளைஞர்கள் இங்கு வந்துள்ளனர்? இந்த ஐ டி துறை இளைஞர், உவதிகளுக்கு அப்படி என்ன ஈர்ப்பு (இயற்கை) விவசாயத்தின் மேல்?" அது ஒன்றே பிற்காலத்துக்கான நம்பிக்கையாக பார்க்கிறோம் என்றனர் இந்த விழாவை ஏற்பாடு செய்த பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org