உணவு, உடை, இருக்கை (இருப்பிடம்), ஒழுகலாறு (வாழ்முறை) ஆகியவற்றை அடிப்படைத் தேவைகளாகக் கூறுகிறது சங்கத் தமிழ். விடுதலையைப் பற்றி எழுதிய நம் மீசைக்கவி பாரதியும், விட்டு விடுதலையாகி நிற்பாய் என்று தேவைகளை வரிசையிடும்போது “பீடையிலாததோர் கூடு கட்டிக் கொண்டு” என்கிறான். பீடைகள் எவையெல்லாம் என்று ஜெய்சங்கர் தன் வீடு கட்டிய அனுபவத்தை எழுதும் பொழுது விவரித்திருந்தார். கம்பி, சிமென்ட், கான்கிரீட், ஆற்றுமணல் போன்றவை பெரும் சூழல்சுவடைத் தம் உற்பத்தியிலும், வினியோகத்திலும் உள்ளடக்கி இருப்பதால் அவற்றைத் தவிர்த்து எவ்வாறு வீடு கட்டுவது என்ற தேடலின் விளைவுதான் பீடையிலாததோர் கூடு. சூழல்சுவடைப் பற்றிக் கவலைப் படாத சுயநலவாதிகளாக இருப்பினும், வீடு என்பது அவரவர் தேவையையும், பணவலுவையும் பொறுத்தது எனினும், ஒரே அளவு வசதிகளுக்கு மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாகச் செலவழிப்பது அறியாமையினால் அல்லது வறட்டுக் கவுரவத்தினால் மட்டுமே. இயற்கை அழிவைக் குறைக்கும் கட்டிடத் தொழில்நுட்பங்களைக் குறிப்பெடுப்பதும், அவ்வாறு பீடையிலாத கூடு கட்டி வாழும் விடுதலைக் குருவிகளின் அனுபவங்களைப் பதிவு செய்வதும் தற்சார்பு வாழ்வியல் இதழான தாளாண்மையின் பணிகளில் ஒன்று.
அவ்வரிசையில் முதலில் நாம் காண்பது கற்பகம் ஸ்ரீராம் தம்பதியினரின் எளிய, ஆனால் மிகுந்த நளினத்துடன், எல்லா வசதிகளும் கொண்ட இனிய வீடு. [கற்பகம், ஸ்ரீராம் இருவரும் மும்பையில் பெரு நிறுவனங்களில் பணி புரிந்தவர்கள். நகர வாழ்க்கையின் வன்முறையும், சுரண்டலும் பிடிக்காமல் பொருள்செறிந்த வாழ்வைத் தேடிக் கிராமம் (மதுராந்தகம் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உழவெட்டி) நோக்கிப் பெயர்ந்தவர்கள். இவர்கள் சிந்தனைகளும், செயல்களும், வாழ்க்கையில் எடுத்துள்ள முடிவுகளும் மிகுந்த வியப்பையும், நம்பிக்கையையும் ஊட்டுபவை. இவர்களைப் பற்றி நாம் அடுத்த இதழில் "நம்மிடையே உள்ள நாயகர்கள்" தொடரில் காண்போம்.]
தாளாண்மை: வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்? கற்பகம் ஸ்ரீராம்: நகரத்து வீட்டிற்கும், வயல்வெளி வீட்டிற்கும் பயன்பாட்டில் நிறைய வேறுபாடு உள்ளது. நகரத்தில் 24 மணிநேரமும் வீட்டினுள் வசிக்கிறோம். இங்குப் பண்ணையிலோ, மழை பெய்யும் நேரம் தவிர, உணவு சமைக்க, உண்ண, மற்றும் இரவு நேரம் மட்டுமே வீட்டினுள் இருக்கிறோம். எனவே அடிப்படைத் தேவைகளுக்குத் தான் வீடு என்று முடிவு செய்தோம்.
சூழல்சுவடு குறைந்த வீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது வேறு சில தேவைகளும் கருத்தில் கொள்ளப் பட்டன.
1. பூச்சி, பொட்டுகளில் இருந்து நகரத்துபாதுகாக்க வேண்டும் (குறிப்பாகத் தேள்)
2. மழை, வெய்யிலில் இருந்து பாதுகாக்க வேண்டும்
3. நிரந்தரத் தன்மை கொண்டதாகவும், அடிக்கடி சீர் செய்ய வேண்டிய தேவையின்றியும் இருக்க வேண்டும்
4. கரையானுக்கு ஊக்கம் அளிப்பதாய் இருத்தல் கூடாது! நம் தமிழ்நாட்டில், மலைப் பிரதேசங்களைத் தவிர பிற இடங்கள் அனைத்தும் வெப்பமான, வியர்வை வழியும் தட்பவெட்பம் கொண்டவையே. இதற்கு ஏற்ற வீடு என்பது சாய்கூரையும், லேசான சுவர்களும், நிறைய சன்னல்களும், சுவற்றுக்கும் கூரைக்கும் இடையே சூடான காற்று வெளியேறுமாறு இடைவெளிகளும் கொண்டதாக இருக்க வேண்டும். சுவற்றில் வெய்யில் சற்றும் படாத அளவு சுவற்றைத் தாண்டிக் கூரை நீண்டு இருக்க வேண்டும். (வடிவமைப்பிற்கு Barefoot Architect என்ற நூல் எங்களுக்கு மிகவும் உதவியது)
இதைத் தவிர நாங்கள் இப்பண்ணையை வாங்கும்போதே அதில் கிணற்றுக்கு அருகில் கிணற்று மண்ணை நிரவிய ஒரு பெரும் மேடான பகுதி இருந்தது. அதில் ஒரு பெரிய வேப்ப மரத்தடியில் கான்கிரீட்டினால் ஆன ஒரு கிடங்கு இருந்தது. எனவே நாங்கள் விவசாயத் தேவைக்கென வீட்டில் இடம் ஏதும் ஒதுக்க வேண்டியிருக்கவில்லை. இந்த மேட்டிலேயே மற்றொரு பகுதியில் நாங்கள் வீடெடுக்கத் திட்டமிட்டோம். எங்கள் தேவைகள் ஒரு குளியல் மற்றும் கழிப்பறை, ஒரு படுக்கையறை, சமையல் மேடை, மற்றும் உட்கார்ந்து பேச, விருந்தோம்ப ஒரு வாழ்வறை - இதுவே. எனவே நாங்கள் 21' x 11' கொண்ட அறையின் ஒரு பகுதி சமையலறையாகவும் மறுபகுதி வரவேற்பறையாகவும் வடிவமைத்தோம். 15'x 11' அடி கொண்ட படுக்கையறை பக்க வாட்டில் அமைந்தது. அழகிய 5 வேப்ப மரங்கள் இருந்ததால் அவற்றைப் பாதுகாத்துக் கட்ட வேண்டும் என்ற அக்கறையில் L வடிவத்தில் வீடமைத்தோம்.
தாளாண்மை: கட்டுமானப் பொருட்கள், அவற்றின் தேர்வு பற்றிக் கூறுங்கள்
கற்பகம் ஸ்ரீராம்: கிணற்றுமண் படுகையில் ஏற்கனவே பல கற்கள் சரியான படிமானம் இன்றி உட்சென்று விட்டதால், கல்லால் கடைகால் (அஸ்திவாரம்) செய்ய இயலாமல் போயிற்று. எனவே நாங்கள் கான்கிரீட் பீம் கொண்டு கடைகால் அமைத்தோம். வீட்டின் சுவர்களை சுட்ட செங்கல்லால், லாரி பேக்கர் பிரபலப் படுத்திய எலிப்பொறி இணைப்பு (rat-trap bond ) முறையில் சிமென்ட்-மணல் கலவை கொண்டு கட்டினோம்.சுவர்களை வெளிப்பக்கம் சாணியால் பூசி, உள்பக்கம் சுண்ணாம்பு அடித்து அப்படியே விட்டு விட்டோம். சன்னல்களுக்குப் பெருமளவு சிமென்ட் ஜாலிக்களைப் பதித்தோம். கதவு மற்றும் முக்கிய சன்னல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பழைய மரக் கதவு, சன்னல்களைப் பயன்படுத்தினோம். தரைக்கு டைல்ஸ் பதித்துள்ளோம்.
தாளாண்மை: கூரையைப் பற்றிக் கூறுங்கள்
கற்பகம் ஸ்ரீராம்: கூரையில்தான் சூட்சுமமே உள்ளது. நாம் பெரும்பாலும் பூச்சி பொட்டுக்குப் பயந்தோ அல்லது அடிக்கடி பராமரிக்க வேண்டிய மெனக்கெடலுக்குப் பயந்தோ சம தளமான, பராமரிப்புத் தேவை குறைந்த கான்கிரீட் கூரையை விரும்புகிறோம். வீட்டில் உள்ள போது கூரையில் இருந்து தேளோ, பாம்போ விழாது என்ற துணிவுடன் வலம் வரலாம், உறங்கலாம். ஆனால் அந்தப் பாதுகாப்பளிக்கும் கான்கிரீட் கூரைக்கென நாம் செலவிடும் பணமும், அதனால் ஏற்படும் சூழல் அழிவும் மிக அதிகம். இன்று ஆற்றுப் படுகைகளில் மண்திருட்டு அளவற்று நடந்து தாமிரபரணி, பாலாறு போன்ற பல ஆறுகள் உயிரிழந்து காணப்படுகின்றன. எனவே பாதுகாப்பாகவும், சூழல் அழிவு குறைவானதும் ஆன ஒரு கூரையைத் தேடிக் கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் Point Return என்னும் இடத்தில் திரு.டி.வி.ஸ்ரீதரன் அவர்கள் வடிவமைத்தை கூரையைக் கண்டோம்.
அவர் கீழே இரும்புத் தகடும், அதன்மேல் தாரால் (tar - bitumen) ஆன பாயும், அதன் மேல் நம் கிராமங்களில் பயன்படுத்தும் குழைவு ஓடும் கொண்ட ஒரு கூரையை வடிவமைத்திருந்தார். நாங்களும் அதையே (தார் பாய் இல்லாமல்) பயன்படுத்தினோம். விட்டம் சாரம் போன்றவை இரும்பால் ஆனதால் நாங்கள் கரையானுக்கு அஞ்ச வேண்டியதில்லை. இதுவும் சூழல் சுவடுதான் - ஆனால் கான்கிரீட்டைப் பார்க்கும்போது பெருமளவு குறைந்தது.
தாளாண்மை: இது ஒரு வகையில் பழமைக்கும் புதுமைக்கும் இடைப்பட்ட ஒரு நடுப்பாதையாக இருக்கிறது. ஆனால் இரும்புத் தகடு நம் வெய்யிலில் அடுப்பைப்போல் கொதித்து விடுமே? அதன்மேல் குழைவு ஓடு எப்படி நிற்கும்?
கற்பகம் ஸ்ரீராம்: அதற்குத்தான் நாங்கள் அதன் மேல் குழைவு ஓடு அடுக்குகிறோம். நீங்களே தொட்டுப் பாருங்களேன், பகல் 12 மணிக்கு எப்படி இருக்கிறது என்று! குழைவு ஓடுதான் நின்று கொண்டிருக்கிறதே!
(இவ்வுரையாடலின் போது நாங்கள் அவர்கள் வீட்டினுள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது மின்தடை ஏற்பட்டபோதும் வெப்பம் பெரிதாய் இருக்கவில்லை. கூரை கொதிக்கவும் இல்லை.நம் முன்னோர்கள் வடிவமைத்த குழைவு ஓடு எவ்வளவு அறிவியல் நுட்பமானது என்று உணர முடிந்தது.)
தாளாண்மை: வீட்டைச் சுற்றி எல்லா பக்கமும் கீற்றால் வேய்ந்த தாழ்வாரம் அமைத்திருக்கிறீர்களே?
கற்பகம் ஸ்ரீராம்: இதுவும் எங்கள் வடிவமைப்பின் ஒரு கூறுதான். சுவற்றில் நேரடியாக வெய்யில் படாது இருக்கவே இவ்வேற்பாடு.
தாளாண்மை: இந்த வீட்டைக் கட்ட என்ன செலவு ஆயிற்று?
கற்பகம் ஸ்ரீராம்: 550 சதுர அடி கொண்ட வீட்டைக் கட்ட (2014ல்) ரூ. 2,20,000 ஆயிற்று. இதில் 25% கூலிக்குச் செலவு ஆனது. கீற்றில் தாழ்வாரம் அமைக்க ரூ.12,000 ஆனது. 25 நாட்கள் வேலை செய்தோம், 50 நாட்களில் நடந்தேறியது
தோரோ வால்டன் குளக்கரையில் தன் கையால் தானே கட்டிய வீட்டில் வசித்ததைப் பார்த்தது போல் இருந்தது எனக்கு!
(தொடர்பிற்கும் பிற விவரங்களுக்கும்: கற்பகம் ஸ்ரீராம் - 9445560811)