தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே - ஜெயக்குமார்


சென்ற இதழில் 50 ஏக்கர் கொண்ட‌ பெரும் பண்ணையை எவ்வாறு பாரம்பரிய நெல் ரகங்களையும், இயற்கை வேளாண்மையும் கொண்டு லாபகரமாக மாற்றினார் என்று நண்பர் ஸ்ரீராம் பற்றி எழுதியிருந்தோம். இவ்விதழில் அவரின் நண்பரும் சக இயற்கை விவசாயியும் ஆன திரு. அசோகன் அவர்களின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான திட்டத்தை வெளியிடுவதாகவும் அறிவித்திருந்தோம். அதன் தொடர்ச்சியான கட்டுரை இது.

இக்கட்டுரையைப் பயன்படுத்துமுன் விவசாயிகள் மற்றும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்கள், சில அடிப்படை உண்மைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நம் காவிரிக் கடைமடைப் பாசனப் பகுதியில் நெல்லைத் தவிர பிற பயிர்கள் விளைப்பது கடினமே - எனினும் வீட்டுக் கொல்லையிலோ, அல்லது வயலிலேயே 50 குழி (16 1/2 சென்ட்) போன்ற ஒரு சிறு பகுதியைத் திடலாக்கி, நீர் தேங்காதவாறு வடிகால் வசதியுடன் வடிவமைத்துக் கொண்டு அதில் நம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை இயற்கை முறையில் சாகுபடி செய்தால் வீட்டுச் செலவைப் பெருமளவு குறைப்பதோடு மிகவும் ஆரோக்கியமான உணவையும் உண்ணலாம். செலவைக் குறைப்பதே ஒரு வருமானம் என்று உழவர்கள் சிந்திப்பதே இல்லை.

எடுத்துக்காட்டாக நெல் மட்டுமே விளைத்துப் பிற பொருட்களை விலை கொடுத்து வாங்கும் ஒரு விவசாயிக்கும், இயன்ற வரை தன் தேவைகளைத் தானே விளைத்துக் கொள்ளும் தற்சார்பு விவசாயிக்கும் ஒரு ஒப்பிடல் கீழுள்ள அட்டவணையில் உள்ளது. இதில் எண்கள் இடத்துக்கு இடம் மாறுபடலாம் ஆனால் கருத்து ஒன்றுதான்.

ஏறத்தாழ வருடம் 45,000 ரூ வருமானத்தை வீணடிக்கிறோமல்லவா? இது 50 மூட்டை நெல்லுக்கு இணையல்லவா? இதே போல் டீ, காப்பி போன்ற பானங்களுக்கு மாறாக இஞ்சி, துளசி, புதினா போன்ற தேயிலைகள், குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிக்கு மாற்றாக மாதுளை, மா, கொய்யா, பப்பாளி, வாழை, நாவல் போன்ற நல்ல பழங்கள் என்று நாம் தற்சார்பை நோக்கிப் பயணித்தால் வீட்டிற்குச் செலவு என்பதே இருக்காது; இயற்கை வேளாண்மையால் உரக்கடைக்கும், பூச்சிக் கொல்லிக்குமாகக் கடன் வாங்க வேண்டியதில்லை. கடன் இல்லாத விவசாயியைப் போன்ற செல்வந்தன் யாரேனும் உண்டா! இதெல்லாம் நாம் சற்று மெனக்கெட்டால் கைக்கெட்டக் கூடியதுதானே ?

அதன் பின் நெல் வேளாண்மையைப் பொருத்தவரை விளைச்சலை அதிகரிப்பது ஒரு வருமானமே அல்ல - நிகர லாபமே வருமானம். இதை வேலையாட்களும் உணருவதில்லை - மிரசுதார்களும் சிந்திப்பதில்லை. எனவே இடுபொருள் மற்றும் ஆட்கூலிச் செலவை எவ்வாறு குறைப்பது என்றே சிறு விவசாயிகள் சிந்திக்க வேண்டும். இதற்கு இயற்கை வேளாண்மை மிக நல்ல ஒரு வழியாகும். மூன்றாவதாக விளைபொருளான நெல்லை அப்படியே விற்காமல் அதை மதிப்புக் கூட்டிய பொருளாக (அரிசி/அவல்) எவ்வாறு விற்பது என்று முயல வேண்டும். இது தனி விவசாயியால் செய்ய மிகவும் கடினமான செயல் என்பதால், நபார்டு வங்கி கடன் வழங்கும் உழவர் சங்கங்கள் போன்ற அமைப்புக்களில் உறுப்பினராவது மற்றும் பல உழவர்கள் இணைந்து தாங்களே சங்கம் அமைப்பது போன்ற முனைவுகளில் ஈடுபட வேண்டும். உழவன் விடுதலை என்பது உடனே கிட்டாது - அரசும், வியாபாரிகளும், சந்தையும், உணவுத் தொழிற்சாலைகளும் எல்லாமே உழவன் தற்சார்படைவதற்கு எதிரியாகவே உள்ளன என்பது கசப்பான உண்மை.

திரு அசோகன் அவர்கள் தன் 6 ஏக்கர் நிலத்தில் தாளடியில் மாப்பிள்ளை சம்பா, இலுப்பை பூ சம்பா, கிச்சிலி சம்பா போன்ற ரகங்களைப் பயிர் செய்கிறார். குறுவையில் சன்ன ரகமான பாரம்பரிய நெல் இல்லாததால் சீரக சம்பாவிலிருந்து உருவாக்கப் பட்ட ஏ.டி.டி. 43 என்ற சன்ன ரகத்தைப் பயிரிடுகிறார்.

நாற்றங்கால்

குறுவையில் 15 செண்ட் பரப்பளவில் 16 கிலோ விதை நெல்லை விதைத்து இருந்தார். 04.06.2015 அன்று 22ம் நாள் என்று கூறினார். நாற்று பார்ப்பதற்கு சற்று நெருக்கமாகவே தெரிந்தது. முதலில் நாற்றங்காலை நன்கு உழவு செய்து சமன் செய்து ஒரு மாத காலம் பழமையான சேறு ஆன பிறகு விதைப்பதாவும் கூறினார். நாற்றங்கால் மடைவாயில், ஒரு சிறு குழி (5' x 5' அடி) வெட்டி, அதில் பண்ணைக் கழிவுகளான இலை தழைகள்,மட்டைகள். சாணி போன்றவற்றால் நிர‌ப்பி அதன் ஊடாக நாற்றங்காலுக்குப் பாசனம் செய்கையில் அதற்குத் தேவையான ஊட்டம் எந்த ஆள் செலவோ, இடு பொருட் செலவோ இன்றிக் கிடைக்கின்றது என்கிறார். நாற்றாங்காலுக்கு அடியுரமாகவோ , மேல் உரமாகவோ (இயற்கையானவை கூட‌) எதுவும் போடுவதில்லை, எனவும், பஞ்சகவ்யா, போன்ற கரைசலையும் பயன்படுத்துவதில்லை எனவும் அழுத்தமாக கூறினார்.

நடவு வயல்

நடவு வயலைப் பொருத்தவரையில் நடவிற்கு ஒரு மாதம் முன்பாகவே உழவு செய்து விடுவதாகவும், நடவு வயலை வரப்பு ஒரங்களில் லேசான அண்டை வெட்டியும், சமன் செய்வதில் அதிக கவனம் செலுத்துவதில்லை எனவும் கூறினார்.

நடவு வயலில் சமன் சரியாக இல்லை என்றால் களைவ‌ருமே என்று நான் கேட்டதற்கு அவர் 'களைவந்தால் என்ன அதுவும் உரமாக மண்ணிற்கு அனுப்பிவிடுவோம்' என்றார்! நடவு இடைவெளியைப் பொருத்தவரையில் வரிசைக்கு வரிசை சுமார் 35 செ.மீ - 40 செ.மீ மற்றும் பயிருக்கு பயிர் 20 செ.மீ - 25 செ.மீ இருக்கும் எனவும் கூறினார். நாற்றின் எண்ணிக்கை இரண்டு முதல் நான்கு வரையும் நாற்றின் வயது சுமார் 20 முதல் 25 நாள் வரை பெரும்பாலும் நடவை முடிப்பதாகவும் கூறினார். நடவு முடிந்த பிறகு 20 - 25 நாளில் பெண் ஆட்களைக் கொண்டு களை எடுப்பதாகவும். தேவைப்பட்டால் 45 நாளில் மறு களை மிதிப்பதாகவும் கூறினார்.

நடவு வயலிலும் தெளிப்பான் முறையில் எதுவும் கொடுப்பதில்லை எனவும் சாகுபடி செலவு மிகவும் குறைவு என்பதையும் கூறினார்.

திரு அசோகனுக்கு ஒரு ஏக்கருக்கு ஆகும் சாகுபடி செலவு

நாற்றங்கால் உழவு 250
சமன் செய்தல் 200
விதை (கை விதை) 0
நடவு வயல் உழவு 1500
சமன் செய்ய 750
நாற்றடி 3 ஆள் 1200
நடவு 15 ஆள் 2250
களை எடுக்க 1200
அறுவடை 2000
மொத்தம் 9350

ஏக்கருக்கு ரூ 9000 முதல் 10,000 வரை ஆகும் என்பதையும் கூறினார்.

சிறு குறு விவசாயிகள் செய்ய வேண்டிய உத்திகள்

(i) குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் குறைந்த அளவில் விதை நெல்லை சேகரித்து தரமானதாக பிரித்து நன்கு காயவைத்து எடுத்து வைக்கவும். விதைகளை வெளியில் வாங்க கூடாது இதுவே ஏக்கருக்கு 1000 ரூபாய் மீதமாகும்.

(ii) நாற்றங்காலில் விதைக்கும் போது ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு ஒரு கிலோ விதை என்ற அளவில் தூவி, நல்ல‌ விதைப்பு இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நெல் நாற்றுகளுக்கிடையில் சில களைகளும் வரலாம். களைகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. நாற்று பறிக்கும் போது நீக்கிவிடலாம். நாற்றுப்பறி 15- 20 நட்களில் முடித்துவிட வேண்டும். 20 நாட்களுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.

(iii) நடவு வயலில் உழவு செய்யும் போது ரோட்டவேட்டர் (அல்லது) பவர்டில்லர் மூலமாக உழவு செய்வது நல்லது. மேடு பள்ளம் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். நாற்று நடும் போது 30 செ.மீ x 30 செ.மீ மேல் இடைவெளி இருந்தால் தூர்கள் அதிகம் வெடிக்கும்.

(iv) வெளியில் இருந்து இடுபொருட்களை வாங்குவதை தவிர்க்கவும். நடவு வயலில் மடைவாயின் அருகில் 5' x 5' அடிக்கு குழியில் இலை, தழைகள், வைக்கோல், சாணி கரைத்துவிடவும். பூச்சி விரட்டி பயன்படுத்தவும்.

(v) அறுவடை முடிந்த பின் நெல்லை விதைகளாகவும்,நெல்லை மதிப்பு கூட்டியும் (அரிசி) விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

காய்கறித் தோட்டம்

அவர்வர் தேவைகேற்ப மேடான பகுதியில் குறைந்தது 15 சென்ட் தோட்டம் அமைத்து அதில் காய்கறி மற்றும் மூலிகை பயிர் செய்யலாம். வீட்டுத் தேவைகளுக்கு அதுவே போதுமானது.

அசோகன் அவர்கள் தோட்டத்தில் மிளகாய், கத்திரி, வெண்டை,சுணடைக்காய்,பாவை, புடலை,மா, கொய்யா,வாழை,மணத்தாக்காளி கீரை, முளைக்கீரை, பசலைக்கீரை, வெற்றிலை, மிளகு, சித்தரத்தை, இஞ்சி, மாங்காய் இஞ்சி, முள்ளங்கி போன்ற பயிர்கள் வீட்டுப் பயன்பாட்டிற்கென‌ நடவு செய்திருந்தார். இதற்கு மீன் அமிலம், பஞ்சகவ்யம் போன்றவற்றையும் தயார் செய்து வைத்திருந்தார்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org