சேய்மை உற்பத்தியின் தீமைகள்
உற்பத்திக்கும், நுகர்ச்சிக்கும் உள்ள இடைவெளி
சேய்மை உற்பத்தி முறைமையானது [மையப் படுத்தப்பட்ட, கச்சாப் பொருட்களிலிருந்தும், நுகர்வோரிடத்து இருந்தும் தள்ளிச் சென்றுவிட்ட, அந்நியப் படுத்தப்பட்ட, முகம் தெரியாத மைய உற்பத்தி முறைமை] மிகுந்த விலையுயர்ந்த கருவி மற்றும் இயந்திரங்களைக் கோருவது மட்டுமின்றி, பணத்தையும் புழக்கத்தில் இருந்து விலக்கி விடுகிறது. உற்பத்தியின் லாபத்தால் உருவாகும் வாங்கும் திறனின் ஒரு பகுதி [தொழிற்சாலைகளால்] முதலீட்டை மீட்டுருவாக்கவும், வைப்பிற்கெனவும் ஒதுக்கப் பட்டு விடுகிறது. இதனால் உற்பத்தியின் கூலியானது, நுகர்வோரின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்ய இயலாமல் போகின்றது. இதுவே உலகில் தற்போதுள்ள பணவீழ்ச்சிக்குக் காரணம். [1930 முதல் 1940 வரை இருந்த பெரும் பணப் பற்றாக்குறையைக் குறிப்பிடுகிறார் திரு. குமரப்பா. இக்கடின நிலையை இரண்டாம் உலகப் போர் செய்தே தீர்க்க இயன்றது. இக்காலத்தில் உலகச் சந்தையில் வேளாண் விலை பொருட்களின் கடுமையான விலை வீழ்ச்சியால் இந்திய உழவர்கள் பெரிதும் துயருற்றனர் ]
மக்களின் பொருளாதார வாழ்க்கை என்பது ஓட, ஓட வேகமும் வலிமையும் பெறும் ஒரு ஆற்றைப் போன்றது என்றால், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை நுகர்வதற்கும் மிகப்பல வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு வாங்கும் திறனை விடுவிப்பதே சரியான வழி - கட்டுப்படுத்துவது அல்ல . நல்ல நீர்கொண்டு ஓடும் ஒரு பெரும் ஆற்றின் கரையில் மாந்த இனம் கடுமையான தாகத்துடன் நிற்கிறது - அள்ளிக் குடிப்பதற்கு ஒரு தங்கக் கோப்பை கையில் இல்லாததால்! முதலாளிய ஆட்சி முறைமையின் கீழ், நம் அனைவருக்கும், கையில் தங்கக் கோப்பை இல்லாமல் நீரை நெருங்கக் கூடாது என்று பாடம் கற்பிக்கப் பட்டுள்ளது - நம் தாகத்தைத் தீர்ப்பதற்கு அது ஒன்றே வழி என்றும் நம்மையறியாமல் ஏற்றுக் கொண்டு விட்டோம். தற்போதைய முறைமையானது, பொருளியல் அறிஞர்கள் “பயனுள்ள தேவை” (effective demand) என்று அழைக்கும், கையில் தங்கக் கோப்பை உள்ள, பணக்காரனின் விருப்பத்தை நிறைவு செய்யவே வடிவமைக்கப் பட்டுள்ளது - தொண்டை வறண்டுள்ள மனிதனின் தாகத்தைப் போன்ற இயல்பான தேவையை (natural demand) அல்ல.
வேலைவாய்ப்பைக் கைப்பற்றுதல்
நிலைமையை இன்னும் மோசமாக்க, வங்கிகளால் கொடுக்கப் படும் கடன் வசதிகளால், உற்பத்தியின் வாங்கும் திறன் மேலும் அதிகரிக்கப்பட்டு [அடிப்படை] நுகர்ச்சியோ இன்னும் பட்டினி போடப் படுகிறது. பணத்தைத் தனித்தாளும் முதலாளியானவன், பணம் சார்ந்த பொருளாதாரத்தின் சூழ்ச்சியான வடிவமைப்பால், இருக்கும் எல்லா வேலைகளையும் தானே கைப்பற்றிப் பின் அவற்றைக் கூலித் தொழிலாளர்களுக்குத் தன் இச்சைபோல் பிச்சையிடுகிறான். எல்லாத் தொழிற்சாலைகளும் மேலும், மேலும் பணத்தின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப் படுகின்றன. சேய்மை உற்பத்தியில் இயந்திரங்களுக்கும், ஆலைகளுக்கும் பெரும் செலவினங்கள் தேவைப்படுவதால், அவ்வியந்திரங்களையும், ஆலைகளையும் கட்டுப் படுத்துபவன், வேலை அளிக்கும் உரிமையையும் கட்டுப்படுத்துகிறான்.
பணம் சார்ந்த பொருளாதாரம் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வாங்கும் திறனை மாற்ற எளிதாக்குகிறது. இந்தியா போன்ற ஒரு மத்திய அரசாங்கம், நகரங்களிலேயே தன் வருவாயைச் செலவிட ஆசைப்படுகிறது; கிராமங்களில் தான் பெற்ற வருவாயால் நகரங்களை வளப் படுத்துகிறது - இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், பணக்காரர் மேலும் பணக்காரராகவும் ஆகின்றனர்.
[“கிராமிய இயக்கம் எதற்காக? ” (Why the Village Movement) என்ற ஜே.சி. குமரப்பாவின் கட்டுரையில் இருந்து (1936)]
- தமிழாக்கம், தலைப்பு மற்றும் பகர அடைப்புக் குறிப்புகள் - பயணி