ஐந்து வருடங்களுக்கு மேலாக நான் என் உடல் உழைப்பால் மட்டுமே என்னைப் பாதுகாத்துக் கொண்டேன். இதில் நான் கண்டது என்னவென்றால், ஒரு வருடத்தில் ஆறு வாரங்கள் மட்டுமே வேலை செய்வதனால் என் வாழும் செலவுகள் அனைத்தையும் என்னால் ஈடு செய்ய முடிந்தது. இதனால் பனிக்காலம் முழுவதும், வேனில் காலத்தின் பெரும்பகுதியும் என் தேடல்களுக்குச் செலவிட இயன்றது.
நான் பள்ளி ஆசிரியனாக இருந்திருக்கிறேன். அதில் என் செலவுகள் என் வரவுக்கு ஏற்றாற்போல் (வரவை விடவும்) அதிகமாயின. ஏனெனில் நான் நாகரிகமாக உடை அணிவதும் பழகுவதும் மட்டுமின்றி, அவ்வாறே சிந்திக்கவும் நம்பவும் தேவைப்ப்ட்டதால் அதில் என் நேரம் தொலைந்ததாகவே உணர்கிறேன். நான் என் சக மனிதர்களின் நன்மைக்குப் பாடம் சொல்லித் தராமல் என் பிழைப்பிற்காகச் சொல்லித் தந்ததால் இது ஒரு தோல்வியே!
நான் வாணிபத்தை முயற்சித்திருக்கிறேன்; எனினும் அதில் வெற்றி பெறப் பத்து வருடங்களாகும்; அந்நேரம் நான் சாத்தானுடன் பயணித்திருக்கக் கூடும். அச்சமயம் நான் மிக வெற்றிகரமாக வாணிபம் செய்து கொண்டிருப்பேனோ என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது. என் இளமைக் காலத்தில், என் நண்பர்களின் விருப்பத்திற்கு இணங்கி, நான் என்ன தொழில் செய்வது என்று சுற்றியும் பார்த்து, நாவல் பழங்களைப் பொறுக்கி விற்கலாமா என்று யோசித்ததுண்டு; இது என்னால் நிச்சயமாகச் செய்யக் கூடியது; அதன் குறைவான வருவாய் எனக்குப் போதுமாயிருக்கும் - ஏனெனில் என் மிகப் பெரிய திறமை மிகக் குறைவான தேவைகளுடன் இருப்பதுதான் - இத்தொழிலுக்கு முதலீடு எதுவும் இல்லை, என் இச்சைக்கேற்பத் திரிவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றெல்லாம் நான் முட்டாள்தனமாகச் சிந்தித்ததுண்டு. என் நண்பர்கள் தயக்கமின்றி அவரவர் பணிகளிலும், தொழில்களிலும் செல்லுகையில் இப்பழம் பொறுக்கும் தொழிலை நான் அவர்களைப் போலத் தீவிரமாகக் கருதியிருக்கிறேன்; கோடை முழுவதும் என்வழியில் கிடைக்கும் நாவல் பழங்களைச் சேகரிப்பதும் பின்னர் அவற்றை அக்கறையின்றி வினியோகிப்பதுமாக!
நான் காட்டு மூலிகைகளையோ, கீரைகளையோ சேகரித்துக் கிராமத்து நினைப்பை விரும்பும் நகரத்தவர்களுக்குக் குதிரை வண்டியின் மேல் ஏற்றி அனுப்புவது போல்கூடக் கனவு கண்டிருக்கிறேன். ஆனால், பின்னர் எனக்கொன்று புரிந்தது: வாணிபம் என்பது தான் கையாளும் எல்லாவற்றையும் சபித்து விடும்; நீங்கள் தேவ நற்செய்திகளை விற்றால்கூட, வாணிபத்தின் சாபம் அத்தொழிலிலும் ஒட்டிக் கொண்டு விடும்!
சுருங்கச் சொன்னால், நான் நம்பிக்கையாலும் , அனுபவத்தாலும் ஒன்றைத் தெளிவாய் உணர்ந்துள்ளேன்; ஒருவன் அறிவுடனும், எளிமையாகவும் வாழ்வானேயாகில் தன்னை இப்புவியில் தக்கவைத்துக் கொள்வது கடினமே அல்ல, அது ஒரு பொழுது போக்கே. எளிய நாடுகளின் தேடல்கள் பணக்கார நாடுகளின் விளையாட்டுக்களாய் இருப்பதுபோல் [எளிய நாடுகளில் வேட்டையாடி உணவைத் தேடுதல் பணக்கார நாடுகளில் விளையாட்டாவது போல]. ஒரு மனிதன் தன் நெற்றிவேர்வையால் வாழவேண்டியதே இல்லை - அவன் என்னைவிட எளிதாய் வியர்ப்பவனாய் இருந்தாலன்றி!
வால்டன் (Walden or Life in the Woods) நூலில் இருந்து