நிறைவைத் தேடி
கடந்த 12 இதழ்களாகப் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற தலைப்பில், தற்போதைய இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று எழுதி வருகிறோம். இதில் புதுமை எதுவும் இல்லை. அன்றே காந்தியும், குமரப்பாவும் கூறியதுதான். தோரோ, டால்ஸ்டாய், சூமாக்கர் எல்லோரும் அவரவர் சொந்த அனுபவத்தில் கண்டறிந்த உண்மைகள்தான். 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்று நாம் சொல்வதை யாரும் கேட்காவிடினும், 'எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்' என்று தர்மக் கூச்சல் போடுவது நம் கடமையாகிறது. சொன்னதையே மீண்டும், மீண்டும் சொல்வதைத் தவிர்த்து இது வரை சொன்னதைத் தொகுத்தால்:
தற்போதைய பொருளாதாரக் கொள்கையின் தவறான திசை
மொத்த உள்நாட்டு உற்பத்தி
மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொ.உ.உ (GDP) என்பதே ஒரு மிகத் தவறான குறியீடு. வளர்ச்சி என்பது மொ.உ.உவின் வளர்ச்சி அல்ல. வளர்ச்சி என்பது பசியும், பிணியும், பகையும் அற்ற நாட்டை உருவாக்குவதே. "உண்மையில் வளர்ச்சி, வளர்ச்சி என்று இந்தியா மார்தட்டிக் கொள்வதில் பெரும்பங்கு பணவீக்கத்திற்கே சேரும். கடந்த 10 ஆண்டுகளில் 862 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த ஜி.டி.பி 1876 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ந்துள்ளது. இது 2.17 மடங்கு வளர்ச்சி. ஆனால் இதே காலகட்டத்தில் பணவீக்கத்தைக் கொண்டு அளக்கப்படும் GDP deflator என்னும் குறியீடு 1.76 ஆக வளர்ந்துள்ளது. எனவே விலைவாசி உயர்வைத் தள்ளுபடி செய்தால் நம் நாட்டின் உண்மையான ஜி.டி.பி 1097 பில்லியன் அமெரிக்க டாலர்களே. பத்து வருடங்களில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான வளர்ச்சி 27.27 % மட்டுமே. அதாவது வருடம் 2.71% உண்மையான வளர்ச்சியை நம் பொருளாதார மேதைகள் மிகவும் வியர்த்துச் சாதித்திருக்கிறார்கள்!"
"கடைநிலைச் சம்பளத்திற்கும் (கீழ் 10%), மேல்நிலைச் சம்பளத்திற்கும் (மேல் 10%) உள்ள வருமான வேற்றுமை கடந்த 20 ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆகி விட்டது. (6 லிருந்து 12 மடங்கு ஆகி விட்டது). எனவே இந்த தாராள மயமாக்கல் உற்பத்தியைப் பெருக்குவதை விட, ஏழைகளின் உற்பத்தியைத்தான் அதிகமாகப் பெருக்கிக் கொண்டிருக்கிறது"
மையப்படுத்தப் பட்ட இயந்திர உற்பத்தி
அடிப்படைத் தேவைகளை இயந்திரமயமான உற்பத்தியைக் கொண்டு நிறைவு செய்ய முற்படுவது விரைவில் அழிவில் கொண்டு போய் விட்டுவிடும். இத்தகைய உற்பத்தியினால் ஆற்றல் தேவை பெருகி, அதற்கு நம் இயற்கை வளங்களைக் காவு கொடுக்க வேண்டிவரும். பெருவாரியான நம் நாட்டு மக்கள் அடிப்படைக் கல்விக்கு மேல் கற்காததால், இயந்திர உற்பத்தி முறை வேலையின்மையைப் பூதாகாரமாக்கிவிடும்.
"புவி என்பது வரையறுக்கப் பட்ட வளங்களைக் கொண்ட ஒரு உயிர்ச்சூழல். நம்மால் வேறு கிரகங்களுக்குப் போய் வாழ முடியாது. இருக்கும் வளங்களைப் பாதுகாத்து சிக்கனமாகச் செலவழிப்பதே அறிவுள்ள வழி. வளர்ச்சி என்று நாம் கூறுவது இயற்கை வளங்களை ஆளுமை கொண்டு , அழித்து அவற்றைப் பணமாய் மாற்றுவதைத்தான். மனித இனம் வளர்கிறேன் என்று தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது; பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்பது போல் இதைப் பற்றிப் பேசாமல் இருந்தால் இது தானாகச் சரி ஆகி விடும் என்ற கொள்கையை அனைத்துத் திட்டமிடுவோரும் கடைப்பிடிக்கின்றனர். அண்மைப் பொருளாதார வடிவமைப்பால் உற்பத்தி செய்ய இயலாது என்று நாம் ஏன் பரிசோதிக்காமலே முடிவு கட்ட வேண்டும்? "
தொழில்நுட்பம் என்னும் போர்வாள்
"இந்த மேம்படுத்துதல் (development) என்னும் வடிவமைப்பில் ஒரு நூதன சூழ்ச்சி உள்ளது. அது என்னவென்றால், விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் வாணிபம் ஆளுமை செய்வதுதான். நவீன தொழில்நுட்பத்தினால் மட்டுமே மேம்படுத்த இயலும் என்று கண்கட்டு வித்தைக்காரனைப் போல ஒரு ஜாலம் ஏற்படுத்தப் படுகிறது. பின்னர் ஊடக வலுவால் அது மீண்டும், மீண்டும் பறைசாற்றப்பட்டு அது உண்மையோ என்று மக்களைச் சிந்திக்க வைக்கிறது. இதுதான் ஒரே மருந்து என்று பெருவாரியான மக்கள் நம்புவதே இந்தத் திட்ட வரைவின் வெற்றி. நன்கு படித்துப் பலவும் தெரிந்த விவரமானவர்கள் கூட, அறிவுஜீவிகள் என்று மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள் கூட இந்தத் 'தொழில்நுட்ப மாதிரி' ஒன்றுதான் நம்மைக் காக்கும் என்று தீவிரமாக நம்புகிறார்கள்."
"நவீன வாணிபமும், அதன் கைப்பாவைகளாய் உள்ள அரசியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய வையும் மனித மனத்திற்கு எந்த வித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. உண்மையைச் சொன்னால், வாணிபம் உலகளாவிய தன் ஆளுமையைக் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் தொழில்நுட்பத்தை ஒரு போர்வாள் போல் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதே உண்மை."
கிராமங்கள் புறக்கணிக்கப் படுவது
"உற்றுப்பார்த்தால் ஒரு உண்மை தெளிவாகும். நம்நாட்டின் அனைத்து இயற்கை வளங்களும் கிராமங்களிலும், வனப்பகுதிகளிலும் உள்ளன. ஆனால் கிராமங்களில்தான் ஏழைகள் அதிகமாக உள்ளனர். எந்த அடிப்படை வளமும் இல்லாத பெரு நகரங்களில் எல்லாச் செல்வந்தர்களும் உள்ளனர். ராட்சத உற்பத்தியும், வாணிபமும் நகரங்களில் நடைபெறுகின்றன. சிறு உற்பத்தியும், தொழிற்சாலைகளுக்கான கச்சாப் பொருட்களும் கிரமங்களில் நடைபெறுகின்றன. குமரப்பா கூறியது போல் அன்று பிரிட்டனுக்குப் புகையிலை, தேயிலை, கரும்பு, அவுரி, பருத்தி, எஃகு போன்ற கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளை இறக்குமதி செய்தது இந்தியா. இன்றோ கிராமங்கள் நகரத் தொழில்களுக்குக் கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து விட்டு அடிப்படைத் தேவைகளை இறக்க்குமதி செய்கின்றன. உழவன் கடனில் இருப்பதற்கும் விவசாயம் நலிவதற்கும் இந்த ஒன்றே மிக முக்கிய காரணம்".
தவறான வேளாண் கொள்கை
"உணவு மிக அடிப்படையான தேவை. இன்று வளர்ந்த நாடுகளில், உணவு என்பது பெருநிறுவனங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப் படுகிறது. பையில் அடைக்கப்பட்டு வீட்டின் குளிர்பதனப் பெட்டியை எட்டும் வரை ஒவ்வொரு உணவும் பயணிக்கும் தூரம் மலைக்க வைக்கக் கூடியது. நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காய் அதில் செலுத்தப்படும் நஞ்சுகளும் மிகக் கொடியவையே"
"இன்று நாட்டில் வீணாக்கப்படும் 1 லட்சம் கோடி ரூபாய் உர மானியமானது, இறுதியில் 12 பெரும் செல்வந்தர்களை மட்டுமே சென்று சேர்கிறது என்று ஒரு ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது. எனவே மானியம் என்பது கொழுத்தவர்களை மேலும் கொழுக்க வைக்கும் கண்கட்டு வித்தையே."
"இப்போது 600 கோடியாக இருக்கும் மக்கள் தொகை வளர்ந்து 2050ல் 900 கோடியில் நிலை பெறும் என்று பல கணிப்புக்கள் கூறுகின்றன. இருக்கும் நிலப்பரப்பில் 900 கோடிப் பேருக்கு எளிதாக உணவு உற்பத்தி செய்ய முடியும் - ஆனால் அது இயந்திர வேளாண்மையால் இயலாது. ஓரினப் பயிர் செய்து வேதி உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் உற்பத்தி செய்யச்செய்ய மேல்மண்ணின் வளம் கெட்டு இருக்கும் விளை நிலப் பரப்பு குறைந்து கொண்டே வரும். நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் உவர், அமிலத் தன்மை கொண்டதாய் மாறிவிடும். உணவுப் பஞ்சம் என்பது இயந்திர வேளாண்மையின் நேரடி விளைவாகும்."
அந்நிய முதலீட்டுக்குப் பாய் விரிப்பது
"நிலம், நீர், கனிமங்கள், உயிரிப் பன்மையம் ஆகியவை மிக இன்றியமையாத சொத்துக்கள். நிலைத்தன்மையுடைய, நீடித்த மேம்படுத்துதலுக்கு இவை அனைத்தும் பாதுகாக்கப் பட வேண்டும். சூழல் இல்லையேல், எதுவுமே இல்லை - பின்னர் பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு இருக்கும் வளங்களைச் சுரண்டிக் காசாக்கலாம் என்று எண்ணுவது மிக, மிகப் பித்துக்குளித் தனமான கொள்கை. அதை விட மன்னிக்க முடியாத குற்றம் - பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம் வளங்களைச் சுரண்ட அனுமதி அளித்து விட்டு அவர்களிடம் நம் நாட்டு மக்கள் அடிமை வேலை செய்ய அரசே கைக்கூலிகள் ஆவதுதான்"
"வேலைகளை உருவாக்குகிறேன் என்று பல சலுகைகள் பெற்று, வளங்களைச் சுரண்டிப் பின் எல்லாம் கறந்த பின் வேறு ஒரு நாட்டைத் தேடிப் போவது அந்நிய முதலீட்டின் இயல்பு. எனவே ஒரு நிலைத்தன்மை கொண்ட , தற்சார்பை விரும்பும் பொருளாதாரக் கொள்கை அந்நிய முதலீட்டுக்கு எதிராகவே அமைய வேண்டும். தொழில் தொடங்க நிறைய முதலீடு வேண்டும் என்பது மிகத் தவறான ஒரு சிந்தனை. வெளிநாட்டவருக்கு நம் சந்தையைத் திறந்து விடுவதும், நாம் ஏற்றுமதி மூலம் பொருள் ஈட்ட முனைவதும் நீண்ட காலத்திட்டம் ஆகாது."
"நவீனத் தொழிற்சாலைகளில் ஒரு வேலை உருவாக்க 10 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு தேவைப்படுகிறது. இவ்வளவு பேருக்கும் வேலைகள் உருவாக்க எவ்வளவு லட்சம் கோடி தேவை! யார் முதலீடு செய்வார்கள்? மேலும் முதலீடு செய்யும் அந்நிய வியாபாரிகள் தங்கள் சுயலாபத்திற்குத் தானே முதலீடு செய்கிறார்கள் - தேச சேவைக்கா? "
சந்தைச் சக்திகளுக்குத் துணை போவது
"இன்று இந்தியா மட்டுமின்றி எல்லாச் சந்தைகளிலும் (நாடுகளிலும்) மக்களாட்சி என்பது கொழுத்த செல்வந்தர்களால் மட்டுமே ஆடக் கூடிய ஒரு விளையாட்டு ஆகி இருப்பது நிதர்சனம். இதன் உண்மைப் பின்னணி மக்களாட்சி சந்தைப்படுத்துதலுக்கு மிக வசதியாக இருப்பதே. மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஒரு மாயத் தோற்றம் இருப்பினும், உண்மையில் பெரும் பணவலுவும், அதனால் பெறப்பட்ட அடியாள் வலுவுமே இன்று வெல்கின்றன."
"முதலில் நிறைவும், தற்சார்பும் கொண்ட வாழ்முறையைப் போல் சந்தைக்கு எதிரி எதுவுமே இல்லை. இந்தியாவில் 4 லட்சம் கிராமங்கள் தற்சார்பு அடைந்துவிட்டால் 70 கோடிப் பேர் சந்தையின் பிடியில் இருந்து விடுபட்டு விடுவார்களே! இது அடுக்குமா? எனவே முதலில் மக்களிடம் தாங்கள் இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கை தவறானது, பிற்பட்டது, காட்டு மிராண்டித்தனமானது என்ற கருத்தைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து அவர்களிடம் ஒரு அதிருப்தியை விதைக்க வேண்டும்."
இவற்றைத் தவிர்த்த புதிய பொருளாதாரக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வரைபடத்துடன்...
அடுத்த இதழில் முடியும்