தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஆதிரங்கம் நெல் திருவிழா - அனந்து


'நமது நெல்லைக்காப்போம்' மற்றும் 'க்ரியேட்' சேர்ந்து நடத்தும் நெல் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் தன் வீச்சையும் ஆழத்தையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2006ல் 16 நெல் ரகங்கள் 400 விவசாயிகளிடம் பகிர்ந்தளிகப்பட்டது. அது மேலும் மேலும் வளர்ந்து 2014ல் 137 ரகங்களுடன் 3800 விவசாயிகளை எட்டியது. இந்த ஆண்டு 5000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து பல தரப்பட்ட விதைகளை பெற்றனர். நமது பாரம்பரிய விதைக் காப்பும், பெருக்கமும் மிகச் சிறப்பாக‌ நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது பெரிதாகிக்கொண்டே செல்கிறது. விவசாயிகள் தாங்கள் பெற்ற நெல் விதையை அடுத்த முறை இருமடங்காகக் கொண்டு வந்து கொடுக்கின்றனர் . 25000 விவசாயிகளை இன்று வரை அடைந்துள்ள இந்த விதை திருவிழா, பலரையும் இயற்கை விவசாயத்திற்கும், பாரம்பரிய ரகங்களுக்கும் ஈர்த்திருக்கிறது. விதைகளை, அதுவும் பாரம்பரிய விதைகளை நமது விவசாயிகளின் கைக்கே கொண்டு செல்வதில் க்ரியேட் அமைப்பின் 'நெல்' ஜெயராமனின் பங்கு அளவிட முடியாதது.

மிதி வண்டியில் ஊர் ஊராகச் சென்று பாரம்பரிய விதைகளை ஒவ்வொன்றாக சேகரித்த ஜெயராமன், இன்று இதே போன்று விதைத் திருவிழாக்கள் நாடெங்கிலும் பரவுவதில் முக்கிய காரணமாகத் திகழ்கிறார். தமிழகத்திலும் 10 இடங்களில் இன்று விதை விழாக்களும், பரிமாற்றமும் நடக்கின்றன‌. 2013 முதல் தமிழக அரசு வேளாண் துறையினரும், வேளாண் பல்கலைகழகமும் பங்கேற்கின்றனர். இதனால் மேலும் பல விவசாயிகளை இவை சென்றடையும்.

இந்த ஆண்டும் திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது . திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் திருமதி ஷாந்த ஷீலா நாயர் அவர்கள் துவக்கிவைத்து சிறப்பித்தார். அவர் இந்த விதை திருவிழாவை மிகவும் பாராட்டி, அரசு இதனை மேலும் பெரிதாக எடுத்துச்செல்வதற்கு ஆவன செய்யும் என்றும், இது மேலும் சிறுதானியங்கள், காய்கறிகள் என்று எல்லாவற்றிற்கும் பரவ வேண்டும் என்றும் கூறி, இந்த விதை வங்கிக்கும் வேறு பாரம்பரிய விதை வங்கிகள் தொடங்கினால் அவற்றுக்கும் தமது திட்டக்கமிஷனின் நிதியிலிருந்தே உதவுவதாகவும் உறுதி அளித்தார்.

இரண்டாம் நாள் நடிகை ரோஹினி மற்றும் ஆஷாவின் நிறுவனர் கவிதா குருகன்டி பங்கேற்று சிறப்பித்தனர். கவிதா குருகன்டி "மரபணு பயிர்களும் உணவும் தேவை இல்லை, நாம் நமது விதைகளை மட்டுமே வைத்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியமான பாதுகாப்பான‌ உணவினை உறுதிசெய்திட முடியும்" என்றார். ரோஹினி அவர்கள், மிகுந்த அவையடக்கத்துடன், "சினிமாக்காரர்களை கொண்டாட வேண்டிய தேவை எதுவும் இல்லை. அவர்களது நடிப்பையும் நல்ல சினிமாவையும் ரசிப்பதுடன் இருத்தல் நலம். நாங்கள் ஒலிபெருக்கி போன்றவர்கள். இந்த நல்ல செய்திகளை கொண்டு செல்ல எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார். "பூச்சிகளும் நண்பர்களே" என்னும் புத்தகத்தை வெளியிட்ட அவர் மேலும் விவசாயிகளிடம் தான் கற்றவை மிக அதிகம் என்றும் இந்த விதை பரிமாற்றத்தைப் பெரிதும் மெச்சி, மரபீனி விதைகளுக்கு எதிராக என்றும் தனது குரல் இருக்கும் என்றும், அது தேவையே இல்லை என்றும் அழுத்தம் திருத்தமாக கூறினார். தனல் உஷா மற்றும் ஸ்ரீரீதர், தாளாண்மையின் பாமயன் மற்றும் அனந்து, தெலுங்கானாவின் நரசிம்ம ரெட்டி, மேலும் பல விவசாய தலைவர்களும் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.

நமது விதைகள் நம்மிடமே இருப்பதற்கும், நமது விதை உரிமை நம் விவசாயிகளிடமே இருப்பதற்கும், விவசாயம் நமது விவசாயிகள் கையை விட்டு செல்லாமல் இருக்கவும் இது போன்ற பெரும் பாரம்பரிய விதைத் திருவிழாக்கள் முக்கியம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org