தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


நாணல் நீதிபதிகள்


சமீபத்தில் இரண்டு நீதி மன்றத் தீர்ப்புக்கள் மிகுந்த வியப்பை ஏற்படுத்தின. ஒன்று செல்வி. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தகுந்த நிரூபணம் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்தது. இன்னொன்று ஒரு விபத்துக் கொலை வழக்கில் 13 ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பாக‌ 5 ஆண்டுச் சிறைத் தண்டனை பெற்ற இந்தி நடிகர் சல்மான் கான், இரண்டே மணி நேரத்தில் பெயிலில் வெளியே வந்தது.

முதல் வழக்கில் கூட்டல் கழித்தலில் பிழை என்ற ஒரு சற்றும் ஏற்றுக்கொள்ள இயலாத காரணத்தைக் காட்டி ஜெயலலிதாவை விடுவித்தார் நீதிபதி. ஒட்டு மொத்தத் தமிழக அ.தி.மு.க தொண்டர்களும் மொட்டையடித்தல், அலகு குத்தல், உண்ணாவிரதம், பாற்குடம் ஏந்தல் போன்று தத்தம் பகுத்தறிவைப் பறைசாற்றிக் கொண்டிருக்கையில், ஜெயலலிதா புன்முறுவலுடன் நீதி வென்றது என்று வெளிவந்திருக்கிறார். ஒரு உயர்நீதி மன்ற நீதிபதிக்கு இல்லாத கணக்கு வசதிகளா? அவர் நினைத்தால் எத்தனை தணிக்கையாளார்களைக் கலந்து கணித்திருக்கலாம். அல்லது இதற்கு முன் தண்டனை வழங்கிய நீதிபதி கணக்குத் தெரியாதவரா? இங்கே மக்களைத் தவிர‌ யார் குழம்பினார்? யார் ஏமாற்றப்பட்டார்? இதில் மத்திய அரசின் அல்லது பாரதிய ஜனதா கட்சியின் தலையீடு இருந்ததா இல்லையா என்பது தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அடுத்த ஆண்டு ஏற்படும் கூட்டணியில் இருந்து புலனாகும். உண்மையில் இதில் விடுதலை திரு.பன்னீர் செல்வத்திற்குத் தான்!

இரண்டாவது வழக்கு இதைவிட நகைப்புக்குரியது. சாதாரண மனிதர்களைக் கைது செய்தால் அவர்கள் உடனடியாகச் சிறையில் அடைக்கப்படுவர். அவர்கள் வழக்கு விசாரணை முடிய சராசரியாக ஐந்து வருடம் ஆகும். ஆனால் சல்மான் கான் வழக்கு நடந்த 10 ஆண்டுகளும் பெயிலில்தான் இருந்திருக்கிறார். வழக்கின் தீர்ப்பு வந்து இரண்டு மணி நேரத்திற்குள் மேல்முறையீடும் செய்து அவருக்குப் பெயிலும் கிடைத்திருக்கிறது.

அரசின் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான operation greenhunt ஐக் கடுமையாக விமரிசனம் செய்த டில்லிப் பேராசிரியர் ஜி.என்.சாயிபாபாவைத் தீவிரவாதிகள் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அவர் இரண்டு கால்களும் செயலிழந்து சக்கர நாற்காலியில் இருப்பவர்! கடந்த ஒரு வருடமாக அவர் பெயிலோ, வழக்கோ இன்றிச் சிறையில் இருக்கிறார்.

பணக்காரர்களுக்கு என்றால் நீதிமன்றங்களும், நீதிபதிகளும் அதிவிரைவாகச் செயல்படுகிறார்கள். அவ்வாறு வளைந்து கொடுக்காத நீதிபதிகள் தங்கள் பதவியில் நீடிப்பதும் பெரும் கேள்விக்குறியாய் இருக்கிறது. முன்னர் சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதோ ராய் வழக்கை ஆய்ந்த‌ நீதிபதி, இவ்வழக்கின் போது தான் அனுபவித்த அழுத்தங்களும், உளைச்சல்களும் எண்ணிப் பார்க்க இயலாதவை என்று வெளிப்படையாகப் பேட்டியளித்தார்.

மக்களாட்சி என்பதே மக்களை ஏய்க்கும் ஒரு ஆட்சிமுறைதான். இப்போது அரசியல் போகும் போக்கில், நேர்மைக்கும், நீதிக்கும் உள்ள இரண்டே நம்பிக்கைகள் ஊடகங்களும், நீதிமன்றங்களும்தான். ஊடகங்கள் விளம்பரங்களுக்கு விலைபோகும்போது எஞ்சியுள்ள நீதிமன்றங்களும், நீதிபதிகளும் தங்கள் பிழைப்பிற்காக வளைந்து கொடுத்துத் தப்பிக்கிறார்கள். கரையோர நாணல்கள் நதியை நம்பியுள்ளன; நதியும் தன் கரை அரிக்காமல் தன்னைக் காக்க‌ அந்நாணல்களை நம்பியுள்ளது என்பதை நீதிபதிகள் மறக்கலாகாது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org