இடிப்பாரை ஒடுக்கும் மன்னர்கள்
உலகிலேயே பெரிய ஜனநாயகம் என்று நம்நாடு மார் தட்டிக் கொள்கிறது. ஒரு அரசியல் பார்வையாளார், பல வருடங்களுக்கு முன், ” பெரும்பாலான மக்களுக்கு எழுத்தறிவு இல்லாத நாட்டில், எழுத்து வடிவில் ஒரு அரசியல் சாசனம் காலத்திற்கு முற்பட்டதே” என்று பாதி நகைச்சுவையொடும், மிகுந்த வேதனையோடும் எழுதியிருந்தார். ஒபாமா முதன்முறை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப் பட்டபோது, அமெரிக்காவில் 1% பேருக்குக் கூட ஒபாமா யார் என்று தெரியாது. 6 மாதங்களுக்குள் பெரும் செலவில், தொலைக்காட்சிப் பெட்டிகள் அவரின் முகத்தை எல்லா வீடுகளிலும் தொடர்ந்து காட்டிக் காட்டி அவரை நாட்டையும், பொருளாதாரத்தையும் காப்பாற்றக் கூடிய தேவதூதன் போல் உருவகம் செய்தன. விளைவு: யாருக்குமே அறிமுகம் இல்லாத ஒரு மனிதர், உலகின் மிகப் பெரிய வல்லரசுக்குத் தலைவர் ஆனார். அமெரிக்காவை அனைத்திலும் காப்பியடிக்கத் துடிக்கும் நம் நாட்டில், பா.ஜ.கட்சி இதே முறையில் சுமார் 5000 கோடிகள் செலவு செய்து, ஒரு தனிமனிதரை முன்னிறுத்தி 6 மாதத்தில், நரேந்திர மோடியை ஊடக வலுவால் சந்தைப்படுத்தின. அவரும் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் ஆகி விட்டார்.