தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிமைச் செருக்கு - ராம்

நாட்டில் ஒரு முக்கியமான தேர்தல் முடிந்திருக்கிறது.

ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த 5 ஆட்சிகளின்போது இல்லாத அளவில், தனித்துப் பெரும்பான்மை பெற்று, பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றி உள்ளது. எத்தனையோ அறிஞர்களும், அறிவுஜீவிகளும் எதிர்த்த திரு. மோடியை, அவர்களது ஐயங்களையும், அச்சுறுத்தல்களையும் தாண்டி, மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். பதவி ஏற்ற நாள் முதலே மிகக் கடினமான எதிர்ப்புக்களையும், பிரம்மாண்டமான எதிர்பார்ப்புக்களையும் இந்த அரசு சந்திக்க வேண்டியிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

பல மாதங்களாக தீவிர அரசியல் நிகழ்வுகளைப் பார்த்த மக்கள், தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கின்றனர். கொஞ்ச நாட்களாவது இனிமேல், தடங்கலின்றித் தொலைக்காட்சியில் நாடகங்களையும், கிரிக்கெட் போட்டிகளையும் கண்டுகளிக்க மீண்டும் தயாராகிவிட்டனர்.

இந்தத் தேர்தல் முடிவை எதிர்பார்க்காத சிலர், “நாம் எவ்வாறு மக்களின் இந்தத் தேர்வைப் புரிந்துகொள்ள வேண்டும்?” என்றும், “இந்த அமோக வெற்றியினால், நாட்டிற்கு எத்தகைய சூழல் ஏற்படும்?” என்ற யூகத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாற்றத்தைப் புரிந்து கொள்ள, “எதிலிருந்து மாற்றம்”, என்பதும், “எதற்கான மாற்றம்” என்பதும் கொஞ்சம் சிந்திக்கத்தக்க‌ விஷயங்கள்.

எதிலிருந்து மாற்றம்?

எதிலிருந்து என்பதற்கு நமக்குக் கடினமான சிந்தனை ஏதும் தேவையில்லை. இதற்கு முந்தைய காங்கிரசு அரசாங்கத்தின் ஒட்டுமொத்த ஊழல்களைப் பார்த்த மக்கள், எக்காரணம் கொண்டும் அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த‌ விரும்பவில்லை, என்பது உறுதியாகிறது.. நூறாண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சி, கடந்த பத்தாண்டுகளில் அதன் ஆட்சியின் கீழ் ஏற்பட்ட சீர்கேடுகளை சிந்திக்கவும், உட்கட்சிக் கட்டமைப்புகளைச் சீர்செய்யவும் இது ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். “அதற்கான அரசியல் முதிர்ச்சியும், துணிவும் அந்தக் கட்சிக்கு உள்ளதா?” என்ற கேள்விக்குக் காலம்தான் விடையளிக்கும்.

எதை நோக்கி மாற்றம்?

எதை நோக்கி என்பதற்கு எளிதான விடைகள் இல்லை. பா.ஜ.க. இந்தியாவில் இது வரை கண்டிராத அளவில், தனிநபரை முன்னிருத்தி இந்தத் தேர்தலைச் சந்தித்துள்ளது. திரு. நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தியதாகவும், அத்தகைய நிர்வாகத்தை அவர் தேசிய அளவில் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் உத்தி அமைந்தது.

ஆனால், “அவரது ஆட்சியின் கீழ்தான் இந்தியாவின் கடந்தகாலத்தில் ஒரு மோசமான மதவெறி தாக்குதல் குஜராத்தில் நிகழ்ந்தது. அவரது ஆட்சியின் கீழ் மதவாத சக்திகள் தேசிய அளவில் வலிமைபெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றெல்லாம் பல ஐயங்கள் மக்கள் மனதில் நிச்சயமாக எழும். ஆனால், அதையும் தாண்டி மக்கள் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி அளித்துள்ளார்கள் என்றால், அதற்கு, நிலையான, கூட்டணியைச் சாராத‌ ஆட்சி மாற்றம் தேவை என்ற காரணத்தால்தான் என்று தோன்றுகிறது. மற்றும், “மோடி” என்னும் ஒரு பிம்பத்தை மக்களின் மனதில் அவர்களது குறைகளை தீர்ப்பதற்கான ஒரு மாத்திரையாக விளம்பரப்படுத்திய‌தும் ஒரு காரணமாக அமைந்தது.

விளம்பர உத்திகள் இந்தத் தேர்தலில்தான் முதன் முறையாக மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளன‌. திரு. மோடி அவர்களது விளம்பரச் செலவு ஏரத்தாழ 5000 கோடி என்று கூறப்படுகிறது. இவ்வளவு செலவு செய்ய பணம் எங்கிருந்து வரும்? அவற்றின் பின்னணி என்ன? அவற்றைச் செலவு செய்யும் நபர்கள் அல்லது நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன

தமிழகத்தின் நிலை என்ன?

இன்றும் தமிழகத்தில் , சில மிகவும் உட்கிராமங்களில், “எம்.ஜி.ஆருக்கு தான் நாங்கள் வோட்டு போடுவோம்” என்று, ஏதோ தலைமுறை தலைமுறையாக அவருக்குக் கடன்பட்டதைபோல் வாக்களிக்கும் மக்கள் உள்ளனர். இதில் சிலர், “நாங்க குடும்பம் முச்சூடும் எப்பவும் அவருக்கு தான் வோட்டு போடுவோம்” என்று பெருமை சாற்றிக்கொள்பவர். சென்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி அடைந்தபின்னர் முதல்முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர். செல்வி. ஜெயலலிதா, “இது மக்கள் தி.மு.க.விற்கு எதிராக போட்ட வாக்குகளே அன்றி, எங்களை ஆதரித்துப் போட்ட வாக்குகள் இல்லை” என்று உண்மை உரைத்தார். ஆனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில், “அனைத்து இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறவேண்டும்” என்று தன் கட்சிக்காரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். இதனால், இவர்கள் “எப்படியாவது, அம்மாவிடம் நல்ல பெயர் வாங்கிவிடவேண்டும்” என்ற ஒரு ஆவலில் களமிறங்கியிருந்தார்கள். பெரும்பாலான வேட்பாளார்களை யாரென்று தெரியாவிட்டாலும், மக்கள் இதை ஜெயலலிதாவிற்கு அளித்த வாக்காகவே கருதியுள்ளனர்.

இத்தகைய அறியாமையில், உணர்ச்சிபூர்வமாக மட்டுமே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றும் சிலர் இருந்தால், இன்னொருபுற‌ம், “நாங்கள் தமிழர் உணர்வுக்காக என்றும் வோட்டு போடுவோம்” என்று கூறி இன்று குடும்ப அரசியல் ஆகிவிட்ட தி.மு.க.விற்கு தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். இந்த முறை நடந்து முடிந்த தேர்தலில், மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஊழலில் கெட்டபெயரை சம்பாத்தித்த ராசா மற்றும் தயாநிதி மாறனை மீண்டும் வேட்பாளராக அறிவித்ததன்மூலம், “சுய மரியாதை” என்னும் திராவிட அரசியல் அடிப்படைக் கோட்பாட்டைப் பெரிய அளவில் தகர்த்திருக்கிறது தி.மு.க.

தேர்தல் முடிவை எப்படிப் புரிந்துகொள்ளுவது?

அனைத்து மக்களும் ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி “போதும்” என்று தெளிவான‌ சிந்தனையுடன் தான் வாக்களித்தார்களா?’ என்றால், நிச்சயமாக ‘இல்லை’ என்பதே உண்மை நிலை. காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க. கட்சிக்கும் கொள்கை அளவில் எந்தவிதப் பெரிய வித்தியாசமும் இல்லை என்பது உண்மை. மேலும், காங்கிரஸ் ஆட்சியின் கீழ் துவங்கிய உலகமயமாக்கல், தனியார்மயகாக்கல் மற்றும் தாளாரமயமாக்கல் கொள்கைகள், மோடியின் ஆட்சியின் கீழ் மேலும் தீவிரமாக அமலாக்கப்படும் என்பது பலரது ஐயமாகவே உள்ளது.

மேற்கத்திய பாணியில் “வளர்ச்சிப் பாதையை” காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் வேகமாக அமலாக்குவேன் என்ற வாக்குறுதியில் தான் திரு. மோடி வெற்றி பெற்றுள்ளார். அப்படியானால், நமது மக்களில் பெரும்பாலானவர்கள் மேற்கத்திய வளர்ச்சிப் பாதையை அங்கிகரிக்கிறார்கள் என்றே தோன்றுகின்றது. வேகமான வளர்ச்சி விகிதம், அதிகமான அந்நிய முதலீடு, மேலும் மேலும் மேற்கத்திய தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில்துறைகள் என்ற மந்திரத்தில் நிறைந்துள்ள உட்பொருள் என்னவென்றால், மேலும், மேலும் இயற்கைக் கூறுகள் மாசுபடுதல், ஏழை – பணக்கார பாகுபாடு அதிகரித்தல், அதிகாரவர்க்கம் என்று சிலரைக்கொண்ட ஒரு சிறு குழு உருவாகுதல் போன்றவை. இத்தகைய‌ பலவிதமான விளைவுகள் மேற்கத்திய நாடுகளில் ஏற்படக் கண்டும் நாம் ஏனோ கற்றுக்கொள்ள மறுக்கிறோம். நமது அறிவு சார்ந்த அடிமைத்தனத்தில் ஒரு வீண் செருக்கு தெரிகின்றது.

தமிழகத்தில், நமது மக்களில் பலரும், பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்க‌ளித்தது தெரிந்ததே. இத்தகைய ஜனநாயக கடமை ஊழல் புரிவதில், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்க்கூடாது என்பது என் கருத்து. அறியாமையில் ஊழல் செய்பவர்கள் மற்றும் அறிந்தே ஊழல் செய்பவர்கள் என்ற இரண்டே பிரிவுகளாக இத்தகையவர்களை பிரிக்க நான் நினைக்கிறேன். காசு கொடுத்து வோட்டு வாங்கிவிடலாம் என்பது முக்கிய கட்சிகள் அனைத்தும் முடிவு செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டது, தமிழக மக்களின் பெருமைசாற்றும் நிகழ்வாக கருத முடியாது.

அரசியலில் மாற்றங்கள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சில மாற்றங்கள், தேசிய அளவில் நடந்துள்ளன. அவற்றில் சில முக்கியமானவை –

  1. “மதச்சார்பின்மை” என்னும் கொள்கையை பா.ஜ.க. அல்லாத அரசியல் கட்சிகள் தீவிரமாக மறுபரிசீல‌னை செய்யத் துவங்கியுள்ளன. இந்தக் கொள்கயைக் கடைப்பிடிப்பதில் தாங்கள் இந்துக்கள்பால் ஏதேனும் தவறுகள் இழைத்துள்ளோமோ என்னும் ஐயப்பாடு இதற்குக் காரணம்.
  2. தனிமனிதரை முன்னிருத்தித் “தலைவன்” என்னும் விதத்தில் தமிழகத்தில் நீண்ட காலமாக நடத்தப்பட்டுவரும் அரசியல் இந்த முறை தேசிய அளவிலும் படர்ந்துள்ளது.
  3. ஆம் ஆத்மி கட்சியின் தாக்கத்தால், தேசிய அளவிலான கட்சிகள் அனைத்தும் ஊழலற்ற வேட்பாளர்களை நிறுத்தவேண்டும் என்னும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன‌. இது இந்தத் தேர்தலில் பேரிய அளவில் இயலவில்லை என்றாலும், நிச்சயமாக இனிவரும் தேர்தல்களில் இதன் தாக்கம் இருக்கும் என்றே தோன்றுகிறது.
  4. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்ததனால் திரு. மோடி அவர்களின் ஆட்சிக்கு எந்தவிதமான எதிர்ப்பும் பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை. ஆதலால், அவரிடம் எதிர்பார்ப்பும், பயமும் அதிகமாகவே உள்ளது.
  5. தமிழகத்தில் மிக அதிக அளவில் NOTA வாக்குகள் விழுந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. நமது மாநிலத்தை சேர்ந்த சில பேராவது தங்களது வாக்குகளை மதிக்கத் துவங்கிவிட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிற‌து. இது தமிழக எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பத் தோன்றுகிறது.
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org