தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


சென்ற இரு கட்டுரைகளில், புதிய பாரதத்தின் புதிய பொருளாதாரக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று மேலோட்டமாக ஆராய்ந்தோம். ஒவ்வொரு துறையிலும் ஒரு வரைபடம் போல, திட்டம் செல்ல வேண்டிய‌ திசையைச் சுட்டிக் காட்டினோம். வாசகர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்; தாளாண்மை குறைகளை மட்டும் சொல்லவில்லை - விடைகளைத் தெளிவாக முன்வைக்கிறது. நவீன பொருளாதாரத்தின் நிலை என்ன: '69% மக்கள் நிலம் சார்ந்த தொழில்களில் உள்ளனர்; கிராமப் புறங்களில் உள்ளனர் - அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கும், வாழ்வாதாரத்திற்கும் என்ன வழி?' என்று கேட்டால் ,தற்போதைய பொருளாதார மேதைகள் கூறும் வழி 'அவர்கள் அனைவரையும் நகர‌த்தில் வேலை செய்ய அனுப்புங்கள்' என்பதே. 'அய்யா ஒரு வேலை உருவாக்க 10 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு தேவைப் படுகிறதே, 30 கோடி இளைஞர்களை எப்படி என்ன வேலைகளில் செலுத்துவீர்கள், அதற்கான முதலீட்டுக்கு எங்கே போவது' என்றால் அதற்கு ஏதும் பதில் இல்லை. 'ஒவ்வொரு தொழிற்சாலையும் ஏகப்பட்ட மெகாவாட் மின்சாரத்தைக் குடிக்கிறதே, இப்போது வீட்டு உபயோகத்திற்கே மின்பற்றாக் குறை உள்ள போது எப்படி இவ்வளவு தொழிற்சாலைகள் நிறுவுவது அதற்கான ஆற்றல் எங்கே? ' என்றால் அதற்கும் பதில் இல்லை. 'மேம்படுத்துதல் என்ற பெயரில் இருக்கும் விளைநிலங்களைத் தொழிற்சாலைகளுக்குத் தாரை வார்த்து விட்டால் உணவு உற்பத்திக்கு என்ன செய்வது?' என்றால் 'புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் தேவை' என்று பிரச்சினையை திசை திருப்பி வேறு ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வாணிபத்திற்கு வழிவகுக்கிறோம்.

'திசை தெரியாமல் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறோம்; அடிமட்டம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. விழாமல் இருக்க ஒரே வழி இன்னும் வேகமாகப் போவதுதான் ' என்ற குருட்டுக் கொள்கையுடன் உலகம் முழுவதும் அமெரிக்காவைப் போல் ஆக , ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞானிகள் விடைகளைக் கண்டு விடுவார்கள், எல்லா இடர்களையும் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் களைந்து விடலாம். இப்போதைக்கு வேறு வழி இல்லை, வளர்ச்சி ஒன்றே வழி என்று நாமே நம்மை ஏய்த்துக் கொள்கிறோம். ஆனால் அமெரிக்கர்களைப் போல நாம் எல்லோரும் ஆனால் என்ன ஆகும்? இந்தியா வெடித்துச் சிதறி விடும். ஒரே ஒரு சிறிய உதாரணம் கூறுகிறேன்: ஒரு சராசரி இந்தியன் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு மணிக்கு 90 வாட்; ஒரு சராசரி அமெரிக்கனோ, ஒரு மணிக்கு 1402 வாட் பயன்படுத்துகிறான். நாம் எல்லாம் வளர்ச்சி வளர்ச்சி என்று அமெரிக்கர்களானால், நம் ஆற்றல் தேவை இப்போதையதை விட 15 மடங்கு ஆகி விடும்! இப்போது 90 வாட் கூடத் தடையற்றுத் தர இயலாத நிர்வாகம் 120 கோடிப் பேருக்கு நபர் ஒன்றுக்கு மணிக்கு 1400 வாட் மின்சாரம் தர இயலுமா?

எனவே நாம் வெள்ளையர்களைப் பார்த்து ஆடும் வான்கோழிகள் ஆகாமல் நம் நாட்டிற்குத் தேவையான, பொருத்தமான கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு நாட்டைப் பற்றிக் கூறுகையில்,

உறு பசியும், ஓவாப் பிணியும், செறு பகையும்
சேராது இயல்வது நாடு

என்று வள்ளுவர் கூறியுள்ளார். எனவே ஏழ்மையும், நோயும், எதிரிகளும் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கென‌ நம் பொருளாதாரத் திட்டம் இருக்க வேண்டும். ஏழைகளுக்கு அடிப்படைத் தேவைகளும், அவற்றை நிறைவு செய்யும் தற்சார்பான கிராமங்களும் உருவாக்கும் வண்ணம் சில பொருளாதார சிந்தனைகளை முன்வைத்தோம் (உணவுப் பயண வரி, இயற்கை வேளாண்மை, விதைகள் பொதுச்சொத்து ஆகுதல், மரங்கள், நீர்நிலைகள், கால்நடைகளுக்கென நில ஒதுக்கீடு போன்றவை). நிலம், நீர், கனிமங்கள், உயிரிப் பன்மையம் ஆகியவை மிக இன்றியமையாத சொத்துக்கள். நிலைத்தன்மையுடைய, நீடித்த மேம்படுத்துதலுக்கு இவை அனைத்தும் பாதுகாக்கப் பட வேண்டும். சூழல் இல்லையேல், எதுவுமே இல்லை - பின்னர் பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு இருக்கும் வளங்களைச் சுரண்டிக் காசாக்கலாம் என்று எண்ணுவது மிக, மிகப் பித்துக்குளித் தன‌மான கொள்கை. அதை விட மன்னிக்க முடியாத குற்றம் - பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம் வளங்களைச் சுரண்ட அனுமதி அளித்து விட்டு அவர்களிடம் நம் நாட்டு மக்கள் அடிமை வேலை செய்ய அரசே கைக்கூலிகள் ஆவதுதான்.

வேலைகளை உருவாக்குகிறேன் என்று பல சலுகைகள் பெற்று, வளங்களைச் சுரண்டிப் பின் எல்லாம் கறந்த பின் வேறு ஒரு நாட்டைத் தேடிப் போவது அந்நிய முதலீட்டின் இயல்பு. இதைப் பற்றி வழிப்போக்கன் கென்யா நாட்டுப் பால் பண்ணைகள் பற்றிய கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தார். எனவே ஒரு நிலைத்தன்மை கொண்ட , தற்சார்பை விரும்பும் பொருளாதாரக் கொள்கை அந்நிய முதலீட்டுக்கு எதிராகவே அமைய வேண்டும். தொழில் தொடங்க நிறைய முதலீடு வேண்டும் என்பது மிகத் தவறான ஒரு சிந்தனை. வெளிநாட்டவருக்கு நம் சந்தையைத் திறந்து விடுவதும், நாம் ஏற்றுமதி மூலம் பொருள் ஈட்ட முனைவதும் நீண்ட காலத்திட்டம் ஆகாது. 2014ம் வருடம், இந்தியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த மூன்றாவது பெரும் சந்தையாக வளர்ந்துள்ளது. ஜப்பான் நாட்டைத் தாண்டி இந்தியா பெரிதாகி விட்டது. உலகின் அனைத்து நாடுகளும் நம்மிடம் பொருட்களை விற்கப் போட்டி போடுகின்றன. நாம் ஏன் இந்த சந்தையை நாமே பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சி அடையக் கூடாது? பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்து விட்டு ஏன் ஆஸ்திரேலியக் கோதுமையையும், ஓட்ஸையும் வாங்க வேண்டும்?

நம் தற்போதைய பொருளாதாரக் கொள்கை இன்னொரு விஷயத்திலும் மிகக் குருட்டுப் பார்வை கொண்டதாக இருக்கிறது. அறிஞர் குமரப்பா சொன்னது போல், நாம் கச்சாப் பொருட்களை (raw materials) ஏற்றுமதி செய்து, அவற்றால் ஆன இறுதிப் பொருட்களை (finished goods) இறக்குமதி செய்கிறோம். உதாரணமாக இரும்பு, எஃகு, தாமிரம்,பருத்தி போன்றவற்றை எல்லாம் ஏற்றுமதி செய்து விட்டு, ஜெர்மானிய இயந்திரங்கள், ஜப்பானிய மின்பொருட்கள், கொரிய உடைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறோம். இதனால் மிகப் பெரிய பொருள் இழப்பு ஏற்படுகிறது. உற்பத்தியில் உள்ள வேலைகள் வெளிநாட்டுக்குப் போகின்றன.பொருள் ஈட்டும் வாய்ப்புக்களும் குறைகின்றன. உற்பத்தி என்பது பொருளாதாரத்தின் அடிப்படை. ஒரு தெளிவான உற்பத்திக் கொள்கை மிக இன்றியமையாதது. தற்போது உணவில் இருந்து, எல்லா அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விரும்பும் பொருட்கள் எதற்குமே ஒரு தெளிவான உற்பத்தி வரைபடம் இல்லை என்பதே கசப்பான உண்மை. இந்தப் பூசணியைச் சோற்றில் மறைக்கவே, மெத்தப் படித்த முட்டாள்கள் புள்ளிவிவரங்களை மாற்றி, மாற்றிக் கணக்கிட்டுக் குழப்புகிறார்கள். ஆட்சி மாற்றம் ஒரு அடிப்படை மாற்றமல்ல; வண்டியின் ஓட்டுனரை மாற்றி விட்டால் அதள பாதாளத்தை நோக்கிச் செல்லும் வண்டி பிழைத்திடுமா? திசையை அல்லவோ மாற்ற வேண்டும்?

பொருளாதாரத்தை எவ்வாறு திசை மாற்றுவது? முதலில் மையப்படுத்தப் பட்ட சேய்மைப் பொருளாதாரத்தைக் குறைத்து (centralized, global economy), ஆங்காங்கே பற்பல அண்மைப் பொருளாதாரங்களாக (decentralized local economies) மாற்ற வேண்டும். தற்சார்பை அடிப்படை நோக்கமாய் வைத்துத் திட்ட வரைவு இருக்க வேண்டும். தேவைகளில் தற்சார்படைந்த ஒரு நாட்டில், உறுபசியோ, ஒவாப் பிணியோ இருக்காது. நாம் நம் இயற்கை வளங்களைச் சுரண்டாமல் இருந்தால் பகைவர்களும் இருக்க மாட்டார்கள்.

தற்சார்பு என்பது பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது. தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யலாம் (உள்ளூர் தொழில்நுட்பம் இல்லாத போது) ஆனால் தொழிலையே எதற்கு அந்நியருக்குக் கொடுக்க வேண்டும் ? இதில் என்ன தற்சார்பு உள்ளது? சிரீபெரும்புதூரில், 1000 கோடி ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பிக்கப் பட்ட நோக்கியாவின் அலைபேசித் தொழிற்சாலை 6000 பேருக்கு வேலை கொடுத்துப் பிரம்மாண்டமாகத்தான் தொடங்கியது. ஆனால் 6-7 வருடங்களுக்குள்ளாகவே 2000 கோடி ரூபாய் வரி ஏய்ப்புச் செய்து , தொழிற்சாலையை இழுத்து மூடி விட்டது. தன் நிறுவனத்தையும் அமெரிக்க மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திடம் விற்று விட்டது! இதில் யாருக்கு நட்டம்? அந்நிய முதலீடு எப்படி நிரந்தரமாய் வேலைகளை உருவாக்க இயலும்? வானவில்லைத் துரத்திய சிறுவர்களைப் போல் நம் பொருளாதார மேதைகள் இந்த வளர்ச்சி என்னும் மாய மானைத் துரத்துகிறார்கள்.

உலகின் மூன்றாவது பெரிய சந்தையான‌ இந்தியாவிற்குத் தேவையானவற்றை நாமே அண்மைத் தொழில்களால் உற்பத்தி செய்து, விநியோகம் செய்தால் 30 கோடி வேலைகளை மிக எளிதாக உருவாக்கலாம். இதற்குத் தேவை இரண்டே விஷயங்கள்தான்: 1. அறிவு 2. உறுதி . பாரதி சொன்னது போல், அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம் - இதைக் கொண்டுதான் அரசு ஆள வேண்டும்.

நாம் இதுவரை ஆய்ந்ததை எல்லாம் தொகுத்தால் புதிய பொருளாதாரக் கொள்கையின் வடிவம் ஓரளவு வெளியாகும்.

 • சிறுதொழில்களுக்கும், அண்மைப் பொருளாதாரங்களுக்கும் முன்னுரிமை
 • அந்நிய முதலீட்டுக்குத் தடை
 • உள்நாட்டுச் சந்தையை உள்நாட்டு உற்பத்தியால், குறிப்பாக சிறுதொழில்களால் நிறைவு செய்தல்
 • இறக்குமதிப் பொருட்களுக்கு வரிச்சுமை அதிகரித்தல்
 • உற்பத்தியில் இடைப்பட்ட-தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல் மற்றும் ஆற்றல் தேவையைக் குறைத்தல்
 • வேளாண்மைக்கு, அதிலும் தற்சார்பான இயற்கை வேளண்மைக்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்தல்.
 • இயற்கை வளங்களைப் பெரும் அக்கறையுடன்,பாதுகாத்தல்; தொழில் என்ற பெயரில் சூழல் வளங்களைப் பாதிக்கும் தொழில்களைத் த‌டை செய்தல்/ கடுமையான வரி விதிப்பின் மூலம் பின்னடைவு ஏபடுத்துதல்
 • கச்சாப் பொருள் ஏற்றுமதிக்குத் த‌டை
 • தொழிற் கல்விக்கு முக்கியத்துவம்; கிராமம் மற்றும் சிறூர்களில், தாய்மொழியில் மேலாண்மை மற்றும் தொழில்முனையும் கல்விக்குத் திட்டமிடல்
 • கிராமங்களில் தொழில் முனைவோரையும், துறைசார் விற்பன்னர்களையும் ஊக்குவித்தல்
 • இயற்கையைக் காவு வாங்காத மாற்று ஆற்றல் வழிகளை ஆராய்ந்து செயல் படுத்துதல்
 • சூழலுக்கு உவந்த கட்டிடக் கலை; கட்டிடம் கட்டும் தொழிலில் சிமென்ட் , கம்பி போன்ற இயந்திர உற்பத்திப் பொருட்களைத் தவிர்க்கும் நுட்பங்கள்.
 • நாட்டின் மிக அதிகம் பேருக்கு வேலை அளிக்கும் மிக‌ப் பெரிய முதலாளியான வேளாண்மை, இயந்திர மயமாவதைத் தடுத்தல்.
 • ஊடக வலுவால் ஏய்க்கும் விளம்பரங்களில் இருந்து திசை மாற்றி, ஊடகங்களால் இயற்கை வாழ்வை மக்கள் ஏற்குமாறு பரப்புரைமை செய்தல்.

இதையெல்லாம் செய்வதற்கு எந்தப் பணவலுவோ, ஆயுத வலுவோ தேவை இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். நாம் போகும் திசையை மட்டும் மாற்றி - ஆளுமை என்ற இலக்கில் இருந்து, நிறைவு, பகிர்ந்துண்ணல் போன்ற இலக்குகளை நோக்கித் திரும்ப வேண்டும். இதனால் விரைவில் ஏழ்மை என்பதே இல்லாமல் போய்விடும்; சோம்பேறிகள் மட்டுமே ஏழைகளாக இருப்பர். இதை ஏன் அரசு கைக்கொள்வதில்லை? இதற்குத் த‌டையாய் உள்ளவை என்ன? அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org