தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்


செல்வம் ஈட்டுவதைவிட அதைப் பாதுகாப்பது கடினமானது. மாடு எனும் செல்வத்தை நம்மிடம் இருந்து பறிக்கக் கூடிய இடர்களில் உயிர்க்கொல்லி நோய்கள் பேரிடர்கள் ஆகும். அவற்றில் சிலவற்றை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த மாதம் மேலும் சில உயிர்க் கொல்லித் தொற்று வியாதிகளைப் பற்றி காண்போமா?

1. அடைப்பான்: இதை ஆங்கிலத்தில் ஆந்த்ராக்ஸ் (Anthrax) என்று அழைப்பர். இந்த நோய் வெகு விரைவில் தொற்றக் கூடியது. இது பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் (Bacillus Anthracis) என்ற பாக்டிரியாவின் மூலம் ஏற்படுகிறது. பல வருடங்கள் வரை இந்த பாக்டீரியாக்கள் வீரியத்துடன் இருக்கக் கூடியவை. எனவே, ஒரு முறை அடைப்பான் நோய் ஒரு தொழுவத்தில் ஏற்பட்டால், மீண்டும் மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது மனிதர்களுக்கும் கூட தொற்றக் கூடியது. மேலும் மாடுகளுக்குள் வெகு விரைவாக பரவக் கூடியது. இந்த நோய் கண்ட மாடுகளில் பெரும்பாலானவை இறந்து விடும். இறந்த மாடுகள் உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும். இல்லையானால் சடலம் வெகு வேகமாக அழுகும். துர் நாற்றம் வீசும். அதன் மூலமும் மற்ற மாடுகளுக்கு நோய் பரவும். எனவே, இந்த நோயை கையாள்வதில் மிக அதிக கவனம் தேவை. இறந்த மாடுகளை உடனே புதைக்கவும். கொட்டகையை கிருமி நாசினி கொண்டு சுத்தமாக கழுவவும். இறந்த உடலை அப்புறப்படுத்தியவர்களும் கிருமி நாசினி கொண்டு உடலை சுத்தம் செய்து கொள்ளவும்.

இந்த நோய் வந்த மாடுகள் சாதாரண நிலையிலிருந்து இறப்பிற்கு வெகு விரைவில், சில மணி நேரங்களிலேயே சென்று விடும். பல சமயங்களில் சிகிச்சை அளிக்கும் வாய்ப்பே நமக்கு இருக்காது. பொதுவாக, நாம் திடீரென்று மாடு இறந்து போனதை மட்டுமே பார்ப்போம். நோயை நாம் கவனிக்க நேர்ந்தால், மாடுகளுக்கு 106-107 டிகிரி காய்ச்சல் இருக்கும். கண்கள் வீங்கி சிவப்பாக இருக்கும். மூச்சு விட சிரமப்படும். உடல் நடுங்கும். சளி, கோமியம், சாணி போன்று எல்லா வேளியேறும் திரவங்களிலும் இரத்தம் கலந்திருக்கும். மாடு நிற்க இயலாமல் ஆடும். பல சமயங்களில் கீழே விழுந்து விடும்.

இந்த நோய் பரவும் காலத்தில் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது தவிர்க்க இயலாதது. சிகிச்சையையும் தடுப்பு ஊசியையும் ஒன்றாக செய்வது கூடாது. சிகிச்சை பலனளிப்பது மிகவும் கடினம் என்றாலும், ஐம்பது மில்லி ஆளி விதை எண்ணெயுடன் ஐம்பது மில்லி டர்பென்டைன் கலந்து கொடுத்து பார்க்கலாம். கார்பாலிக் அமிலத்தை தண்ணீரில் கரைத்தும் கொடுக்கலாம். பின்னர், உடனே மருத்துவரை அழைக்கலாம்.

2. சப்பை நோய்: இது ஆங்கிலத்தில் பிளாக் லெக் (Black Leg) அல்லது பிளாக் க்வாட்டர் (Black Quarter) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஆறு மாதம் முதல் நான்கு வயது வரை உள்ள மாடுகளையே இது அதிகம் தாக்குகிறது. அதிலும் ஆறு மாதம் முதல் இரண்டு வயதிற்குள் , வெகு வேகமாக எடை அதிகமாகும் கன்றுகளுக்கு, அதிகம் தாக்க வாய்ப்புள்ளது. இதுவும் ஒரு வித பாக்டீரியாவின் மூலமே ஏற்படுகிறது. ஆனால், இது ஒரு நோய் கண்ட மாட்டிலிருந்து மற்றொன்றுக்கு வெகுவாக பரவுவதில்லை. இந்த பாக்டீரியா மூலம் தாக்கப்பட்ட தீவனம் மூலமும் திறந்த புண்களின் மூலமும் அதிகமாக பரவும். ஒரு முறை இந்த நோய் வந்து மாடு பிழைத்து விட்டால் மீண்டும் வருவதில்லை என்பது ஆறுதலேயானாலும் நூற்றுக்கு தொண்ணூறு மாடுகள் நோய் கண்டதிலிருந்து மூன்று நாட்களுக்குள் இறந்து விடுகின்றன.

இந்த நோய் கண்டதும் முதலில் மாடுகள் சோம்பலாக இருக்கும். கண்கள் சிவந்து காணப்படும். பின்னர், கால்களை இழுத்து இழுத்து நடக்கும். சரியாக தீவனம் உட்கொள்ளாது. 106 - 108 டிகிரி காய்ச்சல் இருக்கும். மூச்சு விட சிரமப்படும். உடல் முழுவதும் வீங்க ஆரம்பிக்கும். அதிகமாக கழுத்து, நெஞ்சு, இடுப்பு மற்றும் முதுகு பகுதிகள் வீங்கும். முதலில் வீக்கத்தை தொட்டுப் பார்த்தால் வெது வெதுப்பாக இருந்தாலும் பின்னர் சில்லென்று ஆகி விடும். வீக்கத்தை அமுக்கினால் உள்ளே காற்று புகுந்திருப்பது போல் காணப்படும். வீக்கத்தைக் கீறினால் மஞ்சள் கலந்த கருப்பு நிறத்தில் துர்நாற்றம் வீசக்கூடிய ஒரு திரவம் வெளிப்படும்.

வீக்கத்தைக் கீறி வரும் திரவத்தைக் காய்ந்த புல் அல்லது வைக்கோலில் வடித்து எரித்து விடவும். கீறிய புண்களில் வேப்பெண்ணெயில் கற்பூரத்தைக் கரைத்துப் பூசவும். ஆளி விதை எண்ணெய் ஐம்பது மில்லியுடன் இருநூறு மில்லி டர்பென்டைன் கலந்து உள்ளுக்கு கொடுக்கலாம்.

சிகிச்சை பலனளிக்காமல் மாடு இறந்து விட்டால் வெகு ஆழத்தில் புதைத்து மேலே சுண்ணாம்பு பொடி தூவி விடவும். இல்லையானால் உடலை எரிக்கலாம்.

3. மென்னை அடைப்பான்: இந்த நோய் தண்ணீர் அதிகம் தேங்கி இருக்கும் ஈரமான சூழலில், வேகமாக பரவும். இதுவும் பாஸ்டுரெல்லா முல்டோஸிடா (Pasteurella Multocida) என்ற ஒரு பாக்டீரியாவினால்தான் பரவுகிறது. இதனை ஆங்கிலத்தில் பார்போன் டிஸீஸ் (Barbone Disease) என்று அழைப்பர். இது அதிகம் எருமைகளை தாக்குவதால் பஃப‌ல்லோ டிஸீஸ் (Buffalo Disease) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நோய் கண்ட மாடுகளுக்குக் கண் சிவந்து காணப்படும். 105 முதல் 106 டிகிரி வரை காய்ச்சல் காணப்படும். வாயிலிருந்து எச்சில் ஒழுகும். கழுத்து வீங்கும். மாடு மூச்சு விட சிரமப்படும். எனவே, தொண்டையிலிருந்து கொர் கொர் என்று சத்தம் வரும். மாடு உணவு, தண்ணீர் எதையும் உட்கொள்ளாது. பொதுவாக இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் இந்த நோய் கண்ட மாடு இறந்து விடும்.

இதனை நோயின் தீவிரம் அதிகரிக்கும் முன் கண்டுபிடித்தால் சிகிச்சை அளிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அவ்வாறு கண்டறிவது மிகவும் குறைவே. மழைக் காலங்களில் அதிகம் பரவ வாய்ப்புள்ளதால் அதற்கு முன் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம். நோயை தீவிரமாவதற்கு முன் கண்டுபிடித்தால் நல்லெண்ணெய், ஆளிவிதை எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவு (சுமார் 50 கிராம்) கலந்து இரண்டு வேளை உள்ளுக்கு கொடுக்கலாம்.

4. வெக்கை: இந்த நோயை ஆங்கிலத்தில் ரிண்டெர்பெஸ்ட் (Rinderpest) என்றும் கேட்டில் பிளேக் (Cattle Plague) என்றும் அழைக்கிறார்கள். பெரிய கொப்புளங்கள் ஏற்படுவதால் மகாமாரி என்றும் அழைப்பர். அதுவே மருவி சில இடங்களில் மகமாயி என்றும் அழைக்கப்படுகின்றது. இது ஒரு வைரஸ் நோயாகும். பசுக்களைத் தவிர எருமைகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் என்று எல்லா விதமான குளம்புள்ள பிராணிகளையும் தாக்கக் கூடியது. மலைப் பிரதேசங்களில் இது அதிகம் பரவுகிறது. மேலும், மலைப்பகுதிகளில் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ், பிராணியின் உடலுக்கு வெளியில் வந்து விட்டால், நல்ல வெயில் அல்லது கிருமி நாசினி மூலம் உடனே அழிந்துவிடுகிறது. குளிர்ந்த நிலை மற்றும் தண்ணீரில் இந்த வைரஸ் நன்கு வளர்வதால் பொதுவாக அப்போது பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த வைரஸ் மாட்டின் எச்சில், கண்ணிலிருந்து வடியும் நீர், கோமியம் மற்றும் சாணியில் காணப்படும். எனவே, நோய் கண்ட மாடுகளை மற்ற மாடுகளுடன் கட்டாமல் இருப்பது அவசியம். சாணி, கோமியம் ஆகியவற்றையும் மற்ற மாடுகளின் அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

நோய் கண்ட மாடுகளுக்கு 103 முதல் 105 டிகிரி வரை காய்ச்சல் இருக்கும். கண்கள் பாதி மூடிக் காணப்படும். தலையைத் தொங்கப் போடும். காதுகளும் தொங்கும். மாடு பல்லை “நற ,நற” என்று கடித்தவாறே இருக்கும். பசி குறைந்து தாகம் அதிகரிக்கும். மூத்திரம் சிகப்பாக மாறும். சாணி புழுக்கை போலாகும். வேகமாக மூச்சு விடும். மூச்சில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். சினை மாடுகளுக்கு கருச்சிதைவும் ஏற்படக்கூடும். பல், ஈறு, நாக்கின் அடிப்பகுதி மற்றும் பால் மடி போன்ற இடங்களில் பட்டாணி அளவில் கொப்புளங்கள் தோன்றலாம். அவ்வாறு கொப்புளம் ஏற்பட்ட மாடுகள் இறக்காது என்று ஒரு நம்பிக்கையும் உண்டு. மூன்று முதல் ஒன்பது நாட்கள் வரை காய்ச்சலின் கடுமை அதிகமாக இருக்கும். இறக்கும் மாடுகள் இந்த தருணத்தில் தான் அதிகம் இறக்க வாய்ப்புள்ளது.

இந்த நோயைக் கட்டுப்படுத்த வில்வப் பழச் சதை 100 கிராம் அளவிற்கு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி உள்ளுக்கு கொடுத்து வரலாம். மருதாணி இலை, நிலவேம்பு மற்றும் வேப்பம்பூ ஆகியவற்றைச் சம அளவு (25 கிராம்) ஒன்றாக ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தும் உள்ளுக்குக் கொடுத்து வரலாம்.

இந்த நோய் பொதுவாக ஆங்கில மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை. ஒருமுறை தாக்கிய மாட்டை மறுமுறை தாக்குவதில்லை என்றாலும் ஈரமான, குளிர் சூழ்நிலைகளில் வேகமாக பரவி பண்ணையில் நிறைய மாடுகளை ஒரே சமயத்தில் பலி வாங்கும் திறன் உள்ளதால் இந்த நோய் ஒரு பயங்கரமான நோயாக அஞ்சப்படுகிறது.

இந்த மாதம் பார்த்த நோய்கள் எல்லாமே கிருமிகள் மூலம் வேகமாக பரவி, விரைவாக மாடுகளைக் கொல்லும் திறன் கொண்ட நோய்களாகும். இவை வந்து விட்டால் மாட்டின் உயிரை பாதுகாப்பது என்பது மிகவும் சிரமமாகும். அதனால், வருமுன் காப்பது மிகவும் இன்றியமையாதது. இதைப் படித்து விட்டு மாடுகளைக் காப்பாற்ற முடியாத அளவிற்கு இத்தனை நோய்களா என்று பீதியடைய வேண்டாம். எந்த உயிர் குடிக்கும் நோய்களும் ஆரோக்கியமான சூழலில், சுத்தமாக இருக்கும் தொழுவங்களில் வளர்க்கப்படும் மாடுகளைத் தாக்குவதில்லை. தொற்று வியாதிகள் எல்லாம் பொதுவாக மேய்ச்சல் இல்லாமல், தொழுவங்களிலேயே உள்ள மாடுகளை (Stall Fed) மட்டுமே அதிகம் பீடிக்கிறது. இன்னும் கூட சில தொற்று வியாதிகள் மாட்டின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காவிட்டாலும் அதன் இனப்பெருக்கத் திறனையும், நல்ல பால் உற்பத்தித் திறனையும் பாதிக்கின்றன. நல்ல பால் இல்லாவிட்டால் நல்ல கன்றுகள் இல்லை. நல்ல கன்றுகளே நல்ல மாட்டுப் பண்ணையின் அடையாளம். அதைப்பற்றி வரும் இதழ்களில் காணலாம்.

(ஆசிரியர் குறிப்பு: மனித உயிர்க்கொல்லி நோய்கள் என்று பட்டியிலிட ஆரம்பித்தால் அது மிகவும் பெரிதாய் வளரும் - உதாரணமாக, டெங்கு, காலரா, பெரியம்மை, டெட்டனஸ், ஆந்தராக்ஸ், சார்ஸ் போன்ற உடனடிக் கொல்லிகளும், மாரடைப்பு, நீரிழிவு, உடற்பருமன், ரத்த அழுத்தம், புற்றுநோய், மன அழுத்தம் போன்று பொறுமையாய்க் கொல்லுபவையும் சொல்லலாம். அதற்காக நாம் உயிர் வாழ்வதையோ, சொத்து சேர்ப்பதையோ, பிள்ளை பெற்றுக் கொள்வதையோ ஒத்திப் போடவோ தவிர்ப்பதோ இல்லையே! எழுத்தாளார், நாம் எல்லாவற்றிற்கும் தயாராய் இருப்பதற்கே இவற்றை விவரிக்கிறார் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். கால்நடைகளும் நம் குடும்பத்தவர்தான் என்று காதலுடன் அவற்றைப் பராமரித்தால் மாடன்றி மற்ற செல்வம் தேட வேண்டாம்)

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org