தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஊனுடம்பு ஆலயம்


நாச்சாள்

(முன்னுரை: நம் இந்திய மரபுச் சிந்தனைகளில் உடல் என்பது போற்றுதலுக்கு உரியதாகவும், தூற்றுதலுக்கு உரியதாகவும் வெவ்வேறு கட்டங்களில் பார்க்கப் பட்டுள்ளது. “புன்புலால் நரம்பு என்புடைப் பொய்யுடல், அன்பர் யார்க்கும் அருவருப்பு ” என்று தாயுமானவராலும், “சீவார்ந்து, ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில்” என்று மாணிக்கவாசகராலும், “வாய்நாறும் மூழல், மயிர்ச்சிக்கு நாறும்” என்று பட்டினத்தாராலும் வசைபாடப் பட்ட அதே உடல், “ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி” என்று ஔவையாராலும், “உள்ளம் பெரும் கோயில், ஊனுடம்பு ஆலயம்; தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்” என்று திருமூலராலும் பாராட்டுப் பெற்றுள்ளது. ராஜயோகம் என்று சொல்லப்படும் உடல் வழி ஆன்மப் பயிற்சிகள் உடற் தூய்மைக்கும், மூச்சுப் பயிற்சிகளால் மனத் தூய்மைக்கும் பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஞான யோகமும், பக்தி யோகமும் உடலை அலட்சியப்படுத்தி சிந்தனைக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன. எப்போதும் ஒரு நடுப்பாதையை விரும்பும் தாளாண்மை, உடல் சார்ந்த இன்பங்களையும் ,நுகர்ச்சிகளையும் அறவே புறக்கணிக்காமல் , அதே நேரம் உடல் மற்றும் மன நலம் நம் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்ற விழிப்புணர்வுடன் ஒரு இடைப்பட்ட பாதையைப் பரிந்துரை செய்கிறது. இப்பின்னணியில், நாச்சாள் அவர்களின் ஊனுடம்பு ஆலயம் என்ற தொடரை அளிக்கிறோம். வழக்கம்போல் அவரவர் தம் தம் தேவைக்கும், சூழலுக்கும் ஏற்ப இதைப் பயன்படுத்தி மேம்படுமாறு கேட்டுக் கொள்கிறோம் -ஆசிரியர் )

வியர்வை

பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அனைத்து பாலுட்டிகளுக்கும் வியர்வை பொதுவானது. நம்மைச் சுற்றி உள்ள இடமும், மனிதர்களும் தூய்மையாக இருந்தால் அவற்றை விட்டு நாம் விலகமாட்டோம். ஆனால் அவை தூய்மையற்றதாக இருக்கும் போது நாம் அந்த இடத்தையும் மனிதர்களையும் நெருங்குவதில்லை. இவை நாளடைவில் மன உளைச்சலையும், உடல் நல‌த்தையும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கிப் புற்று நோய் வரை பலரைக் கொண்டு செல்கிறது.

வியர்வை என்பது நமது உடலை சமநிலைப்படுத்த உடல் சுரக்கும் ஒரு வித திரவமாகும். உடல் அதிகமாக சூடாகி இருக்கும் போது உடலை சமநிலைப்படுத்த உடல் வியர்வை மூலம் சூட்டை வெளியேற்றுகிறது. கோடை காலங்களில் உடலில் இருந்து சிறுநீரகம் வெளியேற்ற வேண்டிய நீரை, வியர்வை சுரப்பிகள் வியர்வையாக வெளியேற்றுகின்றன‌. மழைக்காலத்தில் அதிக வெப்பம் இல்லாததால் சிறுநீரகமே சிறுநீராக வெளியேற்றுகிறது. வியர்வை நாளங்கள் மூலம் மேல் தோலை அடைந்து அங்கு ஆவியாகி விடுகிறது. இதனால் உடல் குளிர்ச்சி அடைகிறது. உடலில் வியர்வை என்பது இயற்கையானதே. தூய்மையான உடலில் இருந்து வரும் வியர்வைக்கு எந்த வாடையும் இருக்காது. இந்த வியர்வை நாளங்கள் உடலில் பல இடங்களில் சுரக்கிறது. குறிப்பாக உள்ளங்கை, கால்களில் மற்றும் உடல் முழுவதும் ஏற்படும் வியர்வையில் ஒரு வித உப்புகளும், கழிவுகளும் கலந்து வெளியேறுகிறது, அதேப் போல் மார்பு, அக்குள், தொடை இடுக்குகள் போன்ற இடங்களில் சுரக்கும் வியர்வையே ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

வியர்வை சமநிலையில் வைப்பதற்கு மட்டும் அல்ல, நைட்ரஜன், எண்ணெய் கழிவுகளை வெளியேற்றவும் தான்.

*எதற்காக வியர்வையில் துர்நாற்றம் :*

உடலில் வியர்வைக்கு பல காரணங்கள் இருப்பது பொதுவானது. உடலில் எதாவது நோய் இருத்தல், உடல் சுத்தம் இல்லது இருத்தல், பரபரப்பு, மலச்சிக்கல் மற்றும் திடீர் உடல் உபாதைகள் போன்றவை முக்கிய காரணங்களாகும். திடீர் உடல் உபாதைகளால் பெருமளவில் பாதிப்புகள் இல்லை, இது ஒரு சாதாரண உடல் செயல்பாடு. ஆனால் வியர்வையில் துர்நாற்றம் என்பது சாதாரண செயல்பாடு அல்ல‌. அதைக் கவனிக்கத் தவறினால் நாள்பட்ட வியாதிகளுக்கு அதுவே வழி வகுக்கும். வியர்வை துர்நாற்றத்திற்கு மிக முக்கிய காரணங்கள் சீரான‌ உணவுப்பழக்கம் இல்லாதது மற்றும் சீரான‌ கழிவு நீக்கம் இல்லாதது ஆகியவையே.

வயிற்றில் ஏற்படும் செரிமான (ஜீரண) முறைகேடே வியர்வை துர்நாற்றத்திற்கு முதல் காரணம். செரிமானம் முதலில் தொடங்கும் இடம் வாயும் அதனுடன் சேர்ந்த உமிழ்நீரும். உணவின் ஒவ்வொரு குறிப்பிட்ட சுவையும் உடலின் உறுப்புக்களுக்குச் சக்தி அளித்து அந்த உறுப்பை சீராக இயக்க புத்துணர்வூட்டுகிறது. ஆனால் அன்றாடம் நாம் உண்ணும் உணவின் சுவையைப் பிரிக்காமல் (சுவைக்காமல்) அதிக பசி மற்றும் நேரமின்மை காரணமாக உணவை அப்படியே விழுங்கி விடுகிறோம்.

இவ்வாறு செரிமானத்திற்கு உதவும் உமிழ்நீருடன் கலக்காத உணவு வயிற்றில் தள்ளும் போது வயிறு, மண்ணீரல் போன்ற உறுப்புக்கள் உணவின் சக்தியை முழுமையாக ஈர்க்கும் கூடிய ஆற்றலை இழக்கின்றன‌. இதனால் உடலின் ஜீரண சக்தியும் குறைகிறது. அதுமட்டும் அல்லாது சுவைக்காக என்று பலர் தேவையற்ற மசாலாப்பொருட்களைச் சேர்த்து உணவை சமைத்து உண்ணுகின்றனர். இதுவோ ருசியை உணரும் நாக்கின் சுவை முட்டுக்களை பாதிக்கின்றன. இதனால் சுவை அறியாது உடல் தன் உணவை செம்மையாக ஈர்க்கும் சக்தியை இழக்கிறது. இவ்வாறு முறைகேடாக செரிக்கப்பட்ட உணவே வயிற்றில் இருந்து மண்ணீரலால் கிரகிக்கப்படுகிறது.

இந்த உணவின் சக்தியானது இரத்தத்தில் கலந்துள்ள பிராணவாயுவின் உதவியால்தான் உயிரோட்டம் பெறுகிறது. மண்ணீரல் இயக்கக் கேட்டால் பிராணவாயு குறைவான கெட்ட இரத்தம் சுற்றுப் பெற்றுக் கொண்டிருக்கும் போது அவையே உணவுச் சத்துக்களாகவும் மாறுகிறது. கெட்ட உணவுச் சத்துக்கள், பிராணவாயு போதுமான அளவில் இல்லாததால், உடல் திசுக்களால் உபயோகப் படுத்தப்படாமல் ஊளைச் சத்துக்கள், சதைகளாக‌ திசுக்களிலேயே தேக்கம் அடைகின்றன. இந்த ஊளைச் சதை, இடுப்பை சுற்றிலும், அடி வயிற்றிலும் அதிகமாகத் தங்குகின்றன. மேலும் தொடையிலும், தொடைப் பகுதியிலும் கெட்ட நீர் தேங்க ஆரம்பிக்கின்றது. இதைத் தொடர்ந்து இக் கெட்ட உணவு சத்துக்கள் தோலின் அடியில் பரவலாக படிய ஆரம்பிக்கின்றன.

தோலில் இவ்வகையாகக் கெட்ட நீர், ஊளை சதை தங்கும் போது வியர்வையில் துர்நாற்றம் அடிக்கத் தொடங்குகிறது. பெண்களுக்கு இந்த கெட்ட நீரும், ஊளை சதையும் மார்பகத்திலும், சினைப்பையைச் சுற்றியுள்ள கொழுப்புப் பாகங்களிலும் அதிகமாக தங்குகின்றன. நாளடைவில் இது மார்பகப் புற்றுநோயாகவோ அல்லது கர்பப்பை புற்றுநோயாகவோ மாறக் கூடிய வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த துர்நாற்றத்தினால் பவுடர்களையும், வாசனை திரவங்களையும் அதிகம் உபயோகிக்கின்றனர். இதனால் விளைவுகளை நாமே அதிகப்படுத்திக் கொள்கிறோம், இவற்றின் இரசாயனத் தன்மையினால் தோல் புற்று நோய்க்கும், தோல் வியாதிகளுக்கும் நாமே வழி வகை செய்கிறோம்.

மேலும் சீரான உணவு செரிமானம் ஆகாமல் தொடரும் போது மலச்சிக்கலும் உருவெடுக்கிறது. மலச்சிக்கல் இருந்தால் வியர்வையில் அதிக துர்நாற்றம் தொடரும். இதனால் மனரீதியாகவும் பெருமளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனதில் தேவையில்லாத கவலை, பயம், கோபம், பொறமை, வெறுப்பு தோன்ற ஆரம்பிக்கும். இவ்வாறான தீய எண்ணங்கள் அல்லது தீய நினைப்புகளுக்கு ஏற்றார்போல் உடல் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதுவும் வியர்வை துர்நாற்றத்திற்கு மிக முக்கிய காரணம்.

*வியர்வை துர்நாற்றத்தைப் போக்க வழிகள்:*

பொறுமையாக ரசித்து ருசித்து அதிக மசாலா இல்லாத ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல்.

மாமிசம், அதிக காரம், டீ, காபியை தவிர்ப்பது.

அதிக எடையை குறைப்பது அவசியம். உழைப்பில்லாது அதிக தூக்கம் கழிவுகளை உடலில் தேங்க செய்யும்.

இறுக்கம் இல்லாது இயற்கைப் பருத்தி துணியாலான ஆடைகளை உபயோகிப்பது.

உடலுக்கு இரசாயன பூச்சுக்களை பயன்படுத்தாமல் இயற்கையான பயத்த மாவு, கடலை மாவு, மூலிகைகள் அல்லது பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி வியர்வை நாளங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது.

அதிக நீர் அருந்துவது, உணவில் காய்கறி, பழங்களை உபயோகிப்பது, தீட்டாத அரிசி தானியங்களை உபயோகிப்பது.

யோகா, தியானம் மூலம் மனதையும், உடலையும் அமைதியாக வைப்பது.

உடல், குடல் தூய்மை மிக முக்கியம்.

மூலிகைக் குளியல் சிறந்தது. முதல் நாள் ஒரு தண்ணீர் குடத்தில் சிறிது வேப்ப இலை, தும்பை செடி இலை, நன்னாரி வேர், வெட்டி வேர் போட்டு ஊறவைத்து மறுநாள் காலை இந்த மூலிகைத் தண்ணீரில் குளித்து வந்தால் உடலின் நீர் கழிவுகள் வெளியேறி வியர்வை துர்நாற்றம் குறையும்.

சூரிய ஒளி குளியல் மற்றும் மண் குளியல் சிறந்து செயல்படும். கடல், அருவி குளியல் செய்யலாம். இது உடல் சூட்டை தனிக்கும், உடலை குளிர்ச்சியாக வைக்கும்.

குளிக்கும் முன் எலுமிச்சை சாறு தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெறும் கைகளால் தேய்த்து குளித்து வருவது சிறந்தது.

சுகந்த முத்திரை என்னும் முத்திரையை தொடர்ந்து செய்வதினால் வியர்வை துர்நாற்றம் அகலும். சுகந்த முத்திரை - கடைசி இரண்டு விரல்களையும் மடக்கி உள்ளங்கையில் ஊன்றவும்.பெருவிரலின் நுனியை, மோதிர விரலின் பக்கவாட்டுப் பகுதியில் வைக்கவும். மற்ற இரண்டு விரல்களையும் இணைத்து பெருவிரலின் மேல் பதியவைத்து நுனிகளை நேராக நீட்டவும். காலை, மாலை 2-3 நிமிடம் செய்யலாம்.

விடியற்காலை எழுந்து குளித்த பின் சூரியனை வழிபடுவது அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் இருப்பது (காலை சூரிய கதிர்கள்) உடலின் நச்சுக்களையும், கழிவுகளையும், துர்நாற்றத்தையும் போக்கும். மன உடல் வலிமையைத் தரும்.

இவ்வாறான சீரான‌ பழக்கங்களைக் கொண்டு வியர்வையால் ஏற்படும் பாதிப்புகளை நாமே இயற்கை முறையில் சரி செய்து கொண்டு ஆரோக்கியமான வாழ்வு பெறலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org