தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் பார்வை

தேயிலையும் சாயாவும் - அனந்து

உலகிலேயே தண்ணீருக்கு பிறகு அதிகமாகக் குடிக்கப்படும் பானம் தேனீர். சீனாவிலிருந்து உலகெங்கிலும் பரவிய இந்த பானம் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. ஆம் - சீனாவிற்கு மாற்று மற்றும் போட்டி உருவாக்க விரும்பிய‌ அவர்களது சூழ்ச்சியால். டீ என்பது ஒரு மரம் ஆகும், அதாவது மனிதன் தலையீடு இல்லையெனில்! இது ஒரு நெடுங்காலப்பயிர் (perennial). சுமார் 100 ஆண்டுகள் வரை வாழக்கூடிய இந்த மரத்தினை நாம் அவ்வப்பொழுது வெட்டிக் கவ்வாத்து வாங்கி (prune) ஒரு செடியாகவே பாவித்து நம் தன்னல நோக்கிற்காக 10 மீட்டருக்கும் மேல் உயரமாக வளரக்கூடிய பயிரைத் தரை மட்டமாக்கி விட்டோம்.

இயற்கையாய் வளர்ந்த தேயிலை மரம்!

புல்வெளிக‌ளும் ( grass lands),ஊசி இலைக் காடுகளும், மழைக் காடுகளும் மற்றும் உயர் மரங்களும் கொண்ட நமது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இந்தப் பயிரைக் கொண்டு வந்து, மழை மேகங்களை இடை மறித்து மழை கொண்டு வரும் நிலைமையை மாற்றிப் பருவ நிலை மாற்றங்க‌ளையும் கொண்டு வந்தோம். ஓரினப்பயிராக தேயிலை மட்டுமே எல்லா இடங்களிலும் என்ற நிலை வந்து அதனால் பல பூச்சிகளும் வியாதிகளும் அதிகமாகப் பரவி, இன்றளவும் மிக அதிகமான ரசாயன விஷங்களை தெளித்துத் தேயிலையைப் பேராசையின் காரணமாகக் கெடுத்து விட்டோம். மேலும் இது பன்மையத்தை அழித்து, நிலத்தைக் கெடுத்து, நீர் ஆதாரங்களை மோசமாக்கி, மண் அரிப்பு மற்றும் மலைச் சரிவிற்கே வித்திட்டன. ஓரினப்பயிர் என்றால் இது மிகவும் வினோதமான ஒரினம்.

தேயிலை விதைகளால் பரப்பபடுவது இல்லை. ஒரு தேயிலைச் செடியின் (மரத்தின்) கிளையிலிருந்து பதியன் அல்லது போத்தைப் (cuttings) போட்டுப் புதிய செடி உருவாக்கப் படுகிறது. நீலகிரி மலையில் உள்ள பெரும்பாலான தேயிலைச் செடிகள் ப்ரூக்லேன்ட்ஸ் என்னும் தோட்டத்திலிருந்து 6வது வரிசையில் 61வது செடியின் கொம்புகளே இந்த மலையின் பெரும்பான்மை வித்து! B661 என்றே வழங்கப்படுகிறது. அப்படி ஒரு ஓரினம்!

மாண்டரினில் 'சா' என்றும் மின் சைனீசில் 'டீ' மற்றும் 'டா' என்றும் வழங்கப்படும் தேயிலை இவ்விரெண்டு சொற்களிலிருந்தே உலகின் எல்லா மொழிகளிலும் வழங்கப்படுகிறது. தேயிலையில், பால் மற்றும் சர்க்கரை சேராமலிருக்கும் வரை பல நன்மைகள் உண்டு !

ஒரு முறை நான் இயற்கை முறையில் தேயிலை தயாரிக்கும் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரது இயற்கைத் தேயிலையை தேனீராக நான் வீட்டில் குடித்த பொழுது மிகவும் லேசாக (light) மற்றும் ஆழ்ந்த வண்ணமற்றதாக இருந்தது என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே ' நீங்கள் அதனை தேனீர் போல் குடித்தீர்களா அல்லது சூப் போல் குடித்தீர்களா?' என்றார்! மேலும் கேட்டதற்கு 'ஒ..உங்களுக்கு “மணம், நிறம், குணம்” எல்லம் நிறைந்து இருக்க வேண்டுமா' என்று சிரித்தார். அதன் அர்த்தம் நாம் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு அதனை எதிர்பார்த்து ஏமாறுகிறோம் என்று விளக்கினார். தேயிலையை கொதிக்கும் வெண்ணீரில் போட்டு 5 நிமிடம் மூடி வைத்து 'steeping' என்று சொல்லப்படும் குறுகிய காலத்திற்கு ஊற‌ விட, இதன் ரசம் நீரில் இறங்க அதனைப் பருகி வருவதே வழக்கமாக இருந்தது. அப்பொழுது அதனுள் உள்ள ஃப்ளாவனோயிட்ஸ், அமினோ அமிலங்கள், வைட்டம்ன்கள் எல்லாம் நன்மை பயக்கும். நாம் எல்லோரும் செய்வது போல் பால் கலந்து கொதிக்க விட்டு சர்க்கரை கலந்து உட்கொண்டால் இன்னல்கள் தான் இருக்கும் என்றார்.

தேயிலை ஊறல் (steeping)

தேனீர் என்பது இப்படி இலை வடி நீராக மட்டுமே பருக வேண்டிய ஒரு இன்பொருள்; நாம் அதன் பலன்கள் அழியுமாறு உட்கொள்கிறோம். சீனாவிலும் சரி, நான் பார்த்து சுவிட்சர்லாந்திலும் சரி இதனை வெறும் இலை வடி நீராகவே பருகுகின்றனர். அதனால் பல நன்மைகள் உண்டாவதாகவும் நம்புகின்றனர். சுவிஸ்ஸில் தேயிலை தவிர தேயிலையில் பல மூலிகைகளையும் கலந்து நுகர்கின்றனர். இந்த தேயிலை இல்லாத வெறும் மூலிகைகளாலான வடி நீரையும் அதிகம் பாவிக்கின்றனர். தமிழ் மக்களும் முன்பு அவ்வாறே பல வகையான மூலிகை கசாயங்களும் வடி நீர்களுமே உட்கொண்டு வந்த்தனர். பின்னர் இந்த 'சாயா' என்னும் பால் கலந்த பானம் வந்து பின்னர் மற்றவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

தேனீர் குடிக்கும் முன் எப்பொழுதேனும் அதனுள் என்ன என்ன இருக்கின்றன என்று சிந்தித்தது உண்டா? இந்த மணம்- நிறம்- குணம் எங்கிருந்து வருகிறது? அதற்கு முன் இதிலும் 'பிலெண்டிங்' (blending) என்னும் பெயரில் ரீஃபைண்டு எண்ணையைப் போல் பலதும் கலந்தே சத்தற்றதாக வருகிறது என்றும் தெரியுமா? நஞ்சுக்கலப்பு மிகச் சாதாரணமாக நடக்கிறது. அதன் மேல் எண்ணையைப் போலவே கலப்படமும். உதாரணத்திற்கு டீ கடைகளில் உபயோகிக்கும் பொடிகள் இந்த பெரும் வர்த்தக தேயிலைகளை விடவும் மோசம். கீழ்த்தரமான மரத்தூள்கள் முதல் பல கலப்படங்கள் சாதாரணம்.

தேயிலைச் செடியின் நுனியின் முதல் இரண்டு இலைகள் மட்டுமே இந்த நமது டீ என்னும் விற்பனை பொருளின் இடுபொருள். (அதுவே எனக்கு மிகவும் தவறான, இயற்கைக்கு மாறான, மனிதனின் பேராசையின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன்) அந்த இலைகளை காய வைத்து (கருவிகளில்), வெட்டி துகள்களாக்கி, பொடிகளையே பாக்கட்டுகளில் விற்கின்றனர். உலகிலேயே சிறந்தாக கருதப்படுவது டார்ஜிலிங் டீயே ஆகும். இருந்தும், மிகவும் சிறந்த தரம் வாய்ந்தவை ஏற்றுமதி செய்யப்பட (ஆம்! பணக்கார மேலை நாட்டவருக்கே!) மற்றவை எல்லாம் பிலெண்டிங் என்ற பெயரில் கலந்தே விற்கப்படுகின்றன. ctc (crushed tear and curled) என்பது கசக்கி, கிழித்து, சுருட்டப்பட்டவை என்று அர்த்தம்.

அதிலும் கீழே இருப்பது துகள்கள். இப்படி இயந்திர செய்முறைகளின் கடைசியில் மிஞ்சுவது துகள்கள். என்ன செய்ய? பிலெண்டிங் போக இந்த மீதியை 'டஸ்ட் டீ” (dust tea) என்று விளம்பரத்தின் மூலம் விற்பனை செய்கின்றனர்!

இப்படித் தவறான செயல்முறைக்கு மட்டும் தள்ளப்படாமல் கீழ்த்தரமான அடியில் மிஞ்சும் துகள்களும் நமக்கு தள்ளப்படுகின்றன. டஸ்ட் டீ என்று பெருமையாக சில நடிகர்களால் விளம்பரப்படுத்தப்பட்டு நமக்கு விற்க்கப்படுகின்றன.

அது மட்டுமா? இப்படி நம் நாட்டின் மிகவும் பிரதான குடி பானம் என்று பெருமைப்படும் தேனீரை எவ்வளவு விளைவிக்க வேண்டும்! இயன்றவரை மலை பிரதேசங்களின் நிலங்களை மரம் மற்றும் காடழித்து வளர்க்க வேண்டும் அல்லவா? நாமெல்லாம் வளர்ச்சிக்கு வழிகாட்டிகள் அல்லவா! இப்படிப்பட்ட ஓரினப்ப்யிர்கள் பல வியாதிகள் மற்றும் பூச்சிகளை ஈர்க்கும் என்று பார்த்திருக்கிறோம். ஆகவே இந்தச் செடிகளுக்குப் பல வகையான வீரியம் நிறைந்த பூச்சிக்கொல்லி நஞ்சுகள் தெளிக்கப்படுகின்றன- என்டொசல்ஃபான், மொனோக்ரோடொபாஸ், பைரிடொபென்,இமிடாக்ளோபிரிட், உட்பட.

நாடு முழுவதும் உள்ளது போல் ஆட்கூலி இங்கும் அதிகம் - ஆனால் ஆட்கள் கிடைப்பது அரிது. தேயிலையில் அறுவடை கையால் மட்டுமே செய்ய முடியும் ஆதலால், களை எடுக்க ஆட்கள் உபயோகிக்காமல் மிக அதிகமான களைக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. அவற்றின் எச்சம் நமது தே பொடிகளில் மிகவும் நிறைந்து காணப்படுகின்றன. பல ஆய்வுகள் இதனையும் நிருபித்துள்ளன. (ஒரு தகவல்: சிகப்பு சிலந்திக்கு மிக அதிகமான‌ பூச்சி கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. இந்த சிகப்பு சிலந்தி இயற்கை விவசாயத்தில் அதிகம் தாக்குவதில்லை! இருப்பினும் டீ பயிரிடுவது சிறு விவசாயமாக, அதிலும் இயற்கையாக நஞ்ச‌மற்று காண்பது மிக அரிது)

தேயிலை விளையும் நிலங்களில், அசாமில் நிலத்தடி நீரை சோதித்துப் பார்த்த பொழுது பாதரசம் மற்றும் கொடிய ஆர்செனிக், ஃப்ளுரைடு இருப்பதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன.

ஐரோப்பாவில் பல்வேறு தேயிலைகளுக்கு பல முறை பூச்சிக்கொல்லிகளின் எச்சம் அதிகமாக உள்ள காரணத்தால் இறக்குமதி அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன. பல மேலை நாடுகளிலும் நம் நாட்டிலும் டீ பாக்கட்டுகளில் உள்ள டீ பொடிகள் மிகவும் அதிக ரசாயன எச்சம் நிறைந்தே உள்ளன என பல ஆய்வுகள் கூறுகின்றன. 15 நாட்களுக்கு ஒரு முறை கவ்வாத்து வாங்கி நேர்த்தி செய்யப்படுவதாலும், அந்த கொழுந்து இலைகளே தயாரிப்பிற்கு தேவை படுவதாலும், இன்றைய தொழிற்சாலை தயாரிப்பு முறைகளாலும், தேனீர் பாக்கட்டுகள் மற்றும் பொடிகள், மிகவும் கொடிய ரசாயனங்கள் உள்ளதாகவே இருக்கின்றன.

தேயிலைகள் டீ தூள்களாக தயாரிக்கப்படும் முன் கழுவப்படுவதில்லை என்பதும் அதன் மேல் உள்ள எச்சங்கள் அதிகமிருக்க காரணி. கழுவினால் ரசாயன எச்சங்கள் போய்விடுமா என்று உடனே நாம் யோசிப்பது தவறு. ஏனென்றால் மரபிலும், systemic என்று கூறப்படும் உடல் அமைப்பு முழுதும் பரவி நிலைத்திருக்கும் தன்மை பெற்ற இந்த ரசாயனங்களால் பல கொடுமைகளே உண்டு. கழுவுவதால் அழிவதில்லை. இங்கு நாம் பார்க்க வேண்டியது மிளகாய் போன்ற பொருட்களைப்போல் டீயும் கழுவப்படுவதில்லை. அதனால் கேடுகள் அதிகமே.

வெளி நாடுகளிலிருந்து கொண்டு வரப்பெற்றால், அதுவும் அமெரிக்கா, கானடாவிலிருந்து என்றால் மரபணு மாற்றப்பெட்ட பொருட்களும் (அவர்களது டீ எப்பொழுதும் பல வாசனை அல்லது வேறு பொருட்கள், சுவையூட்டிகள்/மணமூட்டிகள் கலக்கப்பட்டே விற்கப்படும். இவை மரபீனி பொருட்களாக பல முறை இருந்துவிடுவதுண்டு) வர வாய்ப்புகள் அதிகம். மேலும் தேனீரை கொதிக்க வைக்கும் பொழுதும் அதன் பின் ஊற‌ விடுவதாலும் இந்த ரசாயன‌ங்கள் அதிவேகமாக தேனீருக்குள் வருகின்றன.

க்ரீன் டீ

இன்று மிகவும் அதிகமாக பிரபலப்படுத்தப்பட்டு, விற்பனையும் செய்யப்பட்டு வரும் இது உண்மையிலேயே நல்லது தான். அதிலுள்ள 'கட்சின்' என்னும் 'ஆன்டி ஆக்சிடென்ட்' (anitoxidant) நன்மை பயக்கின்ற முதற்பொருள். டீ இலையைப் பறித்து அப்படியே சில நிமிடங்கள் விட்டால், அதனுள் உள்ள ஒரு என்சைம் வெளியேற்றப்பட்டு அதனால் இலை oxidisation என்னும் ரசாயன மாற்றத்தால் இலை கறுக்கும். இந்த என்சைமை செயல்படாமல் இருக்க, பறித்த சில மணிக்களில் சூடேற்ற, இந்த கருக்கும் மாற்றம் ஏற்படாது. இப்படி உள்ள க்ரீன் டீ, சரியாக கொதிக்கும் நீரில் நாம் மேற்கூறியது போல் ஊற விட நன்மை பயக்கும். இதில் புற்று நோயை எதிர்க்கும் சக்தி கூட உண்டென்பர். உடல் தடிமன் ஆவதை குறைக்கும் என்றும் கூறுகின்றனர். (ஞாபகம் இருக்கட்டும் சர்க்கரை மற்றும் பால் இல்லாமல்!).

நாம் என்ன செய்யலாம்?

டீ, காப்பி போன்றவற்றை அறவே விட்டு விடலாம். நமது பாரம்பரிய பானங்களான மூலிகைகளின் ரசம், கஷாயம் அல்லது வடி நீர் குடிப்பது சாலச்சிறந்தது. துள‌சி, மல்லி, சுக்கு மல்லி, நத்திசூரி, தாமரைத்தண்டு போன்ற பொடிகள் உடனடி (திடீர்) தேனீர் பொடிகளாக விற்கப்படுகின்றன. அவற்றை உபயோகிக்கலாம். அப்படியும் டீ தான் வேண்டும் என்றால், ரீஸ்டோர் போன்ற இயற்கை அங்காடிகளில் கிடைக்கும் விஷமற்ற இயற்கை தேயிலைப் பொடிகளை வாங்கலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org