துரையைச் சேர்ந்த நாணல் நண்பர்கள் குழு என்ற அமைப்பு, “உழவர்களைத் தேடி” என்ற பெயரில், ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்திற்குச் சென்று அங்குள்ள இயற்கை விவசாயிகளைக் கண்டறிந்து அவர்களை வெளிச்சமிட்டுக் கௌரவிக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறது. சென்ற மாதம் (18 - 05 -2014) அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பில் நடை பெற்ற கூட்டத்தில், திரு. ச.முகேஷ், திரு. ப.பிச்சைமுருகன், திருமதி.இரா.செந்தமிழ் செல்வி, திரு. ந.கோபாலகிருஷ்ணன், திரு. நா.பெருமாள், திரு.கா.கருணாகரன், திரு. பா.சதாசிவராஜா, திரு. வே.இசைமணி, திரு.கு.மணி, திரு.பா.தமிழ்மணி, திரு. மு.தமிழ்செல்வன், திரு.கீர்த்திராஜன் ஆகிய இயற்கை உழவர்கள் பாராட்டப் பெற்றார்கள். இது “உழவனைத் தேடி” மூன்றாவது நிகழ்வாகும். நஞ்சில்லாத உணவை நமக்கு வழங்க, இயற்கை வழி வேளாண்மையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உழவர்கள். பசுமைப் போராளிகள்.
நீர் வற்றாத இருப்பு அதனால் வத்திராயிருப்பு என்று இவ்வூருக்கு பெயர் மருவியதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பசுமையான ஊர் அது. மே 18 ஈழப் போரில் இன்னுயிர் நீத்த ஈகிகளுக்கு அஞ்சலி செலுத்திப் பின் நிகழ்வு துவங்கியது. இயற்கை வழியில் வேளாண்மையில் ஈடுபடும் 12 உழவர்களை மேடை ஏற்றி, பச்சைப் பொன்னாடை போர்த்தி, பாராட்டு இதழ் வழங்கினார் திரு.பாமயன் அவர்கள். நாணல் அமைப்பின் இயற்கை வேளாண் ஒருங்கிணைப்பாளர் திரு. காளிமுத்து அவர்கள் “வேளாண்மை நம் உழவர்கள் வசம் இருக்க தொடர்ந்து இயங்க வேண்டி இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் வேளாண்மையை கையகப்படுத்தி, நம் நிலத்திற்கு நம்மையும் நம் பிள்ளைகளையும் கொத்தடிமை கூலி வேலையாட்களாகவோ, வாயில் காப்பாளர்களாகவோ மாற்றும் முன் நாம் விழிப்படைய வேண்டும். கடன்பட்டு சாகும் நமக்கு செலவில்லாத வேளாண் உற்பத்தி முறை இயற்கை வழி வேளாண் மட்டும்தான். இதைப் புரிந்து கொண்டு இயற்கை வழி வேளாண்மையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உழவர்களைத் தேடி சென்று, உங்கள் ஊரில் உங்களை ஒரு உயர்ந்த மனிதனாக அறிமுகப்படுத்துவது இந்நிகழ்வின் நோக்கங்களில் ஒன்று” என்றார்.
“மேடையில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு உழவரும் வேளாண்மையில் மேதைதான். ஒவ்வொருவரும் தனி சிறப்போடு வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார்கள். கியூபா நாட்டில் வேளாண்மை சார்ந்த அத்தனை விவாதங்களிலும் விஞ்ஞானிகளை விட உழவர்கள்தான் முன்னிறுத்தப்படுவார்கள். ஆனால் நமது நாட்டின் நிலைமையோ பசுமைப் புரட்சிக்குப் பின் 3 இலட்சம் உழவர்கள் இதுவரை தற்கொலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது ஒரு இன அழிப்புத்தான்” என்றார் நவீன இயற்கை வேளாண் அறிஞர் திரு.பாமயன் அவர்கள்.
” பல்வேறு கடினமான சூழ்நிலையில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் எங்களுக்கு இந்த சமூக அங்கீகாரம் ஒரு இளைப்பாறுதலைத் தருகிறது. என்னுடைய ஒவ்வொரு விடா முயற்சிக்குப் பின்னும் என் மனைவியின் ஆறுதலும், அரவணைப்பும் பெரிதளவில் இருக்கிறது என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்” என்றார் திரு. பிச்சைமுருகன் அவர்கள்.
“பட்டபடிப்பு படித்த நான் விவசாயம் கற்றுக் கொண்டது தலித் சமூகத்திடம் இருந்துதான். ஆனால் அதிக இடங்களில் தலித்துகளுக்கென்று இங்கே எந்த நிலமும் இல்லை. வேளாண்மையில் அதிகம் ஈடுபடுவது பெண்கள்தான். இது போன்ற வேளாண் நிகழ்வுகளில் பெண்கள் மரியாதை செய்யப்பட வேண்டும். பெண்கள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது” என்றார் திருமதி இரா.தமிழ்செல்வி.
நாணல் அமைப்பின் “உழவர்களைத் தேடி” நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு.மு.இரா. பூபாளன் பேசுகையில் “தலைவர்களைக் கொண்டாடிப் பழக்கபட்ட சமூகத்திற்கு உழவர்களைக் கொண்டாடும் மாற்று சிந்தனை உதிக்க வேண்டும். அந்த மாற்றம் எங்களிடம் இருந்து துவங்கட்டும். நஞ்சில்லா உணவை நமக்களிக்கும் சமூக அக்கறையுள்ள இயற்கை உழவர்களைக் கொண்டாடுவோம். இயற்கை வழி வேளாண்மையே இந்திய வேளாண்மை என்ற நிலையை உருவாக்குவோம். தற்சார்பு நிலைக்குத் தமிழகத்தைத் தயார்படுத்த தொடர்ந்து பணியாற்றுவோம்” என்றார்.
(நாணல் நண்பர்கள் குழு - 9543663443)