தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உளவுத் துறையும் தன்னார்வ நிறுவனங்களும்

காய்சின வழுதி

இந்திய அரசின் உளவு நிறுவனம், குறிப்பிட்ட சில தன்னார்வ நிறுவனங்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை தயாரித்துக் கசியவிட்டுள்ளது. உண்மையில் இது ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டுள்ள அறிக்கை என்பது நன்றாகத் தெரிய வருகிறது. பொதுவாக தொண்டு நிறுவனங்கள் அல்லது தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுக்கொண்டு அதற்கு பதிலியாக நம் நாட்டில் உள்ள தகவல்களை அவர்களுக்கு அதாவது பணம் தருபவர்களுக்கு அளிக்கின்றார்கள் என்ற பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. இதில் உண்மையும் உண்டு. அவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்பவர்களும், தெரியாமல் இதை ஒரு தொழிலாகச் செய்பவர்களும் உண்டு. எவ்வாறாயினும் இவர்கள் இந்தியாவைப் பற்றிய தகவல்களைத் தருபவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த அறிக்கை அப்படிப்பட்ட நிறுவனங்களைப் பற்றியதா? என்று கவனித்தால் இல்லை. இவர்கள் குறி வைப்பது 'தொண்டு' நிறுவனங்களை அல்ல. சமூகச் செயல்பாட்டாளர்கள் (social activists) அல்லது சமூகப் போராளிகள் என்று அறியப்படுபவர்கள் மீது என்பதுதான் இங்கு நோக்கத் தக்கது.

தன்னார்வ நிறுவனங்கள் ஏன் இந்தியாவில் இவ்வளவு வளர்ந்துள்ளன, சில லட்சம் மக்கள் அதில் பணியாற்றுகின்றனர். பல கோடிகள் இந்த வழியில் செலவிடப்படுகிறது. உள்நாட்டு வெளிநாட்டு நிதிகள் நன்கொடையாக வழங்கப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசு என்னவெல்லாம் செய்வோம் என்று விடுதலைப் போராட்டத்தின் போதும் பின்னரும் சொன்னதோ அவற்றையெல்லாம் செய்யவே இல்லை. வறுமை ஒழிக்கப்பட வில்லை. கல்வி அனைவருக்கும் கிடைக்கவில்லை. இலவச மருத்துவம் அனைவருக்கும் எட்டாக்கனி. வேலை வாய்ப்புகள் உரிய முறையில் கிடைக்கவில்லை. இயற்கை வளங்கள் வரைமுறையில்லாமல் சூறையாடப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டது, விளைவாக பல இடங்களில் அறவழிப்போராட்டங்களைத் தாண்டி தீவிரைவுப் போராட்டங்கள் ஏற்பட்டன. குறிப்பாக 1970களில் நக்கல்பாரி இயக்கம், தெலுங்கானா இயக்கம் போன்ற தீவிரைவு இயக்கங்கள் தோன்றிப் பெருகின. இதை ஆட்சியாளர்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இதை மென்மைப்படுத்துவதற்காக ஒரு வழிமுறையைக் கண்டார்கள். மக்களின் குறிப்பாக இளைஞர்களின் சினத்தை மடை மாற்றம் செய்வதற்காக ஏற்பட்டவைதாம் தன்னார்வ நிறுவனங்கள். அதாவது அரசு தனது கடமையைச் செய்ய எங்கு தவறுகிறதோ அங்கு எழும் கொந்தளிப்பைச் சரி செய்யும் வகையில் நிறுவனங்கள் நுழைகின்றன. உண்மையில் அரசு தனது கடமையை சரியாக ஆற்றியிருந்தால் தன்னார்வ நிறுவனங்களுக்கு வேலையே இல்லை. ஆனால் தனது தவறை சரிக்கட்ட தன்னார்வ நிறுவனங்களை ஊக்குவித்ததே அரசுதான். இந்தக் குற்றச்சாட்டு இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கும் பொருந்தும். ஒன்றிய நாடுகள் அமைப்பு இப்படிப்பட்ட தன்னார்வ நிறுவனங்களுக்கு ஏற்பிசைவு கொடுத்து பாராட்டி வருகின்றன.

வரலாறு இப்படியாக இருக்கும்போதிலும் பல முற்போக்கு கருத்தியல்களை எடுத்துச் செல்பவையும் தன்னார்வ நிறுவனங்களே என்றால் அது மிகையாகாது. குறிப்பாக மனித உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிலாளர், குழந்தை, பெண்கள் நலன், கல்வி போன்ற பல களங்களில் இவை பணியாற்றுகின்றன. இவற்றில் அரசு தொங்கு சதையாக உள்ள நிறுவனங்கள் ஒரு வகை, இவை அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே கேட்டு அவர்கள் தரும் நிதியைப் பெற்று கூடுதலாக வெளிநாடுகளிடம் இருந்து பெற்று அரசின் கொள்கைளை, திட்டங்களை நடைமுறைப்படுத்துபவை. வேறு சில அமைப்புகள் மதச் சார்புடைய அமைப்புகள் : உதாரணமாக‌, கிறித்தவ ஊழிய நிறுவனங்கள், ராமகிருட்டின, விவேகானந்த நிறுவனங்கள் இவை பல திட்டங்களுடன் தமது மதப் பரப்புரையையும் செய்கின்றனர்.

மூன்றாம் வகைதான் இப்போது அரசுக்கு குடைச்சல் தரும் அமைப்புகள். இவற்றிலும் இரண்டு வகை உண்டு. உலகளாவிய சட்டங்கள், இந்தியச் சட்டங்கள் இவற்றுக்கு உட்பட்டு 'நிதி' பெற்று அரசின் கொள்கைகளை திறனாய்வு செய்பவை. குறிப்பாக சூழலியல் செயல்பாடுகளில் கிரீன் பீஸ் எனப்படும் பசுமை அமைதி நிறுவனம் போன்றவை. தனியாட்கள் இதே மாதிரியான பணிகளைச் செய்வார்கள், இவர்களுக்கு பெரிய நிறுவன வலு இல்லாவிட்டாலும், மக்கள் அமைப்பை தம் வயம் கொண்டிருப்பார்கள், நர்மதை அணைப் போராட்டத்தில் முன்னின்ற மேதா பட்கர், அணுவுலை எதிர்ப்பாளர் உதய குமார் போன்றவர்கள் இந்த வரிசையில் வருவர். இவர்கள் பெரிதும் அரசியல் கட்சிகளில் இருப்பதில்லை. இடதுசார் இயக்கங்கள் மக்கள் போராட்டங்களில் முன்னின்றாலும் சூழலிய‌ல் இயக்கங்களில் அவர்களது குரல் தொழிலாளர்கள் பக்கமே ஓங்கி ஒலித்தது, மாசுபாடு பற்றியோ, வேளாண்மையின் அழிவு பற்றியோ, அடித்தட்டு மக்களின் இடம்பெயர்வு பற்றியோ அக்கறை காட்டவில்லை. வளர்ச்சிக்கும். அறிவியலுக்கும் எதிரானவர்கள் சூழலியலார்கள் என்ற கருத்து அவர்களிடம் வலுவாக இருந்தது. இடதுசார் கட்சிகளே இந்த நிலைப்பாடு கொண்டிருக்கும்போது பிற வலதுசார் கட்சிகளைப் பற்றிக் கேட்க வேண்டியதே இல்லை. ஆக ஒரு மிகப் பெரிய வெற்றிடம் உருவானது. முன்பெல்லாம் தொழிற்சாலை வேண்டும், வேலை வாய்ப்பு வேண்டும் என்று குரல் கொடுத்த அடித்தட்டு மக்கள், இப்போது தொழிற்சாலை வேண்டாம் என்று குரல் கொடுக்கிறார்கள். மக்களின் குரலை ஒருமுகப்படுத்த ஏற்கனவே களத்தில் உள்ள போராளிகள் யாரும் வராதபோது அந்த இடத்தை நிறைவு செய்ய மேதாபட்கர்களும், உதயகுமார்களும் தேவைப்பட்டார்கள். விளைவு அவர்கள் அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எதிரிகளாக மாறிப்போனார்கள். இது இயல்பான ஒன்று. வியப்பதற்கு ஏதும் இல்லை. உளவுத் துறை இவர்களைப் பாராட்டியிருந்தால்தான் நாம் வியப்படைந்திருக்க வேண்டும்.

அடுத்த வினாவிற்கு வருவோம், வெளிநாட்டில் நிதி வாங்கி இயக்கம் நடத்தலாமா? என்ற அறம்சார் வினா குடிமக்கள் யாவருக்கும் வருவது இயல்புதானே! உண்மை. அப்படியானால் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று நாட்டையே நடத்தும் அரசை என்ன சொல்வது, ஒன்றிய அமைப்பு நிறுவனங்களின் துணை அமைப்புகளான, யுஎன்டிபி, யுனிசெஃப் போன்ற பல அமைப்புகளிடமிருந்தும், பல பவுண்டேசன்களிடமிருந்தும் பெரும் பல கோடி நிதியைக் கையாள்வது அரசுகளே!

'அய்யா! தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, வெளிப்படையாகச் சரியான கணக்கோடு வாங்கும் நிதிக்கும், தன்னார்வ அமைப்புகள் வாங்கும் நிதிக்கும் வேறுபாடு இல்லையா?' என்று நீங்கள் கேட்பது புரிகிறது, வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் அமைப்புகள் அதற்குரிய உரிம எண் இருந்தால் மட்டுமே நிதி வாங்க முடியும். அதுமட்டுமல்ல, அவை முறையான கணக்குத் தணிக்கைக்கும் உட்படுத்தப்பட வேண்டும், எதற்காக நிதி பெற்றார்களோ அதற்காக மட்டுமே செலவிட வேண்டும். இதில் தவறும் நிறுவனங்களிந் உரிமம் பறிக்கப்படும். ஆகவே அரசு பெறுவதற்கும் இப்படிப்பட்ட நிறுவனங்கள் பெறுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. அரசு அமைப்புகளில் எப்படி ஊழல் பேர்வழிகள் இருக்கிறார்களோ அதுபோல தன்னார்வ நிறுவனங்களிலும் ஊழல் பேர்வழி உண்டு என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. அடுத்த வினா ஒரு நாட்டில் நடக்கும் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தருவது தவறா? கியூபாவிற்கு நிதி திரட்டி அரசு மட்டுமல்ல கட்சிகளும் அமைப்புகளும் அனுப்பினார்களே அது சரியா? பொதுவுடமை நாடான கியூபா வெளிநாட்டு நிதியைப் பெறலாமா? இந்த வினா நம்மிடம் யாருக்கும் எழவில்லை. ஏனெனில் அது ஐயத்திற்கு இடமற்றது. அதுபோலவே மனித உரிமை விரும்பிகள், சூழல் பாதுகாவலர்கள், குழந்தை, பெண்கள் முன்னேற்ற ஆர்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை, பொருளாக, அறிவாக வழங்குவது இயல்பானது. அந்த அடிப்படையில் உலகம் முழுவதும் இருந்து வரும் ஆதரவை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

காந்தியடிகளின் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு எத்தனையோ ஐரேப்பியர்கள் அவருடன் நடந்தார்கள். கியூபா போராட்டத்தின் தளநாயகர்களில் ஒருவர் சேகுவேரா கியூபா நாட்டைச் சேர்ந்தவர் கிடையாது. இப்படிப் பலர் நாடு தாண்டி இனம் தாண்டி தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர்.

இந்தியாவின் முதன்மையாக கட்சிகள் பூதவணிக நிறுவனங்களிடமிருந்து (corporate companies) பணம் வாங்குவதை வாடிக்கையாக்கிவிட்டார்கள். இதற்காக பூதவணிகர்கள் பல பவுண்டேசன்களை வைத்துள்ளனர். (பார்க்க-Nai Azadi Udghosh - may-june-2014) இந்த நிறுவனங்கள் குறிவைப்பது இந்தியாவில் உள்ள இயற்கை வளங்களை… ஆனால் இந்த இயற்கை வளங்களோ அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள். ஆக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்களைக் கொள்ளையடிக்க வரும் கும்பணிகளுடன் அரசியல் கட்சிகளுக்குக் கூட்டு. என்ன செய்வார்கள் மக்கள்? புதிய அரசு இப்போது நினைப்பதெல்லாம், இந்த 'நியுசென்சு'களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான்.

நர்மதாவின் அணையை உயர்த்துவதன் மூலம், பல்லாயிரம் மக்களை குடிபெயரச் செய்ய திராணி உள்ள உமாபாரதி அவர்களுக்கு, முல்லைப் பெரியாற்று உயரத்தை உயர்த்தி யாரையும் இடம்பெயரச்செய்யாமல், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வளம் கொழிக்க வைக்க மனம் வரவில்லையே! அப்படியானால் இவர்களுக்கு உண்மையில் மக்களின் மீது அக்கறை உள்ளதா?

'இந்த உளவுத்துறையின் அறிக்கையின் ஒரு சில பத்திகள், 2006ம் ஆண்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடர்பாக மோடி பேசிய பேச்சின் சில பகுதிகளை அப்படியே கொண்டுள்ளதில் இருந்தே, இந்த அறிக்கை வெளியான பின்னணியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது' என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. சமூகச் செயல்பாட்டாளர்களின் மீது காங்கிரஸ்காரர்களுக்கு எவ்வளவு சினம் உள்ளதோ அதைவிடப் பல மடங்கு பாரதீய சனதாவிற்கும் உள்ளது. ஏனெனில் குசராத் கலவரங்களை வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தவர்கள் இந்த தன்னார்வ நிறுவனங்களே. இதில் முனைப்பாகப் பணியாற்றியவர் தீஸ்தா செத்தல்வாத். இவரும் இவரது கணவரும் இணைந்து செய்த பல ஆணவணங்கள் அமெரிக்காவில் மோடிக்கு விசா மறுக்கும் அளவிற்குக் காரணமாயிற்று. இதைச் சற்றும் ஏற்றுக் கொள்ள இயலாமல் இவர் மீது குற்றச்சாட்டு.

இவர்களுக்கு நீடித்த மேலாண்மை (sustainable development) என்ற சொல்லாட்சியே தீட்டானது. மக்கள் மயம், அதிகாரப் பரவல் என்பதெல்லாம் இவர்களால் துளியும் ஏற்க இயலாத சொற்கள். இதைத் தமது அறிக்கையில் உளவுத்துறை மூலமாக கக்கியிருக்கிறார்கள்.

இதேபோல நர்மதை அணையில் விடாமல் போராடி உலக வங்கியின் நிதியைக் கூட நிறுத்திவிட்ட மேதாபட்கர், இவர்களது அடுத்த குறி. மேதாவை புடவையை உருவி அவமானப்படுத்திய பல காட்சிகள் குசராத்தில் நடந்ததை மக்கள் பாவம் மறந்து போய்விட்டனர். இவர் அத்துடன் அல்லாது டெல்லியில் மும்பையில் ஏன் சென்னையில் கூட சேரிவாழ் மக்களுக்காக அவர்களை அப்புறப்படுத்துவதற்கு எதிராகப் போராடியவர். அதனால் கார்பரேட்டுகள் கடும் சினத்துக்கு ஆளானார்கள்.

இந்தியாவை அணு வல்லரசாக ஆக்க வேண்டும் என்பதில் இந்திரா காந்தியைவிட சங்க பரிவாரங்களுக்கு பேராசை உண்டு. அதற்கு மிகப் பெரிய முட்டுக் கட்டையாக வந்தவர் சுப. உதயகுமார். உலக மக்கள் யாவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு அற வழியில் போராட்டத்தை நடத்திக்காட்டியவர். மீனவர்கள் பொதுவாகவே உணர்ச்சிமயமானவர்கள். சிறு உரசல்கள் கூட பெருஞ்சண்டையாக மாறிய நிகழ்வுகள் நெய்தல் நிலத்தில் உண்டு. ஆனால் இவர் வழிகாட்டலில் சற்றும் பிறழாமல் மக்கள் அறவழியில் போராடுகின்றனர். இவர் மீதும் குற்றச்சாட்டு.

அடுத்தது மரபீனி மாற்றப் பயிர்களை, குறிப்பாக பி.ட்டி கத்தரிக்கு எதிராகப் பலர் போராடியபோது அதில் முனைப்பாக இருந்தவர்கள் கிரீன் பீஸ் அமைப்பினர். இப்படி வேதாந்தாவிற்கும், ஜிண்டல், இந்தால்கோ, எஸ்ஸார், ஆதித்ய பிர்லா போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக போராடும் யாவரும் அயல்நாட்டு உளவாளிகள் என்பது இவர்களது வியாக்யானம். எவ்வகையான எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காகப் போராட முன்வரும் அனைவரையும் முற்றுகையிட்டு அவர்களது, நன்மதிப்பைச் சிதைத்துவிடுவதன் மூலம் மக்கள்சார் குரலை நசுக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

இவர்களது நோக்கம் தவறு செய்தால் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்பதல்ல, இவர் வெளிநாட்டு உளவாளி என்று பரப்புரை செய்து அவரை மக்களிடம் இருந்து அயன்மைப்படுத்துவதுதான் நோக்கம். ஏனெனில் உதயகுமார் தன் மீது குற்றச்சாட்டு சொன்ன நாரயணசாமி, மன்மோகன் சிங் ஆகியோர் மீது வழக்கறிஞர் மூலம் அறிவிக்கை (notice) செய்தபோது அவர்கள் முற்றிலும் பின்வாங்கிக் கொண்டனர். உண்மையில் அவர் மீது வழக்கு நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டியதுதானே!

இதன் மூலம் கணிசமான எளிய செயல்பாட்டாளர்கள் பின்தங்கிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக சூழலியல் பாதுகாப்பு பற்றி பேசவே இனி நாதியிருக்காது என்பது ஒரு பக்க உண்மையாக இருந்தாலும் விளைவு மிகக் கடுமையானதாக இருக்கும், மெல்லிய குரலில் சட்டத்திற்கு உட்பட்டுப் பேசுபவர்களின் நாவை அடக்குவதன் மூலம் வல்லிய குரலில் மட்டுமல்ல செயலிலும் பேசுபவர்கள் வருவார்கள். அப்போது அரசுக்கு தலைவலி இன்னும் அதிகம். இப்போது மூன்றாம் பத்தியைப் படித்துப் பாருங்கள்.

உலகமயத்தை முடுக்கிவிட்டு, குண்டூசி முதல் குட்டைப் பாவாடை வரை சீனாவில் இருந்து வாங்கிக் கொண்டு வெளிநாட்டு நிதியாம், அன்னியக் கைகளாம்! வெட்கமில்லை? இந்தியாவின் இறையாண்மையை அடகு வைத்துவிட்டு, போராடும் அப்பாவிகளுக்கு வாய்ப்பூட்டுப் போடும் ஆளும் கூட்டம் நாளை மக்கள் முன் மண்டியிடப்போவது மட்டும் உண்மை.

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org