தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


இடிப்பாரை ஒடுக்கும் மன்னர்கள்

உலகிலேயே பெரிய ஜனநாயகம் என்று நம்நாடு மார் தட்டிக் கொள்கிறது. ஒரு அரசியல் பார்வையாளார், பல வருடங்களுக்கு முன், ” பெரும்பாலான மக்களுக்கு எழுத்தறிவு இல்லாத நாட்டில், எழுத்து வடிவில் ஒரு அரசியல் சாசனம் காலத்திற்கு முற்பட்டதே” என்று பாதி நகைச்சுவையொடும், மிகுந்த வேதனையோடும் எழுதியிருந்தார். ஒபாமா முதன்முறை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப் பட்டபோது, அமெரிக்காவில் 1% பேருக்குக் கூட ஒபாமா யார் என்று தெரியாது. 6 மாதங்களுக்குள் பெரும் செலவில், தொலைக்காட்சிப் பெட்டிகள் அவரின் முகத்தை எல்லா வீடுகளிலும் தொடர்ந்து காட்டிக் காட்டி அவரை நாட்டையும், பொருளாதாரத்தையும் காப்பாற்றக் கூடிய தேவதூதன் போல் உருவகம் செய்தன. விளைவு: யாருக்குமே அறிமுகம் இல்லாத ஒரு மனிதர், உலகின் மிகப் பெரிய வல்லரசுக்குத் தலைவர் ஆனார். அமெரிக்காவை அனைத்திலும் காப்பியடிக்கத் துடிக்கும் நம் நாட்டில், பா.ஜ.கட்சி இதே முறையில் சுமார் 5000 கோடிகள் செலவு செய்து, ஒரு தனிமனிதரை முன்னிறுத்தி 6 மாதத்தில், நரேந்திர மோடியை ஊடக வலுவால் சந்தைப்படுத்தின. அவரும் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் ஆகி விட்டார்.

மேற்கு வங்கத்தில், மமதா பானர்ஜியின் அரசை, “ஒரு நபர் அமைச்சகம்” என்று விமரிசிப்பது உண்டு. எந்தத் துறை அமைச்சர் ஆயினும் மமதாவைக் கேட்காமல் ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டார்; கடைமட்ட முடிவுகள் வரை எல்லாம் அவர் எடுப்பதுதான்; அமைச்சர்கள் வெறும் கொலுப்பொம்மைகளே என்ற நிலையே இதற்குக் காரணம். அரசை எதிர்க்கும் அல்லது கடுமையாக விமரிசிக்கும் எந்த ஊடகமும் அச்சுறுத்தலுக்கும், பல வித அழுத்தங்களுக்கும் ஆளாக்கப் படுகின்றன. நம் தமிழகத்திலும் ஏறத்தாழ‌ இதே நிலைதான். மோடி முதல்வராயிருந்த குஜராத்திலும் இந்நிலைதான் நீடிக்கிற‌து. ஆட்சியில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுபவர்களை அடக்கி விட்டால், மக்களுக்கு எந்தத் தவறான நிகழ்வுகளும் போய்ச்சேராமல், 'ஓ நல்லாட்சிதான் நடக்கிறது' என்ற ஒருவித மயக்கத்தில், இவரே இருந்து விட்டுப் போகட்டும் என்று ஆளும்கட்சிக்கு வாக்களித்து விடுகின்றனர். கடந்த தேர்தல் முடிவுகள் இப்போக்கையே காட்டுகின்றன.

எதிர்மறையான கருத்துக்களையும், சட்ட பூர்வமான விமர்சனங்களையும் சந்திக்கத் துணிவு இல்லாதவர்கள் ஏன் மக்களாட்சியில் பதவிக்கு ஆசைப்பட வேண்டும்?

மோடி பதவி ஏற்ற சில வாரங்களுக்கு உள்ளாகவே, கிரீன்பீஸ், ஆஷா போன்றா தொண்டு நிறுவனங்களை எதிர்த்து உளவுத் துறை கசிய விட்டுள்ள அறிக்கை ஒரு உதாரணம். அறிக்கையின் பெரும் பகுதி பல வருடங்களுக்கு முன் மோடி எழுதியதன் சாரமாய் இருந்தது ஆச்சரியம் அளிக்கவில்லை. அந்த உளவுத்துறை அறிக்கையிலோ எதுவும் உளவு செய்யப் படவில்லை; அதிலுள்ள அனைத்துமே வெளிப்படையாய் எல்லோருக்கும் தெரிந்ததுதான் - செய்தித் தாட்களில் வந்ததுதான்! (இதில் எதற்கு உளவு? ).

இதே போல், உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளில் ஒருவராகப் பரிந்துரை செய்யப்பட்ட கோபால் சுப்பிரமணியத்தைப் பற்றி ஒரு ஆதாரமற்ற , நிரூபணங்கள் எதுவும் செய்யாத, உளவுத்துறை அறிக்கையின் பேரில் அவரின் பெயரை நீக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது. சுப்பிரமணியம் தானே விலகிக் கொண்டார். “நான் மிக, மிகச் சுதந்திரமானவன். அரசு தவறு செய்தால் நான் சுட்டிக் காட்டுவேன். என் சுதந்திரமான சிந்தனையும் போக்கும் அரசுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.” என்று ஒரு பேட்டியில் அவர் கூறினார்.

சுதந்திரமான நீதித் துறையின் நிர்வாகத்தில் அரசு தலையிடுவது ஒரு ஆபத்தான அறிகுறி.

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

என்று மன்னராட்சிக்கே மாற்றுக் கருத்துக்களின் தேவையை வள்ளுவர் விளக்கியிருக்கிறார். மாற்றுக் கருத்து என்பது மக்களாட்சியின் அடித்தளம். மக்களாட்சி என்று அப்பாவி மக்களை ஊடகங்களாலும், இலவசங்களாலும், பணத்தாலும் ஏய்த்துப் பதவிக்கு வரும் மன்னர்கள் இடிப்பாரே தேவையில்லை என்று எதிர்ப்பை ஒடுக்குகிறார்கள். மன்னர் கெடுவரோ இல்லையோ, மக்களும் மக்களாட்சியும் பெரும் அபாயத்தில் உள்ளன!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org