தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

BRAI meet - அனந்து

BRAI Bill என்னும் உயிரி ஒழுங்காற்று ஆணையம் பற்றி நமது சென்ற இதழ்களில் பார்த்திருக்கிறோம். இதனை எதிர்த்து ஆ.ஷா (ASHA) மற்றும் மரபீனி மாற்றம் அற்ற இந்தியாவிற்கான கூட்டமைப்பு (Coalition for GM free India) இரண்டு அமைப்புக்களும் இணைந்து, தலை நகர் புது தில்லியில் ஒரு பெரும் பிரசாரக்கூட்டம் மற்றும் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஏற்பாடு செய்திருந்தன‌. அதற்கு நல்ல வரவேற்பும் நல்ல பங்களிப்பும் கிடைத்தது ஒரு பெரும் நற்செய்தி ஆகும்.

இந்தக் கூட்டத்தில் கட்சிப் பாகுபாடின்றி எல்லாக் கட்சியினரும் பங்கேற்றது சிறப்பு. கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் எச்சூரி, ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னால் பிஜேபி காரியதரிசி மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வாபிமான் ஆந்தோலனின் கோவிந்தாசார்யா, உணவு மற்றும் விவசாய வல்லுனர் தேவிந்தர் ஷர்மா, மற்றும் AIKS, BKS, BKU and Bharatiya Kisa Morcha போன்ற விவசாயிகள் சங்கங்களின் பொறுப்பாளர்கள், கிரீன் பீஸ் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மேலும் உணவு மற்றும் வேளாண் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நூற்றுக்கணக்கான இளைஞர்களும் பொது மக்களும் கலந்து கொண்டதன் மூலம் இந்தச் சட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பு இருப்பது அனைவருக்கும் வெளிப்பட்டது.

சி பி எம்-மின் சீதாராம் எச்சூரி அவர்கள் தானும் தனது கட்சியும் இந்த சட்ட வரைவை பாராளுமன்றத்திலும், வெளியில் தெருக்களிலும், எதிர்க்கும் என்றார். நமது நாட்டிற்கு தேவை உயிரி ஒழுங்காற்று சட்டம் அல்ல, மிகவும் அவசியம் உயிரிப் பாதுகாப்பு சட்டம் என்றார்.

ராஷ்ட்ரீய ஸ்வாபிமான் ஆந்தோலனின் கோவிந்தாசார்யா அவர்கள் 'இந்த மரபீனி மாற்றத்திற்கு எதிரான கூட்டணி நாடு முழுவதும் சிறு குழுக்களாக சென்று இந்த சட்ட வரைவு மற்றும் மரபீனி மாற்றப் பயிர்களின் கேடுகளையும் விளக்க வேண்டும்' என்றார்.

பாரதீய கிசான் சங்கின் குர்னாம் சிங் ' ஏன் இந்த அரசுக்கு இவ்வளவு அவசரம் இந்த மரபீனி விஷயத்தில்? விவசாயிகளான எங்களுக்கும் நுகர்வோருக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. அதனை முதலில் தீர்த்து வைக்கட்டும். மேலும் நாடு தழுவிய வெளிப்படையான தெளிவான விவாதத்தை ஏற்பாடு செய்யலாமல்லவா?' என்றார்.

'அமெரிக்காவில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலையை மொன்சான்டோ போன்ற பெரும் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன. இங்கு இந்தியாவிலும் இந்த BRAI சட்டம் வந்தால் நாம் என்ன பயிரிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என மொன்சான்டோ முடிவு செய்யும்.' என்றார் உணவு மற்றும் விவசாய கொள்கை ஆய்வாளர் தேவிந்தர் ஷர்மா. மேலும் அவர் 'நமது நாடு உணவு பாதுகாப்பு சட்டம் பற்றி பேசும் இந்த தருணத்தில் நம் உணவை விஷமாக்கக்கூடிய இந்த சட்டத்தைப் பின் கதவு வழியே கொண்டு வரப்பார்ப்பது மிகவும் அபத்தமாகவும் வெட்கக்கேடாகவும் உள்ளது' என்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் ' நம் நாட்டின் சாதாரண குடிமகனும், குடிமகளும் இந்த சட்டத்தைப் பற்றி அறியவில்லை. ஒழுங்காற்றுதல் என்றாலே ஊழலுக்கு வழிவகுக்கும். இந்த சட்டத்தை எங்கள் கட்சி வன்மையாக எதிர்க்கிறது' என்றார்.

மரபீனி மாற்றம் அற்ற இந்தியாவிற்கான கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன் 'இந்த சட்டம் நமது தட்டில் மரபீனி மாற்றப்பட்ட உணவுகள் திணிக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மரபீனி மாற்றப்பட்ட விதை மற்றும் உணவு நமது விவசாயிக்கும், விவசாயதிற்கும், உடல் நலனுக்கும் கேடு விளைவிப்பது ஆகும். இறையாண்மை, விதை உரிமை மற்றும் வாழ்வாதாரத்தைக் காக்க இந்த சட்டத்தை எல்லா கட்சிகளும் எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பல மாணவர்கள், நுகர்வோர் குழுக்கள் எல்லாம் பெரும் அளவில் கலந்து கொண்டு பங்களித்தது சிறப்பாக இருந்தது. கட்சி வேறுபாடின்றி எல்லா தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து இந்த சட்ட வரைவை எதிர்த்தது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அளித்தது.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org