தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

இயக்கச் செய்திகள் - உழவன் பாலா

2013 ஜூன் மாதம் 29 தேதி, திருவண்ணாமலை மாவட்டம் போருர் வட்டத்தில் ஒரு விவசாயக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 3000 பேர் உறுப்பினராக உள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் போருர் கிளையின் மூன்றாம் ஆண்டு விழா அது.கூட்டத்திற்குச் சுமார் 50 விவசாயிகள் வந்திருந்தனர்; அதில் நிறைய இளைஞர்கள் இருந்தது மகிழ்ச்சி தருவதாய் இருந்தது. கொடியேற்றுதல், தீர்மானங்கள் போன்றவற்றிற்குப் பின் கூட்டம் துவங்கியது. தற்சார்பு இயக்கத்தின் நண்பரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான திரு. ப.தி. இராசேந்திரன் அவர்கள் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். எனக்கு முன்னர் பேசிய பலரும் விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளையும், உழவு என்பது எப்படி ஒரு நசியும் தொழிலாகி விட்டது என்றும் ஆவேசமாகவும், பல ஆணித்தரமான ஆதாரங்களுடனும் பேசினர். அவர்கள் அச்சடித்த கூட்ட நோட்டீசில், அரசாங்கம் நெல் கொள்முதல் விலையை கிலோ ரூ.20 ஆகவும், கரும்பு கொள்முதல் விலையை கிலோ ரூ. 4 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

அடுத்து என்னைப் பேசச் சொன்னபோது நான் வழக்கமான பல்லவியையே பாடினேன் ! ஒரு சாதாரண மாடு வருடம் எவ்வளவு பால் கறக்கும் என்று கேட்டேன்; ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை சொன்னார்கள் - அதில் குறைந்த பட்ச அளவாக வருடம் 1000 லிட்டர் கறக்கும் என்று அனைவருமே ஒப்புக் கொண்டார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில், தீவனமும் மேய்ச்சலும் மட்டும் செய்தால் இம்மாதிரியான மாடுகள் எத்தனை பராமரிக்க முடியும் என்ற கேள்விக்கு அனவரும் குறைந்த பட்சம் 5 மாடுகளுக்குத் தேவையான தீவனப் பயிர் தாராளமாக விளைவிக்கலாம் என்று ஒப்புக்கொண்ட‌னர். எனவே ஒரு ஏக்கர் நிலத்தில் வெளி இடுபொருட்கள் இன்றி வருடம் 5000 லிட்டர் பால் உற்பத்தி செய்யலாம். பால்காரரிடம் விற்றால் ரூ 15 கிடைக்கிறது; நாமே விற்க முடிந்தால் ரூ 25 கிடைக்கலாம் என்றனர். ஆனால் எத்தனை பேர் ஒரு ஏக்கரில் 75,000 முதல் 125,000 வரை சம்பாதிக்கிறீர்கள் என்ற பொழுது யாருமே கை தூக்கவில்லை.

'நான் 2003ம் ஆண்டு நிலம் வாங்கிய பொழுது கரும்பு விலை டன் 750ரூ போல இருந்தது; அப்போது எங்கள் பகுதியில் கரும்பு விவசாயிகள், டன்னிற்கு 1000 ரூபாய் கிடைத்தால் போதும், மிகுந்த நிறைவாக இருப்போம் என்றனர். இப்போது 4000 ரூபாய் கேட்டுப் போராடுகிறீர்கள். 4000 ரூபாய் வந்தால் அந்த விலையும் உங்களுக்குக் கட்டுப்படியாகாத சூழல் உருவாகி விடும். வியாபாரியையோ, அரசாங்கத்தையோ நம்பி இருக்காதீர்கள்; அது புலிவால் பிடித்த கதைதான். தீர்வின்றிப் போய்க்கொண்டே இருக்கும்.

நாங்கள் விழுப்புரம் மாவட்டம் சென்னகுணம் மற்றும் காரணை கிராமங்களில் 23 விவசாயிகள் கொண்ட உழவர் சங்கம் ஒன்று அமைத்து இயற்கை விவசாயம் செய்கிறோம். உழவர்களின் விளைச்சலைச் சங்கமே கொள்முதல் செய்கிறது. நீங்கள் கோரிக்கையாக விடுத்த நெல் விலை ரூ.20 என்ற இலக்கை நாங்கள் ஏற்கனவே அடைந்து விட்டோம். நீங்கள் 3000 உறுப்பினர் கொண்ட மிகப் பெரும் ஒரு சக்தியாக இருக்கிறீர்கள்; எங்களால் இயன்றது உங்களால் இயலாதா?

உழவன் நிரந்தரமான பொருளாதார விடுதலை அடைய வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. கீழக்கண்ட‌ மும்முனைச் செயல்பாட்டைக் கைக் கொள்ள வேண்டும்.

தற்சார்பு வேளாண்மை (இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள், தன் உணவைத் தயாரித்தல் போன்று) ஒருங்கிணைந்த பண்ணையம் (கால்நடைகள், மரங்கள்,மேய்ச்சல் நிலம்,கலப்புப் பயிர் போன்று) தற்சார்புச் சந்தை (இதை வெற்றிகரமாகச் செய்ய உழவர் சங்கங்கள் தேவை) சந்தைப் படுத்துவதுதான் இருப்பதிலேயே கடினமான விடயம். அதனால்தான் பணப் பயிர்களைத் தவிர்த்து உணவுப் பயிர்களை விளைக்க வேண்டும். உணவை விளைத்தீர்களானால், அதுவும் இயற்கையாய் விளைத்தீர்களானால் உலகமே உங்கள் சந்தைதான் - இதற்காகப் பெரு நகரங்களை நாடிப் போக வேண்டியதில்லை.'

என்று பேசித் தாளாண்மையைப் பற்றியும், அதில் குறிப்பாக அக்கரை பார்வையில் அனந்து எழுதிவரும் தற்சார்பு உழவர் சந்தைகளைப் பற்றியும் கூறினேன். நான் கொண்டு போயிருந்த 50க்கும் மேற்பட்ட தாளாண்மை இதழ்கள் உடனே விற்றுத் தீர்ந்தன! போருரிலும், தமிழக உழவர் சங்கத்திலும் பல உழவர் சங்கங்கள் அமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அடுத்த நாள் விழுப்புரம் சென்றேன்.

2013 ஜூன் 30 - காந்தி உழவர் சங்கம், சென்னகுணம்

இந்த வருடத்திற்கான ப‌ருவ மழை சற்று முன்னரே வந்து விடும் என்ற எதிர்பார்ப்பில், உழவர்கள் என்ன பயிர், யார், எவ்வளவு பரப்பில் செய்வது என்ற திட்டமிடும் கூட்டம் நடந்தது. அது மட்டுமின்றி சங்கத்தின் நிர்வாகக் குழுவையும் தேர்ந்தெடுக்கும் பணி நடை பெற்றது. நம் களப் பணியாளார் குமாரி ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்திற்குச் சுமார் 30 விவசாயிகள் வந்திருந்தனர்.

அவரவர் தம் இயற்கை நெல் சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மானாவாரியாக கம்பு, சோளம், தினை, துவரை ஆகியவற்றைப் பயிரிடுவது என்றும் அவற்றை இயற்கையாகப் பயிரிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்குத் தேவையான விதைகளைத் தற்சார்பு இயக்கம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள‌து. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு விவசாயிகளிடம் இயற்கை விவசாயத்தின் பேரில் ஆர்வமும், நம்பிக்கையும் தென்பட்டது ஊக்கமளிப்பதாய் இருந்தது!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org